periyar and kolathoor maniசென்னை சுயராஜ்யக் கட்சியில் உள்ள பல பார்ப்பனரல்லாதார் அக்கட்சியில் இருப்பதற்காக இப்போது வெட்கப்படுகிறார்கள் என்று நன்றாய்த் தெரிகிறது. அவர்கள் யார் என்று பொது ஜனங்கள் அறிய ஆசைப்படுவது சகஜம் தான். நாம் அதை தெரிய ஒரே ஒரு சூசனை காட்டுகிறோம். அதாவது சுயராஜ்யக் கட்சியில் உள்ள பார்ப்பனரல்லாதார்களில் யார் யார் உள்ளதற்குள் யோக்கியர்கள் என்று பெரும்பான்மையோர்களால் நினைக்கப்பட்டார்களோ, அவர்களில் பெரும்பான்மையோரும், இனி அந்தக் கட்சியில் இருந்தால் அடுத்த தேர்தலில் தங்களுக்கு ஸ்தானம் கிடைக்காமல் போய்விடுமோ என்பவர்களில் சிறுபான்மையோரும் சேர்ந்து இப்போது தனிக்கட்சி ஏற்படுத்தலாமா அல்லது ஜஸ்டிஸ் கட்சியையே சுவாதீனப்படுத்திக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில் ஜஸ்டிஸ் கட்சியார் புத்திசாலிகளாகவும் உண்மையாய் பார்ப்பனரல்லாதாருக்கும் உழைப்பவர்களாயிருந்தால் ராஜீய அபிப்பிராய பேதத்தையும், சுயநலத்தையும், சொந்த விரோதத்தையும் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு வருகிறவர்களை மனப்பூர்வமாக வரவேற்பார்களாக.

(குடி அரசு -– துணைத் தலையங்கம் - 10.04.1927 )

ஒரு விசேஷம்

சென்னை சட்டசபையில் மந்திரிகளின் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் வந்து விவாதம் நடந்த காலத்தில் ஜனாப் அப்பாசலி பேசும் போது “இண்டிபெண்டண்ட் கட்சியார்களும் மந்திரிகளும் யாதொரு முக்கியமான வேலை செய்யாவிட்டாலும் வேட்டை நாய்கள் போன்ற சுயராஜ்யக் கட்சியாரை பெட்டிக்குள் பாம்பு அடங்கினது போல் செய்து அவர்களின் தடை வேலைகளையும் தேசீய வேஷங்களையும் மூட்டை கட்டி வைக்கச் செய்து விட்டோமே, இதைவிட வேறு என்ன செய்யவேண்டு”மென்று பேசிக் கொண்டே வரும்போது ஸ்ரீமான் சத்தியமூர்த்தி மந்திரி கணம் சுப்பராயனைப் பார்த்து உங்களுக்கு உள் உளவாயிருந்ததற்கு இப்படித்தானா சபையில் எங்கள் மானத்தைக் கெடுப்பது என்று ரகசியமாய் கெஞ்சினாராம். கணம் சுப்பராயன் உடனே ஜனாப் அப்பாசலிக்கு ஜாடைகாட்டி, கண்ணைச் சிமிட்டி உட்காரச் சொன்னாராம். இந்த காட்சியைப் பார்த்து சட்டசபையிலுள்ள மந்திரிகளுள்பட எல்லாக் கட்சியாரும் சிரித்தார்களாம். ஐயோ பாவம். சுயராஜ்யக் கட்சியின் நிலைமை இப்படி ஆகிவிட்டது.!

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 10.04.1927)

மகாத்மாவின் தேக அசௌக்கியம்

மகாத்மா காந்தி அசௌக்கியமாக இருப்பதாகவும் அவருடைய தென்னாட்டுச் சுற்றுப் பிரயாணம் பாதிக்கப்படும் என்பதாகவும் பொதுவாய் தெரிய வருகிறது. ஆனாலும் அவருடைய சிஷ்ய கோடிகள், அதாவது அவரைக் கொண்டு வந்து ஆட்டி வைத்து யோக்கியதையும் பணமும் சம்பாதித்துக் கொள்ள நினைத்திருப்பவர்கள் அந்த விபரத்தைப் பற்றி ஜனங்கள் சரியாய் உணருவதற்கு இடமில்லாமல் குழப்பமடையும்படியாகவும், முன்னுக்கு பின் முரணாகவும் ஏமாற்றுத் தந்திகள் அடித்த வண்ணமாயிருக்கின்றார்கள். காயலாவினுடைய உண்மையையும் சரியாய்த் தெரியப்படுத்தாமல் ஏதேதோ தந்திரமாயும் மூடு மந்திரமாயும் தெரிவித்து வருகிறார்கள்.

ஸ்ரீமான் ஸி.ராஜகோபாலாச்சாரி தந்தியை விட்டு விட்டு, ஸ்ரீமான் தேசாய், நியானியிலிருந்து கொடுத்திருக்கும் தந்தியை பார்க்கும் பஷத்தில் மகாத்மாவுக்கு மூளைக்கொதிப்பும், ரத்தோட்டக் குறைவும், கைக்கால் சரியான சுவாதீனமற்ற தன்மையும் காட்டுகிறதாகவும், தக்க ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று டாக்டர்கள் அபிப்பிராயம் கொடுத்திருப்பதாகவும் குறைந்தது இனியும் இரண்டு மூன்று மாதத்திற்கு அதாவது கோடைகால முழுவதற்கும் ஓய்வு எடுத்துக் கொண்டு சுற்றுப்பிரயாணத்தை நிறுத்த வேண்டுமென்று சொன்னதாகவும் தெரிய வருகிறது. கடைசியாய் பார்க்கும் போது தற்காலம் மகாத்மா சுற்றுப்பிரயாணம் நிறுத்தப்பட்டதாகவே முடிந்து விட்டது. எனினும், இனியும் சுமார் இரண்டு மூன்று மாதம் பொருத்தானாலும் மகாத்மா நமது நாட்டுக்கு வரும்போது நாம் நமது கடமையைச் செய்து வரவேற்கத் தயாராயிருக்க வேண்டும்.

(குடி அரசு - கட்டுரை - 10.04.1927)