சென்னையில் 16.11.27 தேதி நடந்த கார்ப்பரேஷன் (முனிசிபல் சபை) தலைவர் தேர்தலில் வகுப்புவாதம் என்ன என்பதும் அது யாரிடத்தில் இருக்கின்றது என்பதும் நன்றாய் விளங்கிவிட்டது. இனிமேல் கடுகளவு அறிவுள்ளவருக்கும் கூட அதைப் பற்றி எவ்வித சந்தேகமும் இருக்க நியாயம் இல்லை என்றே எண்ணுகின்றோம்.

periyar 350 copy copyசென்னை கார்ப்பரேஷன் தலைவர் தேர்தலை நினைத்த உடனே இந்த வருஷம் பார்ப்பனரல்லாதார் கக்ஷியாராகிய ஜஸ்டிஸ் கக்ஷிக்கும் மெஜாரிட்டி இல்லை என்றும், பார்ப்பனக் கக்ஷியாகிய சுயராஜ்ஜியக் கக்ஷிக்கும் மெஜாரிட்டி இல்லை என்றும் கருதியே வெள்ளைக்கார கவுன்சிலருடைய தயவு இருந்தால்தான் எந்தக் கக்ஷியாரும் வெற்றி பெற முடியும் என்கின்ற எண்ணத்தின் பேரில் இரு கக்ஷியாரும் வெள்ளைக்கார கவுன்சிலரை அணுகி கெஞ்சிப் பார்த்தார்கள். வெள்ளைக்காரர், இவர்கள் இவருடைய யோக்கியதையும் பார்த்து தனித்தனியே இரு கக்ஷித் தலைவரையும் தங்கள் தங்கள் அரசியல் கொள்கையைப் பற்றி தங்கள் முன் பிரசங்கம் செய்யச் சொன்னார்கள். அதற்கும் உடன்பட்டு பார்ப்பனரல்லாதார் கக்ஷிக்காக பனகால் ராஜாவும், பார்ப்பன கக்ஷிக்கு ஸ்ரீமான்கள் சாமி வெங்கடாசலமும் சத்தியமூர்த்தியும் போய் ஐரோப்பியர்கள் முன்னிலையில் தங்கள் தங்கள் கொள்கையைப் பற்றி பேசினார்கள். பேசியதில் இவ்விரு கக்ஷியாரும் ஒருவருக்கொருவர் பயந்து கொண்டு ஒருவர் பேரில் ஒருவர் குற்றம் சொல்ல இடம் ஏற்பட்டதே ஒழிய ஒருவர் காரியமும் பலிக்கவில்லை.

கடைசியாக வெள்ளைக்காரர்கள் சட்ட மெம்பர் சர். ராமசாமி அய்யர் பேச்சையும், மகாகனம் சீனிவாச சாஸ்திரி பேச்சையும், அட்வகேட் ஜெனரல் ஸ்ரீ வெங்கிட்டராம சாஸ்திரி பேச்சையுமே கேட்டுக் கொண்டு மிதவாதிகள் என்கின்ற கலப்படமில்லாத பிராமண கக்ஷி காரியதரிசி ஸ்ரீமான் ஜி.எ. நடேசய்யருக்கே ஓட்டுக் கொடுப்பது என்று தீர்மானித்துக் கொண்டார்கள். இந்த விஷயமறிந்த ஜஸ்டிஸ் கக்ஷியார் சுயராஜ்யக் கக்ஷியாருக்கு இடம் கொடுத்தாவது வெள்ளைக்காரருக்கு புத்தி கற்பிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீது சுயராஜ்யக் கக்ஷித் தலைவரான ஸ்ரீமான் சாமி வெங்கடாசலத்திடம் வலுவில் சென்று வெள்ளைக்காரர்களுக்கு வெற்றி உண்டாவதை விட சுயராஜ்யக் கட்சிக்கு வெற்றி உண்டாவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும் அதிலும் சுயராஜ்யக் கட்சித் தலைவர் பார்ப்பனரல்லாதவராய் இருப்பதால் அத்தலைவருக்கு தங்கள் கட்சியார் ஓட்டுக் கொடுப்பதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆதலால், சாமி வெங்கிடாசலம் செட்டியார் நிற்பதில் தாங்கள் மனப்பூர்வமாய் ஆதரிக்கத் தயாராயிருப்பதாகவும் அதற்காக சுயராஜ்யக் கட்சியிடமாவது ஸ்ரீசாமி வெங்கிடாசலம் செட்டியாரிடமாவது எவ்வித பிரதி பிரயோஜனமும் எதிர்பாராமல் எவ்வித நிபந்தனையுமின்றி தாங்கள் வலுவில் வந்திருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டார்கள்.

அப்படி இருந்தும் பார்ப்பனர்கள் இதை ஒப்புக் கொள்ளாமல் கட்சித் தத்துவத்தையும் எதிர்பாராமல் வெள்ளைக்காரர்களின் அகம்பாவத்தையும் லக்ஷியம் செய்யாமல் எப்படியாவது ஒரு பார்ப்பனர் கார்ப்பரேஷனுக்கு தலைவரானால் போதும் என்கின்ற எண்ணத்தின் பேரில் ஜஸ்டிஸ் கட்சியார் வலிய வந்ததையும் உதைத்து தள்ளிவிட்டு பார்ப்பனர்களுக்கு எவ்வளவோ அடிமையாயிருந்து பழிபாவங்களுக்கு அஞ்சாமல் பார்ப்பனர்களையே நம்பி அவர்கள் வாலைப் பிடித்துக் கொண்டே திரிந்த ஸ்ரீமான் சாமிவெங்கிடாசலம் செட்டியாரையும் தங்கள் கக்ஷி அபேட்சகராய் நிறுத்தாமல் ஒரே அடியாய் வகுப்புவாதிகளாய் நின்று விட்டார்கள். இதன் பலனாய் பார்ப்பனக் கக்ஷியில் இருந்த சில பார்ப்பனரல்லாதாருக்கு கண் விழிப்பு ஏற்பட்டு சுயராஜ்யக் கட்சியிலுள்ள பார்ப்பனருக்கு எப்படி கக்ஷி கொள்கையைவிட பார்ப்பனருக்கே ஓட்டுக் கொடுப்பது முக்கியம் என்பதாகத் தோன்றுகிறதோ, அதுபோலவே அக்கக்ஷியிலுள்ள பார்ப்பனரல்லாதார்க்கும் அவரவர் இஷ்டப்படி ஓட்டு செய்யும் சுதந்திரம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இந்த சுதந்திரம் கொடுக்க மறுத்தால் சில பார்ப்பனரல்லாதார் சுயராஜ்யக் கட்சியை விட்டு ஜஸ்டிஸ் கக்ஷியில் சேர்ந்து விடுவார்கள் என்கிற பயத்தால் அம்மாதிரி அவரவர்கள் இஷ்டப்படி ஓட்டுக் கொடுக்க அனுமதி கொடுத்து விட்டார்கள். இதன் பலனாய் ஜஸ்டிஸ் கக்ஷியிலிருந்தே தலைவர் பதவிக்கு ஒரு கனவானை நிறுத்த வேண்டிய அவசியம் சுயராஜ்யக் கக்ஷி பார்ப்பனரல்லாதாருக்கும் ஏற்பட்டுவிட்டது.

இவர்களை நம்பி ஜஸ்டிஸ் கக்ஷியாரும் தங்கள் கக்ஷியிலிருந்து ஸ்ரீமான் திவான்பகதூர் ஸ்ரீ நாராயணசாமி செட்டியாரை நிறுத்தினார்கள். அவ்வளவும் தெரிந்து பார்ப்பனர்கள் வெள்ளைக்கார தயவுக்கும் சட்ட மெம்பர், அட்வகேட் ஜெனரல், சில ஹைகோர்ட் ஜட்ஜ்கள் முதலியவர்கள் சிபார்சுக்கும் கட்டுப்பட்டு பல பார்ப்பனரல்லாதார் தங்களுக்கு ஓட்டுச் செய்வார்கள் என்கின்ற தைரியத்தின் பேரில் ஸ்ரீமான் நடேசய்யர் அவர்களை நிறுத்தினார்கள். கடைசியில் ஓட்டு எடுக்கும்போது பார்ப்பனரல்லாதார் கவுன்சிலர்கள் 32 பேர்களில் 28 பேர்கள் ஒரே அடியாய் பார்ப்பனரல்லாதாருக்கே அதாவது திவான்பகதூர் நாராயணசாமி செட்டியாருக்கே ஓட்டுக் கொடுத்தார்கள். இதில் சுயராஜ்யக் கக்ஷியை சேர்ந்த பார்ப்பனரல்லாதாரிலும் சுமார் 8 பேர்கள் இருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். ஆனால் பார்ப்பன அபேட்சகருக்கு கவுன்சிலிலுள்ள 6 பார்ப்பனர்களும் கவுன்சிலில் உள்ள 8 வெள்ளைக்காரர்களும் ஒரே அடியாய் ஓட்டுச் செய்தார்கள். மேல் கொண்டு 4 பேர் யார் என்று பார்ப்போமானால் அவர்களில் இரண்டு மகமதியர்களும், மற்றும் ஒரு நாட்டுக்கோட்டை செட்டியாரும், ஒரு கிறிஸ்தவருமாகவும் இருக்கக்கூடும் என்றே அனுமானிக்கப்படுகிறது. எனவே வகுப்புவாதம் என்பது பார்ப்பனர்களிடமும் வெள்ளைக்காரர்களிடமும் இருப்பது போன்று பார்ப்பனரல்லாதாரிடமாவது அதற்குட்பட்ட மகமதியரிடமாவது, கிறிஸ்தவர்களிடமாவது அவ்வளவு பலமாய் இருக்கின்றதா என்பதை யோசித்தால் விளங்காமல் போகாது.

தவிர சுயராஜ்யக் கட்சியை இதுவரையில் பார்ப்பன கக்ஷி என்று சொல்லி வந்ததில் ஏதாவது ஆnக்ஷபனை உண்டா என்பதும், வெள்ளைக்காரரும் பார்ப்பனர்களும் சேர்ந்து நமது நாட்டை கொள்ளை அடிப்பது தான் அரசாங்கமாகவும் அரசியல் இயக்கமாகவும் இருக்கின்றது என்று சொல்ல வந்ததில் ஏதாவது தப்பு இருக்கின்றதா என்றும் கேட்கின்றோம்.

ஸ்ரீமான் நடேசய்யருக்கு ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, நு.டு அய்யர், புர்ரா, சத்திய நாராயண அய்யர், மு. பாஷ்ஷியம் அய்யரவர்கள், டாக்டர் மல்லையா, டாக்டர் நாராயணராவ் ஆகிய ஆறு பார்ப்பனர்களும் ஒருங்கே ஓட்டு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கின்றோம்..

ஜி.எ. நடேசய்யரின் அரசியல் கொள்கை என்ன என்று பார்த்தால் ஜஸ்டிஸ் கட்சியைவிட எந்த விதத்தில் தீவிரமானவர். சுமார் 10 வருஷத்துக்கு முன் வரையில் ஸ்ரீமான் ஜி.எ. நடேசய்யரை கவர்மெண்டு ஒற்றர் என்று இந்த பார்ப்பனர்களே சொல்லிக் கொண்டு திரிந்தது என்ன ஆச்சுது? தவிர வெள்ளைக்காரருக்கு ஸ்ரீநடேசய்யர் எந்த விதத்தில் இப்போது மேலானவர் என்று சொல்லக்கூடும்? சென்ற வாரத்தில் தானே ஸ்ரீமான் ஜி.எ. நடேசய்யர் ராயல் கமிஷனைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று பேசியதும், பகிஷ்காரக் கட்சியில் சேர்ந்திருக்கின்றார். ஆகவே, இதில் வகுப்புவாதமில்லாமல் வேறு என்ன தத்துவம் இருக்கின்றது? ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் வெள்ளைக்காரர் கூட்டத்தில் பேசும்போது சுயராஜ்யக் கக்ஷியார் யோக்கியர்கள் என்றும் ஜஸ்டிஸ் கக்ஷியார் சுயராஜ்யக் கக்ஷியைவிட அமிதவாதிகள் என்றும் உதாரணமாக கோயமுத்தூர் மகாநாட்டில் எல்லாக் கக்ஷியைவிட அமிதவாத கொள்கையை உடையதான இரட்டை ஆட்சி ஒழியும் வரை பதவி ஏற்பதில்லை என்று தீர்மானம் செய்திருக்கின்றார்கள் என்றும் சாடி சொல்லிக் காட்டிக் கொடுத்ததிலிருந்தே ஜஸ்டிஸ் கக்ஷி ராஜீய அபிப்பிராயம் வெள்ளைக்காரர்களுக்கு தத்துப் பிள்ளைகள் அல்ல என்பதை காட்டும். இப்படியெல்லாம் இருப்பதை ஜனங்கள் தெரிந்து கொள்ளச் சக்தி இல்லை என்கின்ற எண்ணத்தின் பேரில் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி என்ன என்னமோ நொண்டி சமாதானம் சொல்லுகிறார்.

சுயராஜ்யக் கட்சி தங்கள் கட்சியிலிருந்து தலைவர் ஸ்தானத்திற்கு அபேட்சகர் நிறுத்தாததற்கு காரணம் அடுத்த வருஷம் வரி அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக கெட்ட பெயர் வந்து விடுமோ என்று பயந்து விட்டார்களாம். இது யோக்கியமான காரியமாகுமா? அப்படி அதிகமாக்க வேண்டிய அவசியமிருந்தால் அதிகப்படுத்துவதில் ஆnக்ஷபனை என்ன? ஆகவே இந்த தைரியமும் பகுத்தறிவும் இல்லாத கட்சி வேறு என்ன காரியம் செய்ய முடியும்? எனவே ஸ்ரீமான் சாமி வெங்கடாசலம் பார்ப்பனரல்லாததால் நிறுத்தப்படவில்லை என்று சொல்லிவிட்டால் விவகாரம் ஒரு வழியில் தீர்ந்துவிடும். அப்படி இல்லாவிட்டால் பார்ப்பன வண்டவாளம் மேன்மேலும் வெளியாகுமேயல்லாமல் நன்மை ஒன்று உண்டாகாது. இதுவரை இப்பார்ப்பனர்கள் எத்தனை பார்ப்பனரல்லாதாரை இம்மாதிரி செய்தார்கள் என்பதற்கு எவ்வளவு சாக்ஷி வேண்டும். பழய சங்கதிகளை விட்டு விட்டாலும் சமீப சம்பவங்களை கவனித்தால் அதுவே போதும் என்று நினைக்கின்றோம்.

காங்கிரசிலிருந்து ஸ்ரீமான்கள் ஈ.வெ. ராமசாமி நாயக்கர், பி.வரத ராஜுலு நாயுடு, திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் ஆகியோர்களை காங்கிரசை விட்டு வெளியாக்கி காங்கிரசை சுத்தப்படுத்த வேண்டும் என்று சொன்னதும், ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் காங்கிரஸ் கமிட்டியில் இருக்க யோக்கியதை இல்லை என்று சொல்லி விட்டதும், ஸ்ரீமான் வி. சக்கரை செட்டியாரை விரட்டி விட்டதும், ஸ்ரீமான் ஆரியாவை விரட்டி விட்டதும், ஸ்ரீமான்கள் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் அவர்களையும், ஆரியாவையும் சிறையில் வைக்க வேண்டும் என்று சர்க்காரை வேண்டிக் கொண்டதும் ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப்பை மதுரை தேர்தலில் நடத்தியதும் ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரை நடத்தியதும் ஸ்ரீமான் முத்தையா முதலியாரை நடத்தியதும் இப்போது திரு.சாமி வெங்கிடாசலம் செட்டியாரை நடத்தியதும் யோசித்தால் விளங்காமல் போகாதா என்று கேழ்க்கின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 20.11.1927)