திரு. முதலியார் அவர்கள் சிறிது காலம் உறங்கிக் கிடப்பதும் பிறகு திடீரென்று பூர்வக்கியானம் பெற்றவர் போல் நாட்டுக்கு பெரிய அழிவு வந்துவிட்டதாகவும் அதைத்தான் காப்பாற்றப் போகின்றதாகவும் வேஷம் போட்டுக் கொண்டு, ‘சீர்திருத்தக்காரர்களால் ஆபத்து! ஆபத்து!’ என்று சப்தம் போடுவதும், அதன் பேரில் ஏதாவது இரண்டு கிடைத்தால் வாங்கிக் கொண்டு பொறுக்க முடியாமல் ‘நான் அப்படி செய்யவில்லை இப்படி நினைக்கவில்லை. அதற்கு இதல்ல அருத்தம் அதல்ல பொருள்’ என்று பல்லைக் காட்டுவதும் ஆகிய காரியத்திலேயே இருந்து வருகிறார்.

periyar 433உதாரணமாக கொஞ்ச காலத்திற்கு முன் சீர்திருத்தம் என்கின்ற தலையங்கம் இட்டு ஒரு வியாசத்தில், தற்காலம் நடைபெறும் சீர்திருத்தத்தால் நாட்டிற்கு பெரிய ஆபத்து என்றும் சீர்திருத்தக்காரர்கள் மிக்க மோசமானவர்கள் என்றும் ஜனங்கள் நினைக்கும்படி எழுதினார்.

‘குடி அரசு’ அதற்கு தகுந்த ஆப்புக் கடாவினவுடன் ‘நான் அப்படி எழுதவில்லை இப்படி எழுதவில்லை’, ‘அதற்கு இதல்ல அர்த்தம்’ என்று சமாதானம் சொல்லி அமர்ந்தார். இப்போது பல இடங்களில் மூடநம்பிக்கை ஒழிந்த சடங்குகளால் சில நடவடிக்கைகளில் மக்களின் கவனம் இழுக்கப்பட்டதும், மறுபடியும் ‘சீர்திருத்தம்’ என்கின்ற தலைப்பு கொடுத்து ‘சீர்திருத்தக்காரர் அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும்’ என்று உபதேசம் செய்ய வந்து விட்டார்.

அதோடு தனது ஆராய்ச்சி ஆணவத்தை முன்னால் தள்ளிக் கொண்டு ‘ஆராய்ச்சி வேண்டும். அனுபவம் வேண்டும், குணநலம் வேண்டும்’ என்று சோம்பேறி ஞானம் பொரிக்கின்றார். இவற்றிற்கு ‘திராவிடன்’ ஒருவாறு பதிலிருத்தவுடன் தனது பழய குணப்படி “நான் பொதுவாகச் சொன்னேனே ஒழிய ‘திராவிடனை’யோ ‘குடிஅரசை’யோ சொல்லவில்லை” என்று ஒளியப் பார்ப்பதுடன் மற்றும் தனக்கு ஒரு புதிய இயக்கம் வேண்டும் என்றும், யாராவது ஆரம்பித்தால் அதற்கு தான் உதவி செய்யப் போவதாயும், நாஸ்திக இயக்கங்களை அழிக்க ஏதோ ஒரு புது இயக்கம் தோன்றப் போவதாகவும், அதற்கு முப்பது ஆண்டாக தமிழ்நாட்டின் சீர்திருத்தத்திற்கு உழைத்த ஒருவரின் தலைமை கிடைக்கப்போவது கேட்டு மகிழ்வதாகவும் எழுதி மிரட்டுகிறார்.

திரு. முதலியாரை நன்குணந்தவர்கள் இவற்றிற்கெல்லாம் எவ்வளவு மதிப்புக் கொடுப்பார்கள் என்பது நமக்குத் தெரியும்.

திரு. முதலியாருக்கு ஒரு இயக்கம் வேண்டுமானால் திருவாரூர், விஜயபுரம் சர்வமத சங்க இயக்கத்தை கைக்கொண்டு அதற்கு உதவி செய்யலாம். அல்லது பட்டுக்கோட்டை நகரத்தார் தோற்றுவித்திருக்கும் சிவநேச இயக்கத்தில் சேர்ந்து அதற்கு உதவி செய்யலாம். அல்லது தானே இப்பொழுது பலருக்கு எழுதிக் கேட்டுக் கொண்டிருப்பது போன்று ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கலாம். எதுவானாலும் வரவேற்கத் தயாராயிருக்கின்றோம்.

திரு. முதலியாருக்கு இருக்கும் சீர்திருத்த ஆண்மை நாம் நன்றாக அறிந்தது தானே ஒழிய அறியாதது ஒன்றும் மறைவிலில்லை என்றே சொல்லுவோம்.. அப்படி ஒன்று இருக்குமானால் ‘சீர்திருத்தம்’, ‘சீர்திருத்தம்’ என்கின்ற தலையங்கத்தின் கீழ் ஜாடைமாடையாய் எழுத வேண்டியும் இருக்காது. எழுதிவிட்டு ‘உன்னை சொல்லவில்லை’ என்று எழுதுகிற பயங்காளித்தனமும் இருக்காது. நமது தொண்டு முதலியார் சக்தியையும் செய்கையையும் அவரது குழாத்தின் சக்தியையும் எதிர்ப்பையும் முழுதும் எதிர்நோக்கி துவக்கப்பட்டதே ஒழிய முதலியாரை மறந்து துவக்கப்பட்டது அல்ல என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

திரு. முதலியார் நமது தொண்டிற்கு இதுவரை எவ்வளவு இடையூறு செய்து வந்தார் என்பது நமக்கு தெரிந்ததேயொழிய தெரியாதது அல்ல. எனினும் திரு முதலியாருடன் இனியும் நாம் நேசமாகவே இருக்கின்றோம். ஏனெனில் திரு. முதலியார் அவர்களின் இடையூறு நமது தொண்டைக் கெடுத்து விடாது என்கின்ற தைரியத்தோடு தானே அல்லாமல் வேறல்ல. அன்றியும் திரு. முதலியார் தயவில்லாவிட்டால், அழிந்து போகும்படியான தொண்டால் உலகிற்கு என்ன பயன் ஏற்படக்கூடும் என்கின்ற எண்ணமும் கூடத்தான்.

நமது தொண்டின் கருத்தை மறுபடியும் பொதுமக்களுக்கு தெரியப் படுத்துகின்றோம். இதில் ஒன்றும் மறைவாக வைத்துக் கொள்ள நமக்கு இஷ்டம் இல்லை. ஏற்கின்றவர்கள் ஏற்கட்டும். அதாவது, முதலாவது புராணக் குப்பையுலகத்திலிருந்து மக்கள் விடுதலை அடைந்தே தீர வேண்டும். அது எந்தப் புராணமானாலும் நமக்கு அக்கரை இல்லை. உதாரணமாக ராமாயணமோ, பாரதமோ, மச்ச புராணமோ, தவளைப் புராணமோ, பெரிய புராணமோ, சின்னப் புராணமோ, சிவ புராணமோ, விஷ்ணு புராணமோ அதைப்பற்றி நாம் ஒரு சிறிதும் வித்தியாசம் பார்க்க மாட்டோம். அதோடு இந்தப் புராணங்களைப் படித்துவிட்டு பிரசங்கத்தில் வயிறு வளர்ப்பவர்களுக்கும், இவற்றை அச்சடித்து விற்பனைக்கு காத்திருப்பவர்கட்கும் கஷ்டமும், நஷ்டமும் ஏற்படும் என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் நமக்கு அதைப் பற்றி கவலையில்லை. ஏனெனில் மக்களின் விடுதலை நமக்கு பெரிதே ஒழிய புராணப் பிரசங்கியுடையவும் புஸ்தகக் கடைக்காரனுடையவும் வயிறு வளர்ப்பு பெரிதல்ல.

இரண்டாவது, மூட நம்பிக்கை ஒழியவே வேண்டும். அது சிவனைப் பற்றியதானாலும், விஷ்ணுவைப் பற்றியதானாலும், காளியைப் பற்றியதானாலும், கருப்பைப் பற்றியதானாலும், நமக்குக் கவலையில்லை. இவர்களை நம்பிக் கொண்டிருப்பவர்கள் அநேகர்கள் என்பதும் இவர்களால் பிழைத்துக் கொண்டிருப்பவர்கள் அநேகர்கள் என்பதும் நமக்குத் தெரியும். அதைப் பற்றியும் நமக்கு கவலையில்லை. மக்கள் அறிவு பெறுவதே நமது கவலை.

மூன்றாவது, அனுபவத்திற்கு ஒத்துவராத சமயங்களும் மக்களுக்கு சுயமரியாதை அளிக்காத சமயங்களும், ஒழிந்தே தீர வேண்டியது மிக்க அவசியமான வேலை. அது எந்த சமயம் ஆனாலும் சரி , வைணவ சமயமோ, சைவ சமயமோ, ஸ்மார்த்த சமயமோ, மாத்துவ சமயமோ மற்றைய சமயமோ என்பதைப் பற்றிய கவலை நமக்கு ஒரு சிறிதும் இல்லை. இனியும் இது போன்ற பல உண்டு. எனவே நமது தொண்டில் இதைத் தவிர வேறு இரகசியம் ஒன்றும் இல்லை. ஆதலால் இவற்றிற்கு எதிராக உள்ளவர்கள் எம்முறையிலாவது நம்மோடு போராடட்டும். அதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் சூழ்ச்சி முறை மாத்திரம் வேண்டாம் என்கின்றோம்.

அதாவது பவுத்த சமயத்தை அழிக்க சிலர் பவுத்த மதத்திலேயே சேர்ந்து துரோகம் செய்தது போல் நம்முடன் கூட இருப்பவர்கள் போல் காட்டிக் கொண்டும், நம்மையே சதா புகழ்ந்து கொண்டும் வேறு விதமாக அயோக்கியத்தனமாக யாரும் நடக்க வேண்டாம் என்று தான் கேட்டுக் கொள்ளுகின்றோம். நாம் எழுதுவதற்கோ, பேசுவதற்கோ யோக்கியமாக சமாதானம் சொல்லத் தயாராகவே இருக்கின்றோம். பார்ப்பானுடைய வேத சாஸ்திர ஸ்மிருதிகளுடன் வாதாடும் வேலையைவிட திரு. முதலியார் போன்ற புராணக்காரர்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும், உபத்திரவமே நமக்கு பெரிய தொல்லையாய் இருந்து வருகின்றது. காரணம் இவர்கள் வெளிப்படையாய் நேரான வழியில் எதிர்க்காமல் சூழ்ச்சி வழியை பின்பற்றுகிறது தானே ஒழிய வேறில்லை.

நிற்க. ஆராய்ச்சிக்காரர்கள் என்பதற்காகவோ, பண்டிதர்கள் என்பதற்காகவோ இவ்விஷயத்தில் நம்மிடத்தில் தனி மரியாதை ஒன்றுமில்லை என்பதை பொதுமக்கள் உணர வேணுமாய் வேண்டுகின்றேன். ஏனெனில் ஆராய்ச்சியும் பண்டிதத் தன்மையும் வேறு, அறிவு வேறு என்பது நமது அபிப்பிராயம். ஆராய்ச்சிக்காரரும் பண்டிதர்களும் அறிவாளிகளாகவே இருப்பார்களென்று எண்ணினால் ஏமாந்து போய் விடுவோம். ஆதலால் அவர்களிடத்தில் பொது ஜனங்கள் அறிவாளிகளுக்கு கொடுக்கத் தகுந்த மதிப்பை கொடுத்து ஏமாந்துவிடக் கூடாதென்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

சமீபத்தில் நான் ஒரு தொல்லையிலிருந்து நீங்கி சற்று ஓய்வடைந்தோம் என்று எண்ணியிருந்தோம். திரு. முதலியார் தொல்லை தவிர்க்க முடியாததாகி விட்டதால் அதன் முடிவையும் பார்த்து விட வேண்டியது அவசியமாகி விட்டதற்கு வாசகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றே நினைக்கின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 10.06.1928)