கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற ஒரு இலக்கிய நிகழ்வில் கலந்துகொள்ள நண்பர்கள் எல்லோரும் திட்டமிட்டோம். அது விடுமுறை நாள்தான். இருந்தாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலை எங்களைத் திட்டமிட்டதிலிருந்து போகவிடாமல் தடுத்துவிட்டது. கடந்த வாரம் அதே சென்னையில் குறும்படம் சம்பந்தமான நிகழ்வு ஒன்று வேலை நாளில் அறிவித்திருந்தார்கள். எனக்கு எப்படியும் கலந்துகொள்ளவேண்டும் என்ற உந்துதல். ஆனால் வேலை நாளாய் இருந்ததால் சற்று யோசனை. குடும்ப பொறுப்புகளுக்காக அரசு வேலையை தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் எப்படி சாத்தியப்படும் என்ற வருத்தம். நண்பரைத் தொடர்பு கொண்டபோது கடந்த மாதமே ஆர்வமாய் கேட்ட நபரை இந்த முறை சோர்வடையக்கூடாது என்று நினைத்திருப்பார் போல 'போகலாம் நான் லீவு போட்டு வரேன்' என்றார்.

எனக்கு மகிழ்சி. நிகழ்வு 23.11.2010 மாலை 5 மணி; இடம் கன்னிமாரா நூலகம் எதிரில் இசாக் மையம் என்பதால் நண்பர் காலையில் போகலாம் என்றார். நானும் அலுவலகத்தில் அவசரவேலை என்று ஒரு பொய்யை சொல்லிவிட்டு காலை ஒன்பது மணிக்கெல்லாம் காஞ்சிபுரத்திலிருந்து இருவரும் கிளம்பினோம்.

நண்பர் பல விஷயங்களைப் பேசிக் கொண்டுவந்தார். அப்போது திடீரென்று ஒரு கருத்தைச் சொன்னார். 'நம்மைப் போன்ற ஆட்களை மாதத்துல பத்து நாள் வேலை செய்தாப்போதும். முழு சம்பளம் என்று அரசாங்கம் சொன்னால், இருபது நாள் இலக்கியப் பணின்னு நம்மை வீட்டிலும் விட்டுட்டாங்கனா எவ்வளவு நல்லா இருக்கும். எங்க மீட்டிங்குனு சொன்னாலும் போயிடலாம்' என்று சொல்லிவிட்டு சிரித்தார். ஆமாம் சார் எவ்வளவு தூரத்துல நிகழ்வு நடந்தாலும் போயிடலாம் என்று நானும் மனம்விட்டு சிரித்தேன். ஓமந்தூரார் தலைமைச்செயலகம் எதிரில் ரிச்சிஸ் தெருவில் ஒரு சிறு வேலையை முடித்துக்கொண்டு, அங்கிருந்து கன்னிமாரா நூலகம் சென்றோம். நான் அந்த நூலகத்தை அறிந்தவன் இல்லை. நண்பர்தான் அழைத்துச் சென்றார். முதலில் இதழ் பிரிவில் நுழைந்தோம். இரு வேறு திசையில் சென்றோம்.

அந்த அமைப்பையும் அவ்வளவு புத்தகங்களையும் பார்த்தபோது எனக்கு கோபம்தான் வந்தது. என் முன்னோர்களோ என் சார்ந்த மக்களோ இந்த வசதியும் இந்த வாய்ப்பும் பெற்றிருக்கவே மாட்டர்கள் போல. அப்படி கிட்டியிருந்தால் அதன் சுவையை அறிந்திருந்தால் ஒரு வழிப்போக்கனுக்குக் காண்பிப்பது போலவாவது திசையைக் காட்டியிருப்பார்கள். படிக்கும் சக்தி பெற்றதிலிருந்து என் வாழ்வு எவ்வளவு வீணாய்க் கழிந்திருக்கிறது? சிறு வயதிலிருந்தே சினிமாப் புத்தகங்கள் ராணி, குமுதம், ரோட்டில் கிடக்கும் துண்டு பேப்பர்களைக்கூட முழுதாய்ப் படித்துவிடும் பழக்கம் கொண்ட எனக்கு இப்படியான வாய்ப்புகள் கிட்டாமல் போச்சே என்று என் மேலே எனக்குக் கோபம் வந்தது. மிகவும் வேதனைப்பட்டேன். ஒருவழியாக நிகழ்வு முழுதாக முடிந்த பிறகு கிளம்பி இரவு பன்னிரண்டு மனிக்கு வந்து சேர்ந்தோம்.

ஒரு வாரம் கழித்து என் சொந்தக்காரப்பையன் ஒருவன் போன் செய்தான். ஒரு தனியார் மருத்துவமனையில் ஓட்டுநர் வேலை காலியிருப்பதாகவும் அதற்கு ஒரு மனு எழுதித்தரும்படியாகவும் கேட்டான். நான் அதில் மாத ஊதியம் குறைவாகத்தானே கொடுப்பார்கள் ஏன் வேறு ஏதாவது அரசாங்க வேலைக்கு முயற்சி செய்யக்கூடாதா என்றேன். அரசாங்கத்திலிருந்து பென்ஷன் இருநூறு வாங்குறேனே என்றான். என்னடா சொல்றே என்றேன். இல்ல நான் பன்னிரண்டாவது முடிச்சி வேலையில்லாம இருக்கிறேனில்ல. அதனால மாதம் இருநூறு வாங்குறேன். இருந்தாலும் நீ பி.ஏ படிச்சியிருக்கிறியேடா என்றேன். நாங்கதான் நாலு பேப்பர் முடிக்காம இருக்கிறோம் இல்ல என்று மிகவும் ஜாலியாக சொன்னான். டே இருநூறு தானா தர்றாங்க, எப்படி மாதா மாதம் சரியா வந்துடுதா என்றேன். அவ்வளவுதான் மாமா. பத்தாவதுக்கு 150/- பன்னிரண்டாவதுக்கு இருநூறு. டிகிரி முடிச்சிருந்தா முன்னூறு ரெண்டு மாசத்துகு ஒருமுறை மூணு மாசத்துகு ஒரு முறை நம்ம பேங்க் அக்கவுண்டுல போட்டுவிடுகிறான். அப்படியா சரி சரி நேர்ல பேசலாம்னு வைச்சிட்டேன்.

அன்று மதியம் தாலுக்கா வளாகத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தேன். திக்கித் திக்கிப் பேசுகின்ற சற்று முதுமை எட்டுகின்ற நிலையில் ஒரு பெண் கைப் பையில் எதையோ திணித்துக்கொண்டுவந்து ஒரு ரூபா குடேன் ஜெராக்ஸ் எடுக்கனும் என்று விடுபட்ட வாக்காளர் பாமைக்காட்டி கேட்டாள். இப்படி வந்ததின் காரணம் தெரிந்துகொள்ள நான் அவர்களுக்கு சில்லரை கொடுக்கும் முன்னே அவர்களின் வாழ்க்கை வரலாறைக் கேட்பது வழக்கம்.

"எனுக்கு புள்ளைங்க இல்ல. எங்க ஊட்டுக்காரு அஞ்சி வருஷத்துக்கு முன்னாடியே செத்துட்டாரு. புள்ளயார் பாளையம் இல்ல அங்கதான் ஊடு. தம்பிப் புள்ளைங்க இருக்கிதுங்க. எப்பனா வந்து போவாங்க. மெட்ராஸ்ல ஒருத்தி, இன்னுமோ ஊர்ல ஒருத்தி இருக்கிறாங்க. வேற வருமானம் இல்ல. கெவுர்மெண்டு குடுக்குதே அந்த நானூறு வெச்சித்தான் ரேஷன் அரிசிவாங்கி காலந்தல்லுறேன்" என்றாள். நான் ஒரு கேள்வி கேட்டால் அவள் மூன்று பதில் சொல்லி முடித்தாள். இந்தாம்மா என்று ஐந்து ரூபாய் கொடுத்தேன். அவள் ஜெராக்ஸ் கடைக்கு போகவில்லை. சற்று தூரம் சென்று வேறு ஆளிடம் கேட்டாள். பரவாயில்லை அரசாங்கம் நானூறு ரூபா கொடுக்கிறதா?

மனுஷனுக்கு சாகும் வரை ஓட்டுரிமை இருப்பது அவசியம்தான். நிபந்தனை பொருந்துகிற பெண்ணுக்கு கலியாணம் செய்ய குறிப்பிட்ட தொகை, +1 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி, சிறு தொழில், விவசாயம் (விளைநிலங்கள் இருக்கிறதா?) என்று எல்லா தரப்புக்கும் நிறைய சலுகைதான் இருக்கிறதுபோல என்று யோசித்தபோதுதான், நண்பர் பேருந்தில் சொன்ன வார்த்தை நினைவுக்கு வந்தது. அதிகமான ஆசைதான் இருந்தாலும் அந்த வர்த்தையை ஜோக்காக எடுத்துக்கொண்டது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று விளங்கியது. காஞ்சிபுரத்தில் 2001ன் கணக்குப் பிரகாரம் பார்த்தால்கூட மக்கள் தொகை 1,52,984 பேர் என்ற நிர்ணயம் செய்திருக்கிறார்கள். தற்போது நிலவரத்தில் இன்னும் கூடுதலாக இருக்கும். 'த. மு. எ. க.ச' துண்டறிக்கை போட்டு தலையைக் குடைந்து தலைப்புகளைப் போட்டு, சிறந்த நபர்களை தேடிப்பிடித்து கொண்டுவந்து கூட்டங்கள் நடத்தினாலும், 'இலக்கியவட்டம்' முக்கியமான பிரச்சனைகளை, படைப்புகளை விவாதிக்கின்ற நோக்கத்தில் கூட்டங்களை ஏற்படுத்தி, குடும்ப உறுப்பினர்களை சங்கடப்படுத்தி தயிர் சாதம், தக்காளிசாதம் போட்டுப்பார்த்தாலும், 'தரை' அமைப்பில் குறும்படம் மற்றும் உலகத் திரைப்படம் ஞாயிறு தோறும் திரையிட்டு காட்சிப்படுத்தினாலும், மேற்கூறிய ஜனத்தொகையில் ஒரு ஏழு எட்டுப்பேர்தான் தொடர்ந்து இலக்கியத்தில் இழப்புகளை சந்தித்து இயங்குகிறவர்களாக இருக்கிறார்கள்.

ஒருவருக்கு பொருளாதார சிக்கல், குடும்ப பாரம் தலைக்கு இருந்தாலும் நல்ல புத்தகங்களை வாங்கி வீடு முழுக்க அடுக்கிவிடுவார். அழகுக்காக அல்ல புத்தகம் கேட்போருக்கெல்லாம் கொடுப்பார். மாணவர்கள் படிக்கும்படி தூண்டுவார்.

இன்னொருவர் தனியார் குழுவிடம் குறைந்த வருமானத்தில் வேலை செய்தாலும் பல படைப்பாளிகளின் படைப்பை படித்துவிட்டு அவர்களை நேரில் சென்று சந்திப்பது, விவாதிப்பது போன்ற பழக்கத்தை தொடர்ந்து செய்கின்றார். ஒருவர் தன் பணத்தில் மாதம் ஒரு தொகையை ஒதுக்கி குறும்படங்களை, உலக சினிமாவைத் தேடிப்பிடித்து வாங்கிவருகிறார். ஒருவர் தன் வீட்டிலேயே திரைசீலை செய்து தொடர்ந்து உதவுகிறார். ஒருவர் நல்ல கூட்டங்கள் கூட்ட செலவிடுகிறார். இப்படித்தான் ஒவ்வொரு வரும் ஏதோ ஒரு வகையில் இழப்புகளின் ஊடாக தொடர்ந்து செயல்படுகின்றோம். எல்லா நகரத்திலுமே, எல்லா நாட்டிலுமே லட்சங்களை, கோடிகளைத் தாண்டுகிற மக்கள் தொகையிருந்தும் சொற்ப நபர்கள் தான் மனிதன் அகம் புறங்களில் பதுங்கி கிடக்கும் வாழ்வின் சூட்சமங்கைளை எதிர்கால மனிதனுக்காக ஒழுங்குபடுத்துகிறார்கள். இலக்கியவாதிகள் மற்றும் அத்தளத்தில் தொடர்ந்து இயங்குகிறவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தும், தன் நிகழ்காலம் முழுதும் இழப்புகளை சந்தித்தே வருகிறார்கள்; வாழ்கிறார்கள்.

ஒருவன், ஒரு இலக்கியவாதி படைத்த படைப்பைப் படிக்கிறபோது 'ச்சே, மனிதனுக்கு எவ்வளவு மோசமான மனநிலை, ச்சே மனிதன் எவ்வளவு கஷ்டப்படுகிறான்' என்று சிந்திக்க வைக்கிற செயலை அரசின் நிதிகளை அதிகமாய் பெற்றுக்கொள்கிற எந்த அரசு அமைப்போ, இலவசம் பெறுகிற எந்த தனி நபரோ அதிகப்படியாக செய்யவில்லை. அப்படியிருக்க இலக்கியம் படைக்கிறவர்கள், அதில் உண்மையான அக்கறையோடு தொடர்ந்து உழலுகிறவர்களும் இலக்கியவாதிகள் என்ற பெயரில் இந்த சமூகத்துக்கு அளப்பரிய செயலை செய்கிறார்கள். தங்களை நஷ்டப்படுத்திக் கொண்டு எதிர்கால சமூதாயத்தில் மனிதன் மனிதனோடு ஒருங்கிணைந்து வாழ்தலை இப்போதே பாடமாக்குகிறார்கள். படைபலத்தை வலுப்படுத்துவதால் மட்டும் வளர்ந்த நாடாகிவிடாது வல்லரசு நாடாக மாற்றிவிட முடியாது என்ற உண்மையை எதிர் சந்ததிக்கு விட்டுவைக்கிறார்கள். இப்படிப்பட்ட செயலை செய்கிறவர்களுக்கு நண்பர் சொன்னதுபோல அதிகப்படியாக இல்லை என்றாலும் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை பணிபுரிவோருக்கு விடுமுறையில் சலுகை ஏன் வழங்கக்கூடாது? இந்த பணத்தையோ அல்லது விடுமுறையையோ தன் சுயநலத்துக்காக ஒருபோதும் மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.

இலக்கியவாதிகள் எல்லாமே எந்த லாபத்தையும் அனுபவிக்காமலா செய்கிறார்கள் என்ற கேள்வி இருந்தாலும் தொடர்ந்து இயங்கமுடியாத நிலையில்தான் அப்படி செல்ல மனம் தாவுகிறது. இப்படி ஒரு உதவிவந்தால் இன்னும் சிறந்த படைப்புகள் வரும் என்பதில் சந்தேகமே இல்லை. முழுக்க ஆங்கில வார்த்தைகளும் ஆங்கில தழுவல்களும் படத்துக்குள் கொட்டிவைத்து, ஆணையின் கட்டுப்பாட்டுக்காய் தமிழில் பெயர் வைத்து ஆணையிட்டவரையே ஆசனத்தில் அமர்த்தி அற்புதம் அதிசயம் என்று ஆர்ப்பரிப்போருக்கு சலுகை செய்யும்போது ஓட்டாண்டியாய் இருந்தாலும் காகிதத்தில் கரைவோருக்கு ஏன் செய்யக்கூடாது? விளையாட்டு வீரர்களுக்கு கொட்டுகிறதல்லவா? அய்யோ அவ்வளவு வேண்டாம் அதன் பிறகு படைப்பு பறந்துவிடும்.

'அய்யோ நாங்கள் இலவசங்களை அள்ளிக்கொடுக்கிறோம். வாங்குகிறவன் ஒன்றும் சொல்லாமல் வாங்கிக்கொள்கிறான். பின்னாளில் எங்களுக்குப் பயன் உண்டு. இலக்கியவாதிகளுக்குக் கொடுப்போம். எங்களுக்கு மனசு இருக்கிறது. அதை அவர்கள் வாங்கவரும்போது 'எங்களிடம் ஓட்டுக்கேட்டுதான் இதை தருகிறீர்களா? நீங்கள் இதைத் தருகிறீர்கள் என்பதற்காக நாங்கள் உங்களுக்கு ஓட்டு போடமாட்டோம். போடும் நாள் வரும்போது, யார் பொருத்தமானவர்கள் என்று ஆய்ந்துதான் போடுவோம்.' இப்படி எங்கள் முகத்துக்கு நேராகவே சொல்லிவிடுறார்கள். அதுதான் யோசனையாக இருக்கிறது என்று சொன்னால் இந்த திருக்குறள் தான் பதில்சொல்லும்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

Pin It