நூல் நூற்கும் விஷயத்தில் விசை இயந்திரத்திற்கும் கை இராட்டினத் துக்குமுள்ள தார தம்மியத்தை நமது நாட்டாரில் சிலர் நன்கு அறிந்து கொள்ளவில்லையென்றே நினைக்க வேண்டியிருக்கிறது. இராட்டை சுற்றுவதினால் நமக்கு வேண்டிய அளவு நூல் உற்பத்தி செய்வது கஷ்ட மென்றும், போதுமான கூலியும் இதில் கிடைக்காதென்றும், இயந்திரத்தினால் அதிக நூல் உற்பத்தி செய்யக்கூடுமென்றும், கூலிக்காரர்களுக்கு அதிகக் கூலி கிடைப்பதுடன், முதலாளிகளுக்கும் நல்ல லாபம் வருகிறதென்றும் இவர்கள் சொல்லுகிறார்கள். நமது நாட்டின் கொடிய வறுமைக்கு முக்கிய காரணம் மேற்சொன்ன இயந்திரங்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இயந்திரப் பெருக்கினால் ஒருசில கூலிகளும் தனிப்பட்ட முதலாளிகள் சிலரும், பிறநாட்டு இயந்திர வியாபாரிகளுந்தான் பிழைக்க முடியுமே தவிர ஜனங்கள் பிழைக்க முடியாது.

நமது ஏழை நாட்டில் வேலையில்லாமல் கஷ்டப்படுவோர் எத்தனையோ பேர் குறைந்த அளவு கூலியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். இவர்களெல்லோருக்கும் இயந்திர ஆலைகளில் வேலை கொடுக்க முடியாது. ஒவ்வொரு தொழிலிலும் இம்மாதிரியே அநேகம் பேருடைய கூலியை இயந்திரங்கள் விழுங்கி விடுகின்றன. நம் தேசம் உள்ள நிலைமையில் பெரு வாரியான ஏழைக் கூலிக்காரர்களுக்கு வேலை கிடைத்தால்தான் வறுமை நீங்கும். ஒரு சில முதலாளிகளும், அந்நிய நாட்டு இயந்திரத் தொழிலாளரும் பிழைப்பதினால் தேசத்தின் தரித்திரம் நீங்காது. உதாரணமாக, நம் நாட்டில் மில்கள் என்று சொல்லப்படும் நூல் ஆலைகள் அதிகமான நூல் உற்பத்தி செய்கின்றன. ஆனால், இவை எவ்வளவு பேருடைய கூலியைக் கெடுத்து விடுகின்றனவென்பது யோசித்துப் பார்த்தால் தெரியும்.

சாதாரணமாக 20 அல்லது 25 லட்சம் ரூபா மூலதனத்துடன் ஆரம்பிக் கப்பட்ட ஒரு நூல் யந்திர ஆலையை எடுத்துக்கொள்வோம். இவ்வாலையில் ஒவ்வொன்றிலும் 400 - ராத்தல் எடையுள்ள 40 - சிப்பம் (க்ஷயடந ) நூல் உற்பத்தி யாகக்கூடும். அதாவது, மொத்தம் 16,000 - ராத்தல் நூல் உற்பத்தியாகலாம். இவ்வளவு நூல் உற்பத்தி செய்யும் ஓர் ஆலை சுமார் 2000 கூலிகளுக்கும் வேலை கொடுக்க முடியும். தலைக்கு 4 அணா முதல் 1 ரூபாய் வரையில் கூலி கிடைக்கும். முதலாளிகளுக்கு 100 - க்கு 50 சதவீதம் வருஷந்தோறும் லாபம் கிடைக்கலாம். ( இதற்கு மேலாகவும் ஆலை முதலாளிகளுக்குச் சில சமயம் லாபம் கிடைத்திருக்கிறது. ) இதனால் ஏழைகளுக்கு ஏற்படும் நஷ்டத்தைப் பற்றி யோசிப்போம். மேற்சொன்ன 16,000 - ராத்தல் நூலும் கிராமத்தில் வேலையில்லாமல் தவிக்கும் ஏழைக் கூலிக்காரர்களைக் கொண்டு கை இராட்டினத்தில் தயார் செய்து கொள்வதா யிருந்தால் ஒரு நாளில் ஒரு ராத்தல் நூலுக்குக் குறைந்தது மூன்று பேர் வேலை செய்ய வேண்டும். ராத்தலுக்குக் குறைந்த விகிதம் 4 - அணா கூலி கொடுப்பதாயிருந்தாலும் நபர் ஒன்றுக்கு 1 - அணா 4 - பைசா கிடைக்கும். இப்படியாக 16,000 - ராத்தல் நூல் உற்பத்தியில் 48,000 பேருக்கு 1 - அணா 4- பைசா கூலி கிடைக்கிறது.

இவ்வளவு நூலையும் ஓர் ஆலை நூற்றுவிடுவதினால் வேலை செய்யக்கூடிய 46,000 பேருக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது. இவ்வளவு பேருக்கும் கிடைக்கவேண்டிய கூலியில் சிறுபகுதி ஒரு சில வேலைக்காரர்களுக்கும் பெரும்பகுதி முதலாளிகள், அந்நிய நாட்டு இயந்திர வியாபாரிகள் ஆகிய இவர்களுக்கும் போய்விடுகின்றது. மகாத்மாவினுடைய சுயராஜ்யத்திற்குப் பொருள் ஏழைகள் பிழைக்க வேண்டுமென்பதே. முதலாளிகளும், அந்நியநாட்டு இயந்திர வியாபாரிகளும் பொருள் சேர்க்க வேண்டுமென்பது மகாத்மாவினுடைய சுயராஜ்யத்தின் கருத்தன்று. சிலருக்கு உத்தியோகமும், அதிகாரமும் கிடைக்க வேண்டுமென்பதும் அன்று. இந்த அம்சத்தை நாம் மனதிலிருத்திக் கொண்டால் இராட்டை இயக்கத்தின் கருத் தைச் சரியாக அறிந்து கொள்ளலாம். ஏழைகளிடத்திலும் கூலிக்காரர் களிடத் திலும் அன்பில்லாதவர்களுக்கு மகாத்மா கூறும் சுயராஜ்யத்தின் பொருள் நன்கு விளங்காது. உத்தியோகமும் அதிகாரப் பதவியும் பொருள் தேடலும் தான் சுயராஜ்யமென்று அவர்கள் கருதுவார்கள். இத்தகைய அபிப் பிராயம் தேசத்தில் பரவக் கூடாதென்பதை மனதிற் கொண்டே மகாத்மா காந்தி காங் கிரஸ் அங்கத்தினருக்கு நூல் நூற்பதை முக்கிய கடமையாக ஏற்படுத்தி யிருக்கிறார்.

இந்த முக்கிய கடமையை தேசத்தார் ஏகமனதாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கருதியே வேறு சில விஷயங்களில் தமது உறுதியான கொள்கைகளையும் ஓரளவு விட்டுக் கொடுத்திருக்கிறார். நூல் சந்தாவின் முக்கியத்தை நமது ஜனங்கள் கொஞ்சங் கொஞ்சமாக உணர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மாதா மாதம் நூல் சந்தா செலுத்து வோரின் தொகை பெருகிக்கொண்டு வருகிறது. ஆனாலும் மற்ற திட்டங் களில் மகாத்மாவின் அபிப்பிராயத்திற்குத் தமிழ்நாடு எவ்வளவு ஆதரவா யிருந்ததோ அவ்வளவு இவ்விஷயத்தில் ஊக்கங்காட்ட வில்லையென்றே சொல்ல வேண்டும். இனியேனும் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாய் இருந்து வருவோமானால் நூல் சந்தாவை எடுத்துவிட வேண்டுமென்று இதற்குள்ளாகவே கூற ஆரம்பித்துவிட்ட சிலருக்கு அனுகூலமாகிவிடும். மற்ற விஷயங்களில் தமிழ்நாடு பெற்றிருக்கும் நற்பெயருக்கும் இதனால் தீங்கு ஏற்பட்டுவிடும்.

நிற்க, நமது தேசத்தின் நிலைமையில் இயந்திரத்தொழில் ஏன் பொருந்தாது என்பதற்கு ஒரு காரணம் மட்டும் கூறி இதை முடிக்கிறேன். இயந்திர மோகமுள்ளவர்கள் தேச முழுவதையும் இயந்திரமயமாக்கி விட்டால் எல்லா ஏழைகளுக்கும் நல்ல கூலி கிடைக்குமென்று எண்ணலாம். 48,000 பேர் செய்யக்கூடிய வேலையை 2,000 பேரின் உதவி கொண்டு ஓர் இயந்திரம் செய்து விடுவதால் பாக்கி 46,000 பேருக்கும் வேலையில்லாமல் போய்விடுகிறது என்று மேலே கூறினேன். ஆனால், இவர்கள் எல்லோருமே வேலை செய்யும்படி நாட்டில் ஆலைகளைப் பெருக்கி விட்டால் எல்லோருக் குமே நல்ல கூலி கிடைக்குமே என்று நினைக்கலாம். ஆனால் சிறிது யோசித்துப் பார்த்தால் இந்தியாவில் இது அசாத்தியம் என்பது விளங்கும். இங்கிலாந்து போன்ற தேசத்தில் இது சாத்தியமாகக்கூடும். இதற்கும்கூட ஒரு சிறு தேசத்தின் ஆலையில் தயாராகும் துணிகளை வாங்க பெரிய தேசம் ஒன்று இருந்தால்தான் முடியும்.

இங்கிலாந்தில் ஜனத்தொகை சுமார் மூன்று கோடி. ஆனால், 33 கோடி ஜனத்தொகையுள்ள இந்தியா, இங்கிலாந்தின் சாமான்களுக்கு சந்தையாக இருக்கிறபடியால் இங்கிலாந்து ஜனங்களில் பெரும் பகுதியினர் ஆலைத்தொழிலில் பிழைப்பது சாத்தியமாயிருக்கிறது. இந்தியா இன்றைய தினம் துணி வாங்க மறுத்துவிட்டால் ஆலைத்தொழில் நிலைமை ஆபத்தாகிவிடும். இங்ஙனமிருக்க 33 கோடி ஜனத்தொகையுள்ள இந்தியாவில் வேலை வேண்டி நிற்கும் கோடிக்கணக்கான ஜனங்கள் ஆலைத் தொழிலில் ஈடுபட்டால் எவ்வளவு துணி உற்பத்தியாகும்? அவ்வளவு துணி யையும் விற்பனை செய்யக்கூடிய பெரிய சந்தை நமக்குக் கிடைக்குமா ? என்று யோசிக்க வேண்டும். இந்த அம்சத்தைக் கவனித்தால் நமது நாட்டின் நிலைமையில் கோடிக்கணக்கான ஏழைகளுக்குத் தொழிலளித்துக் காக்கக் கூடிய சாதனம் இராட்டை ஒன்றே என்பது நன்குவிளங்கும்.

(குறிப்பு : குடிநூலில் எழுதிய கட்டுரை

குடி அரசு - கட்டுரை - 02.05.1925)

Pin It