பகுத்ததறிவுள்ள மனிதன் இந்த 20- ஆம் நூற்றாண்டில் கடவுள், மதம், வேதம், மதத் தலைவர் என்றெல்லாம் நம்பிக் கொண்டும் ஏற்றுக்கொண்டும் நடப்பது மனித சமூதாயத்திற்கு மிகமிக வெட்கக்கேடான காரியமாகும். ஏனென்றால் இவையெல்லாம் 1000, 2000, 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கால மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட கருத்தும், காரியங்களுமாகும். இவைகள் அறியாமையின் காரணமாகவும், அக்காலக் காட்டுமிராண்டித்தன்மை காரணமாகவும், நல்லெண்ணத்துடனோ அல்லது கெட்ட எண்ணத்துடனோ பல கற்பனையான அதிசயம் அற்புதம் என்பவைகளை உண்டாக்கி, அவற்றின் மூலம் மக்களை நம்பச் செய்து ஏற்பாடு செய்யப்பட்டவைகளேயாகும்.

ஏன் அப்படிச் சொல்கிறேனென்றால், கடவுள், மதம், வேதம், வேத தத்துவம், மதத் தலைவர்கள் என்பவர்கள் ஆகியவை எதுவும் நம்பியாக வேண்டியதே ஒழிய, அறிவுக்கு, ஆராய்ச்சிக்கு, அனுபவத்திற்கு, சாத்தியத்திற்குப் பொருத்தமில்லாததாகவே இருப்பதால் தான் இப்படிச் சொல்கிறேன். அக்காலத்திய எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும், அந்த மதத் தலைவர்கள், தன்மைகள் எல்லாம் அறிவுக்கு, ஆராய்ச்சிக்கும், அனுபவத்திற்கும், பொருத்தமில்லாமல் நம்பித் தீரவேண்டியவர்களேயாவார்கள்.

உதாரணமாக கடவுளை உண்டாக்கியவன் யார் என்பதே யாருக்கும் தெரியாது. "தானாக உண்டானான்" என்று தான் சொல்லுவார்கள். எப்போதென்பது யாருக்கும் தெரியாது. இவை இரண்டும் தெரிய முடியாமல் இருப்பது தான் கடவுள் என்றால் அதைப்பற்றி அறிவுள்ள மக்களுக்குத் தெரியப்படாமல் போனதற்குக் காரணம் என்ன? அன்றியும், கடவுள் ஏன் உண்டானார்? ஏன் ஏற்பட்டார்?அவர் வேலை என்ன? அந்த வேலைகளை அவர் ஏன் மேற்கொண்டார்? இவை மனிதனுக்கு மாத்திரம்தானா? இவை இல்லாமல் இருந்தால் என்ன? என்பனபற்றி யாருக்காவது தெரியுமா? கடவுள் சர்வ சக்தி உள்ளவர் என்றால் இந்த அடிப்படைக்குக் காரியம் - கருத்துக்கூட மனிதனுக்குத் தெரியும்படி செய்ய சர்வ சக்திக்கு முடியாமல் போனது ஏன்? தவிரவும், சர்வ சக்தியுள்ள கடவுள் இருப்பதாக நம்ப வேண்டி இருக்கிறதே ஒழிய தெரிந்து கொள்ள, அறிந்து கொள்ள காணமுடிவதில்லையே! மற்ற ஜீவராவிகளுக்குச் சொன்னால் தெரியாதே! அது ஏன்?

தவிர, இந்துக்கள் என்பவர்கள் (பார்ப்பனர்களும், பார்ப்பனதாசர்களும்) முதலில் உலக நடப்புக்குக் "கடவுள்" தான் காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளாமல், மனிதத் தன்மைக்கு மேற்பட்ட குணமுள்ளவர்களான தேவர்கள் என்பவர்கள் தாம் காரணம் என்றும், இந்திரன், வருணன், வாயு, பிரமன், விஷ்ணு, ருத்திரன், எமன், சந்திரன், சூரியன் முதலியவர்கள் உலகத்தை நடத்துகிறார்கள் என்றும் கருதி, சொல்லி நடந்து வந்தார்கள். பிறகு பிரமா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்கள் என்று ஆக்கினார்கள். பிறகு அவற்றை மனிதனை விட இழிதன்மை - குணங்கள் உடையவனாக ஆக்கிப் பிரச்சாரத்தால் நிலை நிறுத்திவிட்டார்கள். இதிலிருந்து ஒரு கடவுள் என்பதும் கடவுள் சர்வசக்தி உடையது என்பதும் பெரிதும் மறைந்துவிட்டன.

அதன் பிறகு இந்த மூன்று கடவுள்களின், அவற்றின் மனைவி, மக்கள்களின் அவதாரம், அம்சம் என்பதாகக் கருதி, 300- கடவுள்கள், 3000 -கடவுள்களாக ஆக்கப்பட்டு விட்டன. அதன் பின்பு பார்ப்பனர் தங்கள் வயிற்றுப் பிழைப்பைக் கருதி, இந்த ஆயிரக்கணக்கான கடவுள்களுக்குச் சோறு, சிலை, கல்யாணம், சண்டை, சச்சரவு, மக்களைக் கொல்லுதல் என்பன போன்ற காரியங்களைக் கற்பித்து, மக்களுக்குள் புகுத்தி, மக்களைப் பயன்படுத்தி ஜீவித்து வருகிறார்கள். இந்தக் கருத்து தத்துவத்தில் உலகில் பல பாகங்களில் இருந்தது என்றாலும் இந்தியாவில் மாத்திரம் நிலை பெற்று நடந்துவருகிறது.

மற்ற பாகங்களில் இக்கருத்து பெரிதும் மறைந்து, ஒரு கடவுள், அதற்கு உருவமில்லை, அதற்கு ஒன்றும் தேவையில்லை, கடவுளைப் பிராத்தனை செய்வது தான் கடவுள் காரியம் என்பதாகக் கருதி பலர் நடந்துவருகிறார்கள். இந்தக் கருத்துக்கு மேற்பட்ட மதங்கள், மதத் தலைவர்கள், வேதங்கள் இருந்து வருகின்றன. இந்த மதக்காரர்களுக்குப் பிராத்தனை, ஜெபம், தொழுகை முதலியவைகள் தாம் முக்கிய கடவுள் தொண்டாக இருந்து வருகின்றன. இதற்குக் காலம், தலைவர், வேதம் இருந்தாலும் அவையும் பெரிதும் மூட நம்பிக்கை அடிப்படையில் தான் கற்பிக்கப்பட்டிருக்கிறன்றன.

"இந்து மதத்திற்கு"க் காலம் பல ஆயிரம் வருஷங்கள் கொண்ட யுகக் கணக்கில் சொல்லப்படுகின்றது. தலைவர்கள் - ரிஷிகள் - முனிகள் - தெய்வீகத்தன்மை கொண்ட அவதாரங்கள், புருஷர்கள் என்கிறான். வேதங்களோ தெய்வங்களால் அசரீரியாய்ச் சொல்லப்பட்ட சப்தங்கள் என்கிறான். இந்த மூன்றையும் ஓப்புக்கொள்ளாவிட்டால் இந்துமதம் (ஆரிய மதம்) என்பது இருப்பதற்கில்லை. அதாவது அசரீரியாய் இருந்த வேதத்தைப் பராசரன் மகன் வியாசன் தொகுத்து உருவாக்கினானாம். இந்தப் பராசன் என்பவன் பாண்டவர்களுக்குப் பாட்டனாம். இந்த வியாசன்தான் பாரதத்தைச் சொன்னானாம். இவன் சொல்ல கணபதி என்கின்ற கடவுள் எழுதினானாம். இவற்றையெல்லாம் நம்பினால் தான் இந்து (ஆரிய) மதம் ஏற்றத்தக்கதாகும்.

இதுபோல் தான் மற்ற கிறிஸ்து, இஸ்லாம் (முகமது) முதலிய மதங்களுமாகும்.கிருஸ்துவ மதத்தலைவர் ஏசு கிருஸ்து என்பவர் 2000 - ஆண்டுகளுக்கு முன் தகப்பனில்லாமல், பரிசுத்த ஆவிக்குப் பிறந்தாராம். ஆகவே அவர் கடவுளுக்கு மகனாம் (தேவதுமாரனாம்) ஆகவே அவர் சிலுவையில் அறையப்பட்டுக்) கொல்லப்பட்டாராம். செத்தவர் மறுபடியும் பிழைத்தாராம். பல அற்புதங்களைச் செய்தாராம். வியாதிகளைப் பார்வையால் சவுகரியப்படுத்தினாராம். ஒரு ரொட்டித் துண்டை ஆயிரக்கணக்கான பேர்களுக்குக் கொடுத்துப் பசியாற்றினாராம். குருடர்களுக்கு கண்ணைக் கொடுத்தாராம். இப்படி பல காரியங்கள் செய்தாராம். இவற்றையெல்லாம் நம்பினால் தான் கிருஸ்தவ மதம் இருக்க முடியும்.

அறிவைக் கொண்டு பார்த்தால் தேவனுக்கு, கடவுளுக்குக் குமாரன் எதற்கு? கடவுள் ஒருவனை மாத்திரம் குமாரனாக ஆக்குவது ஏன்? கடவுள் தோன்றி எத்தனையோ காலம் ஆனபிறகு அப்போது (2000 வருடங்களுக்கு முன்) மாத்திரம் எதற்காக மகனை உண்டாக்கினார்? அதற்கு முந்தின காலத்தில் ஏன் உண்டாக்கவில்லை? அப்போதெல்லாம் செத்தவர்கள் இல்லையா? குருடர்கள் இல்லையா? பசித்தவர்கள் இல்லையா? அந்த (கி.பி. 1 - ஆவது) வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது? கடவுள் செய்யவேண்டியதை - சொல்ல வேண்டியதை ஒரு மனிதனைக் கொண்டு மாத்திரம் ஏன் சொல்ல வேண்டும்? அதுவும் ஒரு சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன் சொல்ல வேண்டும்? அந்தக் காரியங்கள் இப்போது ஏன் நடப்பதில்லை? இன்று ஏன் அவர் வரவில்லை? இப்போது கிருஸ்துவை ஏற்காதவர்கள், நம்பாதவர்கள், வழிபடாதவர்கள் ஏனிருக்கிறார்கள்? தேவகுமாரனுக்கு இவ்வளவு தான் சக்தியா?

இது போலத்தானே இஸ்லாம் மதம் என்பதும் சொல்லப்படுகிறது? முகம்மது கடவுளுக்கு (கடவுளால் அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத் தூதர் எதற்கு? குரான் கடவுளால் தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட செய்தியாம். கடவுள் மக்களுக்குச் செய்தி சொல்ல வேண்டுமானால் ஒரு மனிதர் (தூதர்) வாயினால் தான் சொல்லச் செய்ய வேண்டுமா? கடவுளால் எல்லா மனிதருக்கும் ஏககாலத்தில் தெரியும்படிச் செய்ய முடியாதா? உலகில் மனிதன் தோன்றி எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு சிலருக்கு மாத்திரம் சொல்லும்படி ஏன் சொல்லுகிறார்? மற்றவர்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை? முகமது நபி என்பதை ஏற்றுக் கொண்டு, அவரை நம்பினவர்களுக்குத்தானே குரான்? மற்றவர்கள் அதை ஏற்பதில்லையே! மற்றவர்களுக்குப் பயன்படுவதில்லையே! ஏன்?

கடவுள் சொல், அப்படி ஏன் நம்பச் செய்தவர்களுக்கு மாத்திரம் தெரிய வேண்டும்? இன்னும் எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி இருக்கிறது! இதுதான் கடவுள் தன்மையா? இவையெல்லாம் மனிதத் தன்மையா? மனிதக் கற்பனையா? தெய்வத்தன்மையா? ஒரு சர்வசக்தியுள்ள தெய்வம், தெய்வத்தால் அனுப்பப்பட்ட அவதாரம், அம்சம், மகன், குமாரன், தூதர், வேதம் ஏன் உண்டாக்க வேண்டும்? இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், தூதர், வேதம் ஏன் உண்டாக்க வேண்டும்? இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், அவதாரம், தூதர்கள், சமயங்கள், மதங்கள், போதகர்கள் இருக்க வேண்டிய அவசியமென்ன என்பதைச் சிந்தித்தால் இவையெல்லாம் மூட நம்பிக்கை, அதாவது அறிவைக் கொண்டு சிந்திக்காமல் கண்முடித்தனமாய் நம்ப வேண்டியவை ஆகின்றனவா இல்லையா? இது மனிதர் என்பவர்களுக்கு ஏற்றதா என்று கேட்கிறேன். இதற்காகக் கோபிப்பதில் பயன் என்ன?

மூடநம்பிக்கை ஒழிய வேண்டுமானால் மக்களிடம் உள்ள இப்படிப்பட்ட கருத்துக்கள் ஒழியாமல் எப்படி ஒழிய முடியும்? அறிவுள்ளவர்களே! பகுத்தறிவாதிகளே! சிந்தித்துப் பாருங்கள்! இது சந்திர மண்டலத்திற்கு மனிதன் போய் வரும் காலம்; காட்டுமிராண்டிக் காலமல்ல. எனவே சிந்தித்துப் பாருங்கள்! பின் சந்ததி மக்களை மடையர்களாக்காதீர்கள்!

(14-06-1971 "உண்மை" இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்.)

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா