“சக்திவாய்ந்த புரட்சிகர இயக்கத்தைத் கட்டுவதன்மூலம் வர்க்கப் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவீர்” என்று சோஷலிஸ்டு யூனிட் சென்டர் ஆப் இந்தியா கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் நிகார் முகர்சி அறைகூவல் விடுத்துள்ளார். அதற்கேற்ற பொருளாதாரச் சூழல் இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். புரட்சியற்ற சித்தாந்தம் பயன்தாரது என்பதை நாமும் அறிவோம்.

பொருளாதார நெருக்கடி உலகையே ஒரு குலுக்கு குலுக்கியது. அமெரிக்காவில் பல நிறுவனங்கள் ஆட்குறைப்புச் செய்தன. புதிய தொழில்கள் தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் சென்ற ஆண்டு செப்டம்பரிலேயே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்தோரின் எண்ணிக்கை 62 இலக்கத்தைத் தாண்டிவிட்டது. இது இப்பொழுது 90 இலக்கத்தைத் தாண்டியிருக்கும். இந்தியா முழுதும் வேலையற்றோரின் எண்ணிக்கையை நீங்களே முடிவு கட்டிக்கொள்ளுங்கள். வேலை இழந்தோரில் - பதிவு செய்தோரில் எத்தனை விழுக்காட்டினர் செங்கொடி ஏந்த முன்வந்தனர்?

இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கும் கீழேயுள்ளவர்களின் எண்ணிக்கை 37 விழுக்காடு என்று நீதிமன்றத்திலேயே தெரிவிக்கப்பட்டது. இது மக்கள் தொகையில் ஏறத்தாழ மூன்றிலொரு பங்கு. மூன்று வேளையும் சரியான உணவு கிடைக்காமல் திண்டாடுபவர்கள் என்பது இதன் பொருள். இவர்கள் ஒன்று திரண்டால் ஒரு புரட்சியையே நடத்தி இந்திய சமுதாயத்தையே மாற்றி அமைத்திருக்கமுடியும். இவர்களில் எத்தனை விழுக்காட்டினர் செங்கொடி ஏந்த முன்வந்துள்ளனர்?

பிற்பட்ட வகுப்பினரிலும் பட்டியல் வகுப்பினரிலும் பெரும்பகுதியினர் அன்றாடங் காய்ச்சிகள்தான். சிலருக்குக் குடிசைகள் மட்டுமே உண்டு. சிலருக்குக் குடிசைகளும் சொந்த மண்ணில் இருக்காது. இன்னொரு பெரும்பிரிவினர் அரை ஏக்கர் ஓரேக்கர் விவசாயிகள். எலிகளாவது தங்கள் வளைகளில் தடையின்றி ஓடிவிளையாடும். ஆனால் இம்மக்கள் சமைப்பது உண்பது, படுப்பது, பிள்ளைபெறுவது அனைத்தும் இக்குடிசைகளில்தான். இவர்களில் எத்தனை விழுக்காட்டினர் பொதுவுடைமைப் பக்கம் வந்துள்ளனர்?

இவர்கள் ஏழை எளிய பாட்டாளி மக்களுக்காகவே போராடுகிற பொதுவுடைமைக் கட்சியின் பக்கம் ஏன் வரவில்லை என்பதுவே நம்முன் உள்ள கேள்வி.

1952ல் தமிழ்நாட்டில் முகாமையான எதிர்க்கட்சியாக இருந்தது பொதுவுடைமை இயக்கந்தான். (இவர்களைத் திராவிடர் இயக்கங்களும் ஆதரித்தன என்பது உண்மையே) அக்கட்சி உடைந்து பல்வேறு இயக்கங்களாக உருவெடுத்து, கழுதைத் தேய்ந்து சுட்டெறும்பு ஆன கதையாக சிறுத்துப் போனதற்கு கரணியமென்ன? ஐரோப்பிய நாடுகளில் பொதுவுடைமை வீழ்ச்சியுற்றதற்கும் சீனாவில் சந்தைப் பொருளாதாரம் திறந்துவிடப்பட்மைக்கும் கரணியங்களை அலசும் தோழர்கள் இந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் அல்லது இயக்கங்கள் தேய்ந்துபோவதை ஏன் ஆழமாகச் சிந்தப்பதில்லை? சித்தாந்தங்களில் வறுமை ஏற்பட்டுவிட்டதா? அல்லது சித்தாந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் அணுகுமுறையில் கோளாறு ஏற்பட்டுவிட்டதா? மக்களால் சித்தாந்தங்களைப் புரிந்துக்கொள்ள முடியவில்லையா?

கடவுள், சாதி, மதம், அரசியல், மொழி, கலைகள் அனைத்தும் சித்தாந்தமுறையில் மேல்கட்டுமானங்கள்தான். ஆனால் இவற்றில் சில அடித்தளத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் என்பதும் அதே மார்க்சிய சித்தாந்தம்தான். இந்த நாட்டில் பொருளாதார உறவுகள்கூட சாதி மதங்களோடு பின்னிக்கிடக்கின்றன. அடிக்கட்டுமானத்தில் (சமுதாய பொருளாதார உறவுகள்) மாற்றம் கொண்டுவந்துவிட்டால் மேல்கட்டுமானங்கள் தானாகவே தகர்ந்து மறைந்துவிடும் என்றும் அரசியலும் மாறும் என்றும் மரபு மார்க்சியம் பேசுகின்றனர். அதனால்தானோ என்னவோ இவர்கள் அடித்தளத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் மேல்கட்டுமானங்களின்மீது அக்கறை காட்டுவதே இல்லை. (வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றனவோ)

சவூதிஅரேபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இன்று பொதுவுடைமை பேசமுடியுமா? அங்கேயும் பேசமுடியும். இனியும் தனித்தீவுகளாக இயங்க இயலாது என்ற நிலை வரும்போது சீர்த்திருத்தத்திற்கு இடம் கொடுத்துத்தானே ஆக வேண்டும். இந்து நேபாளம் இன்று போய்விட்டதே.

“மேலைநாட்டில் வகுப்புகள் மட்டுமே உண்டு. அதனால் அங்கு வகுப்புச்சண்டை மட்டும் (வர்க்கப் போராட்டம்) போடவேண்டியிருக்கிறது. நம் நாட்டில் சாதிகள் உள்ளன. அதனால் முதலில் சாதிச்சண்டை (சாதியொழிப்பு) போடவேண்டியிருக்கிறது.” என்ற பெரியாரின் கருத்தைப் புறக்கணிப்பவர்கள் உண்மையான பொதுவுடைமைவாதிகளாக இருத்தல் இயலாது. ஏழை எளிய பாட்டாளி மக்களை, மேல் கட்டுமான மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலை செய்யாமல். விடுதலை செய்ய முயலாமல் பொருளாதாரப் புரட்சியை நோக்கி அடியெடுத்து வைக்கமுடியாது என்பதுவே எம் கருத்து.

இந்துமதம் இருக்கின்ற வரையில் இந்நாட்டிற்குள் பொதுவுடைமை நுழையாது என்ற இராசாசியின் கருத்து ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடாகும். இதைத்தான் நம் நாட்டுப் பொதுவுடைமைவாதிகள் தங்களுடைய மறைபொருளாக (வேதவாக்காக) வைத்துக் கொண்டுள்ளனரோ?

கூலி உயர்வுப் போராட்டம், போனஸ் போராட்டம் முதலியவை வெறும் தொழிற்சங்க போராட்டங்களாக முடிவடைகின்றனவே தவிர பொதுவுடைமைச் சித்தாந்த வயப்பட்டதாகவோ பொதுவுடைமை இயக்கத்துக்கு ஆதரவு காட்டுவதாகவோ அமைவதில்லை.

1. பொதுவுடைமை வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகளாக இருப்பன யாவை? பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், வேலையின்மை, வறுமை, பசிபட்டினி, விலையேற்றம், பணவீக்கம் ஆகியவற்றில் சிக்குண்டுத் தவிக்கும் மக்களை ஒன்றுதிரட்ட முடியாமல் பிரிப்பது எது? பிரிப்பவை எவை? கடவுள் மதங்கள் சாதிகள் சாத்திரங்கள் இவற்றோடு கூடிய சடங்குகள், பழக்கவழக்கங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவையே. இவை மனித வாழ்க்கையில் இடையில் வந்தவைதான் என்றாலும் பொருளாதார உறவுகள் என்னும் அடித்தளத்தையே அசைக்கமுடியாமல் அழுத்திக் கொண்டிருப்பவை.

2. பதினெட்டாம் நூற்றாண்டிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்பட்டனர். இன்று முதலாளித்துவக் குமுகாயமோ, பல்வேறு சலுகைகளைக் காட்டி- தூசிப்படி, சலவைப்படி, சுரங்கப்படி, வாகனப்படி என்றும் குறைந்த விலையில் பட்டறையில் உணவு, மருத்துவ நிலையங்கள், மருத்துவ உதவிகள் என்றும் பல்வேறு வகையான ஊக்கத்தொகை,போனஸ் என்றும் வாரிக்கொடுத்து (இவற்றையும் சேர்த்துத்தான் வருமானம் சுரண்டப்படுகிறது) தொழிலாளர்களை குமுகாய இடைத்தரத்தில் (மத்திய வர்க்கத்தில்) தள்ளிவிடுகிறது. தொழிலாளர்களின் போராட்டப் புரட்சிக் குணங்களை முனைமுறித்துப் போட்டுவிடுகிறது. இன்னும் தொழிலாளர்கள் கூலி அடிமைகள்தான் என்பதை மறக்கச் செய்து விடுகிறது.

3. முதலாளியச் சக்திகள் தகவல் தொழில்நுட்ப மின்னூடகங்கள் முலம் - அதாவது பேசும்படம், தொலைக்காட்சி, பத்திரிகைகள் மூலம், எளிய மக்களை மிகக் சுளுவாக தன்னுரிமைப் பெற்றவர்களாக, விடுதலை வீரர்களாக, ஆட்சியையே மாற்றியமைக்கும் ஆற்றல் பெற்றவர்களாக ஏமாற்றி மக்கள் நாயக மனமயக்கத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. ஆன்மீகம், மூடநம்பிக்கைக் கதைகள், கருமவினைகள், இராசிபலன், கவர்ச்சிப் படங்கள் என்று மக்களைச் சிந்திக்க முடியாமல் திணறடிக்கின்றன.

4. நாடுகளும் எல்லைகளும் இருக்கும் வரை மொழிகளும் தேசிய இனங்களும் இருந்தே தீரும். இதைப்புறக்கணிப்பவன் பொதுவுடைமைவாதியாக இருத்தல் முடியாது. காரல் மார்க்ஸ் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் தன்னுடைய நூல்களைத் தூய தமிழில்தான் எழுதியிருப்பார். அவருக்கு மொழித்தூய்மை மிகவும் பிடிக்கும். இலெனினியத்தைப்பற்றி வாய்கிழியப் பேசும் நம் பொதுவுடைமை அறிவு மேதைகள் பிரிந்துபோகும் உரிமையுடன்கூடிய, தன்னாட்சிகொண்ட மாநிலங்களின் கூட்டாட்சியைப்பற்றி சிந்திப்பதேயில்லை. பொதுவுடைமை இயக்கம் தொடக்க காலந்தொட்டு பேராயக் கட்சியோடு சேர்ந்து செயல்பட்டதாலோ மேட்டுக்குடியினர் வசம் இருப்பாதலோ என்னவோ இவர்கள் மொழிவழி தேசிய இனங்களைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. அதனால் தானோ என்னவோ மக்கள் இவர்களுடைய சித்தாந்தத்தைப் புரிந்து கொள்வதுமில்லை.

மேலே கூறப்பட்ட முட்டுக்கட்டைகளை அகற்றுவதைப் பற்றி இவர்கள் சிந்திப்பதே இல்லை. அதற்குரிய சரியான திட்டங்களும் இவர்களிடத்தில் இல்லை. இவற்றைத் தடங்கல்களாக இவர்கள் கருதுவதாகவே தெரியவில்லை. நமது கெட்ட வாய்ப்பாக பொதுவுடைமை இயக்கத்தை வழி நடத்திச் செல்லும் தலைமை மேட்டுக்குடியினர் வசமே அடிநாள்தொட்டு இருந்துவருகிறது. மற்றவர்கள் மயங்கும் வண்ணம் சித்தாந்த விளக்கங்களைக் கொடுப்பதில் வல்லவர்கள். இவர்கள் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றிக் கொள்வதுகூட மேல் கட்டுமானங்கள்மீது யாரும் கைவைக்காமல் தடுத்துக் கொள்வதற்கே என்று எண்ண வேண்டியுள்ளது. இவர்கள் நேற்றுவரை நலிந்த மக்களுக்குக் கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள். மதம், கடவுள், சாதி, சாத்திரங்கள் பற்றிப் பேசினால் பொருளாதாரப் போராட்டத்தின் போக்கைத் திசை திருப்பிவிடும் என்று அச்சுறுத்துவர். இது பிரும்ம -ஆத்ம கொள்ளைகளைக் கற்பித்து கோடிக்கணக்கான மக்களை மூவாயிரம் ஆண்டுகளாக முட்டாள்களாகவும் அடிமைகளாகவும் ஆக்கியதற்கு ஒப்பானது.

உண்மையான காரணிகளை யாராவது எழுதிவிட்டால் - பேசிவிட்டால் அவர்களைத் திருத்தல்வாதிகள், திரிபுவாதிகள், முதலாளிகளின் (இவர்கள் மொழியில் பூர்ஷுவாக்கள்) கையாட்கள் என்று கூறி ஓரங்கட்டுவர். மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் இப்போது கூடுதலாக மாவோ ஆகியவர்கள் காட்டிய வழிகள் என்று அதிலேயே நடக்கவேண்டும் என்பவர்கள். இலக்கை அடைவதற்குரிய வழிமுறைகளைக் கூட மாற்ற விரும்பாதவர்கள். மாற்றம் என்பதுதான் மாறாதது என்பதையே தூக்கியெறிபவர்கள்.

இப்போது முதல் பத்திக்கு வாருங்கள். அந்த அறைகூவலை விடுத்தவரின் பெயர் தோழர் நிகார் முகர்சி. மற்றைய வலது இடது இயக்கங்களை திருத்தல்வாதிகள் என்று கூறுமிவர் குறைந்த அளவு தனது பெயரோடு கூடிய சாதியொட்டையாவது விட்டிருக்கலாம். இவருடைய கட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர்க்கு இச்சாதி ஓட்டுக்கள் உண்டு. இவை மேல்நாட்டில் உள்ள கென்னடி, கிளிண்டன், மேசன், புஷ் போன்ற குடிப்பெயர்கள் இல்லை. நம்நாட்டில் இவ்வொட்டுப் பெயர்கள் அப்பட்டமான சாதிகளைக் காட்டுபவை. சில பொதுவுடைமை முன்னோடிகள் தங்களுடைய மத, சாதிச் சின்னங்களைகூட கைவிடுவதில்லை. இவர்கள் புரட்சிக்கு அறைகூவல் விடுப்பதுதான் நமக்கு அய்யங்களை எழுப்புகிறது. சிந்திக்க வைக்கிறது.

பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, ஏழ்மை, இல்லாமை, போதாமை, உயர்வு தாழ்வு என்று புரட்சிக்குரிய பொருண்மைக் கூறுகள் நம்நாட்டில் எப்போதும் இருந்தே வந்துள்ளன. இன்னமும் இருக்கின்றன. இவற்றால் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்றுதிரட்ட ஓர் இயக்கத்தாலும் முடியவில்லை. ஒன்று திரட்டுவது என்பது இயலாதசெயலாகவே இருக்கிறது.

1. ஆயிரம் உண்டிங்கு சாதி என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும்.

2. ஒருவனுடைய ஏழ்மைக்கும் இல்லாமைக்கும் அவனுடைய தலைவிதியும் முற்பிறப்பு வினையுமே கரணியம் என்னும் மூடநம்பிக்கைகளை விதைக்கின்ற சாத்திரங்களையும் ஒப்புக்கொள்ள வேண்டும். அதாவது அவற்றைப்பற்றி பேசுதல் கூடாது.

3.பிறவியிலேயே உயர்வுதாழ்வு கற்பிக்கும் மதங்களின் சைவபீடங்களையோ சீயர்களையோ இந்துமத அமைப்புகளையோ திறனாய்வும் செய்தல் கூடாது. சாதிமத சின்னங்களையும் விடுதல்கூடாது.

இம்முட்டுக்கட்டைகளைப் பெயர்த்தெறியாமல் பொதுவுடைமை பொருளாதாரப் போரை - வர்க்கப் போரை தீவிரப்படுத்துதல் இயலாத காரியமே. அதை ஒரு பிழைப்புவாதம் என்றுதான் கூறுதல் வேண்டும்.

பிற்சேர்க்கையாக : 1. அண்மையில் கொலைக் குற்றத்திற்காக இன்றைய சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டார். அப்போது தோழர் சீதாராம் எச்சூரி அவர்கள் “தோழர் அத்வானியை வீட்டுக்காவலில் வைத்ததுபோல் ஆச்சாரியாரையும் வீட்டுக்காவலில் வைத்துத் துன்பம் நேராமல் விசாரிக்கலாம். அவர் ஒரு மதத்தலைவர்” என்று கரிசனப்பட்டுக்கொண்டார். முன்னது அரசியல் நடவடிக்கை, பின்னது குற்றவியல் நடவடிக்கைகள் என்பது அவருக்குத் தெரியாமலா இருக்கும்? குப்பன் சுப்பன் என்றால் உள்ளாடையோடு நிறுத்தி அவர்களை எப்படி வேண்டுமானாலும் “இலாடம்” கட்டலாம், துன்புறுத்தலாம் என்கிறாரா பொதுவுடைமைத் தோழர்? இதுதான் மனித உரிமைப் பாதுகாவலா? இவர்களா பொதுவுடைமையைக் கொண்டுவருவார்கள்?

3. இன்று சில மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளின் செயல்பாடு முனைப்பாக இருக்கிறது. இம் மாவட்டங்களில் உள்ள மக்களை அரசாங்கத்தைப் போலவே தொடக்கக் காலந்தொட்டு பொதுவுடமைத் தோழர்களும் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் இதன் பொருள். நேபாளம் போன்ற சிறுநாடுகளில் கிடைக்கும் வெற்றி இந்தியா போன்ற பெரு நாடுகளில் இயலுமா என்பதுவே கேள்வி. முதலாளியத்தின் வீட்டுக்காவல் நாயாகச் செயல்படும் சனநாயக அரசியவாதிகள் மாவோயிசத்தை வெற்றிபெற விடுவார்களா? மாவோயிஸ்டுகள் போர் எல்லை மீறிய பொறுமையின் பெருவெடிப்பேயாகும்.

Pin It