மாபெரும் பிரிட்டிஷ் நீதிமான் ஆக்டன் பிரபு சரியாகச் சொல்லியிருப்பதாவது: “அதிகாரம் ஊழலுக்கு இடமளிக்கிறது, தங்குதடையற்ற அதிகாரம் தங்குதடையற்ற ஊழலுக்கு இடமளிக்கிறது.” பிரதமர் என்பவர் கணிசமான அளவுக்கு அரசு அதிகாரத்தின் பாதுகாவலராவார்.

எனவே அதிகாரம் என்பது பொதுமக்களின் புலனாய்வுக்கும் திறனாய்வுக்கும் உரியதென்றால் அவர் லோக்பால் சட்டவரைவின் வரம்புகைக்குள் வரவேண்டும், அவருக்கு அதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்ற கருத்தை நான் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளேன். அதேபோல நமது நீதித்துறையும் நிர்வாகத்துறையின் கண்காணிப்பு அமைப்பாகும். நிர்வாகத்தில் உள்ளோர் தவறாக நடந்துகொள்ளக் கூடாது என்பதை நீதிபதிகள் உத்தரவாதப்படுத்தவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நீதித்துறை சீருடையணிந்த சகோதரர்களுக்கு எதிராக குறைகள் இருக்குமெனில் அது ஒவ்வொரு குடிமகனும் அணுகக் கூடிய வகையில் இருக்கவேண்டும். பாராளுமன்றம் தவறாக நடக்கவோ அரசியல் சாசனத்தை மீறவோ செய்யுமாயின் மக்கள் நிவாரணம் கோரி நீதிபதிகளிடம் முறையிடுகிறார்கள்.

இந்தக் கண்ணோட்டத்தில், நீதிபதிகள் மாண்புமிக்கவர்களாகவும் நிர்வாகத்தின் மீதும் பாராளுமன்ற செயல்முறைகள் மீதும் கட்டுப்பாடு கொண்டவர்களாகவும் இருக்கவேண்டும். இந்த இரண்டு அமைப்புக்களுமே லோக்பால் அமைப்பு முன்மொழியும் வரம்புகைக்குள் இருப்பவையே. இந்த அதிகார அமைப்புக்களுக்கு எந்த விதிவிலக்கும் இல்லை.

சில உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒரு மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளது குறித்து நான் வருந்துகிறேன். நான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நீதித்துறையே ஊழல்மயமாகியுள்ளது என்பது இந்தியாவின் முன் உள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். மேலும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இங்கு ஊழலுக்கு எதிராக ஒரு போர்க்குணமிக்க, செயலூக்கமுள்ள, நாடுதழுவிய இயக்கம் கட்டாயம் தேவை. மக்களுடைய நம்பிக்கை பாதுகாக்கப்பட வேண்டுமானால், இதற்காக மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பு ஒன்று நிறுவப்படவேண்டும்.

நீதித்துறையும் பிரதமரும் லோக்பாலின் கீழ் வரவேண்டும். லோக்பால் அமைப்பே கூட மிகஉயர்ந்த அமைப்பாக இருக்கவேண்டும், அது பல உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கவேண்டும்.

நன்றி: தி இந்து நாளிதழ், 01.07.2011.

Pin It