எதிர்வினை

ஜூன் 2011 செம்மலர் இதழில் தோழர் தே.இலட்சுமணன் எழுதிய ‘அன்று காந்திக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அதே வழக்கு’ எனும் கட்டுரை படித்தேன்.

பல முக்கியத் தகவல்கள் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தன - நமது நாடு ஆங்கிலேயர் களிடம் அடிமைப்பட்டு கிடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும், ஆட்சிக்கு எதிராகப் போராடிய விடுதலைப் போராட்ட வீரர் களை தண்டிக்கவும் பல கொடிய சட்டங்களை உருவாக்கி அமல்படுத்தினர். அதில் ஒன்றுதான் குற்றச் சட்டம் 124-ஏ. திலகர், காந்தி, வ.உ.சிதம்பரனார் போன்ற தலைவர் களுக்கு எதிராக ஆங்கிலேய அரசு இந்த கறுப்புச் சட்டத்தை பயன்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தது. சௌரி சௌரா சம்பவத்தை காரணம் காட்டி காந்தி மீது இந்த சட்டத்தை ஏவிவிட்ட வரலாற்று நிகழ்வுகளை திரு.தே.இலட்சுமணன் தன் கட்டுரையில் பதிவு செய்திருந்தார்.

விடுதலைக்கு பின்னரும் நம்நாட்டின் ஆட்சியாளர்கள் இந்த சட்டத்தை தூக்கி எறியா மல் மக்கள் பிரச்சனைகளுக்காக போராடும் கம்யூனிஸ்ட்டுகள் மீதும், ஜனநாயக இயக்கங்கள் மீதும் ஏவிவிட்டனர். ஆளும் வர்க்க நலனை பாதுகாக்க காங்கிரஸ், பிஜேபி அரசுகள் இந்த சட்டத்தை பாதுகாப்பதையும் பயன்படுத்துவதையும், இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய அவசியத்தையும் கட்டுரை தெளிவு படுத்துகிறது. இந்த சட்டம் இன்னும் நீடிப்பது நாட்டிற்கு அவமானம்.

சமீபத்திய உதாரணமாக டாக்டர் பினாயக் சென் மீது இந்த சட்டப்பிரிவின் கீழ் சத்தீஸ்கர் அரசின் காவல்துறை பொய் வழக்கு புனைந்ததையும், அதை அடிப்படையாக வைத்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்ததையும், உச்சநீதிமன்றம் பிணை வழங்க மறுத்ததையும் தெளிவுபடக் கூறியுள்ளார்.

ஆனால் கட்டுரையின் போக்கில் பினாயக் சென் காந்திக்கு நிகராக சித்தரிக்கப் பட்டுவிட்டார். காந்தியின் மறுபக்கம் பல்வேறு புத்தகங்கள், கட்டுரைகள் மூலம் தெளிவு படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் பினாயக் சென்னின் மறுபக்கம்?

டாக்டர் பினாயக் சென் சிறந்த மருத்துவர். ஏழை, எளிய மக்களுக்காக இலவச மருத்து வம் செய்யும் மனிதாபிமானி. தமிழ்நாட்டின் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் சிறப்பாக பயின்று, உயர் மருத்துவ கல்வியிலும் தேர்ச்சி பெற்றவர். உலக அளவில் சிறப்புமிக்க மருத்துவர்களில் ஒருவராக திகழ்ந்து, தன்னை வளப்படுத்திக் கொள்வதற்கு மாறாக, மக்கள் சேவைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். மேலும் மனித உரிமை ஆர்வலராகவும் செயல்படுபவர் - சத்தீஸ்கர் மாநில குடியுரிமைக்கான மக்கள் சங்கம் ( பியுசிஎல்) அமைப்பின் மாநிலச் செயலாளர், அகில இந்திய துணைச் செயலா ளர், சுரங்கத் தொழிலாளர்கள் நலன் காக்கப் போராடுபவர்.

எனவே சத்தீஸ்கர் மாநில சுரங்க மாஃபியா கும்பலின் எதிர்ப்பையும், காவல்துறை யின் தாக்குதலையும் சந்தித்தவர். 2007 மே 14 அன்று பினாயக் சென் காவல்துறையால் கைது செய்யப் பட்டார். சிறையில் இருந்த மாவோயிஸ்ட் இயக்க தலைமைக் குழு உறுப்பினர் நாராயண் சன்யாலை சென் பலமுறை சந்தித்துள்ளார். அவரிடமிருந்து கடிதங்களைப் பெற்று, இதர மாவோயிஸ்ட் தலைவர்களிடம் கொடுக்கும் கூரியர் பணியைச் செய்தார். மாவோயிஸ்ட் இயக்கப் புத்தகங்கள் வைத்திருந்தார் என குற்றச்சாட்டு. குற்றச்சட்டம் 124-ஹ உள்ளிட்ட கடும் பிரிவுகளின் கீழ் வழக்கு. காவல்துறை எத்தகைய பொய் வழக்குகளைப் போடும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

டாக்டர் சென், தனக்கு பிணை (யெடை) வழங்க கேட்டு ராய்ப்பூர் செஷன்ஸ் நீதிமன்றம், சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வரை சென்றார். ‘தேச துரோக’ வழக்கு என்பதால் எங்கும் பிணை கிடைக்கவில்லை. ஊடகங்களும் இதுவரை கண்டுகொள்ளவில்லை. இந்த பிரச்சனை வெளிச்சத்திற்கு வரவில்லை.

இந்தக் கட்டத்தில்தான் உலக சுகாதாரக் கவுன்சில் 2008ம் ஆண்டிற்கான ‘ஜோன தன் மான்’ விருதை சென்னுக்கு வழங்கியது. வாஷிங்டன் நகரில் 2008 மே 29 அன்று விருது வழங்கப்படும் என அறிவித்தது. மீண்டும் உச்சநீதிமன்றத்தில் சென் பிணை மனுத்தாக்கல் செய்தார். உலக அளவில் பல அமைப்புகளும் அறிஞர்களும் சென்னை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர். பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்தது. உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது.

ஆனாலும் சட்டத்தின் கோரப்பசி அடங்க வில்லை. 2010 டிசம்பர் 24 ல் ராய்ப்பூர் நீதிமன்றம் சென் உள்ளிட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் செய்த மேல் முறை யீடு ஏப்ரல் 2011ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளித்தது. இதுபற்றி இந்து நாளிதழ் எழுதிய தலையங்கத்தையும் குறிப்பிட்டுத் தான் தோழர் இலட்சுமணன் தன் கட்டுரையை எழுதியுள்ளார்.

இந்தப் பின்னணியில் சில கேள்விகள் தவிர்க்க இயலாதவை. கட்டுரை சுட்டிக்காட்டுவதைப் போல் காவல்துறை புனைந்த பொய் வழக்கிற்கு போதிய ஆதாரம் இல்லை. சிறை அதிகாரிகள் முன்னிலையில் மாவோயிஸ்ட் தலைவரை சந்தித்த சென், கடிதம் எதையும் பெற்று கூரியர் பணி செய்திருக்க முடியாது. மாவோயிஸ்ட் புத்தகங்கள் வைத்திருந்தால்மட்டும் மாவோயிஸ்ட் என்று கூறிவிட முடியாது.

ஆனால் சென் மாநிலச் செயலாளராக உள்ள பி.யு.சி.எல் அமைப்பின் மாநில மாநாட்டிற்கு சிறையில் இருக்கும் மாவோயிஸ்ட் தலைவர் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார். டாக்டர் சென் மாவோயிஸ்ட் தலைவரை பலமுறை சிறையில் சென்று சந்தித்துள்ளார். மருத்துவ ஆலோசனைக் காக என்பது சென் தரப்பு வாதம். எனவே மாவோ யிஸ்ட்டுகளின்பால் அனுதாபமாகவும், ஆதரவாக வும், மென்மையாகவும் சென் நடந்து கொண்டார் என்பது உண்மை. சென்னுக்கும் மாவோயிஸ்ட் இயக்கத்துக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை எனக்கூற முடியுமா?

காவல்துறையின் பொய் வழக்கையும், நீதி மன்றத்தின் அதீத தண்டனையையும் கண்டிக்கும் அதே வேளையில், சென்னின் தவறான போக்கு களையும் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை உள்ளது. உடல் நலக் குறைவு ஏற்படும் போது மாவோயிஸ்ட் தலைவருக்கு சிகிச்சை அளிக்கலாம். ஆனால் அவரும் அவரது இயக்கமும் ரயில்களைக் கவிழ்ப்பதையும், பஸ்களை எரிப்பதையும், அப்பாவி மக்களைக் கொல்வதையும் கண்டிக்க வேண்டாமா? அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய யுத்தம் என்ற பெயரால் ராணுவ வீரர்களையும், கீழ் மட்ட காவல்துறையினரையும், அவர்களது குடும்பத்தினரையும் கொன்று குவிப்பது மனிதாபிமான செயலா? மேற்கு வங்கத்தில் திரிணாமுல் குண்டர்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களையும், ஆதரவாளர்களையும் கொலை செய்வதும், அலுவலகங்களையும், வீடுகளையும் அடித்து நொறுக்கி தீ வைப்பதும் எந்த வகை மனித உரிமை? இதற்கெல்லாம் டாக்டர் சென் என்ன செய்தார்? இவை பற்றி அவரது அணுகு முறை என்ன?

இந்த மறுபக்கத்தையும் கட்டுரையில் குறிப்பிட் டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்; முழுமை அடைந்திருக்கும்.

- எஸ்.சந்திரசேகரன், திருச்சி-3 

Pin It