சென்னையில் சிலர் சத்தியாக்கிரகம் என்னும் பேரால் நீல் துரை உருவச் சிலையை உடைத்தெறிய வேண்டுமென்று சொல்லிக் கொள்வதை ஒரு பெரும் தேசாபிமானமெனக் கருதி சில வாலிபர்கள் மூலம் போலிக் கிளர்ச்சி ஆரம்பித்து அதற்காக பல வாலிபர்களையும் சிறைக்கு அனுப்பியாய் விட்டது. சில பெண்மணிகளையும் சிறைக்கு அனுப்பியாய் விட்டது. மகாத்மா காந்தியும் இச்சத்தியாக்கிரகத்தை ஆதரித்து ஆசிர்வதித்ததாகவும் வெளிப்படுத்தியாகி விட்டது. வரப் போகும் காங்கிரசிலும் இதை ஒரு பெரிய அகில இந்திய விஷயமாக்கவும் வேண்டிய முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றது. தவிரவும் இதற்குச் சிலர் ரகசியமாய்ப் பணம் கொடுத்தது, மகாத்மா கொடுத்ததாகப் பெயர் செய்ய முயற்சிப்பதாகவும் கேள்விப்படுகிறோம்.

periyar with dogஇவ்வளவும் உண்மையாகவே நடந்ததாயிருந்தாலும் இதை ஒழுங்கான காரியமென்று ஒருக்காலும் நம்மால் சொல்ல முடியாது. ஒரு சமயம் மகாத்மாவே ஒரு சத்தியாக்கிரகி ஆக வந்து தன் கையால் சம்மட்டி கொண்டு நீல் சிலையை உடைக்க முன் வந்தாலும்கூட இவற்றைத் துராக்கிரகமென்றுதான் சொல்லுவோமே தவிர மகாத்மா செய்கிறார் என்பதற்காக ஒரு காலமும் நாம் இதை சத்தியாக்கிரகமென்று சொல்ல மாட்டோம். தற்சமயம் மகாத்மாவின் கொள்கைகள் எப்படி குழப்பமாய் விட்டதோ, அவற்றுள் எப்படி மகாத்மா தன்மையில்லாமல் ராஜதந்திர தன்மை நிறைந்துவிட்டதோ, அதுபோலவே தான் நீல் சத்தியாக்கிரமென்னும் விஷயத்திலும் மகாத்மாவினுடைய கொள்கை என்பது ஆளுக்குத் தகுந்தபடி வழவழவென்று சொல்ல வேண்டியதாகிவிட்டது. இதே காரியத்தை பார்ப்பனர்களல்லாமல் நம் போன்றவர்கள் யாராவது ஆரம்பித்திருந்தால் கண்டிப்பாய் அதை துராக்கிரகமென்றே மகாத்மாவும் சொல்லியிருப்பார்.

நாகப்பூரில் தெருவில் வாளேந்திக் கொண்டு போனதையே துராக்கிரகமென்று வியாக்கியானம் செய்த மகாத்மாவுக்கு, சம்மட்டியெடுத்து ஒரு சிலையை உடைப்பது துராக்கிரகமல்லவென்று தோன்றிவிடுமானால் அதற்கு அப்பீல் எங்கே என்றுதான் நமக்குத் தெரியவில்லை. நீல் துரை அக்கிரமம் செய்தவரா? அயோக்கியரா? என்பதைப் பற்றி நமக்குள் சண்டை வேண்டியதில்லை. அதற்காக அவரது உருவச் சிலையை உடைப்பதில் என்ன அர்த்தமிருக்கின்றது? அயோக்கியர் என்று தோன்றும்படியான மனிதனையெல்லாம் கொன்று விடுவதில் ஆnக்ஷபனை இல்லையா என்று கேட்பதுடன் அப்படிக் கொல்லுவது சத்தியாக்கிரகமாகுமா என்றும் கேட்கின்றோம். உதாரணமாக வட இந்தியாவில் மகமதிய சகோதரர்கள் ஸ்வாமி சிரத்தானந்தர் முதல் பலரை சுட்டும் குத்தியும் கொல்ல முயற்சித்து இருவர் செத்தாய் விட்டது. இருவர் குற்றுயிராய்க் கிடக்கின்றனர், மற்றும் பலர் காயப்பட்டுக் கிடக்கின்றனர். ஸ்வாமி சிரத்தானந்தரையும் மற்றவர்களையும் நாம் தலைவர்களாயும், மகான்களாயும் கருதுகின்றோம். ஆனாலும் இவர்களைக் கொலை செய்ய முன்வந்த கொலை பாதகர்களும் அவர்களுக்குப் பின்னாலிருந்து கொண்டு இக்காரியத்திற்கு ஆதரவு கொடுத்து வருபவர்களும், இம்மகான்களை நாம் நீல் துரையைக் கருதுவதை விட மோசமாகவே கருதுகிறார்கள். ஆனதினால் அவர்கள் உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுத்து அவைகளையெல்லாம் சத்தியாக்கிரகம் என்று சொல்லி விடுவதா என்று கேட்கின்றோம்.

இம்மாதிரி காரியங்களையெல்லாம் சத்தியாக்கிரகம், தேசாபிமானம், மதாபிமானம் என்று கற்பித்துக் கொண்டே போவோமேயானால் இதன் முடிவு எங்கு போய் நிற்குமென்றும் கேட்கின்றோம். இம்முறையில் பார்த்தால் ஸ்வாமி சிரத்தானந்தருக்கு நாம் ஒரு சிலை செய்து வைத்தால் மகமதியர்கள் அதை உடைக்க முன்வந்தால் அது சத்தியாக்கிரகமா அல்லவா என்றும் கேட்கிறோம். நமக்கு “சுயராஜ்யம் கொடுக்க மாட்டேன்” என்று சொல்லுகிறவர்களும், நம்மைக் கொடுமைப்படுத்தி அடக்கி நமது ரத்தத்தை உறுஞ்சிக் கொண்டிருக்கிறவர்களும், தென்னாப்பிரிக்காவில் நம்மவர்களைத் தெருவில் நடக்க விட மாட்டேன் என்று சொல்லுகிறவர்களுமான வெள்ளைக்காரர்கள் சிலை ஒவ்வொன்றையும் உடைக்க வேண்டியது சத்தியாக்கிரகமாகத்தானே முடிய வேண்டியதாகிவிடும். அன்றியும் ஒரு பெரிய சமூகமாகிய நம் தமிழ் மக்களை ஒரு சிறு கூட்டத்தாரான பார்ப்பனர்கள், சூத்திரர்களென்றும், தங்கள் வைப்பாட்டி மக்களென்றும், தீண்டக்கூடாதவர்கள், பேசக் கூடாதவர்கள், தெருவில் நடக்கக்கூடாதவர்கள் என்றும், சூத்திரன் பொருள் வைத்திருக்க அருகனல்லவென்றும், அப்படி மீறி வைத்துக் கொண்டிருந்தால் உதைத்தும் பிடுங்கிக் கொள்ளலாமென்றும், அறிவுக்காக அவன் படித்தால் அவன் நாக்கையறுத்து விட வேண்டுமென்றும் இன்னும் எவ்வளவோ இழிவாகவும், எழுதி வைத்துக் கொண்டும், சிலவற்றை சட்டத்தின் மூலமாயும் அமுலிலும் வைத்துக் கொண்டிருப்பதை எல்லாம் ஒழிப்பதற்காகச் செய்யும் முயற்சியில் அக்கொடுமைக்கு ஆதாரமானவர்கள் ஒவ்வொருவரையும் சம்மட்டி கொண்டடிப்பதையும், அவ்வாதாரங்கள் இருக்குமிடங்களை எல்லாம் நெருப்பு வைப்பதையும் சத்தியாக்கிரகமென்று தானே சொல்லியாக வேண்டும்.

இவ்வழக்கத்தை நிஜமென்று நம்பியோ, அல்லது இந்த முறையால் பிழைக்கலாமென்று கருதியோ இருந்து கொண்டிருக்கிற பார்ப்பனர்கள் மேற்கண்ட மாதிரி தங்கள் வாழ்வுக்கே கெடுதி ஏற்படும்படி அழிக்கப் பாடுபடுகின்றவர்களை கடப்பாறை கொண்டு அடிப்பதையும் சத்தியாக்கிரகமென்றுதானே சொல்லியாக வேண்டும். க்ஷத்திரிய வம்சத்தையே கூட்டோடு அழித்து விட்டதாக சொல்லப்படும் பரசுராமன் சிலை எங்கிருந்தாலும் க்ஷத்திரியர் என்று சொல்லிக் கொள்பவர்கள் அதைச் சம்மட்டி கொண்டு உடைத்துத் தானேயாக வேண்டும். நீல் துரையை விட அதிகமான கொடுமைகள் மகமதியருக்குச் செய்ததாகச் சொல்லப்படும் கதைப்படி சிவாஜி மகாராஜாவின் சிலையை மகமதியர்கள் சம்மட்டியும் கடப்பாறையும் கொண்டு உடைத்துத்தானேயாக வேண்டும். ஒரு சூத்திரன் தபசு செய்ததற்காக அவனை ஒரே பாணத்தில் கொன்று விட்ட ஸ்ரீராமன் சிலையை சூத்திரர்கள் எனப்படுபவர்கள் எங்கு கண்டாலும் உடைத்துத்தானே யாகவேண்டும். மதுரையில் 8000 சமணர்களை உயிருடன் கழுவேற்றிய திருஞானசம்மந்த மூர்த்தியென்னும் பிராமண பக்தரை நாளைக்கும் சைவ மக்கள் கொண்டாடி உற்சவம் செய்கின்றார்களே, இதைப் பார்த்த சமணர்கள் சம்மந்தமூர்த்தி நாயனார் சிலை எங்கிருந்தாலும் அதை உடைத்துத் தானேயாக வேண்டும். இக்குற்றங்களுக்கும் நீல் துரை குற்றங்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் நாம் கற்பித்து விட முடியும். இப்படியே பார்ப்போமானால் சத்தியாக்கிரகம் செய்து உடைக்க வேண்டியதற்கு உட்படாமல் எது மீதியாகும் என்பது நமக்கு விளங்கவில்லை.

இந்தப்படி பார்த்தால் சமீபத்தில் சென்னையில் ஸ்ரீ. வி. கிருஷ்ணசாமி அய்யர் அவர்களின் சிலையின் மூக்கை உடைத்து விட்டதையும், கழுத்தை வெட்ட முயற்சித்ததையும், குற்றம் என்று சொல்ல முடியாமல்தானே போய் விடும். இன்னமும் வைப்பதற்காக செய்து தயாராயிருக்கும் சர்.பி.தியாகராய செட்டியார், சர்.மணி அய்யர், சர். பாஷ்யம் அய்யங்கார் மற்றும் எத்தனையோ சிலைகளை உடைப்பதற்கோ பின்னப்படுவதற்கோ இஷ்டப்படும் ஒவ்வொருவர்களுக்கும் காரணம் கிடைத்துக் கொண்டுதானே இருக்கும். ஸ்ரீமான் வி.கிருஷ்ணசாமி அய்யரின் சிலையை பின்னப்படுத்தியவர்கள் யார் என்பதைப் பற்றி முதல் முதலாக சென்னையில் ஒரு பிரஸ்தாபம் ஏற்பட்ட தாகவும், அதாவது யாராவது ஒரு வெள்ளைக்காரர் இம்மாதிரி செய்யப்படுவதற்கு காரணமாய் இருக்கலாம் என்று சொல்லப்பட்டதாய் தெரிகிறது. இது வாஸ்தவமாய் இருந்தால் அதில் யார் என்ன குற்றம் சொல்லக்கூடும். சட்டப்படி குற்றம் ஏற்படலாமே தவிர நீல் சிலை நீதிப்படி குற்றம் சொல்ல இடமெங்கே இருக்கிறது?

ஸ்ரீமான் முத்துரங்க முதலியார் கொடுத்த அபிப்பிராயத்தைப் பார்த்தால் “பார்ப்பனர்களை பெரிதும் துவேஷிக்கின்ற பார்ப்பனரல்லாத தலைவர்களும் உற்சாக மிகுதியாயுள்ள தங்கள் சிஷ்யர்களை அளவுக்கு மீறிய காரியம் செய்யவொட்டாமல் அடக்குவார்கள் என்று நான் நிச்சயமாய் நம்புகிறேன்” என்று சொல்லி இருக்கிறார். இதைப் போல யோக்கியப் பொறுப்பற்ற வார்த்தைக் கடுகளவு அறிவிருக்கின்ற வேறு எந்த மனிதனும் சொல்லி இருக்க முடியாது. ஏனெனில் பார்ப்பனரல்லாத வாலிபர்களே செய்து விட்டார்கள் என்பதாக குறிப்புக்காட்டி பேசி இருக்கிறார். ஆனாலும் நாம் அதைப் பற்றி கவலைப்பட வில்லை. ஏனெனில் அவருடைய சகாவும் தலைவருமான ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் அதற்கு நேர்மாறாய் பேசி இருக்கிறார். அதாவது ஸ்ரீமான் கிருஷ்ணசாமி அய்யர் சிலையை பின்னப்படுத்தினதினாலேயே நீல் துரை சிலையை உடைக்கும் சத்தியாக்கிரகத்தை நிறுத்தப்போகிறதில்லை என்று குறிப்பு காட்டி பேசியிருக்கிறார்.

 இதிலிருந்து ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர், நீல் துரை சிலையின் சொந்தக்காரர்களையே குறி வைத்துப் பேசி இருக்கிறார் என்பதும் யாவரும் உணரக் கூடியதாயிருக்கிறது. மற்றொரு அய்யங்கார் ஸ்ரீ.வி.கிருஷ்ணசாமி அய்யர் காலத்தில் அய்யங்காரை தலையெடுக்கவொட்டாமல் செய்த காரியம் கொஞ்சமல்லவென்று சொன்னார்.

இம் மாதிரி செய்தவன் வெள்ளைக்காரனாயிருந்தாலும் சரி, பார்ப்பனரல்லாதாரராயிருந்தாலும் சரி, அய்யங்காராயிருந்தாலும் சரி, வேறு யாராயிருந் தாலும் சரி, நீல் சத்தியாக்கிரக முறைப்படி பார்த்தால் அவன் பயங்காளித்தனமாகவும் திருட்டுத்தனமாகவும், யாருக்கும் தெரியாமல் செய்ததுதான் இப்போது பெருங்குற்றமாக கருதப்பட்டு விட்டதே அல்லாமல், ஒருவன் தனக்கோ, தங்களது சமூகத்திற்கோ கெடுதி இழைத்தவன் என்றோ, தங்களது சுயமரியாதைக்கு விரோதி என்றோ, தங்கள் வகையாரின் சிலையை காப்பதற்கென்றோ கருதிக் கொண்டு வெளிப்படையாய் செய்திருப்பானானால் சட்டப்படி குற்றமாகி ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ அதற்கு மேற்பட்டோ தண்டனை அடைந்திருந்தாலும் அச்செய்கையை சத்தியாக்கிரகமென்றும் தேசாபிமானம் என்றும் செய்தவனை வீரனென்றும் சொல்லப்பட்டு விடுமா அல்லவா? என்று கேட்கின்றோம். அதற்காக ஒரு சத்தியாக்கிரகம் ஆரம்பித்து ஒரு 500ரூ. சிலவு செய்தால் 50 பேரை ஜெயிலுக்கும் அனுப்ப முடியுமா முடியாதா? என்று கேட்கிறோம். தவிர, இம்மாதிரி ஒவ்வொரு காரியத்தையும் பார்த்து அது சட்டப்படி சரியானாலும் தப்பானாலும் நியாயப்படி தப்பானாலும் சரியானாலும் அந்த விசாரமேயில்லாமல் பொதுவாய் காதில் கேட்ட மாத்திரத்தில் சந்தோஷப்படவும் துக்கப்படவும் ஆதரிக்கவும் கண்டிக்கவும் ஆள்கள் இருந்து கொண்டு தான் இருக்கும். அதனாலேயே ஒரு காரியம் சரியா தப்பா என்று மதித்து விடக்கூடாதென்பதே நமதபிப்பிராயம். இம்மாதிரி துராக்கிரக காரியங்களில் மக்களுக்கு அதிலும் பாமர மக்களுக்கு உணர்ச்சி போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பொறுப்புள்ள தலைவர்களுடையவும் பொது மக்களுடையவும் கடமை என்றே சொல்லுவோம்.

ஒரு மனிதனின் சிலையை அதிலும் ஒரு கூட்டாத்தாரோ பொது ஜனங்களோ அன்பாலும் பக்தி விஸ்வாசத்தினாலும் வைக்கப்பட்ட சிலையை இம்மாதிரி செய்வது என்பது எவ்வளவு மெதுவாக பொன் சம்மட்டியைக் கொண்டு பின்னம் செய்வதானாலும் அது பலாத்காரமும், துராக்கிரகமும் என்பதே நமது தீர்மானம். அதிலும் ஸ்ரீ கிருஷ்ணசாமி அய்யர் சிலையை பின்னமாக்கினது வெள்ளைக்காரராயிருந்தாலும் பார்ப்பனரல்லாதாராயிருந்தாலும் பார்ப்பனராயிருந்தாலும் வேறு யாராயிருந்தாலும் அது மிகவும் இழிவானதும், முட்டாள் தனமானதும், கோழைத்தனமானதும், மனிதத் தன்மையற்றதுமான காரியம் என்றே சொல்லுவோம்.

(குடி அரசு - தலையங்கம் - 16.10.1927)