விளையாட்டுப் பிள்ளைகள் மண் கொழிக்கும் சங்கம்

சென்ற காங்கிரசைப் பற்றி ஸ்ரீமான் காந்தி தமது ‘யங் இந்தியா’ பத்திரிகையில் ஜனவரி 5 தேதி எழுதியதாவது, “நான் விஷயாலோசனைக் கமிட்டியின் கூட்டங்களொன்றுக்கும் செல்ல முடியவில்லையெனினும், மிகவும் பொறுப்பற்ற வகையில் பேச்சும், வேலையும் நடந்தது என்றும் ஒழுங்கீனமாய் அங்கத்தினர்கள் நடந்து கொண்டார்களென்றும் தெரிந்து கொண்டேன். இன்னது விளையும் என்று சிந்திக்காமலே முன்பின் யோசனை இல்லாமல் மிகவும் உபயோகமற்ற தீர்மானங்களை திடீரென விஷயாலோசனைக் கமிட்டியில் பிரேரேபித்து அவைகளை அக்கமிட்டியாரும் யோசனையின்றி ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். சென்ற வருஷம் நிராகரிக்கப்பட்ட பூரண சுயேச்சைத் தீர்மானம் நிறைவேறிவிட்டது. அது யோசனையில்லாமலே நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

periyar on marriageபிரிட்டிஷ் சாமான்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்று செய்த தீர்மானமும் அதேமாதிரி சிறிதும் கவலையற்ற தன்மையில் நிறைவேற்றப்பட்டது. காரியத்தில் நடத்த முடியாது என்று அறிந்தும் இத்தகைய தீர்மானங்களை வருஷா வருஷம் காங்கிரஸ் நிறைவேற்றுவதால்தான் அது தன் கௌரவத்தை இழந்து கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட தீர்மானங்கள் செய்வதால் நமது பலஹீனத்தை வெளிப்படுத்துவதுடன் ஊராரெல்லாம் நம்மை நகைத்து, நமது எதிரி நம்மைக் கண்டு ஏளனஞ் செய்யுமாறு நாம் செய்து கொள்ளுகின்றோம். காங்கிரசுக்கு பிரிட்டிஷ் சாமான்களை பகிஷ்கரிக்கப் பூரண உரிமையுண்டு. ஆனால், இந்திய ஜனங்களின் பிரதிநிதித்துவம் வாய்ந்த பிரதம சபையாகிய அது வீண் மிரட்டல்களினால் அவ மானத்திற்கு ஆளாகக் கூடாது. இங்ஙனம் தீர ஆலோசியாமல் தீர்மானங்களை வெறும் காகித அளவில் செய்து பொதுமக்களின் தேவையையும் அபிலாஷைகளையும் கருதாமல் காங்கிரஸ் போய்க் கொண்டிருந்தால் முன்னிருந்த செல்வாக்கும் பலமும் அதற்கு மீண்டும் வராது. திரும்பவும் காங்கிரஸ் அந்த உன்னத ஸ்திதிக்கு வரவேண்டுமாகில், அதன் அங்கத் தினர்கள் தேசத்தின் ஊழியர்களாய்த் தங்களைப் பாவித்துக் கொண்டு ஒழுக்கத்தையும், நேர்மையையும் கடைப்பிடித்து நடந்து கொள்ள வேண்டும். ஆனால் தற்போது வெறும் பள்ளிக்கூடப் பையன்களைப் போல்தான் அவர்கள் நடந்து கொள்ளுகிறார்கள். அவ்வளவு தாழ்ந்த நிலைக்கு காங்கிரசும் வந்துவிட்டது.

காங்கிரஸ் வரவேற்புக் கமிட்டியார் தங்கள் ஆதரவில் அகில இந்திய தேசீய கண்காட்சி என்ற பெயருடன் பிரிட்டிஷ் சாமான்களையும் அன்னிய நாட்டுச் சரக்குகளையும் விளம்பரப்படுத்த இடங்கொடுத்தது பெருந்தவறாகும். அதில் சுதேசி சாமான்கள் வெகு குறைவாகவேயிருந்தன. இந்தக் கூத்து பிரிட்டிஷ் சாமான்களை பகிஷ்கரிக்க வேண்டும் என்று திட்டஞ் செய்து சுதேசியத்தை வளர்க்கும் காங்கிரசின் ஆதரவிலேயே நடக்கிறது. காங்கிரசின் அடிப்படையான நோக்கத்திற்கே அது விரோதமாகும். யோசனையின்மையும், சிரத்தைக் குறைவும், பொறுப்பற்ற தன்மையும் தான் இதற்குக் காரணங்கள் என்று சொல்லுவேன். இது மிகவும் வெட்கக் கேடானது என்று கூறாமலிருக்க முடியவில்லை.

குறிப்பு:- அதற்கு ஏற்றாற்போல் ஸ்ரீ எஸ். சீனிவாசய்யங்கார் அவர்களும் காங்கிரஸ் தீர்மானமெல்லாம் வியாபாரத் தீர்மானமே ஒழிய உண்மையான தீர்மானம் அல்ல என்று சொல்லிவிட்டார். இப்பொழுதாவது காங்கிரசைப் பற்றியும் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களைப் பற்றியும் ‘குடி அரசு’ எழுதிக் கொண்டுவரும் விஷயங்கள் உண்மை என்பது விளங்கவில்லையா? என்று பொதுமக்களை கேட்கின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.01.1928)