periyar 592நமது பத்திரிகாலயத்தில் ஒரு பார்ப்பனர் சூழ்ச்சியால் இரண்டு அச்சுக் கோர்ப்போர்கள் திடீரென்று சொல்லாமல் நின்று விட்டதற்குக் காரணமாக கோவையில் இருந்து மித்திரன் நிரூபர் ஒருவர் மிகவும் அயோக்கியத்தனமான ஒரு நிரூபத்தை மித்திரனுக்கு அனுப்பி இருக்கிறார். அதாவது ஒரு விஷயத்தை நாம் அச்சுக் கோர்க்கும்படி சொன்னதாகவும், அதை அச்சுக் கோர்ப்போர் கோர்க்க மறுத்து வேலை நிறுத்தம் செய்துவிட்டார்கள் என்றும் எழுதியிருக்கிறார். இது மிகவும் அல்ப ஜாதித்தனம் என்றே சொல்லுவோம். எல்லா பத்திரிகை நிரூபர்களுக்கும் மானம், வெட்கம், சுத்த ரத்தோட்டம் முதலிய தன்மைகள் குறைந்தது கொஞ்சமாவது இருப்பதாகக் காண்கிறோம். நமது சுதேசமித்திரன் நிரூபர்களுக்கு மாத்திரம் பெரும்பாலும் இக்குணங்கள் காணப்படுவதே இல்லை. இதன் காரணமும் நமக்குத் தெரிவதில்லை. மித்திரனுக்காவது மனிதத் தன்மையும் யோக்கியப் பொறுப்பும் இருந்தால் அச்சுக் கோர்ப்போர் கோர்க்க மறுத்தது என்ன விஷயம் என்றாவது அல்லது வேறு சமாதானமாவது எழுதுவான் என்று நினைக்கிறோம்.

நமது பத்திரிகை பதிப்பகத்தில் உள்ள அச்சுக் கோர்ப்போரை கலைக்க சூழ்ச்சி செய்தது காரைக்குடியில் உள்ள ஒரு பத்திரிகை காரியாலயத்தில் இருக்கும் ஒரு பார்ப்பனர் என்று தெரிவிக்கிறோம். ஆனாலும் அதனால் பத்திரிகை வேலை குந்தகப்படாமல் நடந்தேற உதவிய நண்பருக்கு நமது வந்தனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

(குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 12.06.1927)

ஈரோடு முனிசிபாலிட்டி

ஈரோடு முனிசிபல் சேர்மென் ஸ்ரீமான் சீனிவாச முதலியார் அவர்கள் மீட்டிங்கு கூட்டிய விதத்தைப் பற்றி சென்ற வாரம் எழுதி இருந்தோம். அதாவது சில கவுன்சிலர்கள் முனிசிபாலிடியில் இருப்பதால் ஸ்ரீமான் முதலியாரின் நன்மைக்கும் மற்றும் சில காரியங்கள் செய்வதற்கும் தடையாய் இருப்பதாகக் கருதி அவர்களை நீக்கிவிட வேண்டி ஒரு மீட்டிங்கை ஒரு நாள் 5 1/2 மணிக்குக் கூட்டி 5 மணிக்கே தான் ஆபீசுக்கு வந்து கோரம் இல்லை என்பதாக மீட்டிங்கை ஒத்தி வைத்துவிட்டு, வேறு யாரும் வந்து மீட்டிங்கு நடத்தாமல் இருக்கும் பொருட்டு காவலாக தாம் வெளியில் வந்து நின்று கொண்டு இருந்ததும், கவுன்சிலர்கள் வந்து சண்டை போட்டதுமான விஷயங்களைப் பற்றி ஒரு நிரூபர் எழுதியதை சென்ற வாரம் எழுதி ஒரு குறிப்பும் போட்டிருந்தோம். இப்போது அதற்கேற்றாற்போலவே இவ்வாரம் ஒரு அவசர மீட்டிங்கு போட்டு ஒரு கவுன்சிலரை மூன்று மீட்டிங்குகளுக்கு வராததால் அவர் நீக்கப்பட்டு விட்டதாக தானே ஏற்பாடு செய்து கொண்டு, அவருக்கு நோட்டீசு தராமல் மீட்டிங் கூட்டிவிட்டார். அதற்குள் அக்கவுன்சிலர் விஷயம் தெரிந்து தானாகவே போய் உட்கார்ந்து கொண்டிருக்கையில் அவரை வெளியே போகும்படி கட்டாயப்படுத்தி வெளியாக்கிவிட்டு தனது சவுகரியத்திற்கேற்றபடி இரண்டொரு தீர்மானத்தையும் செய்து பலனடைந்து கொண்டார்.

அது எப்படியோ இருக்கட்டும். வெளிப்படுத்தப்பட்ட கவுன்சிலர் உடனே சென்னைக்குச் சென்று ஐக்கோர்ட்டில் விண்ணப்பம் போட்டு சேர்மென் நடவடிக்கை சரி இல்லை என்பதாக வாதாடி தாம் கவுன்சிலராக இருக்கலாம் என்பதாக உத்திரவு பெற்று வந்துவிட்டார். இது மற்ற பத்திரிகைகளில் வந்திருக்கிறது. இந்தியர்கள் சுய ஆக்ஷிக்கு அருகதை உள்ளவர்கள் என்பதும் வெள்ளைக்காரர்கள் நமது நிர்வாகத்தை மேற்பார்வை பார்க்க யோக்கியதை உள்ள தர்மக்கர்த்தர்கள் என்பதும் ருஜுவு செய்ய நமது மந்திரி கனம் சுப்பராயன் அவர்கள், நமது சேர்மென் ஸ்ரீமான் சீனிவாச முதலியார் அவர்கள், நமது ஈரோடு முனிசிபாலிட்டியில் உள்ள கவுன்சிலர்கள், பாதிரியார் உள்பட அவரது நண்பர்கள் அந்த ஆபீசிலுள்ள சிப்பந்திகள், நமது ஜில்லா கலெக்டர் ஸ்ரீமான் காக்சு துரை அவர்கள் ஆகிய இவர்களே போதுமான அத்தாக்ஷி ஆவார்கள். இந்தியாவின் மானக் கேட்டுக்கும் இந்தியர்களின் இழிதன்மைக்கும் வெள்ளைக்காரர்கள் யோக்கியதைக்கும் இதைவிட வேறு என்ன சாக்ஷி வேண்டும்?

(குடி அரசு - கட்டுரை - 12.06.1927)