periyar and mettupalayam ramachandran சென்ற வாரம் தூத்துக்குடியில் நடந்த பார்ப்பனப் பிரசாரத்தில் ஸ்ரீமான்கள் ஆ.மு.ஆச்சாரியார் பல உபன்யாசங்கள் செய்தாராம். அவர்கள் (ஆச்சாரியார்) பேசும்போது வரதராஜுலு நாயுடு ஒரு போக்கிரி என்றும், தான் ஒருநாளும் பார்ப்பனப்பிள்ளை சாப்பிடுவதை பார்ப்பனரல்லாத குழந்தை பார்த்துவிட்டால் பல நாள் பட்டினி கிடப்பேன் என்று சொல்லவில்லை என்றும் உறுதி கூறினாராம். பார்ப்பனர்களுக்கு பொய் சொல்வதென்றால் அது அவர்களுடைய வேதபாராயணம் செய்வதுபோலும். “ஏக தலைவர்” ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பொய்யிக்கு அளவே இல்லை என்பதற்கு ஆதாரமாக சென்ற தேர்தலுக்கு ஆள்கள் சேர்க்கும் முறையில் ஸ்ரீமான்கள் நரசிம்மராஜு ராமலிங்கம் செட்டியார் இன்னும் மற்றவர்களும் ஆந்திர தேசத்துப் பத்திரிக்கைகளும் வண்டி வண்டியாய் ருஜு செய்தன.

                        ஆனால் ஸ்ரீமான் அய்யங்காரோ தோள் மேல் தொண்ணூரு அடி அடித்தாலும் துடைத்துவிட்டால் ஒன்றும் சோதிக்காது என்று சொல்வதுபோல் அத்தனையும் ஜீரணம் செய்துகொண்டு இனியும் “தலைவராகவே” விளங்குகிறார். ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளின் பொய்யை நிரூபிக்க யாவரும் பிரயத்தனப்பட வேண்டியதே இல்லை என்று ஆய்விட்டது. ஏனெனில் “ஜஸ்டிஸ் திராவிடன்” பத்திரிகைகள் சாஸ்திரிகளின் கோக்கலே ஹால் பிரசங்கத்தின் பேரிலேயே முதலில் அண்டப்புளுகர் என்கிற பேரைக் கொடுத்தது. ஸ்ரீமான் சாஸ்திரிகள் அது போராது என்று சொல்லி அப்பீல் செய்துகொண்டதின் பேரில் மிகுந்த தாராள நோக்கத்துடன் அப் பத்திரிக்கைகள் ஆகாயப் புளுகர் என்கிற பெயர் கொடுத்திருக்கிறது. அதை சாஸ்திரிவாளும் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டு சுகமாகவே இருந்துவருகிறார்.

                        நமது ஸ்ரீமான்யம். கே. ஆச்சாரியர் அவர்களோ இப்போது ஸ்ரீ சத்தியமூர்த்தி பேரில் பொறாமை கொண்டு பொய்யில் போட்டி போட வந்து விட்டார். அதாவது தான் திருச்சி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஸ்ரீமான்கள் ராஜகோபாலாச்சாரியார், ராஜன், சந்தானம் முதலிய பார்ப்பன “தேசபக்தர்கள்” “தியாக மூர்த்திகள்” முன்னிலையிலும் மற்றும் பல பார்ப்பனரல்லாதார் முன்னிலையிலும் “ஒரு பிராமணக் குழந்தை சாப்பிடுவதை ஒரு சூத்திரக் குழந்தை பார்த்துவிட்டால் ஒரு மாதம் பட்டினி கிடப்பேன்” என்று சொல்லிவிட்டு இப்போது சொல்லவே இல்லை என்கிறார். முக்கியமாக நமது நாட்டு அரசியல் பார்ப்பனர்களுக்கு பொய் சொல்லுவது என்ற குணம் தான் சிறந்த யோக்கிதையாக விளங்குகிறது. இம்மாதிரி பொய்பேசும் ஆசாமிகளுக்குத்தான் தேசபக்தர் என்கிற பெயர் பெரிதும் பொருத்தம்போலும். ஸ்ரீமான்யம். கே. ஆச்சாரியார் இவ்விஷயத்தில் உண்மை சொல்லும் வரையிலும் அல்லது அவர் அரசியல் பேரால் பிழைப்பதை விட்டு விட்டு வேறு வழியில் பிழைப்புத் தேடிக் கொள்ளுகிறவரையிலும் பொய்யர் என்கிற அடைமொழியை நமக்கு ஞாபகமிருக்கும்போதெல்லாம் சேர்த்தே அவர் பெயரை வழங்குவோம் என்பதாக தெரிவித்துக் கொள்ளுகிறோம். “தமிழ்நாடு” பத்திரிக்கையும் இதைப் பின்பற்றுவது நியாயம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஏனெனில் அப்பத்திரிகை தலைவரைப் பற்றித்தான் தான் சொன்ன வார்த்தையை இல்லை என்று மனமறிந்த பொய் சொல்வதுடன் குரும்பர் என்றும் சொல்லுகிறது. ஒரு சமயம் ஸ்ரீமான் நாயுடுகார் பல காரணங்களால் மன்னித்தாலும் மன்னிக்ககூடும்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 19.06.1927)