சென்ற மாதம் “யங் இந்தியா” பத்திரிகையில் இந்தியா ஒட்டுக்குமாக கதர்உற்பத்தியும் செலவும் குறிக்கப்பட்டிருந்தது. (அதில் உற்பத்தியை விட செலவு அதிகமாகக் காட்டப்பட்டிருந்த போதிலும் அதற்குக்காரணம் சில புள்ளிகளில் ஏதாவது கணக்குத் தவறுதலாக இரட்டிக்கப்பட்டிருக்கலாம் என்று குறிக்கப்பட்டிருக்கிறது.)

அக்கணக்கில் இந்தியாவில் மொத்தம் சென்ற வருடத்திற்கு கதர்உற்பத்தி ரூ. 19 லக்ஷம். இப்பத்தொன்பது லக்ஷத்தில் சில பாகம் சிலோன், மலேயா, தென் ஆப்பிரிக்கா முதலிய இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்குப் போன வகையில் லக்ஷ ரூபாய் கழித்தாலும் 18 லக்ஷத்திற்குக் குறையாமல் இந்தியாவில் செலவாகி இருப்பதாகத் தெரிகிறது. இந்தியாவின் ஜனத்தொகை 31 1/2 கோடி. இவர்களுக்கு வருஷம் ஒன்றுக்கு தேவையுள்ள துணி ஏறக்குறைய 130 கோடி ரூபாய் பெறுமானமுள்ளது. இவற்றில் 65 கோடி ரூபாய் பெறுமானமுள்ள துணி அந்நியநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும், 65 கோடி ரூபாய் பெறுமான துணி இந்தியாவிலேயே யந்திரநூலைக் கொண்டு யந்திரங்கள் மூலமாகவும் கைத்தறிகள் மூலமாகவும் உற்பத்தி செய்யப்படுவதிலும் ஈடாகி வருகிறது.

ஆகக்கூடி 130 கோடிரூபாய் துணிகளையும்30 கோடிதுணி உடுக்கக்கூடிய ஜனங்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தோமானால், ஆள் ஒன்றுக்கு சற்றேறக்குறைய நாலரை ரூபாய் துணி வீதம் செலவாவதாக கணக்கு ஏற்படுகிறது. இந்தக் கணக்குப்படி³ கதர் உற்பத்தி மொத்தத்துகையாகிய 18 லக்ஷத்தை நாலரை ரூபாய் வீதமே பங்கிட்டு கொடுப்போமேயானால் இந்தியா மொத்தத்திற்கும் 4 லக்ஷம் ஜனங்கள்தான் கதர் கட்டுகிறவர்களாவார்கள். 30 கோடிக்கு4 லக்ஷம் பங்கிட்டால், இந்தியாவில் உள்ள மனிதர் 1000-க்கு ஒன்றேகால் மனிதர் வீதம்தான் கதர் கட்டுவதாகக் கணக்கு ஆகிறது. இதில் உற்பத்தியின் அளவும் 130 கோடி ரூபாய்க்கு19 லக்ஷம் பிரித்துப் பார்த்தோமேயானால் (1000-க்கு 1 1/2 ) ஆயிர ரூபாய்க்கு ஒண்ணரை ரூபாய் வீதம்தான் கதர் உற்பத்தி ஆகியிருக்கிறது.

மகாத்மா சுமார் 5 வருட காலம் இடைவிடாமல் கதரைப்பற்றி பேசியும் காங்கிரசின் பேரால் வசூல் செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாயில் ஏறக்குறைய முக்கால் கோடி ரூபாய் வரையில் கதருக்காக செலவு செய்தும், இந்தியா முழுமையிலும் உள்ள காங்கிரஸ் ஸ்தாபனங்களின் முக்கியமான நேரமெல்லாம் கதருக்காகச் செலவழித்தும் சுமார்25000 பேர் வரையில் ஜெயிலுக்குப் போய் வந்தவர்களும், கதர் கதர் என்று கதர் பிரசாரம் செய்தும், இதுவரையில் ஆயிரம் மனிதருக்கு ஒண்ணேகால் மனிதர் வீதம்தான் கதர் உடுத்தியிருக்கிறார்கள் என்றும் இந்தியாவுக்கு வேண்டிய துணிகளில் (ஆயிரம்) 1000 ரூபாய்க்கு ஒண்ணரை ரூபாய் வீதம்தான் கதர் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறதென்றும் கணக்கு ஏற்படுமானால், மகாத்மாவின் எண்ணப்படி கதர் தத்துவம் நிறைவேறுமா என்பதில் கொஞ்சமும் நம்பிக்கையேற்பட இடமில்லாமலிருப்பதோடு,இந்தியாவைப் பிடித்த தரித்திரமும் ஏழ்மை நிலையும், சீக்கிரத்தில் மாறும் என்று நினைப்பதற்கும் இடமில்லாமல் இருக்கிறது.

இது மாத்திரமல்லாமல் ராஜீய அபிப்ராயங்கள் மாறுபட்டதினாலும், காங்கிரசுக்கு கதரிடத்தில் காரியத்தில் நடத்த நம்பிக்கையில்லாமல் போனதிலிருந்தும், கதரின் வளர்ச்சி குன்ற ஆரம்பித்திருப்பதாகவே கருத இடமேற்பட்டுவிட்டது.இதுவரை கதர் கட்டிவந்த ஜனங்களில் பெரும்பான்மையோர் ராஜீய பிரதானத்தைக் கருதியே கட்டி வந்தார்கள். அதுவும் ஏறக்குறைய செல்வந்தர்களும், நடுத்தர வகுப்பாரும் கட்ட முடிந்ததே அல்லாமல் அந்நிய நாட்டுத்துணிக்கும் கதர்துணிக்கும் உள்ள விலை வித்தியாசத்தால் ஏழை மக்கள் கட்ட முடியாமலே இருந்துவந்திருக்கிறது. இந்த நிலையில் கதர் திட்டத்தை காங்கிரசிலிருந்து பிரித்து தனி ஸ்தாபனமாக்கி நடத்திவருவதில் ஏறக்குறைய காங்கிரசின் போக்கில் நம்பிக்கையற்றவர்களும்,மாறுபட்டவர்களும் (அதாவது, ஒத்துழையாமை தத்துவத்திலேயே நம்பிக்கை உள்ளவர்களே) கதர் இயக்கத்தில் பெரிதும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

காங்கிரசின் பேரால் காங்கிரஸ் திட்டத்தை நிறைவேற்றுவதென்பது, தேர்தல்களில் போட்டி போட்டு சட்டசபை ஸ்தல ஸ்தாபனம்,உத்தியோகம் முதலியதுகளை கைப்பற்றுவதே காங்கிரஸ் வேலையாக காங்கிரஸ்காரர்கள் என்போர் செய்வதாலும், கதரின் மேன்மையையும், அவசியத்தையும் தகுந்தபடி பிரசாரம் செய்ய போதிய வசதி இல்லாததோடு, ஏதாவது கொஞ்சம் நஞ்சம் பிரசாரம் செய்வதாயிருந்தால் அது காங்கிரஸ் தேர்தல் பிரசாரங்களைத் தாக்குவதாய் கருதப்படுகிறபடியாலும், பிரசாரத்திற்கு இல்லாமலே போய் விடுகிறது.அல்லாமலும் காங்கிரசில் கதரை கண்ணியமான ஸ்தானத்தில் வைக்காமல், கலகத்துக்கும், ஒற்றுமைக் குறைவிற்கும் ஆஸ்பதமான தேர்தல் பிரசார சமயத்திற்கு மாத்திரமென்ற கண்ணியமற்ற ஸ்தானத்தில் அதை வைத்துவிட்டதால் கதரினிடத்தில் பெரிய அருவருப்பை வளரச்செய்ய இடமுண்டாகி வருகிறது.

அதாவது, தேர்தல்களுக்கு அபேக்ஷகராய் நிற்பவர் ஓட்டு பெறுவதற்கு ஓட்டர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது எப்படியோ அது போல் ஓட்டர்களிடம் தாங்கள் கதர் கட்டுவதைக் காட்டி ஏமாற்றி வோட்டு வாங்குவதான காரியத்திற்கு உபயோகப்படுவதாயிருக்கிறது. இம்மாதிரி நிலை கதருக்கு ஏற்பட்ட காரணத்தினால் கதர் கட்டுபவர்களை பொது ஜனங்கள் சந்தேகிக்கவும் சுயகாரியத்திற்காக வேஷத்தின் பொருட்டு கதர் உபயோகிப்பதாகவும் கருதப்படுகிறபடியால் அதன் வளர்ச்சி குறைகிறது. இப்போக்குக்கு ஏதாவது தக்க மாறுதல் ஏற்படாத பக்ஷம், கதருக்காகச் செய்யும் பிரயத்தனங்கள் எல்லாம் வீணாய்ப் போய்விடுமோ என்கிற பயம் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஆதலால் கதர் ஸ்தாபனங்கள் இதில் தகுந்தபடி கவலையெடுத்துக் கொள்ள வேண்டும். அப்படிக்கில்லாமல், கைவசம் இருக்கும் பணம் செலவாகும்வரை காரியம் நடத்தி பெருமை அடைந்து கொண்டு வந்து பணம் தீர்ந்தவுடன், கடையைக் கட்டிவிட்டால் கதரின் நிலை, கண்டிப்பாய் ஒரு காலத்தில் கதர் உற்பத்தி பண்ணினோம்; அது அப்படி இருந்தது, இப்படி இருந்தது என்று எதிர்காலத்தில் சரித்திரம் சொல்லக்கூடிய மாதிரியில்தான் வந்து முடியும் என்பதையும் எச்சரிக்கை செய்கிறோம்.

ஒத்துழையாமையின் கதையும் கைப்பணம் தீர்ந்தவுடன் ஒரு காலத்தில் அப்படியிருந்தது, இப்படியிருந்தது என்று சொல்லக்கூடியதாய் போய்விட்டதை நேரில் பார்த்தாய்விட்டது. இந்தக்கதி கதருக்கும் ஏன் வராது என்பதற்கு ஒன்றும் காவல் இல்லை. ஆதலால், ஒவ்வொரு ஜில்லாவிலும் தாலூக்காவிலும் கதரைப்பற்றி கொஞ்சமும் சந்தேகமும் அபிப்ராயபேதமும் இல்லாதவர்களைக் கொண்டு கதர்ச்சங்கம் என்பதாக சிறுசிறு சங்கங்களை ஸ்தாபிக்க வேண்டும். தக்க பிரசாரர்களையும் நியமித்து சரியானபடி கதர் பிரசாரமும் செய்யவேண்டும் என்பதை நாம் மிகவும் வற்புறுத்துகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் -31.01.1926)

Pin It