எங்கள் தொண்டு யாவும் தொழிலாளர்களுக்காகவேதான். நாங்களுமம் தொழிலாளிகள் தாம். ஆகவே, வாய்ப்பினால் மாத்திரம் தொழிலாளிகளல்லாமல் பிறவியினால், சட்டத்தினால், சா°திரங்களால், கடவுள்க ளால், கடவுள் சிருஷ்டியினால் நாங்கள் தொழிலாளிகளாக ஆக்கப்பட்டவர்கள். அப்படிப்பட்ட தொழிலாளிகள்தாம் திராவிடர்கள். இப்போது தொழிலாளர் இயக்கத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் உண்மைத் தொழிலாளிகளில் 1000த்தில் ஒரு பாகமாகத்தான் இருப்பார்கள்.

தொழிலாளி என்கின்ற பதத்துக்கு அர்த்தம் என்ன? வேலை செய்கிறவன் என்று அர்த்தமாகும். யாவருந்தான் வேலை செய்கிறார்கள். அப்படி இருக்க, ஒரு கூட்டத்திற்கு மாத்திரம் ‘தொழிலாளி’என்று பெயர் கொடுக்கப் பட்டிருப்பானேன் என்றால், பிறருக்காக தொண்டு செய்து-மனுதர்ம சாஸ்திரப்படி, தொழிலாளியாகவே வாழ்பவர்கள் ‘தொழிலாளி’ என்று அழைக்கப்படுகிறார்கள். அந்தக் கருத்தில் பார்த்தால் திராவிடர்களாகிய யாவரும் தொழிலாளிகள் அல்லவா?

இயந்திரங்களின் முன்னால் நிற்பவர்கள் மாத்திரந்தானா தொழிலாளர்கள்? வண்டி ஓட்டுகிறவர்கள், வீதி கூட்டுகிறவன், கக் கூசுக்காரன், வண்ணார், நாவிதர், குயவன், உழுபவன், விதைப்பவன், தச்சன், கொல்லன், சக்கிலி, பறையன், செக்கு ஓட்டுகிறவன், சம்பாதித்து - அன்றாட வாழ்க் கைக்கு அன்றாடம் வரும்படி எதிர்பார்த்து நிற்கும் யாவரும் தொழிலாளிகள் அல்லவா?

இன்று இம்மாதிரித் தொழிலாளிகள் யார்? பிரமணர்களா? க்ஷத்திரியர்களா? அல்லவே! சூத்திரர்கள்தாமே இந்த மாதிரியான தொழிலாளிகளாக இருக்கிறார்கள்! இந்தச் சூத்திரர்கள் யார்? திராவிடர்களாகிய நாம்தானே -சூத்திரர் என்கின்ற பட்டியலில் சட்டப்படியும், சாஸ்திரப்படியும், கடவுள் சிருஷ்டிப்படியும், காரியத்தில் நடப்புப்படியும் இருந்து வருகிறோம்? இதை எந்தத் தொழிலாளியாவது மறுக்கமுடியுமா? நான் மேலே சொன்ன தொழில்களில் ஒரு பிராமணன் இருக்கிறானா? ஆகவே, சரீரத்தினால் பாடுபடும் வேலை அவ்வளவும் சூத்திரர்கள் என்று அழைக்கப்படும், ஆக்கப்பட்டிருக்கும் திராவிடர்களாகிய நம் கையிலேயே இருப்பதால், ‘திராவிடரியக்கம் தொழிலாளிகள் இயக்கம்’ என்று சொல்லுகிறேன்.

எதற்காக திராவிடர் இயக்கம் வேலை செய்கிறது என்றால், திராவிடர் 4-வது சாதியாக இருக்கக் கூடாது - தொழிலாளர் சாதியாக இருக்கக்கூடாது என்பதற்கே ஆகும்.

தொழிலாளர் இயக்கம் - திராவிடர் இயக்கம் என்பதற்குப் பதிலாக மற்றவர்கள் இயக்கத்திற்கு இருப்பது போன்ற ஒரு பெயர் இருக்க வேண்டுமானால் நாம் என்ன பெயர் வைத்துக்கொண்டிருக்க வேண்டும், உங்களுக்குத் தெரியுமா? பிராமணர்கள் தங்கள் இயக்கத்துக்கு, ‘பிராமணர்கள் சங்கம்’ என்றும், வைசியர் தங்கள் சங்கத்திற்கு ‘வைசியர் சங்கம்’ என்றும், க்ஷத்திரியர்கள் தங்கள் சங்கத்திற்கு ‘க்ஷத்திரியர் சங்கம்’ என்றும் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்களல்லவா? அந்தப் படிப் பார்த்தால், நாம் நம் சங்கத்திற்கு ‘சூத்திரர் சங்கம்’ என்று பெயர் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், சூத்திரன் என்பதை நாம் இழிவாகக் கருதுகிறபடியால் சூத்திரனின் மறுபெயர் கொண்ட - அதே கருத்துக் கொண்ட ‘வேலையாள் - தொழிலாளி சங்கம்’என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அந்தப் பெயரை - ஒருசிறு கூட்டத்தார் பரித்துவைத்துக் கொண்டதால், தொழில் செய்யும் சாதி யாராகிய நாலாவது வருணத்தார்களாக்கப் பட்ட நாம் நம்முடைய இனத்தின்பேரால், ‘திராவிடர் கழகம்’ என்பது வேண்டாம் என்றால், மற்றபடி அதற்குச் சரியான பெயர் ‘சூத்திரர் சங்கம்’ என்பதேயாகும்.

ஆகவே, ‘திராவிடர் கழகம்’என்பது, 4-வது வருணத்தாராக ஆக்கப்பட்டு - சமுதாயத்தில் இழிவுபடுத்தப்பட்டு - சரீரப் பாடுபட வேண்டியதாகக் கட்டாயப்படுத்தித் தாழ்த்தப்பட்டு வைத்திருக்கும் ஒரு 4 கோடி மக்கள் கொண்ட சமுதாயத்தின் விடுதலைக் கழகம் என்றுதான் சொல்லவேண்டும்.

செல்வம் கடவுள் கொடுத்தார்; தொழிலாளிகளைக் கடவுள் சிருஷ்டித்தார்; கடவுள் செயலால் இவை இரண்டும் சிருஷ்டிக்கப் பட்டுக் காப்பாற்றப்பட்டு வருகின்றன; பிச்சை எடுப்பது அவனவன் ‘தலைவிதி’ - என்று நினைப்பவர் தொழிலாளர் இயக் கத்தில் அங்கத்தினராய் இருக்கவோ, தொழிலாளர் இயக்கத்தை நடத்தவோ சிறிதும் தகுதி அற்றவர் என்றே சொல்லுவேன். அவர் எவ்வளவு பண்டிதராய் இருந்தாலும், பக்தனாய் இருந்தாலும், தொழிலாளி இயக்கத்திற்குப் பதரே - எதிரியேயாவார். இப்படிச் சொல்வது நாத்திகமானால் - அதற்காக நீங்கள் எங்களிடம் சேரக்கூடாது என்றால், உங்கள் சம்பந்தம் இல்லாமல் எங்களால் ஆனதை எங்களுக்கும், உங்களுக்குமாக இருந்துவரும் திராவிடர் கழகத்தின் மூலம் நாங்கள் தொண்டாற்றி வருகிறோம்.

(‘குடிஅரசு - 6-7-1946)’