சென்னையில் காங்கிரஸ் கூட்டப்பட்டதின் பயனாக பார்ப்பனர்களின் யோக்கியதையும் அவர்களின் ஆயுதமாகிய தேசீயத்தின் யோக்கியதையும் யாவருக்கும் விளங்கியிருந்தாலும், பார்ப்பனர்கள் இன்னமும் நம்பிக்கை இழக்காமல் தைரியமாய் இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும், ஏனெனில் பல விதத்திலும் அவர்களுக்கு பார்ப்பனரல்லாதார் உதவி இருப்பதாகத்தான் சொல்ல வேண்டும்.

periyar policeஉதாரணமாக இப்போது பார்ப்பனர்களுக்குத் தமிழ்நாட்டில் பார்ப்பன ஆதிக்க பிரசாரத்திற்கு முக்கிய உதவியாயிருக்கும் பார்ப்பனரல்லாதார்களில் முக்கியமானவர்கள் ஸ்ரீமான்கள் முத்துரங்க முதலியார், ஓ. கந்தசாமி செட்டியார், வரதராஜுலு நாயுடு, ஜார்ஜ் ஜோசப், குழந்தை, அண்ணாமலை பிள்ளை, குப்புசாமி முதலியார், கோவிந்தராஜு முதலியார், ஐயவேலு ஆகியோர்களே ஆவார்கள். மற்றபடி ஸ்ரீமான்கள் சாமி வெங்கடாசலம் செட்டியார், சாமி நாயுடு, ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் முதலியோர்களிடத்தில் நம்பிக்கையில்லாத தன்மையைத் தெரிவித்து விட்டார்கள்.

ஸ்ரீமான் முத்துரங்க முதலியாரின் யோக்கியதையைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. பெரிய வருணாசிரம தர்மி. பார்ப்பனர்களைப் பூலோக தேவதைகளாகக் கொண்டவர். அவர் எழுதிக் கொடுத்ததைப் படிப்பதும் சொல்லிக் கொடுத்ததைச் சொல்லுவதும் தவிர வேறு எது படித்தாலும் சொன்னாலும் குரு அபசாரமென்றும் வேத நிந்தனை என்றும் நினைப்பவர். அவருக்கு மேலான பார்ப்பன பக்தன் இனி எந்த பிரம்மாவினாலும் சிருஷ்டிக்கப்பட முடியாது.

ஸ்ரீமான் ஓ.கந்தசாமி செட்டியாரோ தனது அறிவையும் உயிரையும் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பாதத்தில் சமர்ப்பித்து விட்டவர். தனக்கு கந்தசாமி செட்டியார் என்கிற பெயர் கூட இருப்பது கூட கஷ்டம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றவர். ஏனெனில் பெயர் மாத்திரத்தினால் கூட அய்யங்கார் வேறு, செட்டியார் வேறு என்று ஏற்படுகின்றதே என்று விசனப்பட்டு ராமருக்கு அனுமான் என்பது போல் சீனிவாசருக்கு கந்தசாமி என்கின்ற நிலை வேண்டுமென்று நடந்து கொண்டு வருபவர்.

இவர் ஆதியில் பார்ப்பனரல்லாதார் கக்ஷியில் இருக்கும்போதே பேசின பேச்சும் எழுதி வந்த எழுத்துக்களும் இனியும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

பண விஷயமான தகராறுகள் ஏற்பட்டதும், அய்யங்கார் தாராளமாய் செட்டியாருக்கு உதவி புரிய முன்வந்ததும், செட்டியாரின் பழைய நிலைமை எல்லாவற்றையும் மாற்றி புது ஜன்மம் எடுத்தவர் போல் நடந்து கொள்ள வேண்டியவராகிவிட்டார்.

செட்டியாரின் யோக்கியதைக்கு ஒரே ஒரு உதாரணம் போதும். அதாவது ஆசார சீர்திருத்த மகாநாட்டுக்கு காரியதரிசி என்கின்ற முறையில் பார்ப்பனரல்லாதார் வாலிபர் சங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அது என்னவென்றால் பார்ப்பனரல்லாதார் வாலிப சங்கத்திலிருந்து ஆசார சீர்திருத்த மகாநாட்டுக்கு பிரதிநிதிகளை ஒப்புக்கொள்ளமுடியாது என்று எழுதியிருக்கிறார். இந்த எழுத்து செட்டியாரின் நிலைமை எவ்வளவு தூரம் மாறியிருக்கின்றது என்பதை காட்டும்.

 “மானம், குலம், கல்வி, வன்மை அறிவுடைமை முதலியவை பத்தும் பசி வந்திடப் பறந்து போம்” என்கின்ற ஆப்த வாக்கியத்திற்கு செட்டியார் நடத்தையைவிட வேறு உதாரணம் கிடைப்பதரிது.

இனி ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு விஷயமோ சொல்ல வேண்டியதில்லை. அவர் பத்திரிகையையும் பிரசங்கத்தையும் நடவடிக்கையையும் பார்த்து வருகின்றவர்களுக்கு புதிதாக ஒன்றும் சொல்லி தெரியப்படுத்த வேண்டியதில்லை. அவருக்கு இரண்டே இரண்டு மந்திரம் தான். அதாவது “சமூக இயலில் பார்ப்பனர்கள் அயோக்கியர்கள்.”, “அரசியலில் பார்ப்பனர்கள் குருவும் தலைவர்களுமானவர்கள்” என்பதைக் கொண்டு சமயம் போல் திரும்ப வசம் வைத்துக் கொண்டிருப்பவர்.

ஸ்ரீமான் சீனிவாச அய்யங்காரருக்கு முழு விரோதியாக ஏற்பட்டு விட்டால் குடிமுழுகிப் போகுமே என்று பயந்து கொண்டு உள் உளவில் அவருக்கு நல்ல பிள்ளையாக இருந்து வருவதாக வாக்கு கொடுத்திருப்பவர். அவ்வாக்கை நிறைவேற்றவே ஸ்ரீமான் சண்முகம் செட்டியாரை நீக்கவும், ஜார்ஜ் ஜோசப் அவர்களுக்கு கிடைக்க இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையை அய்யங்காருக்கு சூட்டவும் ஏற்பட்டது.

ஸ்ரீஜார்ஜ் ஜோசப் அவர்கள் விஷயம் இவ்வளவு மோசமாக இல்லாவிட்டாலும் பார்ப்பனர்களிடத்தில் உள்ள பயம் ஒரு சிறிதும் நீங்கவில்லை என்பதும் வாழ்க்கைக்காக பார்ப்பனர்கள் தயவு சற்றும் வேண்டியில்லா விட்டாலும் உத்தியோகம் பதவி முதலியவைகளை அவர்கள் தயவால் சம்பாதிக்கலாம் என்கின்ற ஆசை நீங்காதவர்.

மற்றபடி ஸ்ரீமான்கள் குழந்தை, கோவிந்தராஜு முதலியார், அண்ணாமலை பிள்ளை, குப்புசாமி முதலியார், ஜயவேலு ஆகிய கனவான்களைப் பற்றி யாராவது ஒருவர் கூட தெரியாமலிருக்க மாட்டார்கள் என்கின்ற முடிவினால் விட்டுவிட்டோம்.

எனவே இத்தமிழ்நாடு முழுவதையும் நமது பார்ப்பனர்கள் இந்த பக்தர்களைக் கொண்டே ஆண்டு விடலாம், ஆதிக்கம் பெற்று விடலாம் என்கின்ற தைரியத்துடன் சுயேட்சைத் தீர்மானத்தையும், ராயல் கமிஷன் பஹிஷ்காரத் தீர்மானத்தையும் மகமதியர்களின் வகுப்புவாரித் தீர்மானத்தை ஒழிக்கும் தீர்மானத்தையும் பிரசாரம் செய்வதற்கும் அதன் மூலம் தாலூகா, ஜில்லா, முனிசிபாலிட்டி, சட்டசபை, இந்திய சட்டசபை முதலியவைகளின் தேர்தல்களில் பார்ப்பனர்களையும் பார்ப்பன தாசர்களையும் வெற்றிபெறச் செய்து அமர்த்தவும், துணிந்து பிரசாரத்தில் இறங்கி விட்டார்கள். அதற்கு ஏற்றார்போல் பத்திரிகைகளும், அதாவது ‘இந்து’ ‘சுயராஜ்யா’ ‘டெய்லி எக்ஸ்பிரஸ்’ போன்ற ஆங்கில பத்திரிகைகளும், ‘சுதேசமித்ரன்’ ‘தமிழ்நாடு’ ‘சுயராஜ்யா’ ‘தேசபந்து’ ‘தென்னாடு’ ‘ஊழியன்’ ‘ஜனமித்திரன்’ போன்ற தமிழ் தினசரி வாரப்பதிப்பு ஆகிய பல பத்திரிகைகளும் இருக்கின்றன. இதற்கு அனுகூலமாக பல இடங்களில் பார்ப்பனரல்லாதவர்களுக்குள்ளாகவே தலைவர் தகராறுகளும், எலக்சன் தகராறுகளும், உத்தியோகத் தகராறுகளும், பத்திரிகை தகராறுகளும் கொண்ட பல கட்சிகள் இருக்கின்றது. அதற்கு ஏற்றாப்போலவே இவ்வளவு தகராறுகளிலும் ஸ்தல ஸதாபனங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கமும் தாண்டவமாடுகின்றது. ஆகவே புது வருஷத்தில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு பலக்குறைவு இருப்பதாக யாரும் சொல்லிவிடமுடியாது. ஆதலால் பார்ப்பனரல்லாதார் கட்சியார்கள் ஜாக்கிரதையாகவும் சுயநலமில்லாமலும், யோக்கியமாகவும் நடந்து கொண்டாலொழிய நிவர்த்தியில்லை என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 15.01.1928)