பாரத் சுவாபிமான் யாத்திரை என்ற பெயரில் இலவச யோகா வகுப்பு என்ற முகமூடியோடு பாபாராம்தேவ் பசுவதை தடுப்புச் சட்டம் வேண்டும் என்றும், மாடு அறுப்போருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் பரப்புரை செய்து வருகிறார். 22.3.2011 அன்று காலை 5 மணிக்கு இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திற்கு வந்த ராம்தேவ்க்கு எதிர்ப்புத் தெரிவித்து தென் சென்னை மாவட்ட தலைவர் இரா.உமாபதி தலைமையில் மாட்டு இறைச்சியுடன் கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் வடசென்னை மாவட்டத் தலைவர் கேசவன்,  தென் சென்னை மாவட்ட தலைவர் தபசி குமரன் உள்ளிட்ட 40 தோழர்களை கைது செய்து அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு 12 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

சேலத்தில்

பாரத் சுவாபிமான் யாத்திரை என்ற பெயரில் 26.3.2011 அன்று காலை 5 மணிக்கு, சேலம் காந்தி ஸ்டேடியம் வந்த ராம் தேவ்க்கு எதிர்ப்பு தெரிவித்தும்,அவரின் இந்துத்துவ சூழ்ச்சியை அம்பலப்படுத்தும் நோக்கத்தோடும் ஆர்ப்பாட்டம் நடத்திய கழகத் தோழர்கள் 100 பேர் கைது செய்யப்பட்டு மாலை 3 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடத்தும் செய்தி துண்டறிக்கை மூலம் வெளியிடப்பட்டிருந்ததால், காந்தி ஸ்டேடியத்தை சுற்றிலும் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாலை 5 மணி முதல் தோழர்கள் சேலம் நகரம் நோக்கி வரத் துவங்கினர். அங்கு வந்த ஆத்தூர் பகுதியைச் சார்ந்த மூன்று தோழர்களையும் யோகா பயிற்சிக்கு வந்த சிலரையும், பெரியார் தி.க. தோழர்கள் எனக் கருதி, காலை 5.30மணிக்கு காவல்துறை கைது செய்தது. கருப்பு சட்டை அணிந்தவர்களை பார்த்தவுடன் கைது செய்யப்படுவதை அறிந்து கொண்டதால், இளம்பிள்ளை தோழர்கள் 25 பேரும், மேட்டூர் தோழர்கள் 25 பேரும், சேலம் நகர தோழர்கள் 10 பேரும், மற்ற அமைப்புகளைச் சார்ந்த சிலரும் ஓரிடத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு 6 மணிக்கு திடீரென காந்தி ஸ்டேடியம் அருகில் திரண்டனர். கையில் பெரிய மாட்டு எலும்புகளை வைத்துக் கொண்டும், மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டுக் கொண்டும், தோழர்கள் ஒலி  முழக்கங்களை எழுப்பினர். தோழர்களை கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்ற சிறிது நேரத்தில், கொளத்தூர் தோழர்கள் 10 பேரும், சட்டக் கல்லூரி மாணவர்கள்; 10 பேரும், அண்ணல் அம்பேத்கர் அமைப்பு சாரா தொழிலளார் முன்னேற்றச் சங்கத்தைச் சார்ந்த 10 பேரும் தனித்தனியாக காந்தி ஸ்டேடியம் நோக்கி சென்று ஒலி முழக்கங்களை எழுப்பி கைது தானார்கள். தொடர்ச்சியாக கைது செய்யப் பட்டதால் அப்பகுதி பரபரப்பாக இருந்தது.

கலைவாணி, தமிழ்மதி, தானுபிரபா சேலம் மாவட்டச் செயலாளர் அ. சக்திவேல், துணைச் செயலாளர் அ. முத்துமாணிக்கம், செயற்குழு உறுப்பினர் இரா. டேவிட், மாநகர செயலாளர் மோ.பாலு, ந. விசு, ஜங்சன் தங்கராஜ், மேட்டூர் நகர தலைவர் அண்ணாதுரை, செயலாளர் சம்பத், கொளத்தூர் ராமமூர்த்தி, காவலாண்டியூர் ஈசுவரன், இராசேந்திரன், ஆர்.எஸ். பகுதி அமைப்பாளர் இராதாகிருட்டிணன், மல்லிகுந்தம் காமராஜ், நங்கவள்ளி கிருட்டிணன், ஆத்தூர் மகேந்திரன், அம்மாபேட்டை செந்தில், ஓமலூர் சிவபெருமாள், மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்குரைஞர் மாயன், தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் பூமொழி, அ.அ.அ.தொ.மு.ச. அரங்க. செல்லத்துரை, த.ஒ.வி.இ. இளமாறன், தமிழக முற்போக்கு இளைஞர் இயக்கம் தங்கதுரை உள்ளிட்ட சுமார் 100 பேரும் மாலை 3 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர்.


(கட்டுரை உள்ளே)

Pin It