சென்ற வாரம் இத்தலையங்கத்தின் கீழ் “சுதேசமித்திரன்” என்னும் பிராமணப் பத்திரிக்கை, பிராமணரல்லாதாருக்கும், மிக முக்கியமாய்ப் பிராமணரல்லாத தேசத் தொண்டர்களுக்கும், விரோதமாய் வேண்டுமென்றே செய்து வரும் சூழ்ச்சிகளைப் பற்றி எழுதி, மற்றும் மறுமுறையென்று எழுதியிருந்தோம். அவற்றில் முக்கியமாக ஸ்ரீமான்.ஈ.வெ.இராமசாமி நாயக்கரைப்பற்றி தன்னாலும் தான் ஆட்கொண்டவர்களாலும் பொது ஜனங்களுக்கு எவ்வளவு கெட்ட அபிப்பிராயத்தைக் கற்பிக்க வேண்டுமோ, அவ்வளவையும் செய்து பார்ப்பதென்றே முடிவு கட்டிக்கொண்டிருக்கிறது.

ஸ்ரீமான். நாயக்கர் எந்த ஊருக்குப் போயிருந்தாலும், என்ன பேசினாலும் அவற்றைத் திரித்துப் பொதுஜனங்களுக்குத் தப்பபிப்பிராயப்படும்படி கற்பனை செய்து பத்திரிக்கைகளிலெழுதுவதும் அவற்றிற்கேற்றார்போலவே சில ஈனஜாதி நிருபர்களை அங்கங்கே வைத்துக்கொள்ளுவதும், அவர்கள் பேரால் ஸ்ரீமான் நாயக்கர் சுயராஜ்யம் வேண்டாமென்கிறார். ஜஸ்டிஸ் கட்சி யில் சேர்ந்துவிட்டார், அதிகார வர்க்கத்தோடு கலந்துவிட்டார், காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமாயிருக்கிறார் என்று இவ்வாறாக அப்பத்திரிக்கை எழுதி வருகிறது. உதாரணமாக, பொள்ளாச்சி, மதராஸ், அநுப்பபாளையம், தஞ்சை, மாயவரம் இந்த இடங்களில் ஸ்ரீமான் நாயக்கர் பேசிய பேச்சைப் பற்றி சுதேசமித்திரன் பத்திரிக்கை தாறுமாறாகவும் பிரசுரம் செய்து அதையனுசரித்துப் பல குட்டித் தலையங்கங்களும் எழுதி வந்திருக்கிறது. போதாக்குறைக்கு தன் இஷ்டம் போல் பலவற்றை எழுதிக்கொண்டு சில பிராமணரல்லாதாரிடம் கையெழுத்துப்பெற்று, அவர்கள் பேரால் பிரசுரம் செய்து கொண்டும் வருகிறது.

இப்பிராமணப் பத்திரிகைகள், பிராமணரல்லாதாருக்கு விரோதமாய் இங்ஙனம் செய்யும் அயோக்கிய பிரசாரத்தையும், பிராமணர்கள் சிலர் செய்யும் முறையற்ற சூழ்ச்சிப் பிரசாரங்களையும் நாம் கண்டித்து எழுதும்போது கடின பதங்களைப் பிரயோகிப்பதாய் சிலர் கூறுகின்றனர். மனிதர்களுடைய யோக்கியதைக்குத் தகுந்த பதம் உபயோகப் படுத்தவேண்டுமேயென்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். மான வெட்கமுள்ள ஜனங்களுக்கு உபயோகப்படுத்த வேண்டிய பதம் வேறு, அஃதில்லாதவர்களுக்கு உபயோகப்படுத்தவேண்டிய பதம் வேறு. ஒவ்வொரு பதத்தையும் நாம் மனிதர்களுக்குத் தக்கபடிதான் அளந்து உபயோகிக்கிறோம். நாம் உபயோகப்படுத்துகிற பதங்கள் கடினபதங்களென்று சொல்லப்படுவது கூட, சிலருடைய குணத்தைக் கொஞ்சமும் மாற்ற முடியாததாய் இருக்கிறது. இன்னும் இதிலும், கடினமாகப் பதங்களைத் தேடும்படியாகி விட்டதேயென்று நமக்கு வருத்தமாக தானிருக்கிறது.

இந்த நிலையில் பிராமணரல்லாத நம்மவர்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் காட்டிக்கொடுப்பதால், விஷமஞ் செய்கிறவர்களுக்கு மிகுந்த சவுகரியமேற்பட்டுப் போய் விடுகிறது. அவரவர்களைப்பற்றி வரும்போது தான் அவரவர்கள் கவனிக்கின்றார்கள். உதாரணமாக “சுயராஜ்யா” பத்திரிக்கை ஸ்ரீமான். நாயக்கரின் சென்னைப் பிரசங்கத் தைப் பற்றி நாயக்கரின் குட்டிக்கரணமென்றும், பிள்ளையார் வேஷமென்றும், கீர்த்திக்காக தியாகம் செய்தவரென்றும் எழுதின காலத்தில், பிராமணரல்லாத மற்ற பத்திரிக்கைக்காரர்கள் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். இதன் பலனாய் மற்றவர்களையும் தனித்தனியாய் ³ பத்திரிக்கை தாக்க ஆரம்பித்தது. இப்படியே ஒவ்வொரு சமயத்தில் ஒருவரைப்பற்றி எழுதும்போது மற்றவர் பார்த்துச் சிரிப்பதால் பொதுவாக பிராமணரல்லாதாருடைய நிலைமையே தாழ்வடையக் காரணமாய்ப் போய்விட்டதென்பதை ஒவ்வொரு வரும் ஊன்றிக் கவனிக்க வேண்டும். இவ்விஷயத்தை யோசித்துப் பார்த்தால் பிராமணரல்லாத தேசத்தொண்டர்களுடையவும் தேசீயத்தலைவர்களு டையவும் ஒற்றுமையின்மையும் சுயநலமுமே பிராமணரல்லாதாரை இக்கெதிக்குக் கொண்டுவந்து விட்டது. இனியாவது இம்மாதிரியான சந்தர்ப்பங்களில், பிராமணரல்லாதார் தகுந்த ஜாக்கிரதையுடன் நடந்து, பிராமணரல்லாத சமூகமும் தீண்டாதாரென்று கூறப்படுவோர்களின் நிலைமையையும், முன்னேற்றமடையச் செய்வித்து சுயமதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளுவார் களென உறுதியாய் நம்புகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.11.1925)