திருப்பூரில் மகாநாடு கூடிக் கலைந்தாகி விட்டது. தீர்மானங்கள் கவர்னருக்கு அனுப்பியாய் விட்டது. மற்ற விஷயங்கள் எப்படிப் போனாலும் இதனால் கவர்னர் தயவு இரண்டொரு ஆசாமிகளுக்கு கிடைத்தாய் விட்டது. அதன் மூலம் சிலருக்கு உத்தியோகமும் சிலருக்குப் பட்டமும் வந்துவிடப் போகிறது. இதைப் பொறுத்தவரையில் உறுதி தான்.

periyar kamarajar veeramani and karunanidhiமற்றபடி உபசரணைத் தலைவர் மகாநாட்டுத் தலைவர் பிரசங்கங்கள் ஸ்ரீமான் முத்துரங்க முதலியார், ஓ.கந்தசாமி செட்டியார் முதலிய கனவான்களின் பிரசங்கங்களைப்போல் என்றே சொல்ல வேண்டும். பெரும்பாலும் சர்க்காரையும் மந்திரிகளையும் புகழ்ந்து பார்ப்பனரல்லாதார் கட்சியை ஆசை தீர எழுதிக் கொடுத்தபடி வைததுதான் முக்கிய அம்சமாகும்.

மகாநாட்டுத் தலைவர் ஸ்ரீமான் சர். முத்தைய்ய செட்டியாரைப் பற்றி நாம் விசேஷமாக சொல்ல வேண்டியதில்லை. அவரது கொள்கையைப் பற்றியும் சொல்ல வேண்டியதில்லை. சுருக்கமாக சொல்வதானால் பச்சயப்ப முதலியார் தர்ம ஸ்தாபன தர்மகர்த்தாக்களில் இவர் ஒருவராயிருப்பதில் அப் பள்ளிக்கூடத்திற்கு ஒடுக்கப்பட்ட வகுப்புப் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று கட்சி கட்டிக் கொண்டிருப்பவர். ஆனால் ஒடுக்கப் பட்டவர்கள் உபாத்தியாயர்களாக இருப்பதில் ஆnக்ஷபணை இல்லை என்பவர். ஆகவே இவரது கொள்கையும் பகுத்தறிவும் பொது ஜனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். இம்மகாநாட்டு சூத்திரதாரராய் இருந்த மற்றொரு செட்டியாரான ஸ்ரீமான் ராமலிங்கம் செட்டியார் அவர்களோ சொல்ல வேண்டியதில்லை.

அவர் அரசியல் பிறப்பைப் பற்றி சிறுகதை எழுதலாம். 1915ல் பம்பாய் லிபரல் லீக்கில் ஒரு மெம்பராய்ச் சேர்ந்து சென்னை மகாணத்திற்கு லிபரல் லீக் நிர்மாணியாயிருந்தவர். பிறகு அடுத்த வருஷம் ஜஸ்டிஸ் கட்சியில் முக்கியஸ்தரில் ஒருவராய் இருந்தவர். அடுத்தாப் போல் தமக்கு மந்திரி பதவி கிடைக்காததால் யுனைட்டெட் நேஷனலிஸ்ட்டு கட்சி உண்டாக்கி தலைவரானவர். அதோடு மந்திரிகள் பேரில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்தவர். அடுத்தாப் போல் சுயராஜ்யக் கட்சியில் சேர்ந்தவர்.

அதற்கடுத்தாப் போல் சுயராஜ்யக்கட்சி மெம்பர்களுடன் “சட்டசபையில் ஒரு பிரயோஜனமும் இல்லை நம்பிக்கையுமில்லை வெளியில் போய் சர்க்காருக்கு புத்தி கற்பிக்கிறேன்” என்று சொல்லி வெளியில் வந்தவர்.

வெளியில் வந்து மறுபடியும் சுயராஜ்யக் கட்சி சார்பாய் சட்டசபைக்கு போக தெரிந்தெடுத்து சென்னை பார்ப்பனர்கள் நிபந்தனைப்படி 500 ரூபாயும் காணிக்கை கொடுத்தவர். மறுபடியும் 15 நாளில் “சுயராஜ்யக்கட்சி தலைவர் உத்தியோகம் கிடைக்கும்படி செய்கிறேன்” என்று சொன்னதை நம்பி நான் காங்கிரஸில் சேர்ந்தேன், சுயராஜ்யக்கட்சியில் சேர்ந்தேன்; சட்டசபை விட்டு வெளியிலும் வந்தேன்; 500 ரூபாய் காணிக்கையும் கொடுத்தேன். இப்போது பார்த்தால் அதில் உத்தியோகம் கிடைக்காது போல் தோன்றுகிறது. ஆதலால் நான் சுயராஜ்யக் கட்சி முதலியவைகளில் ராஜினாமா கொடுக்கிறேன்” என்று ராஜினாமா கொடுத்தவர். மறுபடி தானாக சட்டசபைக்கு நின்று எவ்வளவோ பிரயத்தனப்பட்டும் ஸ்ரீமான் வெள்ளியங்கிரிக் கவுண்டர் பட்டக்காரர் அனேக பார்ப்பனர்கள் இராமசாமி நாயக்கர் முதலியோர் பாடுபட்டும் தோற்றுப் போனார்.

“கதரில் கொஞ்சமும் நம்பிக்கையில்லை. கதரை ஒரு நாளும் ஆதரிக்க முடியாது” என்று கண்டிப்பாய் சொல்லிவிட்டார். தீண்டாமை விலக்கைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. பார்ப்பனரைத்தான் வீட்டில் சமையல்காரராய் வைத்திருப்பவர். மதுவிலக்கிலோ ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காருக்கு இளைத்தவரல்ல. மந்திரிக் கட்சி 3 மந்திரிகளையும் நடத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தன் தலையில் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்.

இவ்வளவும் அல்லாமல் திருப்பூர் மகாநாட்டில் மதுவிலக்கு முதலிய தீர்மானங்களையும் எழுதிக்கொடுத்து நிறைவேற்றி இருக்கிறவர். இம் மாதிரியாக இருப்பதில் அரசாங்கத்தாராவது பொது ஜனங்களாவது எப்படி மதிக்கக் கூடும். இவர்கள் போன்றார்கள் தீர்மானத்திற்கு தேசத்தில் எவ்வித யோக்கியதை இருக்கும். இவைகளை யோசியாமல் பார்ப்பனரல்லாதார் மகாநாடு என்பதாக மாகாணத்திற்கே பொதுவாய் கூட்டப்பட்டது என்பதையும் அது ஒரு சட்டம், விதி, கட்டு திட்டத்திற்கு அடங்கி நடந்து வருகிறது என்பதையும், அதற்கு நாட்டில் உள்ள செல்வாக்கையும் அதனால் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு எவ்வளவு மரியாதை உண்டாயிருக்கிறது என்பதையும் ஒரு சிறிதும் கவனியாது எதிர் மகாநாடு என்பதாக கூட்டுவதென்றால் அம்மாதிரியான குணத்திற்கு என்ன பெயரிடுகிறது.

கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒரு எருமைக்கிடா வெட்டுவதானால் எவ்வளவோ பேர் வேடிக்கை பார்க்க வந்துவிடுகிறார்கள். அது போல் கூட்டம் இருந்ததாலேயே பிரதிநிதித்துவ மகாநாடு ஆகிவிடுமா? அப்படியாவது எத்தனை பிரதிநிதிகள் வந்தார்கள்? என்ன கொள்கையை ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டார்களா? பிரதிநிதிகளுக்கு என்ன குறிப்பு இருந்தது என்பவைகளை மற்றவர்களை கவனிக்க மாட்டார்களா என்கின்ற எண்ணமின்றி இந்த இருபதாவது நூற்றாண்டில் கொம்பு தம்பட்டம் தட்டி கூட்டம் சேர்த்து அதற்கு மகாநாடு என்று பெயர் வைத்து தீர்மானங்கள் தீர்மானிப்பது என்ற வேஷம் போட்டு அவன் பல ஜாதி, இவன் இடை வெட்டு, அவன் முட்டாள், இவன் மடையன் என்று மேடையில் பேசி நிறைவேற்றிய தீர்மானத்தை பொது ஜனங்கள் தீர்மானம் என்றால் நம்புவதற்கு ஆள் எங்கே என்று தான் கேள்க்கிறோம்? இந்த வார்த்தைகளைக் கொண்ட சபையை மக்கள் எப்படிப்பட்ட சபையென்று நினைப்பார்கள் என்கிற ஞானமே இல்லாமல் காரியங்கள் நடைபெற்று விட்டதனாலும் இதனால் ஸ்ரீமான் செட்டியாருக்கு உத்தியோகம் மற்றவர்களுக்கு “பெப்பெப்பே” அல்லாமல் மற்றபடி யார் என்ன பயன் அடையக்கூடும் என்பது நமக்கு விளங்கவில்லை. பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கும் இதனால் ஒன்றும் முழுகிப் போகவில்லையானாலும் நமது எதிரிகளான சர்க்காரும் பார்ப்பனர்களும் நம்மைப் பார்த்து சிரிக்கவும் அதாவது பார்ப்பனரல்லாதார் கூட்டத்தில் எதற்கு வேண்டுமானாலும் ஆள்கள் கிடைக்கும், என்ன வேண்டுமானாலும் அவர்களைக் கொண்டு செய்து கொள்ளலாம், அதற்கு சுயமரியாதை இல்லையென்று பேசிக் கொள்ளவும் இம்மாதிரி கூட்டம் கோயமுத்தூரில் இருக்கிறது என்று மற்ற ஜில்லாக்காரர் கேவலமாய் நினைக்கவுமல்லாமல் வேறொன்றும் முழுகிப்போய்விடவில்லை. மற்றபடி இத்தீர்மானத்தினால் மந்திரிகளுக்கு பதவி ஆயுசு வளரப் போவதும் இல்லை, குறையப்போவதும் இல்லை. ஜில்லாவுக்கும் ஜில்லாவின் பெரிய சமூகங்களுக்கும் கெட்ட பெயர் தான் மிச்சம்

திருப்பூர் மகாநாட்டைப் பற்றி முழு விபரங்களும் போட போதிய சாவகாசம் இல்லை. ஆனாலும் சவுகரியப்பட்டால் மறு தடவையும் இதைப் பற்றி எழுதுவோம்.

(குடி அரசு - தலையங்கம் - 21.08.1927)

Pin It