பார்ப்பனரல்லாதார்களைப் பொருத்தவரையில் அரசியல் நிலைமையிலும் சமூகயியல் நிலைமையிலும் தற்சமயத்தை பொறுப்புடன் நன்றாய் கவனித்து பார்ப்போமானால் இதை ஒரு நெருக்கடியான சமயம் என்றே சொல்ல வேண்டும். என்னவெனில் காந்தியடிகளின் தலைமையில் ஒத்துழையாமையின் போது பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் செய்த தியாகத்தின் பலனாய் மாய்ந்து மறையக் கிடந்த பார்ப்பனீயமானது பல பார்ப்பனர்களின் சூழ்ச்சியில் ஒருவாறு சமாளித்துக் கொண்டதுடன் ஒத்துழையாமையும் ஒழிக்கப்பட்டு அதன் பலன் முழுவதும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமாய் உபயோகப்படுத்தப்பட்டு வந்ததை அறிந்தே ஏறக்குறைய இரண்டு மூன்று வருடங்களாக சில தொண்டர்கள் எவ்வித எதிர்ப்புக்கும் பழிப்புக்கும் அஞ்சாது முனைந்து நின்று பார்ப்பன சூழ்ச்சியையும் அவர்களைப் பற்றி பிழைப்புக்கும் சில பார்ப்பனரல்லாத புல்லுருவிகளின் சுயநல சூழ்ச்சியையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் பாமர மக்களுக்கு விளக்கிக் காட்டியதின் பலனாய் பார்ப்பனரல்லாதார் சமூகம் அரசியல் தலைவர்கள் என்போர்களின் புரட்டையும் தேசாபிமானம் என்னும் வயிற்றுப் பிழைப்பு ஏமாற்றலின் தன்மையையும் ஒருவாறு அறிந்து கொள்ள இடமேற்பட்டதுடன் சமூக வாழ்விலும் தங்களது தாழ்ந்த நிலை இன்னது என்று உணர்ந்து சுயமரியாதையில் கவலை கொண்டு முற்போக்கடையும் முயற்சியில் மக்களின் கவனம் திருப்பப்பட்டிருப்பதும் யாவரும் அறிந்த விஷயமாகும்.

periyar with kid 793இந்நிலையில் அரசியல் வாழ்வுக்காரர்களுக்கு யோக்கியதையற்றதுடன் அவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் தலைகாட்டவும் வெட்கப்பட்டவர்களாகி மூலையில் ஒடுங்கிக் கிடந்ததுடன் தங்கள் வாழ்க் கையை மாற்றிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்ததும் யாவரும் அறிந்த விஷயமாகும். பொய்யும் புரட்டிற்கும் பித்தலாட்டதிற்கும் நமது நாட்டில் இனியும் கொஞ்ச காலத்திற்கு ஆயுள் இருக்கின்றது என்பதை காட்டுவதற்கு அறிகுறி ஏற்பட்டதுபோல் சைமன் கமிஷன் வருகின்றது என்கின்ற ஒரு சாக்கை வைத்துக் கொண்டு மூலையில் கிடந்தவர்கள் மறுபடியும் வெளிக்கிளம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

உதாரணமாக சைமன் என்கின்ற பேச்சு கிளம்புவதற்கு முன் சமீப காலமாக ஸ்ரீமான்கள் வரதராஜுலுவுக்காவது அவரது நண்பர் சத்தியமூர்த்திக்காவது தமிழ்நாட்டில் வெளியில் தலைகாட்ட யோக்கியதை இருந்ததா என்பதை யோசித்துப் பார்த்தால் அரசியல் புரட்டும் அரசியல் வாழ்வும் எவ்வளவு ஆழத்தில் புதைபடக்கூடிய நிலையில் இருந்தது என்பது விளங்கும். ஸ்ரீவரதராஜுலு எந்தக் கூட்டத்திலும் தலைகாட்டாமல் தப்பித்துக் கொள்வதும் மிஞ்சி ஏதாவது ஒரு கூட்டத்தில் தலைகாட்டித் தீரவேண்டிய அவசியம் வந்தால் முன் ஜாக்கிரதையுடன் 100, 200 ரூ. செலவுகள் செய்து துணைக்கு ஆள்களை வைத்துக் கொண்டு தலைகாட்டுவதும் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி தலை தூக்கினால் “உட்கார் உட்கார்!” “மானமில்லையா வெட்க மில்லையா” என்று மானங்கெடப் பேசி அமிழ்த்தி வைப்பதும் யாவரும் தினமும் தெரிந்து வந்த விஷயமாகும். பொதுஜனங்களும் இவர்களுடைய உபத்திரவம் ஒருவாறு ஒழிந்தது என்று நினைத்துக் கொண்டும் இருந்தார்கள். ஸ்ரீமான் எ. ரங்கசாமி ஐயங்காரோ சுதேசமித்திரனையே விட்டு ஓட வேண்டிய நிலைமை வந்துவிட்டதுடன் அப்பத்திரிகையும் படிப்பதற்கு முன்பாகவே சக்கரை கட்டவேண்டிய நிலைமைக்கு வந்து விட்டது. ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலைமைக்கு அல்லது “நான் இனிமேல் பொதுவாழ்க்கையில் இருந்து விலகி காயத்திரி மந்திரம் ஜெபிக்க மூக்கைப் பிடித்துக் கொள்ளப் போகின்றேன்” என்று சொல்லும் நிலைமைக்கு வந்து விட்டார்.

எனவே அரசியல் வாழ்வுப் புரட்டில் அம்மியும் குழவியும் போல் இருந்தவர்கள் இப்படி ஆகாயத்தில் பறக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்ட பிறகு மற்றவர்களான பழங் கூடையும் முறமும் குப்பையும் செத்தையும் என்ன கதிக்காளாயிருக்கும் என்பவைகளை நாம் எழுதவேண்டியதில்லை. அதில் சேர்ந்த அநேகர்கள் கூட்டம் கூட்டி ஸ்ரீமான்கள் அய்யங்காரையும் வரத ராஜுலுவையும் ரங்கசாமி அய்யங்காரையும் வைததும் இவர்கள் அவர் களுக்கு மறுபடியும் பணம் கொடுத்து தப்பித்துக் கொண்டதும் யாவரும் அறிந்ததாகும். தமிழ்நாடு பத்திரிகையும் அடியோடு மறையும் நிலைக்கு வரப்போவதைத் தெரிந்து அதுவும் காங்கிரசை மறைமுகமாய் அதாவது பார்ப்பனரல்லாதாரை ஏமாற்ற சுயராஜ்யக்கக்ஷி என்கின்ற பேரால் பித்த லாட்டக் கருத்துடன் அதன் அரசியல் கொள்கைகளை வைதுகொண்டும், மற்றொருபுறம் பார்ப்பனர்களை ஏமாற்ற காங்கிரசைப் புகழ்ந்து கொண்டும், தனது தைரியத்தைக் காட்ட ஒரு நாளைக்கு ஒருவரை வைது கொண்டும் மறுநாளைக்கு மன்னிப்பு கேட்டு கொண்டும் இம்மாதிரி நித்தியகண்ட மாயிருந்து வந்ததும் யாவருக்கும் தெரியும்.

மற்றொரு பார்ப்பனக் கூட்டம் தங்களுக்கு சமூக ஆதிக்க வாழ்விலும் ஆபத்து வந்துவிட்டதென்று பயந்து ஸ்ரீமான் காந்தியை அழைத்து வந்து வருணாசிரம பிரசாரம் செய்வித்ததும் அதுவும் பலிக்காமல் போனதும் யாவருக்கும் தெரியும். இந்நிலையில் அதாவது சுற்றிலும் பற்றி எரிந்து கொண்டிருக்கின்ற கானல் நெருப்புக்கு மத்தியில் சிக்கின மனிதர்கள் போல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு திடீரென்று பெருமழை வந்ததுபோல் சைமன் கமிஷன் வரவும் அதைப் பிடித்துக் கொண்டு பாமர மக்களை ஏய்க்க வெளியில் வந்துவிட்டார்கள். சைமன் கமிஷனால் நன்மை வரப்போகின்றதா தீமை வரப் போகின்றதா? அல்லது அதனுடன் ஒத்து ழைக்க வேண்டுமா? அல்லது பகிஷ்கரிக்க வேண்டுமா? என்பது இந்த வியாசத்தின் முக்கிய கருத்தல்ல. மற்றென்ன வென்றால் தங்களின் யோக்கி யதை பாமர மக்களுக்கு வெளியாக்கப்பட்டு பாமர மக்கள் தங்களிடமிருந்து பிரித்து ஒதுக்கப்பட்டு வெளியில் தலை காட்டுவதற்கு தங்களுக்கு மார்க்க மில்லாமல் செய்யப்பட்ட ஒரு கூட்டத்தார்கள் இன்றையத் தினம் சைமன் கமிஷன் என்னும் ஒரு போலி ஆயுதத்தைக் கொண்டு மறுபடியும் வெளியில் வந்து பாமர மக்களுடன் கலரவும் மறுபடியும் அவர்களை ஏமாற்றி பாழாக்கி வாழவும் தக்கதான சந்தர்ப்பம் கிடைக்கப் போகின்றதே என்பதைப் பற்றிய கவலைதான் முக்கிய கருத்தாகும்.

இதில் உள்ள புரட்டுகளைப்பற்றி சுமார் 10, 12 வியாசங்கள் குடி அரசிலும் 5, 6 வியாசங்கள் திராவிடனிலும், 2, 3, வியாசம் குமரன், நவசக்தி, நாடார்குல மித்திரன் முதலிய பத்திரிகைகளிலும் வெளி வந்ததுடன் சுமார் 10, 15 உபந்நியாசங்களும் நடைபெற்றிருக்கின்றன.

“வெற்றிமேல் வெற்றி” “முழக்கத்திற்கு மேல் முழக்கம்” என்று கொட்டைத் தலையங்கமிட்டு எழுதி வந்த சுதேசமித்திரனும் அவரது சிஷ்யனாகிய தமிழ்நாடும் அதன் வால்களாகிய மற்றும் சிலவும் ஏதாவது ஒரு விஷயத்திற்காவது சமாதானம் சொல்லி வெற்றியைக் காட்டிற்றா? அல்லது முழக்கத்தைக் காட்டிற்றா? என்று பார்த்தால் உலகத்தில் எவ்வளவு தைரிய மாய் அயோக்கியத்தனம் செய்கின்றார்கள் என்பதும் அதை நம்புவதற்கு எவ்வளவு மூடர்கள் இருக்கின்றார்கள் என்பதும் இவைகளை வேண்டு மென்றே மறைத்து வைக்க எவ்வளவு துரோகிகள் இருக்கின்றார்கள் என்பதும் வெளியாகிவிடும். இப்படி எல்லாம் இருந்தாலும் இந்த நிலைமை யும் கூட நமது பார்ப்பனர்களுக்கு திருப்தியை கொடுக்காமல் பயத்தை கொடுத்திருக்கின்றது என்பது நமக்குத் தெரிகின்றது. அதாவது எவ்வளவு தூரம் பார்ப்பனரல்லாதார்களிலும் சிலர் தங்கள் கூட இருப்பதாக காட்டிக் கொள்ளக்கூட சவுகரியம் இருந்தாலும் அதாவது ஸ்ரீமான்கள் முத்துரங்க முதலியார், குழந்தை, ஷாபிமகமது சாயபு, பஷீர் ஆமது சாயபு, அமீத்கான் சாயபு, அண்ணாமலைப் பிள்ளை, வரதராஜுலு நாயுடு, குப்புசாமி முதலியார், ஓ. கந்தசாமி செட்டியார் போன்றவர்கள் தங்கள் கூட இருப்பதாகக் காட்டிக் கொள்ள சரிப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தாலும் இவர்கள் ஒருவரிடமும் பார்ப்பனரல்லாத பாமர மக்களுக்கு நம்பிக்கையும் மரியாதையும் இல்லை என்பதை அவர்கள் நன்றாய் உணர்ந்து விட்டார்களானதால் வேறு சிலரைத் தங்களுடன் சேர்க்கவோ அல்லது பார்ப்பனரல்லாதாருக்குள் மற்றும் சில கக்ஷிகளை உண்டாக்கவோ இதுசமயம் முயற்சி எடுத்துக் கொண்டிருக் கின்றார்கள். இதைத்தான் மிக்க நெருக்கடியான சமயம் என்று சொல்லு கின்றோம்.

அதாவது சென்ற 10, 12, வருடங்களுக்கு முன் பார்ப்பனரல்லாதார் கட்சி ஏற்பட்டு இப்போதைப் போலவே பார்ப்பனர்களின் சூழ்ச்சியை டாக்டர் நாயர், சர்.தியாகராயர், சர்.சங்கரன் நாயர் போன்றோர்கள் வெளியாக்கி பாமர ஜனங்களுக்கு பார்ப்பனர்களிடம் மதிப்பில்லாமல் செய்து விட்ட காலத்தில் எப்படி பார்ப்பனர்கள் அதாவது ஸ்ரீமான்கள் சர்.சி.பி. இராமசாமி அய்யர், எ. ரங்கசாமி ஐயங்கார், டாக்டர் ராஜன், சி. ராஜகோபாலாச்சாரி, சி. விஜய ராகவாச்சாரி முதலியோர்கள் ஸ்ரீமதி பெசண்டம்மையையும் சேர்த்துக் கொள்ள முயற்சித்து இதே ஸ்ரீமான் வரதராஜுலு போன்றோர்களை வசமாக்கிக் கொண்டு அவர்கள் மூலமாய் மக்களை ஏமாற்றி பார்ப்பனரல்லா தாருக்குள் பிளவை உண்டு பண்ணியதோடு அப்போதும் இந்த சைமன் கமிஷன் போல் அதாவது இதுபோலவே இல்லாவிட்டாலும் இந்திய நிலைமையை விசாரிக்க பிரிட்டிஷார் முயற்சித்த காலத்தில் பார்ப்பனர் களுக்கு அனுகூலமாய் பார்ப்பனரல்லாதார்களிலே சிலரைப்பிடித்து இங்கு சொல்லுவித்ததல்லாமல் சில பார்ப்பனரல்லாதாருக்கு பணம் கொடுத்து சீமைக்கும் அனுப்பி தங்களுக்கு அனுகூலமாய் வேலைசெய்து கொண்டதுபோல் இப்போது ஆரம்பித்துவிட்டார்கள். அதுதான் கோகலே ஹாலில் சில நாளைக்கு முன்பாக ஸ்ரீமதி பெசண்டும் மற்றும் சில அய்யர் களும் கூடி பனகால் ராஜா போன்றோரைக் கூப்பிட்டு ராஜி பேச முயற்சித் ததும் அதில் நம்பிக்கையில்லாது போகவே ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார், எம்.ஆர். ஆச்சாரியார் போன்ற அய்யங்கார், கொல்லங்கோடு ராஜா, சர்.கே.வி. ரெட்டி நாயுடு, டாக்டர் நடேசன், சிவஞானம் பிள்ளை முதலியவர்களை அதாவது பார்ப்பனரல்லாதார் கட்சியுடன் முரண் பாடு கொண்டிருப்பவர்களாகப் பார்த்து கூப்பிட்டு பேசி அவர்களுக்கு குல்லாயிட்டு ஒரு கட்சியையும் ஏற்படுத்திவிட்டார்கள்.

அக்கட்சியில் உள்ளவர்களின் நிலைமையைப்பற்றி ‘திராவிடன்’ 26-1-28 - தி வியாழக் கிழமை தலையங்கத்தில் குறிப்பிட்டு இருக்கும் விஷயத்தை மற்றொரு இடத்தில் பிரசுரித்திருக்கின்றோம். அவர்களில் பெரும்பாலோர் பார்ப்பன சாவகாசமே கூடாது என்றவர்களும் பார்ப்பனர்கள் சமீபத்தில் வீற்றிருப்பது சுயமரியாதைக்குக் கேடு என்பவர் களும் பார்ப்பனர்களின் அட்டூழியங் களை அதிகார மதிகாரமாய் பேசினவர் களும் அவர்கள் வலையில் சிக்கி ஏமாந்தவர்களும் ஆவார்கள். அப்பார்ப் பனர்களை அதுவும் ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார் சத்தியமூர்த்தி போன்றார்களை வானமளாவத் துதிக்கவும் புகழவும் ஏற்பட்டதானது எப்பேர்ப்பட்டவர்களுக்கும் சந்தேகத்தை கொடுப்பதாகவே இருக்கின்றது. பாமர மக்களுக்குள் இவர்களைப் போற்றிப் புகழ்ந்து இவர்கள் விஷயத்தில் நல்ல அபிப்பிராயம் கொண்டவர்கள் பலர் இருக்கின்றார்களானாலும் நேரே சரியான எதிரியிடம் அதுவும் மானம் ஈனம் இல்லாத எதிரியிடம் சரண் புகுந்ததானது பார்ப்பனரல்லாத சமூகத்திற்கே பெருத்த மானக்கேட்டை விளைவிப்பதாகவும் பெருத்த ஆபத்தை உண்டாக் கக் ககூடியதாகவும் இருக்கின்றது. இதில் சிலர் ஏமாந்து போய்விழுந்து விடக் கூடும் என்றே நாம் பயப்படுகின்றோம்.

சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்களும் டாக்டர். நடேசன் அவர்களும் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரை புகழ்ந்து பேசி பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பிணக்கை தீர்த்து வைக்கும்படி அவருக்கு விண்ணப்பம் போட்டுக் கொண் டது வாஸ்தவமானால் அந்த இழிவு பல தலைமுறைக்கு மாறாதென்பதே நமது அபிப்பிராயம்.

ஏற்கனவே சுயநலத்தின் மூலமாகவும் அதிகாரப் பேராசையின் மூலமாகவும் சரியான காரணமில்லாமல் பிளவுபட்டுக் கிடக்கும் பார்ப்பனரல்லாதார்களுக்குள் பார்ப்பன சூழ்ச்சி இப்படி ஒரு கூட்டத்தை தன் வயப் படுத்திக் கொண்டது. 10 வருடங்களுக்கு முன் ஸ்ரீமான் வரதராஜுலு போன் றோரை தன் வயப்படுத்திக் கொண்டு செய்த உபத்திரவத்தைவிட இது அதிகமான உபத்திரவத்தைக் கொடுக்கும் என்றே பயப்படுகின்றோம். ஏனெனில் அந்தக் காலத்தில் வயப்படுத்திக் கொண்ட ஆசாமிகள் பெரும் பாலும் வெறும் ஆசாமிகளாக இருந்ததோடு பார்ப்பனர்களாலேயே அவர் களை மனிதர்களாக்கி பிறகு அவர்களைக் கொண்டு பார்ப்பனரல்லாதாருக்கு உபத்திரவத்தை விளைவித்தார்கள். இப்போது அப்படிக்கில்லாமல் ஏற் கனவே பலவிதத்திலும் யோக்கியதையும் அந்தஸ்தும் சற்று செல்வாக்கும் பெற்றவர்களாயிருப்பதால் இவர்களால் முன்னையைவிட அதிகமான தொல்லை விளையும் என்றே மறுபடியும் சொல்லுகின்றோம்.

இந்நாட்டு மக்களாகிய பார்ப்பனரல்லாதார் சமூகமானது ஆயிரக்கணக்கான வருஷமாக பார்ப்பனர்களாலும் அவர்களது கொள்கைகளாலும் மிருகத்திலும் கேவலமாய் மதிக்கப்பட்டு மனிதத் தன்மை இழந்து அன்னிய நாட்டார்களால் மிகக் கேவலமாக மதிக்கப்படுவதை எந்த மனிதனும் மறக்க முடியாது என்று துணிந்து கூறுகின்றோம். இப்படிப்பட்ட சமூகம் தலையெடுக் கும்போதெல்லாம் “உடன் பிறந்தே கொல்லும் வியாதி” என்பது போல் எமன்கள் என்று சொல்லப்பட்ட பார்ப்பனர்களுக்கு அனுகூலமாய் நம்மைக் கொல்வதற்கு வியாதிகளாக நம்மவர்களிலேயே சிலரிப்படி ஆளாவது நமது சமூகத்தின் இழிநிலையைக் காட்டும் அறிகுறியென்று கூட சொல்லுவோம்.

இந்நிலையை நாம் யாரிடம் முறையிட்டுக் கொள்வது என்பதுதான் நமக்கு விளங்கவில்லை. எனவே பார்ப்பனர்களைப் போலாவது அதாவது காங்கிரசைப் போலாவது பார்ப்பனரல்லாதார் எல்லோரும் ஒன்றுகூடி நமக்குள்ள குறைகளை இன்னது என்று வெளியார்களுக்கோ தெரிவிக்கக் கூட யோக்யதை இல்லாத நிலையில் இருக்கின்றோம். ஆதலால் இன்னிலைமையை உணர்ந்து பார்ப்பனரல்லாத பாமர மக்களாவது ஒன்று சேர்ந்து ஏதாவது ஒரு ஏற்பாடு செய்து நமது குறைகளையும் தேவைகளையும் குறித்து ஒரு திட்டத்தை ஏற்படுத்தலாமா? என்றும் அல்லது நமது நிலைமையைப் பற்றி மிஸ்.மேயோ அம்மையார் தயாரித்து உலகத்தாருக்கே சமர்ப்பித் திருக்கும் “இந்தியத் தாய்” என்கின்ற புஸ்தகத்தையே நமக்கு பிரதிநிதித்துவம் என்று சொல்லி அதற்கு பரிகாரம் செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்ளலாமா? என்றும் கேட்கின்றோம்.

இனி நாம் சும்மா இருப்பது மிகவும் வெட்கக் கேடானதும் பொறுப்பற்றதுமான காரியமாகும். அன்றியும் விடிய விடிய விழித்துக் கொண்டிருந்து விட்டுத் திருடன் வரும்போது தூங்கிவிட்ட அவ்வளவு முட்டாள்தனமானதுமாகும்.

(குடி அரசு - தலையங்கம் - 29.01.1928)