periyar 281யானைக்கவுக்களிக்கடுத்த கிருஷ்ணா தியேட்டர் என்னும் நாடகக் கொட்டகையில் ஸ்ரீமதி கமலம் என்கின்ற நடனப் பெண்ணைக் கொண்டு வள்ளிபர்ணியம் அதாவது வள்ளி என்கின்ற குறப்பெண்ணை பரமசிவன் என்கிற இந்து மதக் கடவுளுடைய மகனான சுப்பிரமணியக் கடவுள் என்கிற மற்றொரு இந்து மதக் கடவுள் நரசோரம் செய்த (அதாவது திருட்டுத்தனமாய் அடித்துக்கொண்டு போன) கதையை நாடகமாக நவம்பர் மாதம் 3 -தேதி ஆடிக்காட்டி அதன் டிக்கெட் விற்பனையின் மூலம் காங்கிரசுக்கு பணம் சம்பாதிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். தேசீயப் பத்திரிகைகள் என்பவை நாடகத்தைப் பற்றி விளம்பரம் செய்வது கூட தப்பு என்று ஒரு காலத்தில் மகாத்மாவாயிருந்த ஸ்ரீமான் காந்தி எழுதியிருந்தார். இப்போது தேசீய சபையின் தலையெழுத்து நாடகமாடி பணம் சம்பாதிக்க வேண்டியதாய்ப் போய் விட்டது. அதிலும் என்ன நாடகம் என்றால் ஒருவன் பெண்ணை ஒருவன் திருடிக் கொண்டு போகின்ற நாடகம். அதுவும் எதன் பேரால் என்றால் இந்து மதத்தின் பெயராலும், இந்து மதக் கடவுள் பெயராலும். அதுவும் யாரால் என்றால் ஸ்ரீமதி கமலம் என்கின்ற நடனப் பெண்மணியால், அதுவும் டிக்கெட் யாரால் விற்கப்படுகிறது என்றால் சென்னை மகாஜன சபை கட்டிடத்தில் காங்கிரஸ் தரகர்களால். எனவே நமது மதத்திற்கும் நமது கடவுளுக்கும் நமது ஒழுக்கத்திற்கும் நமது தேசீயத்திற்கும் நமது காங்கிரஸ் தரகர்களின் யோக்கியதைக்கும் நற்சாட்சி பத்திரம் வாங்க மிஸ் மேயோவிடம் போக வேண்டுமா அல்லது மைலாப்பூர் காங்கிரஸ்காரரிடம் போக வேண்டுமா என்பதை பொதுஜனங்களே யோசியுங்கள்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.11.1927)

***

ஒரு விண்ணப்பம்

திருவண்ணாமலை கோவில் பிரவேச தடுப்பு வழக்கு அநேக வாய்தாக்கள் ஏற்பட்டு இதுவரை 500 ரூபாயுக்கு மேலாகவே சிலவாகி இருக்கின்றது. ஆனால் வாதி தரப்பு மாத்திரம் தான் முடிவாயிருக்கிறது. இனி எதிரி தரப்பில் சுமார் 2, 3 சாக்ஷிகள் போடப்பட்டிருக்கின்றது. தினம் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு சாக்ஷிகள் மேல் விசாரணை ஆவதற்கில்லாமல் வளருகின்றது. ஆதலால் இனியும் குறைந்து 10 வாய்தாக்களாவது ஏற்படலாம். வக்கீல்கள் பீஸ் இல்லாமல் நமக்காகப் பேசியும் அவர்களுக்கு வழிச்சிலவும் சாக்ஷிகளுக்கு வழிச்சிலவுமாகவே மேல்கண்ட ரூபாய்கள் சிலவாகி இருக்கும்போது பாக்கி விசாரணைக்கு 500 ரூபாயாவது பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆதலால் நண்பர்கள் தங்களால் கூடியதை சேர்த்து சீக்கிரம் அனுப்ப வேண்டுமாய் சிபார்சு செய்கின்றோம். ஏனெனில் இப்பேர்ப்பட்ட உண்மைச் சுயமரியாதைக்காக தொடரப்பட்டிருக்கும் வழக்கு நாட்டில் மக்கள் ஆதரவில்லையானால் மற்றபடி பின்னால் நடக்க வேண்டிய காரியங்களுக்கு எப்படி பொதுமக்களை நம்ப இடமுண்டாகும். ஆதலால் வெளிநாட்டு நண்பர்களும் உள்நாட்டு நண்பர்களும் கூடிய சீக்கிரம் இந்த தேவையை பூர்த்தி செய்து தைரியமும் ஊக்கமும் அளிப்பார்களாக.

(குடி அரசு - வேண்டுகோள் - 06.11.1927)