நடிகர்கள் அரசியலுக்கு வருவதும் அவர்களை பதவியிலமர்த்தி அழகு பார்ப்பதும் தமிழகத்திற்கு புதிதல்ல. எம்.ஜி.ராமச்சந்திரன் துவங்கி சரத்குமார், எஸ்.எஸ். சந்திரன் என அந்த பட்டியல் நீளுகிறது. நிகரில்லாத மக்கள் ஆதரவு தனக்கிருந்தும் சிவாஜி கணேசன் அவர்கள் அரசியலில் வெற்றிபெற முடியவில்லை. எம்.ஜி.ஆர் வெற்றிபெற்றது கூட அவரது ரசிகர்களால் மட்டுமல்ல, அறிஞர் அண்ணா அவர்கள் கொடுத்த அரசியல் ஆதரவும் ஒரு அடிப்படை காரணம். இதையெல்லாம் உணர்ந்ததாலும் பலமுறை அறிக்கைகள் வழி சூடு வங்கியதாலும் ரஜினிகாந்த்க்கு அரசியல் என்பது எப்போதுமே தடுமாற்றமான நடனம்.

Vijaykanthஅரசியலில் தற்போதைய புதுவரவு விஜயகாந்த். "லஞ்சம் இல்லாத நாட்டை உருவாக்கி காட்டுகிறேன். கிராமங்களை நகரங்களாக மாற்றுவோம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்கப்படும். ரேஷன் பொருட்கள் அனைத்தும் வீடு வந்து சேரும்". என பட்டி தொட்டியெல்லாம் கீறிய கிராமபோன் போல முழங்குகிறார்.

அவரது கல்யாண மண்டபம் இடிபட போகிறதை உணர்ந்ததும் தன் சொத்தை காப்பாற்ற புறப்பட்ட விஜயகாந்தா லஞ்சத்தை ஒழிக்கப் போகிற மகான்? கல்யாண மண்டபம், கல்லூரி ஆகியவற்றிற்கு அனுமதி பெற எவ்வளவு பேருக்கு லஞ்சம் கொடுத்தார் என்பது அவருக்கு தெரியும், அது உரிய நேரத்தில் வெளியிடுவேன் என முழங்கினார். அப்படியானால் முறைகேடாக அனுமதி பெற்று சொத்தை சேர்த்துவிட்டு இப்படி முழங்கலாமா? அவர் தலைவராக இருக்கிற நடிகர் சங்கம் நாட்டு மக்கள் பணத்தை அரசிடம் சுரண்டுவதை நிறுத்தட்டும். தனது சங்க உறுப்பினர்களாக இருக்கிற அனைவரையும் முறையாக வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வைக்கட்டும். இது தமிழக மக்களுக்கு அவர் செய்யவேண்டிய முதல் கடமை.

நகரங்களில் எல்லாம் இப்போது பாலாறு, தேனாறா ஓடுகிறது? கிராமங்களின் அழகு, உறவு, ஒழுங்கமைவு, இயற்கை நிலை இவற்றிலா விஜயகாந்த் விளையாடப்போகிறார். சுத்தம் சுகாதாரமற்று, பாதுகாப்பற்று, சமூக உறவற்ற நகரங்களாக உருவாக்க அவர் வாக்குறுதி அளிப்பதே மிக ஆபத்தான அரசியல், சமூக, பொருளாதார பார்வை.

ரேசன் பொருட்கள் வீட்டில் கிடைக்காததா இன்றைய பிரச்சனை? அப்படியானால் எப்போதும் போல ரேசன் அரிசி வாங்கி சாப்பிடும் அளவில் தான் தமிழக மக்கள் வாழ்க்கை தரம் இருக்குமா? இவர் ஆட்சிக்கு வந்தால் மட்டும் என்ன புதிய மாற்றத்தை கொண்டுவரும்? எல்லாம் பழைய கதை தானே! ஏழைகள் மீது புதிதாக தனக்கு பிறந்த அக்கறையுடன் கிளம்பியுள்ளார் விஜயகாந்த். ஜெயலலிதா அரசால் கடந்த 5 வருடத்தில் 2 லட்சத்திற்கும் மேல் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் முறைகேடான பணி நீக்கம் செய்யப்பட்டபோது என்ன செய்தார் இவர்? பத்தாயிரம் சாலைப்பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டபோது இவர் என்ன செய்தார்? ஜெயலலிதா அரசு புதிதாக பணிநியமனம் செய்ய தடை செய்து வேலையில்லா இளைஞர்கள் வயிற்றிலடித்த போது விஜயகாந்த் எங்கே? ஏழை விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலைக்கு தள்ளப்பட்டபோதும், பசிக்கொடுமையால் எலி, நண்டு, நத்தை சாப்பிட வேண்டிய நிலைக்கு ஆளானபோதும் விஜயகாந்த் எங்கே? இந்த நிலமைக்கு ஆளாக்கிய அரசியல் சமூக பொருளாதார திட்டங்களை பற்றி இதுவரை வாய் திறக்காத விஜயகாந்த் ஏழைகளுக்கு திரையில் வில்லனாக வந்தால் என்ன கதாநாயகனாக வந்தால் என்ன?

சமீபத்தில் அவர் பேசிய பொதுகூட்டத்தில் அவரது கொள்கையை விளக்க கேட்ட அவரது கட்சித்தொண்டர் மேல் சீறி விழுகிறார். வாக்கு கேட்கும் முன்னர் கொள்கை, திட்டங்கள் அனைத்தையும் தெரிவிப்பது தான் நியாயம். அவர் அறிவிக்கிற இந்த முழக்கங்களை அடைய என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார் என்ன என கேட்பவரிடம் அது ரகசியம் என்கிறார். அவரது கொள்கைகள் முன் கூட்டியே தெரியக்கூடாத திரை மறைவு இரகசியங்களென்றால் அது மக்களாட்சிக்கு உகந்ததல்ல. மக்களாட்சியின் மகத்துவம் என்பது இரகசியமான நிழல் உலகமல்ல, மக்களுக்கு தகவல்களை தெரிவிப்பது.

திட்டமிட்டு இலவசமாக ஏழைகளுக்கு என சில பொருட்களை கொடுத்து பெயர் சேர்ப்பதல்ல அரசியல் வாழ்வு. அப்படிப்பட்ட தலைவர்களால் எந்த மாற்றமும் வருவதில்லை. தனக்கு வேண்டிய மட்டும் பொருள் சேர்த்துவிட்டு சொத்தைக் காப்பாற்ற அரசியல், பூசணிக்காய் என புறப்படுவது நடிகர்களுக்கு புது சுகமாக இருக்கலாம். அதனால் தமிழக மக்களுக்கு எந்த பலனும் இல்லை.

அரசியல் மேடைகளில் விஜயகாந்த் பேசும் வீரவசனங்கள் திரைப்படத்தில் வருகிற லியாகத் அலிகான் வசனம் போல இருக்கிறது. ஆனால் அவை வாழ்க்கைக்கு உதவாத பசப்பு வார்தைகள். நிஜத்தில் இவர் ஒன்றும் தமிழக மக்களின் வாழ்வை முன்னேறப் போகிற விடுதலை இயக்கத்தின் கேப்டனல்ல, மீண்டும் ஒரு அரசியல் நட்சத்திரம் மட்டுமே! இந்த நட்சத்திரம் மின்னுமா? இல்லை விழுமா? காலம் பதில் சொல்லும். விஜயகாந்த் கனவு காண்பது போல ஓட்டு என்பது 2 மணி நேர திரைப்படம் பார்க்க அனுமதி சீட்டு போன்றதல்ல. மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார வாழ்வை உயர்வடைய திட்டங்கள் செயல்படுத்த அனுமதி. தமிழ்மக்களே! விஜயகாந்திடம் கவனம். 

- திரு

Pin It