என்ன மந்திரமோ தெரியவில்லை
தலித்துகளின் குடிசைகளுக்கு மட்டும்
தானாகவே பற்றி எரியும்
சக்தி இருக்கிறது..!!!
அவர்களின் பெண்கள்
மல்லாந்து படுக்கையில்
பகவான்களால் கற்பழிக்கப்படுகின்றனர்.
நம்புங்கள் ஆன்மிக பூமியில்
எதுவுமே சாத்தியம் தான்.!!!

கருவறையைக் கிழித்து
தேச பக்தியாளர்களின்
சூலாயுதங்களில் தானாகவே சொருகிக் கொள்ளும்
சிசுக்கள்!
அன்னை பூமியில்
அமைதியாய் உறங்கட்டும்
இஸ்லாமிய உயிர்கள்!

ஆண்குறித்தோல் உரித்தவர்களுக்கு
சிறைச்சாலைகளின் மேல்
வெறி பிடித்த ஆசை!!!
அவர்களின் ஆசைகள்
வன்கொடுமைகளால் நிறைவேற்றப்படும்!!!
இங்கு எவர்களின் ஆசைகளும்
நிராகரிக்கப்பட மாட்டாது!!

சுட்டுக்கொல்லப்பட்டவர்களை
பற்றிக் கவலைப்பட வேண்டாம்
தியாகங்கள் உள்ளவரை
அவர்களின் தியாகங்கள் வாழும்!!
சந்தேகம் வேண்டாம்.
இது தியாகங்களின் பூமி !!!

காடுகளைப் பாதுகாக்க
பழங்குடியினரை வெளிவரச் சொல்கிறோம்!
ஆபத்தான வேலைகள் என்று காடுகளை
அன்னியர்களிடம் விற்று விட்டோம்!
இனி நாகரிக மிடுக்கோடு
நகரத்தில் உலவாருங்கள் ஆதிவாசிகளே!!
வேண்டும் என்றால் பாருங்கள்
அடுத்த ஆண்டு உலக அழகியாக
பழங்குடி பெண்கள் மகுடம் சூட்டுவார்கள்!!

இது அன்பின் பூமி
நாங்களாக யார் மீதும் போர் தொடுக்க மாட்டோம்.!!
தேவைப்பட்டால்
உள்ளூர் மக்களையே கொன்று
போர்த்தாகம் தீர்த்துக் கொள்வோம்!
மற்றபடி இது என்றுமே காந்திய தேசம் தான்.

    - மால்கம் X இராசகம்பீரத்தான் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It