மாத இதழ்களிலும் நாளேடுகளிலும் ஒரு திரைப்பட விளம்பரத்தைப் பார்த்தேன். பச்சை முத்து உயர்நிலைப் பள்ளி என்ற பெயர்ப்பலகையுடன் நிற்கும் நுழைவாயில். அதன் மீது விழுதுகள் விட்டு படர்ந்திருக்கும் ஆலமரம். இவைகளுக்குக் கீழே பள்ளிக்குப் போவோம் என ஓர் அழைப்பு. இவை ஆர்வமூட்டுவதாக இருந்தன. அந்தத் திரைப்படம் தங்கர்பச்சானின் ‘பள்ளிக்கூடம்’ என்று அறிந்ததும் அவசியம் போக வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

திரைப்படங்கள் மீது பித்துப் பிடித்து இருந்த காலம் ஒன்று இருந்தது. வாரத்துக்கு மூன்று நான்கு திரைப்படங்கள், அமைதியான இரவில் இரண்டாவது ஆட்டம், வெவ்வேறு சூழலும் நிலப்பரப்பும் கொண்ட அக்கம் பக்கத்து ஊர்களின் கொட்டகைகள் என்று அலைந்ததெல்லாம் இப்போது அலுத்துப் போய் விட்டது. நல்ல படம் என்று விமர்சனங்களோ, நண்பர்களோ சொன்னால் அதை மட்டும் போய் பார்ப்பது என்ற மனநிலை வந்து விட்டது.

ஆம்பூர் ராஜ்கமல் அரங்கத்துக்கு வெளியே நண்பகல் வெயிலில் காத்திருந்த என்னுடன் ஆச்சர்யமாக நண்பர் சுரேசும் வந்து சேர்ந்து கொண்டார். அவருடன் அப்போது தான் மீசை அரும்பிய வயதுடைய ஒரு தம்பியும் இருந்தான். அப்போது தான் என்னுள் இருந்த தனிமையின் நெருடல் மறைந்தது.

அரங்கினுள் மிகச் சொற்பமான மக்கள் கூட்டமே இருந்தது. படத்தைப் பற்றிய பேச்சு பரவி மெதுவாக மக்கள் வருவார்கள் என்று நினைத்துக் கொண்டேன். படத்தின் இடையே சுரேசின் முகத்தை இரண்டொரு முறை பார்த்தேன். கண்ணில் இருந்து வழியும் நீரைத் துடைத்துக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கத்தில் இருந்த தம்பியோ மூக்குறிஞ்சுவதைத் தெளிவாக அவ்வப் போது கேட்க முடிந்தது. சில இடங்களில் எனக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது. கட்டுப்படாத துக்கத்தின் வேகம் முட்டித் தள்ளியது. அரங்கிலிருந்து வெளியே வந்ததும் தங்கர் பச்சானிடம் தொலைபேசியில் பேசினேன். நெகிழ்ச்சியான கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்ட போது, கூட்டம் எவ்வளவு வந்தது என்று கேட்டார். ‘படத்தை எப்படியே எடுத்தாச்சு. மக்களைப் பார்க்க வைக்கிறது தான் எப்படின்னு தெரியல’ என்றார்.

தங்கர் பச்சானுக்கு மட்டுமல்ல. யாருக்கும் பிடிபடாத சூட்சமம் தான் இது. மலிவான உணர்வுகளுக்குத் தீனிபோடுவதையே நோக்கமாகக் கொண்டிருக்கும் திரைப்படங்கள் பெருகிவிட்டன இப்போது. காட்சி வழியே கற்பது, அறிவது, இலயிப்பது என்கின்ற நிலைகளைத் தாண்டி விட்டது உலகம். காட்சி வழியே துய்ப்பது. ஆழ்மன விருப்பங்களைத் தணித்துக் கொள்வது என்கிற நிலையில் இருக்கிறது அது. அறிவைச் சீண்டுவதற்கு மாறாக உளவியலைச் சீண்டுகின்றன படங்கள். இந்த நிலை மாற்றத்தின் வழியே நல்ல படங்கள் வருகிற போது சில பார்க்கவும் விவாதிக்கவும் படுகின்றன. சில கவனத்தில் கொள்ளப்படாமலேயே போய்விடுகின்றன.

‘பள்ளிக் கூடம்’ கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு திரைப்படம். நாட்டின் வருவாயில் 6 சதவீதத்தைக் கல்விக்கு ஒதுக்க வேண்டும். ஆனால் நமது நாடு 3 சதவீத நிதியையே ஒதுக்குகிறது. உயர்கல்வியின் அவலங்களைப் பற்றியும் கல்வி உலக மயமாக்கப்பட்டு விட்டதைப் பற்றியும் இன்று அதிகம் பேசுகிறோம். ஆனால் தொடக்கக் கல்வி பற்றி அதிகமாக பேசுவது இல்லை. தொடக்கக் கல்வி இன்று அதிகமாக கவனத்தையும் அக்கறையையும் கோருவதாக இருக்கிறது. இதைப் பற்றித் தான் இத்திரைப்படம் பேசுகிறது.

இத்திரைப்படத்தின் பல இடங்கள் இயல்புநிலைக்கு மாறாக இருக்கின்றன. சிற்சில இடங்கள் தர்க்கத்துக்கு ஒத்து வரவில்லை. பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் நெருக்கம் மிகுந்த பார்வையாளர்களின் உணர்வுகளைக் கிளறுகிற காதல் பாடம் ஒன்று உண்டு. பாடம் சொல்லித் தருகின்ற வாத்திச்சியின் கால்களை வருடவும், அவளின் புடவையை பெண் வாடையை முகர்ந்த படி மடிக்கவும், அவளுக்காக ஏங்கவும் தவிக்கிறார்கள் சில மாணவர்கள். ஆனால் இவைகளையெல்லாம் தாண்டி மனதில் அழுத்தமாக நிற்கிறது படம்.

ஜெயம் போன்ற பல்வேறு படங்களில், கல்லூரி அளவில், பெண் ஆசிரியர் மற்றும் மாணவர் இடையேயான உறவுகள் மிகவும் கீழ்த்தரமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. உயர் நிலைப் பள்ளி அளவிலே சித்தரிக்கப்படும் இவை பேசப்படாதவை. இந்த மாணவர்களால் ஆராதிக்கப்படும் ஆசிரியையின் அப்பாத்திரம் தாய்மை நிறைந்ததாக மாற்றப்பட்டு முந்தைய காட்சிப்படிமங்கள் பார்வையாளர்களின் மனத்திலிருந்து அகற்றப்பட்டு விடுகின்றன.

பச்சை முத்து உயர் நிலைப் பள்ளி என்கிற ஒரு தனியார் பள்ளியிலே படிக்கின்ற மாணவர்களில் நான்கு பேரைச் சுற்றி நகர்கிறது படம். ஒருவன் படிப்பு வராமல் விவசாயம் பார்க்கிறான். ஒருவன் திரைப்பட இயக்குநராகிறான். ஒருவன் மாவட்ட ஆட்சித் தலைவராகிறான். ஒருத்தி வாத்திச்சியாகி அதே பள்ளியிலேயே பணியாற்றுகிறாள். அது அவளின் தாத்தா கட்டிய பள்ளியும் கூட. இந்த நால்வரும் வேறு வேறு சாதியினர். வேறு வேறு வாழ்நிலையிலிருந்து உருவாகின்றவர்கள். மழை வந்தால் ஒழுகுகின்ற, எந்தவிதமான கட்டமைப்பு வசதிகளும் இல்லாத, நவீன உலகச் சூழலுடன் தொடர்பற்று விலகி இருக்கின்ற அப்பள்ளிக்கு திடீரென்று ஒரு சிக்கல் வருகின்றது. அதன் உரிமையாளர்களில் ஒருவர் பள்ளியை மூடி விட முடிவெடுத்து விடுகிறார்.

பழைய மாணவர்களின் உதவியோடு அப்பள்ளியைக் கட்டி முடித்து, சட்டப்படி அதன் உரிமையாளரிடமிருந்து மீட்டெடுத்து, அதைத் திறம்பட நடத்தலாம் என்று தீர்மானிக்கின்றனர் ஆசிரியர்களும், ஊராரும். இதற்கென நடக்கும் முனைப்பு மிகுந்த செயல்பாடுகளைச் சொல்கிறது படம். தங்கர் பச்சான் இப்படத்தில் மையப்படுத்தும் ஒரே அம்சம் இது தான். வளர்ந்த மாணவர்கள், வளாக பள்ளி. ஆனால் ஒரு படைப்பு பேசாமல் விட்டுப் போகும். ஆழ் மௌனங்களின் இடைவெளிகளைப் போன்று இப்படத்திலேயும் ஊடாக ஊடாக பல்வேறு விஷயங்களும் விரவிக் கிடக்கின்றன. அந்த இடங்களை நாம் வளர்த்தெடுத்துக் கொள்ளவோ, விவாதத்திற்கு உட்படுத்தவோ வேண்டியிருக்கிறது.

இப்படம் கொண்டிருக்கின்ற கிராமத்தையும் பழமையையும் மரபுகளையும் மேன்மையானவைகளாக எண்ணுகிற பார்வையும் சிறு பிராய காலங்களை போற்றுகின்ற மனப்பாங்கும் இந்த அலசலுக்கு உதவாதவை எனலாம். கரும்பலகைகள் கூட இல்லாத தொடக்கப் பள்ளிகள் இந்தியா முழுமையிலும் இருக்கவே செய்கின்றன. நவீன வசதிகள், வகுப்பறைகள், நூலகம், கணினி என்று தனியார் ஆங்கிலப் பள்ளிகளில் இருக்கின்ற வசதிகளைக் குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலையில் தான் அரசுப் பள்ளிகளும், கிராமத்தில் இருக்கின்ற தனியார் நிதியுதவிப் பள்ளிகளும் இருக்கின்றன. மழைக்கு ஒழுகாத கட்டிடமும், விளையாட்டு மைதானமும் பிற வசதிகளும் கொண்ட பள்ளிகள் மிகக் குறைவு.

மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் படியான ஆய்வகங்களும், நூலகங்களும் இல்லை பெரும்பாலான பள்ளிகளில் என்றால், சில பள்ளிகளில் அவர்கள் உட்காருவதற்கு மர இருக்கைகள் கூட இல்லை என்பது தான் உண்மை நிலை. 90 விழுக்காடு மாணவர்கள் தமது பாட நூல்களில் படிக்கின்ற அறிவியல் உபகரணங்களையும் நாடுகளின் வரைபடங்களையும் பொருட்களின் மாதிரிகளையும் தொட்டுக் கூட பார்க்காமலேயே தான் படித்து வெளியேறுகிறார்கள் நமது பள்ளிகளில் இருந்து.

ஓடுகள் உடைந்து வெயிலும் மழையும் நுழையும் படியான வகுப்பறைகளும் மாடுகள் தஞ்சம் புகும் வகுப்பறைகளும் படத்தில் காட்டப்படுகின்ற போது நமக்கு எந்த உறுத்தலும் தெரியாத அளவுக்கு அவை பழகிப் போயிருக்கின்றன.

படத்தில் கல்வி அதிகாரி பார்வையிடுவதை தொடர்ந்து நடக்கும் மாணவர்களை விரட்டிப்பிடிக்கும் காட்சிகள் ஈர்ப்பில்லாத கல்வித் திட்டத்தின் முகத்தை காட்டுகின்றன. ‘நீங்க எவ்வளவு வேணும்னாலும் அடிங்கப்பா. ஆனா என்னிய பள்ளிக் கூடத்துக்கு மட்டும் போகனும்னு சொல்லிடாதீங்க’ என்கிறான் ஒரு மாணவன். கல்வித் திட்டத்திலுள்ள குறைபாடு மாணவனின் அழுகையின் வழியே எப்படிப் பார்த்து இளிக்கிறது.

வறுமை, மோசமான பள்ளிச் சூழல், முரட்டுத் தனமான போதிய பயிற்சியும் திறனும் இல்லாத ஆசிரியர், பெற்றோர் மற்றும் சமூகக் காரணிகள் என நீள்கிறது அவரின் பட்டியல். வறுமையில் உழலும் தன் குடும்பத்திலிருந்து ஒரு வேளை சோறாவது வயிறாற தின்னட்டும் என்று சில பெற்றோர்கள் அனுப்பினால் அந்தச் சோற்றிலும் கை வைக்கும் சில சத்துணவு ஊழியர்கள் இங்கே இருக்கவே செய்கிறார்கள்.

சர்வசிக் அபியான், சக்சஸ், ஏபிஎல் என்று புதிது புதிதாய் கல்வித் திட்டங்கள் வருகின்றன. பயிற்சிகளுக்குப் போய்த் திரும்பும் ஆசிரியர்கள் அயர்ச்சி கொள்வதே நடக்கின்றது. கவர்ச்சிகரமான கற்பித்தல் முறைகளும், பாடங்களும் இருக்கின்றன. ஆனால் அவை திறம்பட கையாளப்படுவதில் நடைமுறை குறைபாடுகள் மலிந்து இருக்கின்றன.

ஆங்கிலம் கணிதம், அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் திறம்பட கற்றுத் தேறாத கிராமப்புற மாணவர்களுக்குக் காரணமாக அமைவது அவர்கள் பெறும் அரைகுறைக் கல்வியே. ஆசிரியர்களிடம் அடிவாங்கும் நிலை தொடர்வதால் பள்ளியை வெறுக்கின்ற மாணவர்களும் அதிகமாக இருக்கின்றார்கள். தனது நண்பர்கள் மாவட்ட ஆட்சித் தலைவராகவும் இயக்குநராகவும் ஆசிரியையாகவும் இருக்கும் போது தான் மட்டும் விவசாயக் கூலியாக இருப்பதை எண்ணித் தனி வகுப்பறையில் அமர்ந்து குமுறும் தங்கரின் கதாபாத்திரம் ஆசிரியரின் வன்முறைக்கு இரையான எண்ணற்ற மாணவர்களின் பிரதிபலிப்பு. ஆசிரியரின் பாலியல் கொடுமைகளுக்கும் சாதியத்திருக்கும் வெறுப்புக்கும் கோபத்திற்கும் ஆளாகி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பலரும் நிறைந்த நாடு தான் நமது நாடு.

இந்தியாவின் தீர்க்கப்படாத, குருதி போல் மறைந்து இயங்குகின்ற சாதியம், பள்ளிச் சூழலையும் அதில் பயிலும் மாணவர்களையும் பாதிக்கின்ற ஒன்றாக இன்னமும் இருக்கிறது. திரைப்படத்தில் வருகின்றதைப் போன்று பல தனியார் பள்ளிகளில் தலித் ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படுவதே இல்லை. ஏதாவது ஒரு பொய்யான காரணத்தைச் சொல்லி அவை காலியாகவே வைக்கப்பட்டிருக்கும். வெளியில் தெரியாத படியான சாதிய அணுகுமுறைகளும் கூட அங்கு உண்டு. தலித் பெண் சமையல்காரர் சமைத்த சத்துணவைச் சாப்பிட மாட்டார்கள் எங்களின் பிள்ளைகள் என்று கிருஷ்ணகிரி பக்கம் பள்ளியை மூடிய பெற்றோர்கள் குறித்து நாம் செய்திகளில் படித்திருக்கிறோம்.

சாதியம் கொஞ்சம் சீறினாலும் பிதுங்கிவிடும் சீழ் பிடித்த புண்போலத்தான் இங்கே பலரின் மனங்களிலும் இருக்கிறது. தனது பள்ளியில் படித்த ஏழை கீழ்ச்சாதி மாணவனை அவன் ஐ.ஏ.எஸ் படித்து நிற்கும் போதும் தன் மகளுக்கு திருமணம் முடித்து வைக்க மறுக்கும் சாதி வெறியராகத் தான் அப்பள்ளியின் நிர்வாகி இருக்கிறார். இவ்வளவு உக்கிரமாக சாதி பார்க்கும் அவர் எப்படி தனது பள்ளியிலும் சாதி பார்க்காது இருப்பார் என்று நமக்கே கேள்வி எழுகிறது. பல எதிர்ப்புகளுக்கு நடுவே அந்தக் காதலரை இணைத்து வைக்கும் போது தங்கர் பச்சான் தன்னை ஒரு புரட்சிகரமான மாற்றுச் சிந்தனை கொண்ட கலைஞனாகப் பதிவு செய்துக் கொள்கிறார். படம் முடிந்து வெளியே வருகிறபோது ஏற்கனவே நான் எழுதிய கவிதை ஒன்று மனதில் ஓடியது...

சிரிக்கக் கூடும் நீங்கள்
நாங்கள் படித்த கதையைச் சொன்னால்
சுவாரசியமாகவும் இருக்கலாம்.
கொத்துப்பட்ட பசியமரத்திலிருந்து
சடசடவென வழியும் பாலென
நிறமற்று வடிகிறது வலி
அதை நினைக்கும் போது

மதிய உணவுக்குப் போட்ட கோதுமை அப்புமாவில்
செத்து விறைந்திருந்த புழுக்கள் உயிர்ப்பெற்று
மூளையெங்கும் நிமிண்டுகின்றன.
மலையடிவாரத்து புளியமரத்தடியிலும்
பூவரசின் கீழும்
கழிந்த வகுப்புகளில்
மேயவரும் பன்றிகளும்
எங்களுடன் படித்தன.

பாண்டுரங்கன் சாருக்கு வாரம் ஒரு முறை காடேறி
சுண்டைக்காய்ப் பறித்து வருவது சுப்பனின் வேலை

பாய் வாத்தியாருக்கோ பள்ளிக்கு வந்தால் தான்
வெளிக்கு வரும்
வாளி நிறைய தண்ணீர் கொண்டு போய்
மலையடிவாரத்து பாறையருகில் வைத்து விட்டு
கெங்கன் காவலிருக்க வேண்டும்.

விட்டல்ராவ் வாத்திக்கு
தேநீர் வாங்கிவருவது வீட்டுக்குப் போய்
சோறு கொண்ர்வது
கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு
அவரை மிதி வண்டியில் அமர்த்த
மிதித்துப் போவது முருகனின் பொறுப்பு

விசாலம் டீச்சருக்கு பூக்கட்டித் தருவதும்
வகுப்பறையைக் கூட்டுவதும்
மிச்சம் வைத்த சோற்¬றா£ தின்று
பாத்திரம் கழுவுவதும் செல்லக் கிளி

கதிர்வேல் வாத்தியார்
ஆங்கிலத்தையும் கணக்கையும்
சுடச் சுடக் காய்ச்சி
குடிப்பதற்கு வைத்ததில் சுடுபட்டு ஓடியவர்கள்
திரும்பவும் படிப்பதற்கு வரவேயில்லை.

இன்று
ரவி பீடி சுற்றுகிறான்
கெங்கன் சாராயம் காய்ச்சுகிறான்
பேரூராட்சியில் குப்பையள்ளுகிறான் சுப்பு.


முருகன் வண்டி ஓட்டுகிறான்
செல்லக்கிளி இட்லி விற்கிறாள்
பெருநகரின் புறமொன்றில்
செங்கல் பிடிக்கிறான் தணிகா.

எங்கள் வகுப்பறையில் வீசிய
புழுதிக் காற்றின் சுழலோடு
நிலையற்று அலைந்து திரிகிறேன் நான்

கனிவும் சிரிப்பும் பொங்கப்பொங்க
பாலச்சு கொட்டும் படி
எங்கள் சிலேட்டுகளில் முதன்முதலாய்
அற்புதம் டீச்சர்
எழுதிய அகரத்தை
எச்சில் குழப்பி அழித்தது யாரெனத் தெரியவில்லை.

பிரம்படி வாங்கித் தரும்
ஒரு கணக்குப் புதிர் போல இருக்கிறது அது.

வகுப்பறைக்குள் எங்களை
நுழையவிட்டவர்கள்
கல்வியை எங்களுக்குள்
நுழைய விடவில்லை.

ஓய்ந்த மாதிரி யோசிக்கின்ற போது கல்வி நிலையில் உள்ள குறைபாட்டையும் ஆசிரியர்கள் மாணவர்கள் மீது செலுத்தும் வன்முறையையும் கல்விச் சூழலில் நிலவும் சாதியத்தையும் தங்கர் பச்சான் இப்படத்தின் ஊடே இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அதை ஏற்றுக் கொள்ளவும், வரவேற்கவும், அலசிப் பார்க்கவும் சமூகம் தயாராக இருக்குமா எனத் தெரியவில்லை.
Pin It