ராயல் கமிஷன் பஹிஷ்காரத்திற்கு இந்தியா முழுவதற்கும் இப்போது இரண்டு தலைவர்கள்தான் முக்கியமானவர்கள்.

அவர்களில் காங்கிரஸ் தலைவர் என்கின்ற முறையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் ஒருவர். மற்றப்படி சட்ட ஒழுங்குக்கு கட்டுப்பட்ட கக்ஷிக் காரர்கள் தலைவர் என்று ஸ்ரீமதி பெசண்டம்மையார் இரண்டாமவர் ஆவார்.

periyar karunanidhi 460மற்றவர்கள் எல்லோரும் இவர்கள் இருவர்களில் கட்டுப்பட்டவர்கள். எனவே, இந்த இருவருக்குள்ளாகவும் பலமான அபிப்பிராய பேதம் ஏற்பட்டு விட்டது. ஆனால் புரட்டுக்கார பத்திரிகைகள் இதை ஜனங்கள் அறியாதபடி சந்திலும் பொந்திலும் போட்டு மறைத்து வைத்து வருகின்றன. ஆனாலும் சமீபத்தில் வெளியாகித்தான் தீரும்.

என்னவெனில் பஹிஷ்காரப் பேச்சு பேசும் தலைவர்கள் அநேகமாய் புரட்டர்கள் என்றும் தங்களுக்கு மானம் போய் விட்டதாக வேஷம் போடுகிறார்கள் என்றும் உண்மையிலேயே பார்லிமெண்டார் இந்தியரை கமிஷனில் நியமிக்காததானது இவர்களது சுயமரியாதைக்கு பங்கமாயிருப்பதாக கருதுவார்களானால் அதே பார்லிமெண்டாரால் நியமிக்கப்பட்ட மற்ற பதவிகளில் இருக்கலாமா என்றும் அதாவது சட்டசபை, ராஜாங்க சபை மற்றும் அது சம்மந்தமான பதவி உத்தியோகங்களில் இருக்கலாமா என்றும் ஒரு கேள்வி கேட்டிருந்தோம். அதன்பின் சில ஆசாமிகள் சமயம் வந்தால் அதையும்தான் பஹிஷ்கரிப்போம் என்று சத்தம் போட்டார்கள். இதையறிந்த பெசண்டம்மையார் பஹிஷ்காரம், பஹிஷ்காரம் என்று வாயில் சொல்லிக் கொண்டு மாத்திரம்தான் இருக்க வேண்டுமே ஒழிய ஒரு வேலையையும் பஹிஷ்கரிக்கக் கூடாது என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கின்றார்கள். இதில் ஸ்ரீமான் அய்யங்கார் கையெழுத்துமிருக்கிறது.

நாட்டின் நிலைமையைப் பார்த்த ஸ்ரீஅய்யங்கார் இப்போது திடீரென்று கரணம் போட்டு பெசண்டம்மையின் அந்தக் கொள்கைக்கு நான் கட்டுப்பட்டவனல்ல. ஒரு சமயம் எல்லா வேலைகளையும் பஹிஷ்கரிக்க வேண்டி வந்தாலும் வரும் என்று வீரர் போல் மற்றொரு அறிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

இதற்கு மத்தியில் மற்றொரு ‘வீரர்’ ஸ்ரீபண்டித மாளவியா வரிகொடா இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்கின்றார். மூன்றும் மூன்று விதமாய் இருக்கின்றது. ஆனால் மூவரும் பார்ப்பனர்களே. “பசுவை நம்பினாலும் பார்ப்பானை நம்பாதே” என்று பழமொழி உண்டு. இது கண்டிப்பாய் மாளவியா விஷயத்தில் உபயோகிக்கப்பட வேண்டியதுதான்.

ஏனெனில் பஞ்சாப் அட்டூழியத்திற்காக கொஞ்சம்கூட சுயமரியாதையைப் பற்றிக் கவனிக்காத மகான், ரௌலட் பில்லுக்காக சட்டசபை ஸ்தானத்தை ராஜீநாமா கொடுத்து விட்டு மறுபடியும் திருப்பி வாங்கி கொண்ட வீரர். ஏதோ ஒரு உப்புப் புளியில்லாத சப்பைக் காரியமான பஹிஷ்காரமென்ற போலிக்கு வரிகொடுக்காத இயக்கமும் ஆரம்பிக்கின்றேன் என்றால் அதை யார் நம்புவார்கள். இதில் ஏதாவது புரட்டு இருக்குமா இருக்காதா என்று பார்த்தால் வெளியாகாமல் போகாது. அதுதான் மகமதியர் தலையிலும் பார்ப்பனரல்லாதார் தலையிலும் கையை வைக்கும் புரட்டு. என்னவென்றால் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை ஒழித்து விட்டு பார்ப்பன ஆதிக்கமே நிலைத்திருக்கச் செய்வதாகும்.

இது இப்படி மூன்றும் மூன்று விதமாய் இருக்க மற்றொரு விஷயமென்னவென்றால் எல்லோரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள் என்று பொய்ச் சங்கூதுவது. யார் யார் ஒன்று சேர்ந்தார்கள், எது எதெதெற்கு ஒன்று சேர்ந்தார்கள் என்று சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம். 8 கோடி பேர் கொண்ட சமூகமாகிய மகமதியர்கள் 100 -க்கு கால் பேர் கூட பகிஷ்காரத்துக்கு சேரவில்லை. மகமதிய சமூகத்தின் ஸ்தாபனமும் சேரவில்லை.

தவிர, லாகூர் பிரபல மகமதியர்கள் பலர் அதாவது சர். சல்பீகர் அலிகான், சர். அப்துல் காசிம், சர். அப்துல்ஹை, ஜனாப் ரஜான் பக்ஷ், ஜனாப் முகம்மது, சர். இக்பால் முதலியோர்கள் கையெழுத்திட்டு பகிஷ்காரத்தில் சேரக்கூடாது என்று கண்டித்து தங்கள் சமூகத்திற்கு அறிவுறுத்தி இருப்பதுடன் வகுப்பு கலவரத்தினால் அடையும் சுயமரியாதைக் குறைவைவிட ராயல் கமிஷனால் சுயமரியாதைக்கு அதிகக் குறைவு கிடையாது என்று சொல்லி ஜனாப் ஜின்னாவையும் கண்டித்திருக்கின்றார்கள்.

பங்காளத்தில் மகமதியர்கள் பெரும்பான்மையோர் பகிஷ்காரத்தில் கலரக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அலகாபாத்திலும் ராயல் கமிஷனை பகிஷ்கரித்தால் முஸ்லீம்களுக்கு அதிக பாதகம் ஏற்படும் என்று எச்சரிக்கை செய்திருக்கின்றார்கள்.

சென்னையிலும் முஸ்லீம்கள் ஏறக்குறைய யாவரும் எதிரிடையாகவே இருக்கின்றார்கள். மொத்தத்தில் முஸ்லீம் பத்திரிகைகள் எல்லாம் பகிஷ்காரத்திற்கு விரோதமாயிருக்கின்றன. முக்கிய பத்திரிகையாகிய ‘சைபுல் இஸ்லாம்’ பகிஷ்காரத்தின் புரட்டை புட்டுப் புட்டுக் காட்டுகின்றது.

கிறிஸ்தவர்களிலும் நூற்றுக்கு அரைக்கால்வாசிப் பேர் கூட சேர்ந்ததாக தெரியவில்லை. அவர்களது சமூக இயக்கம் எதுவும் சேர்ந்ததாக தெரியவில்லை. சுற்றி சுற்றிப் பார்த்தால் பார்ப்பன பொக்கிஷத்தில் எப்போதும் தயாராயிருக்கும் ஸ்ரீமான்களான குழந்தை, ஜோசப் ஆகிய இருவர்கள்தான். அதிலும் ஸ்ரீமான் குழந்தையின் அழுகுரலைக் கூட கொஞ்ச நாளாய் காண முடியவில்லை. இந்துக்கள் என்பவர்களிலும் இந்து மகாசபை என்பது பகிஷ்காரத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

மற்றும் 8 கோடி சமூகமாகிய தாழ்த்தப்பட்ட வகுப்பார் என்பவர்களில், இந்த 8 கோடிக்கும் ஒரு ஆசாமியாவது சேர்ந்ததாக தெரியவில்லை. அவர்களது சமூக இயக்கம் எதுவும் சேர்ந்ததாக தெரியவில்லை. அய்யங்கார் சுவாதீனத்தில் இருக்கும் ஸ்ரீமான் ஜெயவேலு அவர்கள் பெயர் ஏதாவது ஒரு சமயம் அடிபடலாமோ என்னமோ அவ்வளவுதான். மற்றபடி இம் மாகாணத்தில் மீதியுள்ள இரண்டரைக் கோடி ஜனங்களான பார்ப்பனரல்லாதார் சமூகத்தில் எத்தனை பெயர்கள் சேர்ந்திருக்கிறார்கள்? அவர்களது சமூக இயக்கமும் என்ன சொல்லிற்று. ஸ்ரீமான்கள் வரதராஜுலு, குப்புசாமி முதலியார், அண்ணாமலை பிள்ளை, தேவநாயக்கர் முதலிய சிலர்கள் சேர்ந்தாலே எல்லோரும் சேர்ந்ததாக ஆகிவிடுமா? என்று கேட்கின்றோம். அவரவர்கள் தங்கள் தங்கள் அபிப்பிராயத்தை பிரசாரம் பண்ணுவதை பற்றி யாருக்கும் ஆnக்ஷபணை இல்லை மனதறிந்து வேண்டுமென்றே பொய் பேச வேண்டுமென்று தீர்மானம் செய்து கொண்டு, “உலகமே ஒன்று சேர்ந்து விட்டது, உத்தியோக ஆசை பிடித்தவர்களும், சர்க்கார் தாசரும் தவிர மற்ற யோக்கியர்களும், சத்திய கீர்த்திகளும், நாணயக்காரரும், தியாகிகளும், பொறுப்பாளிகளும், சுயநலமற்றவர்களும், பிரபுக்களும், தொழிலாளிகளும், மற்றும் எல்லோரும் சேர்ந்து விட்டார்கள்” என்று சொல்வதில் கண்ணியமிருக்கிறதா? என்றுதான் கேட்கின்றோம்.

தப்பட்டை அடித்து கூட்டம் கூட்டி அதில் கூப்பாடு போட முடியும். தலைகால், பகுத்தறிவு, அறிவு, பொறுப்பு இல்லாமல் சர்க்காரை வைவதாக வேஷம் போடக்கூடும். திருட்டுத்தனமாய் சர்க்காரை மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவும் கூடும். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக பத்திரிகையில் எழுதவும் கூடும். காரியம் என்ன நடக்கும் என்றுதான் கேட்கின்றோம். அதிகமான பிரயத்தனமெடுத்துக் கொண்டால் பாமர மக்களை ஏமாற்ற முடியும். அதைத் தவிர ஒரு அணுவளவாவது சத்தியத்திற்கோ, நாட்டிற்கோ, மக்களுக்கோ, நன்மை உண்டாகுமா என்றுதான் கேட்கின்றோம். இனியும் இந்தக் கூட்டத்திற்குத்தானா நாட்டில் மதிப்பு இருப்பதாக ஏற்பட வேண்டும்?

பெசண்டம்மை, ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார், ஜோசப்பு, வரதராஜுலு, சத்தியமூர்த்தி, அண்ணாமலை முதலியார், குப்புசாமி முதலியார் ஆகிய இவர்களுடன் இந்திய பிரதிநிதித்துவம் தீர்ந்து விட்டதாம். மற்றவர்கள் சர்க்கார் தாசராம், உத்தியோகப் பேய் பிடித்தவர்களாம். இப்படிப்பட்ட சிலர் எப்போதும் இருந்துதான் தீருவார்களாம். தலைவரை நம்புவதா? வாலரை நம்புவதா? இந்த நிலையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரே மற்றொரு புறம் பகிஷ்காரத்தில் “ஒற்றுமை இல்லையே, ஒற்றுமை இல்லையே” என்று கதறுகிறார்.

(குடி அரசு - தலையங்கம் - 11.12.1927)