தண்ணீர் தீண்டாமை

மதுரை அருகில், கரடிப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த 3 இளைஞர்கள் – ஜெயநீதி, காசிராஜன் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோர், “இக்கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் உள்ள நீரைப் பயன்படுத்த, சாதி இந்துக்கள் தலித் மக்களை அனுமதிப்பதில்லை'' என்று குற்றம் சாட்டுகின்றனர். இக்கிராமத்தில் உள்ள சாதி இந்துக்களுக்கான சுடுகாட்டிற்கு அருகில் இத்தண்ணீர் தொட்டி இருக்கிறது. மே 19 அன்று, இவ்விளைஞர்கள் அங்கு குளித்தனர். இக்கிராமத்தில் தலித்துகளுக்கும் சாதி இந்துக்களுக்கும் என இரட்டை சுடுகாடு இருப்பதாக ஜெயநீதி கூறுகிறார். இருப்பினும், சாதி இந்துக்களின் சுடுகாட்டிற்கு அருகில்தான் கிணறு இருக்கிறது. எனவே, இத்தண்ணீர் தொட்டியை தலித்துகள் பயன்படுத்துவதை சாதி இந்துக்கள் எதிர்த்து வந்துள்ளனர். மே 19 அன்று, ஆதிக்க சாதியை சார்ந்த நான்கு பேர் இத்தண்ணீர்த் தொட்டியை தலித்துகள் பயன்படுத்தக் கூடாது என்று எச்சரித்துள்ளனர். ஆனாலும், இம்மூவரும் அங்கு தொடர்ந்து குளித்திருக்கின்றனர். அதற்கு மறுநாளும் சரண்ராஜ் மற்றும் விருமாண்டி ஆகிய இரு தலித்துகள் அங்கு குளிப்பதற்காக சென்றபோது கடுப்படைந்த சாதி இந்துக்கள், சாதிப் பெயரைச் சொல்லி அவர்களைத் திட்டியுள்ளனர். இது குறித்து ஊராட்சித் தலைவர் கரடியப்பனிடம் தலித்துகள் முறையிட்டனர். அவர் சாதி இந்துக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், ஊராட்சித் தலைவர் கூறிய அறிவுரையை ஏற்க மறுத்த சாதி இந்துக்கள், தங்களைக் கேட்காமல் எவரும் தண்ணீர் தொட்டியின் மோட்டரை போடக்கூடாது என்று கட்டளையிட்டு – தலித்துகள் இத்தண்ணீர்த் தொட்டியை பயன்படுத்துவதைத் தடுத்துள்ளனர். தலித் இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து மனு கொடுத்துள்ளனர் ("இந்தியன் எக்ஸ்பிரஸ்', 24.5.2011). 

தேநீர் தீண்டாமை

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில், சாதி இந்துக்கள் நடத்தும் தேநீர்க் கடைகளில் – தாழ்த்தப்பட்ட மக்கள் தேநீர் அருந்துவதை தடுப்பதற்காக, அவர்களுக்கு மட்டும் தேநீர் விலையை உயர்த்தியுள்ளனர் என்று உண்மை அறியும் குழுவின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இக்கிராமங்களில் உள்ள தேநீர்க் கடைகளில் இரட்டை தம்ளர் முறை கடைப்பிடிக்கப்படுவதை எதிர்த்து, தலித்துகள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனால், 5 கிராமங்களைச் சேர்ந்த சாதி இந்துக்கள் ஒன்றிணைந்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேநீரின் விலையை 7 ரூபாய் 50 பைசாவாக உயர்த்தியுள்ளனர். இந்நவீன பாகுபாட்டை ஏப்ரல் 26 அன்று – ஆர். பழக்குறிச்சி, கோபாலப்பட்டி, வைரவப்பட்டி, ரகுநாத் பட்டி, சீகம்பட்டி மற்றும் விடதாளம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சாதி இந்து தலைவர்கள், இம்முறையை கடைப்பிடிப்பதென தீர்மானித்துள்ளனர். சாதி இந்துக்களுக்கு வழங்கப்படும் தேநீரின் விலை வழக்கம் போல் நான்கு ரூபாயாகவே இருக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்கிராமங்களில் நடைபெறும் எவ்வித வேலைகளுக்கும் தலித்துகளை அமர்த்தக்கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது ("இந்தியன் எக்ஸ்பிரஸ்', 10.5.2011). 

சாமி தீண்டாமை

திண்டுக்கல் மாவட்டம் பாரதிபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் (24) என்ற தலித் இளைஞரின் கை, இக்கிராமத்தின் சாதி இந்துக்களால் உடைக்கப்பட்டு, சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பாரதிபுரத்தில் காளியம்மன், பகவதி அம்மன் மற்றும் மாரியம்மனுக்கு கோயில்கள் உள்ளன. மே 19 அன்று, இக்கோயில்களுக்கான திருவிழாவில், இக்கடவுளர்களின் சிலைகள் கிராமங்களின் தெருக்களில் கொண்டு செல்லப்பட்டன. அன்றிரவு, செல்வராஜின் வீட்டுக்கு இச்சிலைகள் கொண்டுவரப்பட்டபோது – மது அருந்தியிருந்த சில சாதி இந்துக்கள் செல்வ ராஜை கேலி செய்து, திட்டியுள்ளனர். இதை சில தலித் இளைஞர்கள் கண்டித்துள்ளனர். அதற்கு அடுத்த நாள், அய்ந்து சாதி இந்துக்கள் சேரிக்குள் வந்து செல்வராஜிடம் பேசி, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். செல்வராஜும் அவருடைய நண்பர்களும் செல்வராஜை கேலி செய்த சாதி இந்துக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதன்படி, அவர்களும் மன்னிப்பு கேட்டுள்ளனர். இதற்குப் பிறகு மே 21 அன்று 10 சாதி இந்துக்கள் பாரதிபுரத்திற்கு வந்து, “சாதி இந்துக்களை எப்படி மன்னிப்பு கேட்கச் சொல்லலாம்'' என்று மிரட்டி, தாங்கள் கொண்டு வந்திருந்த ஆயுதங்களால் செல்வ ராசை தலையில் அடித்து, வலது கையை உடைத்துள்ளனர். அவரைக் காப்பாற்ற வந்தவர்களையும் இக்கும்பல் தாக்கி, காயப்படுத்தியுள்ளது. அன்றிரவு திண்டுக்கல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அடுத்த நாள் மதுரை அரசு மருத்துவமனையில் செல்வராஜ் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். காவல் துறை வழக்குப் பதிவு செய்து, 5 பேரை கைது செய்துள்ளது ("இந்தியன் எக்ஸ்பிரஸ்', 28.5.2001). 

பெட்ரோல் தீண்டாமை

பட்சிராஜன் என்ற 48 வயதான ஒரு தலித், பெட்ரோல் போடும் இடத்தில் – தனக்குப் பிறகு வந்த ஒரு சாதி இந்துவை – தனக்கு முன்னால் பெட்ரோல் போட விடக்கூடாது என்று சொன்னதற்காக – கீழே தள்ளப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள கீழநாலு மூலைக்கிணறுவில்தான் இக்கொடுமை நடந்துள்ளது. பெட்ரோல் போட வேண்டும் என்று கூறிய பட்சிராஜனை, பக்கத்து கிராமத்தில் இருந்து வேனில் வந்த முத்து என்ற சாதி இந்து, சாதிப் பெயரை சொல்லி திட்டியதுடன் – அவரை வண்டியில் இருந்து கீழே தள்ளி, இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். பைக்கில் இருந்து கீழே விழுந்த பட்சிராஜனை வேனைக் கொண்டு மோதி கடும் காயத்தை ஏற்படுத்தி இருக்கிறார். தற்பொழுது முத்து, திருச்செந்தூர் காவல் துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார் ("இந்தியன் எக்ஸ்பிரஸ்', 25.6.2011).  

சுவர் தீண்டாமை

srivilluputhur_360விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிறீவில்லிப்புத்தூரில் உள்ள கிராமத்தில் கட்டப்படும் தீண்டாமைச் சுவரால், உத்தப்புரம் கிராமத்தில் ஏற்பட்ட சூழ்நிலை எழுந்துள்ளது. 1960 களிலிருந்து சிவகாசிக்கு அருகில் உள்ள வ.புதுப்பட்டியில் நாயுடு, சாலியர், பள்ளர் மற்றும் பறையர் ஆகிய சாதிகளிடையே மோதல்களும் பதற்றமும் நிலவி வருகின்றன. அண்மைக் காலங்களில், இவ்வூரில்தான் 500 குடும்பங்களாக உள்ள பள்ளர்களுக்கும், 300 குடும்பங்களாக உள்ள பறையர்களுக்கும் தொடர்ச்சியாக மோதல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அரசு எந்திரம் சாதி இந்துக்களின் பக்கமே இருப்பதாகச் சொல்லும் தலித்துகள், இதுபோன்ற சாதி கலவரங்களுக்குப் பிறகு, சாலியர் என்ற சாதி இந்துக்களையும் தலித்துகளையும் பிரிக்கும் சுவரொன்று – மாவட்ட எஸ்.பி. மற்றும் வட்டாட்சியர் முன்னிலையிலேயே கட்டப்பட்டுள்ளது என்கின்றனர். சாலியர்கள் நடத்தும் பள்ளிகளின் காம்பவுண்ட் சுவர் அல்ல என உறுதியாகச் சொல்லும் தலித்துகள், இதுநாள் வரை பல ஆண்டுகளாக தாங்கள் யாருக்கும் எந்த இடையூறுமின்றி செல்வதாகச் சொல்கின்றனர். சாதி மோதலின்போது தலித் ஆண்கள் இவ்வழியாக தப்பிச் செல்வதைத் தடுக்கவே இத்தீண்டாமைச் சுவர் திடீரென்று கட்டப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். வ. புதுப்பட்டியில் உள்ள தலித் மக்களின் நிலை என்பது,சாதி இந்துக்கள் மீதான நிரந்தர அச்சத்தில் பாகுபாட்டையும் அவமதிப்புகளையும் எதிர்கொள்வதாகவே இருக்கிறது. அ. முனிராஜ் என்ற மனித உரிமை ஆர்வலர் கூறுகிறார் : “அடுத்தடுத்து வந்த மாநில அரசுகளால் எவ்வித வளர்ச்சித் திட்டங்களும் இக்கிராமத்தில் உள்ள 300 தலித் குடும்பங்களை தீண்டவே இல்லை. இத்தகைய திட்டங்களால் பயனடைந்தவர்கள் அனைவரும் சாதி இந்துக்களே. இதற்கு ஆதாரமாக அவர் சாலைகள், வீடுகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் செல்லும் வசதிகள் அவர்கள் பகுதியில் இருப்பதையும், தலித் பகுதிகளில் இல்லாததையும் சுட்டிக்காட்டுகிறார்.

“எங்கள் சமூகம் கல்வி கற்று முன்னேறுவதை சாதி இந்துக்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. எங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு இதுவும் ஒரு காரணம்'' என்கிறார், இவ்வூரில் பி.எட்., படித்துள்ள இளைஞரான அ. ஜெயக்குமார் (28). “தற்பொழுது கட்டப்பட்டுள்ள இத்தீண்டாமைச் சுவர் விரைவில் இடித்து தள்ளப்படாவிடில், இது உத்தப்புரம் போன்றதொரு சூழலை உருவாக்கி, அடுத்தடுத்து சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுக்கும்'' என்கின்றனர், முதல்வர் பிரிவுக்கு மனு அனுப்பியுள்ள இங்குள்ள தலித் மக்கள் ("இந்தியன் எக்ஸ்பிரஸ்', 11.6.2011).  

பள்ளித் தீண்டாமை

எதிர்காலத்தில் சாதி மோதல்களைத் தவிர்ப்பதற்காக, 10 தலித் மாணவர்கள் தங்களின் மாற்றுச் சான்றிதழ் (டி.சி.)களை மதுரை திருமங்கலத்திற்கு அருகில் உள்ள வில்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து வாங்கிக் கொண்டு வேறு பள்ளியில் சேர்ந்துள்ளனர். வில்லூர் கிராமத்தில் வாழும் 10 தலித் குடும்பங்கள் தற்போதைய பதற்றமான (சாதி மோதல் வந்தவிடுமோ) நிலையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, இந்நிலையை மேற்கொண்டிருப்பதாக உயர் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நான்கு மாணவர்கள் – கார்த்திகேயன், (த/பெ. ராமகிருஷ்ணன்), முத்துக்கிருஷ்ணன் (த/பெ. முனியாண்டி), அஜித்குமார் (த/பெ. காளிமுத்து), திலிப்குமார் (த/பெ. பாண்டி) ஆகியோர் வில்லூர் பள்ளியில் 6 ஆவது தேர்ச்சி பெற்றனர். காளியப்பன் (த/பெ. முத்துக்கிருஷ்ணன்), 10ஆவது தேர்ச்சி பெற்றுள்ளõர். மேற்கூறிய இவர்கள் அனைவரும் 22.6.2011 அன்று இப்பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ்களை வாங்கிக் கொண்டனர். வில்லூர் கிராமத்தில் 100 தலித் குடும்பங்களும், அகமுடையார் சாதி உள்ளிட்ட 600 சாதி இந்து குடும்பங்களும் உள்ளனர். நிலத்தில் வேலை செய்வதற்கு, தலித்துகள் சாதி இந்துக்களை சார்ந்துள்ளனர். தற்பொழுது ஏற்பட்ட சாதி மோதல்களில் சிக்கிக்கொள்ளாமல் இரு“பபதற்காக, இம்மாணவர்களை அருகில் உள்ள கள்ளிக்குடி பள்ளியில் சேர்க்க குடும்பத்தினர் முடிவு எடுத்துவிட்டனர். ஏப்ரல் 30, 2011 அன்று ஜி. தங்கபாண்டியன் (24) என்ற தலித் இளைஞர், சாதி இந்துக்கள் வசிக்கும் காளியம்மன் கோயில் வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்றதற்காக கடுமையாகத் தாக்கப்பட்டார். இதையடுத்து சில சாதி இந்துக்களை காவல் துறையினர் கைது செய்தனர். அதனையொட்டி இங்கு பதற்றம் நிலவுகிறது ("இந்தியன் எக்ஸ்பிரஸ்', 23.6.2011). 

காவல்துறை தீண்டாமை

dalit_youth_223திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நரசிங்கநல்லூர் கிராமத்தில் உள்ள பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 300 பேர், தங்கள் சாதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் காவல் துறையினரால் துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர். "இந்திய ஜனநாயக இளைஞர் முன்னணி' யின் மாவட்டச் செயலாளர் சே. சிறீராம் தலைமையில் சென்ற தலித் மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜனிடம் இப்பிரச்சனையில் குற்றமிழைத்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்அளித்துள்னர். சூதமல்லி காவல் நிலையத்தைச் சேர்ந்த ஒரு காவலர் – எஸ். முத்து, அ. மணிகண்டன், பி. இசக்கிமுத்து மற்றும் பி. விஜயகுமார் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, விசாரணை என்ற பெயரில் அவர்களை கடுமையாகத் துன்புறுத்தியுள்ளார். இவர்களை விசாரணைக்கென காவல் நிலையத்திற்கோ, நீதிமன்றத்திற்கோ அழைத்துச் செல்லாமல், வேறொரு இடத்தில் வைத்து துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

இக்கடும் துன்புறுத்தலுக்குப் பிறகு இவ்விளைஞர்களால் நடக்கவே முடியவில்லை. அண்மையில் (ஏப்ரல் மாதம்) செல்லம்மாள் என்ற தலித் பெண், சாதி இந்துக்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதற்காக தலித் இளைஞர்கள் எதிர்த் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்பதால்தான் இவ்விளைஞர்களை காவல் துறையினர் அழைத்துச் சென்று துன்புறுத்தியதாக இங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இவ்விளைஞர்கள் அனைவரும் ஒன்றுமறியாதவர்கள் என்பதால், இது காவலர்களின் வன்கொடுமையே என்கின்றனர் இம்மக்கள். இது குறித்து சூதமல்லி காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டரிடம் கேட்டபோது, “பழிவாங்குவதற்காக சில தலித் இளைஞர்கள் திட்டமிடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இப்பகுதியில் சாதி ரீதியாக பதற்றம் நிலவுவதால், நாங்கள் இவர்களை விசாரித்து எச்சரித்து அனுப்புவதற்காகத்தான் கூட்டிச் சென்றோம்'' என்றார் ("இந்தியன் எக்ஸ்பிரஸ்', 23.6.2011). 

கொத்தடிமைத் தீண்டாமை

கும்பகோணத்தில் உள்ள கே. தட்டுமால் கிராமத்தில், ஒரு தலித் குடும்பத்தை கொடுமைப்படுத்தி, சாதி இந்துக்கள் தெருவிலேயே எல்லார் முன்னிலையிலும் அடித்துள்ளனர். கே. ராஜமாணிக்கமும் (39) அவருடைய மனைவி ராதாவும் தலைபரமசிவம் என்பவரின் செங்கற்சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் தருவதாக தலைபரமசிவம் கூறியிருக்கிறார். ஆனால், ஓராண்டு கழித்தும் அவர்களைவிட மறுத்திருக்கிறார். “நாங்கள் வேறொரு சூளைக்கு போகலாம் என்றால், தலைபரமசிவம் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டுத்தான் போக வேண்டும்'' என்கிறார் ராஜமாணிக்கத்தின் அக்கா விஜயா (44). “நாங்கள் அவரிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தோம். ஆனால் அதைத் திரும்ப கொடுத்துவிட்டோம். இருப்பினும் 5 நாட்கள் கழித்து தலைபரமசிவமும் அவருடைய ஆட்கள் முருகன் மற்றும் லோகநாதன் ஆகியோர் எங்களை அடித்தார்கள். இதனால் என் தம்பிக்கு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டுள் ளது. என்னுடைய கையை உடைத்து விட்டார்கள்'' என்கிறார் விஜயா. அருகில் உள்ள சாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, கவால் துறையினர் விஜயாவின் வாக்குமூலத்தைப் பெற்று, அவருக்கு படித்துக்கூட காட்டாமல் கையெழுத்து வாங்கியுள்ளனர். "எவிடன்ஸ்' அமைப்பு இது குறித்து விசாரித்தபோது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழோ, கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தின் கீழோ வழக்கு பதிவு செய்யவில்லை என்று தெரிய வந்தது ("இந்தியன் எக்ஸ்பிரஸ்', 14.6.2011).

குழாய் தீண்டாமை

கோவை மாவட்டம் அன்னூர் பகுதி முழுதும் பல்வேறு வடிவங்களில் சாதி வெறியின் கோரமுகமான தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. குறுக்கிளையாம்பாளையம் எனும் கிராமத்தில் வசந்தகுமார் என்ற அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுவன், பொதுக் குழாயில் தண்ணீர் எடுத்தபோது – ஆதிக்க சாதியைச் சார்ந்த பெண்களும், ஆண்களும் சிறுவனைத் தாக்கினர். இதைக் கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் சாலை மறியல், போராட்டம் நடத்தி, அடுத்த நாள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனுவும் தரப்பட்டது. தீண்டாமைக்கு எதிராக 1000 குடங்களுடன் பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போராட்டத்தை சூன் 27 அன்று பெரியார் தி.க. நடத்தியது. இப்போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் திரண்டனர். அன்னூரில் ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் தண்ணீர் பிடிக்க மறுக்கப்பட்ட அதே பொதுக் குழாயில் தாக்கப்பட்ட மாணவன் வசந்தகுமார், தனது தாயாருடனும் பிற தலித்துகளுடனும் சேர்ந்து தண்ணீர் பிடித்தõர்.  

விபூதி தீண்டாமை

சூன் 28 அன்று, மேட்டுப்பாளையத்தில் கூட்டுறவு காலனியில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் பிளஸ் 2 படித்துள்ள வினித் (17), அவரது தங்கை சுருதி (14), உறவினர் பெண் ஜனனி (6) ஆகியோர் சாமி கும்பிடச் சென்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற வினித், தனது தங்கை சுருதியின் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளில், தங்கைக்காக சாமி கும்பிட வந்திருந்தார். அந்தக் கோயில், மேல் தட்டுப் பகுதி மக்கள் வாழும் இடத்தில் உள்ளது. கோயிலில் அர்ச்சகர் இல்லாததால், கைக்கு அருகே இருந்த விபூதி தட்டிலிருந்து விபூதியை எடுத்து வைத்துக் கொண்டு, தனது தங்கையின் நெற்றியில் பூசியுள்ளார். அப்போது அங்கு வந்த பார்ப்பன அர்ச்சகர் ஜம்புநாதன் (49) வினித்தைப் பார்த்து, "நீ யாரடா? எந்தப் பகுதி?' என்று கேட்டுள்ளார். வினித் "நடுவூர் பகுதி' என்று கூறியவுடன், "சக்கிலியப் பயலா நீ; கோயிலுக்குள் வரவே உனக்கு உரிமை கிடையாது; விபூதி தட்டிலேயே கை வைக்கிறாயா?' என்று கூறி அடித்தார் ("பெரியார் முழக்கம்', 2.6.2011).

பேருந்து தீண்டாமை

ஒரு வயதான தலித்தை பாதுகாத்ததற்காக வெற்றிச் செல்வி என்ற சாதி இந்து பெண்மணியை, இரண்டு சாதி இந்து ஆண்கள் கடுமையாகத் தாக்கினர். நாகப்பட்டிணத்தில் உள்ள உச்சக்கட்டளை கிராமத்தில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில், ஒரு பேருந்தில் சாதி இந்துக்களுக்கு முன்னால் ஒரு வயதானவர் பேருந்தில் ஏற முயன்றார். அவரை சாதி இந்துக்கள் வெளியில் இழுத்து கடுமையாகத் தாக்கினர். இதைக் கண்டித்து, முதியவரைக் காப்பாற்றிய அ.தி.மு.க. மாவட்ட இணைச் செயலாளர் வெற்றிச் செல்வி கடுமையாகத் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் ("தி இந்து', 5.7.2011).

Pin It