நாளது 1925-ம்  அக்டோபர்  30-ம் ² சுதேசமித்திரன் 4-வது பக்கம் 3- வது பத்தியில் ‘ தர்ம சொத்திலிருந்து கக்ஷிப் பிரசாரமா’ “நாம் எதிர்பார்த்தபடி ஜரூராக காரியங்கள் நடக்கின்றன ” என்ற வாசகத்தின் தொடர்ச்சியாக “இந்துமத தர்ம சொத்து பரிபாலன சட்டம் ஜஸ்டிஸ் கட்சி மந்திரி பிடிவாதமாக இயற்றியது” பரிசுத்தமான நோக்கமுடன் செய்யப் பட்டதாக சொல்லப்படுவதானது எலக்ஷனுக்கு ஓர் முக்கியக் கருவியாக செய்யப்பட்டிருக்கிறதென்று நிரம்பிய அனுபோகம் பெற்ற நிரூபர் சொல்லுகின்றார்.

அதன் உண்மையாதெனில் ³ சட்டப்படி நியமிக்கப்பட்ட கமிஷனர்களில் ஒருவராகிய ஸ்ரீமான் பி.வி.நடராஜ முதலியார் அவர்கள் சில தினங்களுக்கு முன் கோயமுத்தூர் டவுன் ஹாலில் ஸ்ரீமான் ஆ.சம்பந்த முதலியார் க்ஷ.ஹ.,க்ஷ.டு. அவர்கள் தலைமையின் கீழ் சில பொது ஸ்தாபனங்களிலிருந்து கமிஷனர் அவர்களுக்கு உபசாரப் பத்திரம் படித்துக் கொடுக்கும் காலத்தில் கமிஷனர் ஸ்ரீமான் முதலியார் அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவின் சாரமாவன :-

“இந்துமத தர்ம பரிபாலன சபைகளிலும், ஆலயங்களிலும் மற்றும் பொது ஸ்தாபனங்களிலும் நடந்து வந்த அக்கிரமங்களையும், நடக்கின்ற அக்கிரமங்களையும் எடுத்துரைத்து இப்பேர்க்கொத்த தீயசெயல்கள் இனி நடவாதிருக்கும் பொருட்டும், நடைபெற வேண்டியவைகள் கிரமப்படி நடத்தி வைக்கும் பொருட்டும் இச்சட்டம் ஆக்கப்பட்டதேயன்றி இதன் சொத்திலிருந்து சர்க்கார் கொள்ளையடித்துக் கொண்டு போகவேண்டுமென்கிற கெட்ட எண்ணத்தினால் செய்யப்பட்டதல்லவென்றும், இதற்காக ஜனங்களும் கூடிய வரை ஒத்துழைக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுதன் சொற்பொழிவை நிறுத்திக் கொண்டார்.

ஆனால் 30 .10. 1925 - ல் சுதேசமித்திரனில் வெளிவந்த வியாசத்தைக் கவனிக்குமிடத்து, ஆதிகாலம் தொட்டு ஏகபோகமாக கேள்வி கேட்பாரின்றி அனுபவித்து வந்ததுமல்லாமல் தெலுங்கு பாஷையில் செப்பும் பழமொழிக்கிணங்க “மீக்குச் சூப்பு நாக்கு மேப்பு” என்று சொல்லுகிறபடியாக நிவேதனத்தை சில ஆலயங்களில் சுவாமிக்குக் காண்பித்தும், காண்பியாமலும் கூட கொள்ளையடித்துத் தின்ற கோவில் பெருச்சாளிகளுக்கும், அவர்களுக்கு ஏவல்காரர்களாக அவர்களின் கீழ் வயிறு வளர்த்து வந்த பணியாளர்களுக்கும், இவர்களுக்கெல்லாம் மேல்பட்ட அந்தஸ்தில் இருந்து கொண்டு அவர்கள் இஷ்டம்போலும் தங்கள் இஷ்டம் போலும் காரியாதிகளை நடத்திக் கொண்டும் திருடிக்கொண்டும் இருந்த சிற்சில பொது ஸ்தாபனங்களின் உத்தியோகஸ்தர்களுக்கும், ³ சட்டமானது அருவருப்பைக் கொடுக்க கூடியதேயாகும்.

இவ்வருத்தம் காரணமாக கக்ஷிகளை ஒன்றோடொன்று இணைத்து ஒருவருக்கொருவர் மனத்தாங்கலையுண்டு பண்ணி பின்னால் மாச்சரியத்தையும் உண்டுபண்ணி வைத்து அவைகளுக் கிடையில் தங்களுடைய “சாண் வயிறு வளர்க்க சலாம் போடும் குலாம்கள்” நேரில் பார்த்தவற்றை எழுதாது ஏதேதோ தாறுமாறாக எழுதத் தலைப்படுகின்றார்கள். இவர்களையும் பத்திரிகை நிரூபர்களாகக் கொண்ட பத்திரிகைகளுக்கு எந்தக் காலத்தில், எந்த நேரத்தில், எந்த வியாசத்தைக் கொண்டேனும் பத்திரிகைக்கு இடையூறு விளைத்து கெடுத்துவிடுவார்களோவென்கிற சந்தேகம் எம் போன்ற பத்திரிகை வாசிக்கும் மித்திரன் நேயர்களுக்கு உண்டாவது சகஜமே.

அல்லாமலும் நமது விரோதிகள் என்னென்னவோ சூழ்ச்சி செய்வதாகவும் அதையும் எதிர்த்துப் போராட எல்லோருடைய ஒத்துழைப்பையும் வேண்டுவதாகவும் மற்றும் பலவாறாகவும் ஸ்ரீமான் நடராஜ முதலியார் அவர்கள் பேசியதாகத் தெரிகிறது என்கிறார். மேல்கண்ட வாசகத்தின்படி பார்க்குமளவில் ³ வியாசத்தை எழுதிய நிரூபர் தான் நேரில் அப்பிரசங்கத்தைக் கேட்காமலும், ஆனால் யாரோ ஒருவர் சொல்லக் கேட்டும் அதைக் கொண்டு தன்னுடைய நீண்ட கால அனுபவத்திலிருந்து தெரிந்து கொண்ட விஷயங்களில் கொஞ்சம் கலந்தும் வியாசம் வரைய ஆரம்பித்துவிட்டார் போலும். அதாவது “புலியைக் கண்டவரைக் கண்டு கலங்கிய கல் நெஞ்சர் போலும்” எனச் செப்பும் பழமொழிக் கொப்பாகத் தோன்றிவிட்டார்.

நிற்க, தேவஸ்தான பணத்தில் ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாய் பிரசாரம் செய்வதும் தேவஸ்தான சட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாவெனத் தெரிய வேண்டுமென்றும் ஓர் அதிகாரி தோரணையில் எழுதியுள்ளவர் ³ தர்மச் சொத்துக்களை “உத்தியோக வேட்டைக்காரர்களைக் ” கொண்ட ஒரு கக்ஷி யார் துஷ்பிரயோகம் செய்வதை நாட்டார் அழுத்தமாக கண்டிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள் என்றும் இன்னும் என்னென்ன விபரீதங்கள் நடக்கப் போகின்றனவோ அறியோம் என்றும் மனமானது நைந்து நைந்து துரும்பு போல் இருந்த திரேகம் தூண்போலாக வீங்கவும் கதறுகின்றார்!

உத்தியோக வேட்டைக்காரர்களைக் கொண்ட கக்ஷியார் என்பதாக அவர் சொல்லும் விஷயத்திலிருந்து கவனித்தால் அவருக்கே ஓர் சாதாரண உத்தியோகம் கிடைக்கப் பெறாதிருந்த நிலைமையினாலோ அல்லது அவருடைய உறவினர்கள், நண்பர்கள் எவர்களுக்கேனும் உத்தியோகங்கள் கிடைக்காதிருந்த வருத்தத்தினாலோ தான் சித்த சுவாதீனமிழந்த நிலைமையில் மனதிலுதித்த நிலைமையில், மனதில் உதித்தவற்றையெல் லாம் கொட்டிக் குறைகூற ஆரம்பித்துவிட்டார். இவ்விதம் அசம்பாவிதமாகவும், அநாகரீகமாகவும் நிரூபத் தொழிலை நடத்திக் கொண்டு வரும் நபர்களை நிரூப நேயர்களாக வைத்துக் கொண்டிருப்பதானது சுதேசமித்திரனுக்கு ஓர் பெருங் குறையேயாம்.

ஆதலால், இனி வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாதிருக்குமென்று எண்ணுகிறேன் என ஸ்ரீமான் ஏ.சண்முகசுந்தரம் பிள்ளை எழுதுகிறார்.

குறிப்பு :

மேற்கண்ட வியாசம் கோயமுத்தூர் ஸ்ரீமான் ஏ.சண்முகசுந்தரம் பிள்ளையவர்களால், சுதேசமித்திரனுக்கு அனுப்பப்பட, அப்பத்திரிகை இதைப் பிரசுரியாது திரும்ப அனுப்பிவிட்டதாம். பத்திரிகையொன்றில் தாறு மாறான விசயம் ஏதேனும் வருமாயின், அதை மறுத்துக்கூறி எழுதப்படும் நிரூபங்களைப் பிரசுரியாது திருப்பி விடுவது பத்திரிகை நடத்தும் கொள்கைக்கே விரோதமாகும்.

நிற்க, நமது நேயர் குறிப்பிடும் சுதேசமித்திரன் நிரூபரைப் போன்ற பலர் அப்பத்திரிகைக்கு நிரூபர்களாயிருக்கின்றனர். இவர்கள் அயோக்கியத் தனமாகவும், சின்ன புத்திக் கொண்டும், உண்மையைத் திரித்தும் ரிப்போர்ட் செய்வதை நாம் பல தடவைகளில் கண்டித்திருக்கிறோம். இங்ஙனம் கண்டிப்பதில் கடின பதங் கொண்டிருக்கின்றதென சிலர் கூறுகின்றனர். இத்தகைய நிரூபர்களுக்கு நாம் உபயோகிக்கும் வார்த்தைகள் தகுதிதானா அல்லது இன்னும் அதிகக் கடின பதம் வேண்டுமாவென்னும் விஷயத்தைப் பொது ஜனங்களே நிர்ணயம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 15.11.1925)