உங்கள் வெற்றிக்கான வாய்ப்புகள் என்ன? சமூகச் சீர்திருத்தங்கள் பலவகைப்பட்டவை. ஒன்று, மக்களின் மதக் கருத்துகளோடு தொடர்பு இல்லாதது; நடுநிலையான அம்சங்களை மட்டுமே கருத்தில் கொள்வது. மற்றொன்று, மக்களின் மதக் கருத்துகளைக் கையாள்வது. இந்த இரண்டாம் வகைச் சீர்திருத்தத்திலும் இரு வகைகள் உள்ளன. ஒன்று, மக்களின் மதக் கொள்கைகளோடு ஒத்துப் போவது. தம் மதத்தில் இருந்து விலகிச் சென்ற மக்கள், தம் சொந்த மதத்திற்கு மீண்டும் திரும்பி அந்த மதத்தின் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அழைப்பு விடுப்பது.

இரண்டாவது வகை, மதக் கொள்கைகளைத் தொட்டு, அவற்றை முழு மூச்சாக எதிர்ப்பது. மதத்தை விட்டு விலகி மதக் கொள்கைகளின் அதிகாரத்தை முற்றிலுமாக நிராகரித்து, அவற்றுக்கு நேர் எதிராக செயல்படுமாறு அழைப்பு விடுப்பது.

சாதியின் புனிதத்தையும் தெய்வீகத்தையும் தகர்க்க வேண்டும்

சாதி என்பது, மத நம்பிக்கைகளின் இயற்கையான வெளிப்பாடே. இந்த மத நம்பிக்கைகள், சாஸ்திரங்களை ஆதாரமாகக் கொண்டவை. இந்த சாஸ்திரங்களோ, தெய்வீகத்தன்மை பெற்ற ஞானிகளின் கட்டளைகளைக் கொண்டவை என்று நம்பப்படுகின்றன. அந்த ஞானிகளோ, மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட பேரறிவு பெற்றவர்கள் என்றும், எனவே, அத்தகைய ஞானிகளின் கட்டளைகளை மீறி நடப்பது பெரும் பாவமாகும் என்பதும் மத நம்பிக்கை. எனவே, சாதியை விட்டொழித்து விடும்படி மக்களைக் கேட்டுக்கொள்வது - மக்களின் அடிப்படையான மத நம்பிக்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்டு நடந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்வதே ஆகும்.

சாதியை ஒழிப்பது என்பது, மூன்றாவது வகைப்பட்ட சீர்திருத்தம் ஆகும். மேற்சொன்ன முதலிரண்டு சீர்திருத்தங்களும் எளிதானவை. இந்த மூன்றாம் வகைச் சீர்திருத்தமோ பிரமிக்கத்தக்க பெரும் பணியாகும். ஏறக்குறைய அசாத்தியம் என்றே கூறலாம். சமூக அமைப்பின் புனிதத்தைக் காத்துவர வேண்டும் என்று இந்துக்கள் எண்ணுகின்றனர். சாதி, தெய்வீக அடிப்படை கொண்டதாக இருக்கிறது. எனவே, சாதிக்குத் தரப்பட்டுள்ள புனிதத்தையும் தெய்வீகத்தையும் நீங்கள் ஒழித்தாக வேண்டும். அதாவது, வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களின் அதிகாரத்தை ஒழிக்க வேண்டும்.

நம் குறிக்கோள் என்ன என்பதைத் தெரிந்து கொள்வது முக்கியம். அந்தக் குறிக்கோளை அடைவதற்கான சரியான வழிவகைகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்வது அதைவிட முக்கியம். எனவே தான், சாதியை ஒழிப்பதற்கான வழி என்ன என்பதை வலியுறுத்திக் கூறினேன். சாதியை ஒழிப்பதற்கான உண்மையான வழி என்ன என்பதை நீங்கள் அறியாமல் இருந்தால்், உங்கள் முயற்சிகள் இலக்கு தவறி விடும். என் ஆய்வு சரிதான் என்றால், நீங்கள் மாபெரும் பணியை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இந்தப் பெரும் பணியைச் செய்து முடிக்க உங்களால் முடியுமா, முடியாதா என்பதை நீங்கள்தான் கூற வேண்டும்.

சாதி ஒழிப்பின் எதிரிகள் யார்?

உண்மையில் இந்தப் பணி மிகக் கடினமானது என்பது, என் சொந்தக் கருத்து. நான் ஏன் இப்படி நினைக்கிறேன் என்பதை நீங்கள் அறிய விரும்பலாம். அதற்கு காரணங்கள் பல. அவற்றில் நான் முக்கியம் என்று கருதும் சில காரணங்களை மட்டும் கூறுகிறேன். சாதி ஒழிப்புக்குப் பார்ப்பனர்கள் காட்டுகிற பகைமை ஒரு காரணம்.

அரசியல் சீர்திருத்த இயக்கத்தின் முன்னணியில் பார்ப்பனர்களே இருக்கிறார்கள். சில நேரங்களில், பொருளாதார சீர்திருத்த இயக்கத்திலும் முன்னணியினராக இருக்கிறார்கள். சாதி தடைகளைத் தகர்த்தெறிவதற்காக எழுப்பப்பட்டிருக்கும் பெரும்படையின் பின்னால் செல்லும் ஆதரவாளர்களாகக்கூட அவர்கள் இல்லை.

வருங்காலத்திலாவது பார்ப்பனர்கள் சாதி ஒழிப்பில் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்ற நம்பிக்கைக்கு இடமுண்டா? இல்லை என்றே நான் கூறுவேன். ஏன் என்று நீங்கள் கேட்கக் கூடும். சமூக சீர்திருத்தத்தைப் பார்ப்பனர்கள் தொடர்ந்து புறக்கணிப்பதற்குக் காரணம் எதுவும் இல்லையே என்றும் நீங்கள் வாதிடலாம்.

இந்து சமூகத்தின் பேரழிவுக்குக் காரணமாய் இருப்பது சாதியே என்பதை பார்ப்பனர்கள் நன்கு அறிவார்கள். விழிப்புணர்வு பெற்ற வகுப்பினர் என்ற முறையில், சாதியின் விளைவுகளைப் பற்றி அக்கறை இல்லாதவர்களாக பார்ப்பனர்கள் இருப்பார்கள் என்று கூறமுடியாது என்றெல்லாம் நீங்கள் வாதிடலாம். நடுநிலைப் பார்ப்பனர்களும் இருக்கிறார்கள்; வைதீகப் பார்ப்பனர்களும் இருக்கிறார்கள். எனவே, சாதியை ஒழிக்க விரும்புகிற மக்களுடன் சேர்ந்து கொள்ள வைதீகப் பார்ப்பனர் மறுத்துவிட்டாலும் கூட, நடுநிலைப் பார்ப்பனர்கள் சாதி ஒழிப்பில் தீவிரமாக இறங்கலாம் என்றும் நீங்கள் கூறலாம்.

நடுநிலைப் பார்ப்பனர்கள் சாதிக்கு எதிரானவர்களா?

இவை எல்லாம் உண்மை என்றே தோன்றுகிறது. ஆனால், சாதி அமைப்பைத் தகர்த்தெறிவது, பார்ப்பன சாதியை மிகக் கடுமையாகப் பாதிக்குமென்பதை மறந்துவிடக்கூடாது. பார்ப்பன சாதியின் அதிகாரத்தையும் சிறப்பு உரிமைகளையும் அழிப்பதே இறுதியான குறிக்கோள் என்ற நிலையில், சாதி ஒழிப்பு போன்ற எந்த ஓர் இயக்கத்தையும் வழி நடத்திச் செல்ல பார்ப்பனர்கள் ஒத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது, அறிவுடைமை ஆகுமா? வைதீகப் பார்ப்பனர்களுக்கு எதிராக நடத்தப்படும் ஓர் இயக்கத்தில் நடுநிலைப் பார்ப்பனர்கள் பங்கு கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது அறிவுடைமை ஆகுமா?

என் கணிப்பின்படி, பார்ப்பனரிடையே வைதீகர், நடுநிலையாளர் என்ற வேறுபாடு இருப்பதாக எண்ணுவதே அபத்தம். இரு சாராருமே தாயாதிகள்தான். ஒரே உடலின் இரு கைகள். ஒரு கை பாதிக்கப்படும்போது, மற்றது அதைக் காக்கப் போராடவே செய்யும். இது தொடர்பாக ‘ஆங்கில அரசியல் சாசன'த்தில் பேராசிரியர் டிசே கூறியுள்ள கருத்தாழமிக்க குறிப்பைப் பார்ப்போம். நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம் குறித்த நடைமுறை வரைமுறைகள் பற்றி அவர் கூறுகிறார் :

"எந்த ஒரு சுயேச்சை அமைப்பும் - குறிப்பாக நாடாளுமன்றமும் - தன் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும்போது, இரண்டு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே இயங்குகிறது. அவற்றில் ஒன்று புற நிலைக் கட்டுப்பாடு; மற்றொன்று அகநிலைக் கட்டுப்பாடு. மக்கள் அனைவருமோ அல்லது அவர்களில் பெரும்பாலரோ அரசின் அதிகாரங்களை மீறுவார்களா, எதிர்ப்பார்களா என்பதில்தான் - அரசின் உண்மையான அதிகாரத்தின் மீதிருக்கும் புறக்கட்டுப்பாடு அடங்கி இருக்கிறது. அக நிலைக் கட்டுப்பாடு, அரசு அதிகாரத்தின் இயல்பை மட்டும் பொறுத்ததாக உள்ளது. ஒரு கொடுங்கோலனும் கூட தன் குணங்களைப் பொறுத்தே அதிகாரம் செலுத்துகிறான். அவன் வாழும் சூழ்நிலை, அவன் கால தர்ம நியாயங்கள், அவன் வாழும் சமூகம் - இவற்றால்தான் அவன் குணங்கள் உருவாக்கப்படுகின்றன.

சுல்தான் ஒருவன் தான் விரும்பினாலும் கூட முகமதிய உலகின் மதத்தை மாற்ற முடியாது; அப்படி அவனால் செய்ய முடிந்தாலும் அவன் பெரும்பாலும் செய்ய மாட்டான். ஏனென்றால், அவ்வாறு செய்வது இஸ்லாமின் தலைவனே இஸ்லாமை அழிப்பது போல் ஆகிவிடும். சுல்தான் தன் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள அகநிலைக் கட்டுப்பாடு, புறநிலைக் கட்டுப்பாட்டைப் போலவே வலிமையானதாகத்தான் உள்ளது. போப் இந்த அல்லது அந்தச் சீர்திருத்தத்தைச் செய்திருக்கலாமே என்ற பயனற்ற கேள்விகளைக் கேட்கிறார்கள். இதற்கு சரியான விடை: "புரட்சி மனப்பான்மை கொண்டவன் போப் ஆக மாட்டான். போப் ஆனவன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான்'' என்பதுதான்.

புரட்சிப் பார்ப்பனராக இருக்க முடியுமா?

இந்தக் கருத்து இந்தியாவின் பார்ப்பனர்களுக்கும் நன்றாகப் பொருந்திவரும். போப் ஆகிவிட்ட ஒரு மனிதர், புரட்சிக்காரன் ஆக விரும்பமாட்டார் என்றால், பார்ப்பனராகப் பிறந்தவன் புரட்சிக்காரன் ஆக நினைக்கவே மாட்டான். நீலக்கண்களை உடைய குழந்தைகளை எல்லாம் கொன்றுவிட வேண்டுமென பிரிட்டிஷ் நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது அர்த்தமற்றது என்று லெஸ்லே ஸ்டீபன் கூறியதைப் போல, சமூகச் சீர்திருத்த விஷயங்களில் பார்ப்பனர்கள் புரட்சிகரமானவர்களாக இருப்பார்கள் என எதிர்பார்ப்பதும் அர்த்தமற்றதே ஆகும்.

சாதி ஒழிப்பு இயக்கத்துக்குத் தலைமை தாங்க, பார்ப்பனர்கள் முன்வருவார்களா - மாட்டார்களா என்பது பெரிய பிரச்சனை ஒன்றும் இல்லை என்று உங்களில் சிலர் கூறலாம். ஒரு சமூகத்தில் அறிவாளிகளுக்குள்ள பங்கைப் புறக்கணிக்கும் போக்கு இது. வரலாற்றைப் படைக்கிறவன் மகத்தான தனி மனிதனே என்கிற ÷காட்பாட்டை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களோ இல்லையோ; ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கமாக இல்லை என்றாலும் கூட, அந்த நாட்டை ஆட்டிப் படைக்கும் அளவுக்கு செல்வாக்குடன் இருப்பது அறிவாளிகள் வர்க்கமே என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே உணர்கின்ற ஆற்றல், அந்த வர்க்கத்துக்கு உண்டு. அந்த வர்க்கமே மக்களுக்கு அறிவுரை கூறி அவர்களை வழிநடத்திச் செல்லும் ஆற்றல் உள்ள வர்க்கம். எந்த நாட்டிலும் பரந்துபட்ட மக்கள் அறிவாளிகளைப் போன்ற சிந்தனையோடும் செயல்களோடும் வாழ்க்கையை நடத்துவதில்லை. பொதுமக்கள் அறிவாளிகளைப் பார்த்து, அது போல நடக்கும் இயல்பு கொண்டவர்கள். அவ்வாறே நடக்கவும் செய்கிறார்கள். ஒரு நாட்டின் "தலையெழுத்து' முழுவதுமே அந்த நாட்டின் அறிவாளி வர்க்கத்தைச் சார்ந்து இருக்கிறது என்று சொன்னால், அது மிகையாகாது. அறிவாளி வர்க்கம் நேர்மையானதாக, சுதந்திரமானதாக, தன்னல மற்றதாக இருக்குமானால் - நெருக்கடி நேருகிறபோது அந்த வர்க்கம் முன் முயற்சியில் இறங்கி மக்களை வழிநடத்திச் செல்லும் என நம்பலாம்.

சாதியைக் காப்பாற்றும் அறிவாளி வர்க்கம்

அறிவு தன்னளவிலேயே ஒரு சிறந்த குணம் ஆகிவிட முடியாது என்பது உண்மைதான். அது குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான சாதனமாகத்தான் இருக்கிறது. அறிவுள்ள மனிதன் அடைய வேண்டிய குறிக்கோள் என்ன என்பதைப் பொறுத்துதான் அறிவு பலன் அளிக்கும். அறிவுள்ள மனிதன் ஒரு நல்ல மனிதனாகவும் இருக்கலாம். அவ்வாறே ஒரு போக்கிரியாகவும் ஆகலாம். அது÷பாலவே, அறிவாளி வர்க்கம் என்பது, தவறான வழியில் சென்று கொண்டிருக்கிற மனித இனத்துக்கு உதவிக்கரம் நீட்டி - மீட்டு நல்வழிப்படுத்துகிற உயர்ந்த உள்ளம் கொண்ட உத்தமர்களைக் கொண்ட குழுவாகவும் இருக்கலாம்; அல்லது கருத்து வேறுபாடுகள் கொண்ட சிறு சிறு குழுக்களுக்கு ஆதரவான வட்டமாகவோ, மோசடிக் கும்பலாகவோ இருந்து ஆதாயம் அடைகிறவர்களாகவும் இருக்கலாம்.

இந்தியாவில் அறிவாளி வர்க்கம் என்பது, பார்ப்பன சாதியின் மற்றொரு பெயராகவே இருப்பது பரிதாபகரமான நிலை என்று நீங்கள் எண்ணக்கூடும். அவை இரண்டும் ஒன்றாக இருப்பது குறித்தும் - அறிவாளி வர்க்கம் என்பது, ஒரே ஒரு சாதிக்குள் அமைந்து இருப்பதற்காகவும் நீங்கள் வருந்தக்கூடும். இந்த அறிவாளி வர்க்கம் நாட்டின் நலன்களிலும் விருப்பங்களிலும் அக்கறை காட்டுவதற்குப் பதிலாக, சாதி நலனின் பாதுகாவலனாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டிருக்கிற - பார்ப்பன சாதியின் நலன்களிலும் விருப்பங்களிலும் அக்கறை காட்டி வருகிறதே என்று நீங்கள் வருந்தக்கூடும். இவை எல்லாம் வருத்தம் தரக்கூடியவைதான்.

ஆனாலும், இந்துக்களின் அறிவாளி வர்க்கமாக பார்ப்பனர்களே இருக்கிறார்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை. பார்ப்பன சாதி, அறிவாளி வர்க்கமாக மட்டும் இருக்கவில்லை. இந்துக்களில் மற்ற சாதியினர் மத்தியில் பெருமதிப்புக்குரிய வர்க்கமாகவும் இருக்கிறது. பார்ப்பனர்கள் ‘பூதேவர்'கள் (பூமியில் உள்ள கடவுள்கள்) என்று இந்துக்களுக்குக் கற்பிக்கப்பட்டு உள்ளது. பார்ப்பனர்கள் மட்டுமே இந்துக்களுக்கு குருவாக இருக்க முடியும் என்றும் இந்துக்களுக்கு கற்பிக்கப்பட்டு உள்ளது. மநு பின்வருமாறு கூறுகிறான் : "தர்ம சாத்திரத்தில் குறிப்பிடப்படாத விசயங்களைப் பொறுத்தமட்டில், நல்லொழுக்க முடைய பார்ப்பனர்களின் சொற்களே பின்பற்றி நடக்கத் தக்கதாகும்''

அனாம்நாதேஷû தர்மேஷû கதம் ஸ்யாதிதி சேத்பவேத் I
யம் சிஸ்டா பிராஹ்மணா ப்ரூயூ : ஸ தர்ம : ஸ்யாதசங்கித : II

மற்ற சாதியினரைத் தன் பிடிக்குள் வைத்திருக்கும் இது போன்ற ஓர் அறிவாளி வர்க்கம், சாதி சீர்திருத்தத்துக்கு எதிரியாக இருக்கும் போது, சாதி அமைப்பைத் தகர்த்தெறிவதற்கான இயக்கத்தில் வெற்றி வாய்ப்புகள் எட்டாக்கனி என்றே எனக்குத் தோன்றுகிறது.

அடிமைகள் சம நிலையில் இல்லை

சாதி அமைப்பைத் தகர்த்தெறியும் பெரும்பணி மிகக் கடினம் என்பதற்கான இரண்டாவது காரணம் என்ன? சாதி அமைப்பு, இரு அம்சங்களைக் கொண்டது. முதல் அம்சம், மனிதர்களைத் தனித் தனி சமூகங்களாகப் பிரித்து வைக்கிறது. இரண்டாவது அம்சம், அவ்வாறு பிரிக்கப்பட்ட சமூகங்களை சமூக அந்தஸ்தில் மேலும் கீழுமாக வரிசைப்படுத்தி வைக்கிறது. ஒவ்வொரு சாதியும் - சாதிப் படிநிலையில் தான் மற்றொரு சாதியை விட மேல்நிலையில் இருப்பதில் ஆறு தல் அடைகிறது; பெருமிதம் கொள்கிறது. இவ்விதமான படிநிலை அமைப்பின் வெளிப்படையான அறிகுறியாக ‘அஷ்டாதிகாரங்கள்', ‘சம்ஸ்காரங்கள்' என்னும் பெயரால் சமுதாய மற்றும் மதவியல் உரிமைகளும் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

ஒரு சாதி எந்த அளவுக்கு உயர்வானதாக இருக்குமோ, அந்த அளவுக்கு இந்த உரிமைகளும் அதிகமானவையாக இருக்கும். ஒரு சாதி எந்த அளவுக்கு கீழானதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு இந்த உரிமைகளும் குறைவானவையாக இருக்கும். ஆக, சாதிகளை இந்த விதமாகத் தரம் பிரிப்பதும் படிநிலையில் அமைப்பதும், சாதி அமைப்புக்கு எதிராக பொதுவான முன்னணி ஒன்றை உருவாக்குவதைச் சாத்தியம் அற்றதாகச் செய்துவிடுகிறது. தன்னை விட உயர்ந்த தாக உள்ள ஒரு சாதியோடு கலப்புமணம் செய்யவோ, சேர்ந்து உண்ணவோ வேண்டும் என்று எந்த ஒரு சாதியேனும் உரிமைக் குரல் எழுப்பினால், அக்குரல் ஒடுக்கப்பட்டு விடுகிறது. உரிமைக் குரல் எழுப்புகிற சாதி, தன்னிலும் கீழான சாதியினரோடு கலப்பு மணம் செய்யவும், சேர்ந்து உண்ணவும் செய்வதுதானே என்று விஷமிகள்அந்த வினாடியே கூறிவிடுகின்றனர். அது போன்ற விஷமிகள் பார்ப்பனர்களில் ஏராளமாக உள்ளனர்.

எல்லாருமே சாதி அமைப்பின் அடிமைகளாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், இந்த அடிமைகள் எல்லாரும் அந்தஸ்தில் சமமானவர்களாக இல்லை.

இழப்பதற்கு அடிமை விலங்குகளைத் தவிர, ஜாதி இருக்கிறதே!

பொருளாதாரப் புரட்சி ஒன்றை ஏற்படுத்த, பாட்டாளிகளைத் தட்டி எழுப்ப அவர்களிடம் மார்க்ஸ் கூறினார்: "அடிமை விலங்குகளைத் தவிர இழப்பதற்கு வேறு எதுவும் உங்களிடம் இல்லை'' என்று.

ஆனால், சமுதாய மற்றும் மதவியல் உரிமைகளை சில சாதிகளுக்கு அதிகமாகவும், சில சாதிகளுக்கு குறைவாகவும் பல்வேறு சாதிகளுக்கு இடையே மிக வஞ்சகமாகவும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ள நிலையில், சாதியமைப்புக்கு எதிராக இந்துக்களைத் தட்டி எழுப்ப, காரல் மார்க்சின் முழக்கம் சிறிதும் பயன் அளிக்காது. சாதிகள் உயர்ந்தவை தாழ்ந்தவை என்ற வரிசைப்படி தரம் பிரிக்கப்பட்டுள்ளன. தங்கள் அந்தஸ்தை சாதிகள் மிகவும் அக்கறையோடு காப்பாற்றி வர எண்ணுகின்றன. சாதிய அமைப்பு ஒழிக்கப்பட்டால், சில சாதிகள் மற்ற சாதிகளைவிட அதிகமாக தங்கள் தனியுரிமைகளையும், அதிகாரங்களையும் இழக்க வேண்டியிருக்கும் என்பது எல்லாரும் அறிந்த உண்மை. எனவே, சாதி அமைப்பு என்னும் கோட்டையைத் தகர்க்க, இந்துக்களை பொதுவான ஓர் அணியாக ஒன்று திரட்ட உங்களால் முடியாது.

22

"சாதி பகுத்தறிவுக்குப் புறம்பானது. எனவே, சாதியை விட்டொழித்து விடுங்கள். பகுத்தறிவோடு நடந்து கொள்ளுங்கள்'' என்று இந்துக்களைக் கேட்டுக் கொள்ள உங்களால் முடியுமா? அப்படிக் கேட்பது மற்றொரு கேள்வியை எழுப்புகிறது. தன் பகுத்தறிவின்படி நடக்க இந்து மதத்தவனுக்குச் சுதந்திரம் உண்டா? இந்துவின் நடத்தையைப் பொறுத்த வரையில், மநு மூன்று கட்டளைகளைப் பிறப்பித்து இருக்கிறான்:

வேதம்: ஸ்மிருதி : சதாச்சார் : ஸ்வஸ்ளச ப்ரிய மாத்மன : I

இந்த மூன்று கட்டளைகளுக்கும் இந்து கீழ்ப்படிந்தே நடக்க வேண்டும். இந்த ஆணைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதில் பகுத்தறிவு என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஓர் இந்து பகுத்தறிவோடு நடந்து கொள்ள முடியாது

இந்து ஒருவன் வேதத்தையோ, ஸ்மிருதிøயயோ, சதாச்சாரத்தையோ பின்பற்றியாக வேண்டும். அவன் வேறு எதையும் பின்பற்ற முடியாது. முதலாவதாக, வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் சொல்லப்பட்டுள்ள சுலோகங்களின் பொருள் என்ன என்பது பற்றி சந்தேகம் ஏற்படுகிறபோது, உண்மையான பொருளை அறிந்து கொள்வது எப்படி? மிக முக்கியமான இந்தக் கேள்விக்கு மநு மிகவும் திட்டவட்டமாகப் பதில் கூறுகிறான்:

யோவமன்யேத் தே லே ஹேதுசாஸ்த்ராஸ்ராயாத் த்விஜ : I
ஸ ஸாதுபிர்பஹிஷ்கார்யோ நாஸ்த்கோ வேதநன்தக் : II

"வேதங்களுக்கும் ஸ்மிருதிகளுக்கும் பொருள் கூறுவதில் பகுத்தறிவைப் பயன்படுத்துவது, முழுமையான கண்டனத்துக்குரியதாகும்'. பகுத்தறிவை இவ்வாறு பயன்படுத்துவது, நாத்திகத்தைப் போலவே பாவகரமானது. அதற்கான தண்டனை சாதிவிலக்கமே. வேதத்திலோ, ஸ்மிருதியிலோ சொல்லப்பட்டு உள்ள ஒரு விசயத்தைப் பற்றி இந்து மதத்தவன் பகுத்தறிவோடு சிந்திக்க முடியாது. வேதங்களுக்கும் ஸ்மிருதிகளுக்கும் இடையே ஒரு விசயத்தில் மாறுபட்ட கருத்துகள் இருந்தால், அதையும் பகுத்தறிவால் தீர்த்துக் கொள்ளக் கூடாது. இரண்டு சுருதிகளுக்கிடையே கருத்து மாறுபாடு ஏற்படுகிறபோதும், அவை சம அதிகாரம் கொண்டவையாகவே கருதப்பட்டு - அவற்றில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றலாம். இந்த சுருதிகளில் பகுத்தறிவுக்கு ஏற்றதாக உள்ளது எது என்பதை அறிய எந்த முயற்சியும் செய்யக்கூடாது என்கிறான் மநு.

ஸ்ருதித்வைதம் து யத்ர ஸ்யாப்தத்ர தர்மாவுபெள ஸ்மருதெள : I
"ஸ்ருதி'க்கும் "ஸ்மிருதி'க்கும் இடையே மாறுபாடு தோன்றும்போது "ஸ்ருதி' சொல்வதைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதிலும்கூட, பகுத்தறிவுக்கு ஏற்றபடி இருப்பது எது என்பதை அறிய முயற்சி செய்யக் கூடாது என்கிறான் மநு.

யா வேதபாஹ்யா யாஸ்ச காஸ்ச குத்ருஷ்ட : I
ஸர்வாஸ்தா நஷ் வலா : பரேத்ய தமோநஸ்டா ஹித் :
ஸ்ம்ருதா : II

இரண்டு ஸ்மிருதிகளுக்கு இடையே மாறுபாடு இருக்கிறது போது, மநு ஸ்மிருதியில் கூறுகிறபடிதான் நடந்து கொள்ள வேண்டும். பகுத்தறிவுக்குப் பொருந்தி வருவது எந்த ஸ்மிருதி என்று அறிந்து கொள்வதற்கான எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படக் கூடாது. இந்த விதி, பிரகஸ்பதியால் வகுக்கப்பட்டது:

வேதாயத்வோபநபந்திருத்வத் ப்ரமாண்ய ஹி மனோ: ஸ்மருத்
மன்வர்த்தவிபரீதா து யா ஸ்ம்ருதி ஸா நி சஸ்யதே: II
எனவே, எந்த ஒரு விஷயத்திலும் ஸ்மிருதிகளும் ஸ்ருதிகளும் திட்டவட்டமான கட்டளைகளைத் தந்திருக்கிறபோது, ஓர் இந்துவானவன் தன் பகுத்தறியும் ஆற்றலைப் பயன்படுத்த சுதந்திரம் இல்லை. மகாபாரதத்தில் இந்த விதி வகுத்தளிக்கப்பட்டுள்ளது:

புராண மாநவோ தர்ம : ஸாங்கோ வேத ஸ்சித்ஸித் : I
ஆங்யாஸித்தானி சத்வாரி ந ஹந்தவ்யானி ஹேதுபி : II

சுயநலன்களுக்காக சாதி விதியை மீறும் இந்து

இந்து மதத்தவன், கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு நடந்தாக வேண்டும். சாதியும் வர்ணமும் வேதம் மற்றும் ஸ்மிருதியின் விளைவாகும். எனவே, "பகுத்தறிவுடன் இருங்கள்'' என்று இந்து மதத்தவனைக் கேட்டுக் கொண்டாலும் கூட, எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. சாதிகள் - வர்ணங்கள் ஆகியவற்றைப் பொறுத்த மட்டில், பகுத்தறிவைப் பயன்படுத்த சாஸ்திரங்கள் இந்து மதத்தவனை அனுமதிப்பது இல்லை என்பதுடன் - சாதிகள், வர்ணங்கள் மேல் தனக்குள்ள நம்பிக்கையின் அடிப்படை என்ன என்பதைப் பகுத்தறிவு வழி நின்று பரிசீலிப்பதற்கான எந்த விதமான வாய்ப்பும் தோன்றாதபடியும் சாஸ்திரங்கள் தொடர்ந்து கவனமாகப் பார்த்துக் கொள்கின்றன.

புகைவண்டிப் பயணங்களின்போதும் வெளிநாட்டுப் பயணங்களின் போதும் சாதிவிதிகளைப் புறக்கணிக்கிற லட்சக்கணக்கான இந்துக்கள், மற்றபடி அன்றாட வாழ்க்கையில் சாதி விதிகளைக் கடைப்பிடிக்க பெருமுயற்சி செய்வது, மற்ற மதத்தவர் பார்வையில் விசித்திரமாகவே இருந்து வருகிறது. இது ஏன் என்பதை ஆராய்ந்தால், இந்துவின் பகுத்தறியும் ஆற்றலுக்கு பூட்டப்பட்டு இருக்கிற மற்றொரு விலங்கு வெளிச்சத்துக்கு வருகிறது.

பொதுவாக மனித வாழ்க்கை, பழக்க வழக்கத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. விழிப்புணர்வுடன் கூடிய சிந்தனையின் அடிப்படையில் அல்ல. ஒரு நம்பிக்கைக்கோ, ஊகத்துக்கோ அல்லது அறிவுக்கோ ஆதாரமாக இருப்பது எது? அது நம்மை எங்கே இட்டுச் செல்லும் என்பது பற்றி - தீவிர மாகவும் இடைவிடாமலும் ஆழமாகவும் சிந்திப்பதே விழிப்புணர்வுடன் கூடிய சிந்தனை ஆகும். இது மிகவும் அபூர்வமாகவே காணப்படுகிறது. இவ்வகையான சிந்தனை, ஒரு நெருக்கடி நிலை ஏற்படும்போது மட்டுமே வருகிறது. இந்து ஒருவனின் வாழ்க்கையில் புகைவண்டிப் பயணமும் வெளிநாட்டுப் பயணமும் உண்மையிலேயே நெருக்கடியான நேரங்கள் ஆகும்.

இந்து ஒருவன் "என்னால் சாதி விதிகளை எல்லா நேரங்களிலும் கடைப்பிடிக்க முடியவில்லை; இந்த நிலையில் சாதி என்கிற ஓர் அமைப்பு எதற்காகத்தான் இருக்கிறதோ'' என்று தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை. ஒரு கட்டத்தில் சாதி விதிகøள மீறி நடக்கிறான். அடுத்த கட்டத்திலோ சாதி விதிக்கு, எவ்வித எதிர்ப்பும் இன்றி அடிபணிகிறான். இத்தகைய முன்பின் முரண்பட்ட போக்குக்குக் காரணம் சாஸ்திரங்கள்தான்!

"சாத்தியமானவரை சாதிவிதி முறைகளைப் பின்பற்றி நட, அப்படி நடக்க முடியாதபோது அதற்கென்று உண்டான பிராயச்சித்தத்தைச் செய்'' என்று சாஸ்திரம் விதித்திருக்கிறது. இந்த பிராயச்சித்தக் கோட்பாட்டின் மூலமாகப் பெறப்படும் சமரச உணர்வைக் கொண்டு, சாஸ்திரங்கள் சாதியின் வாழ்க்கையை நிரந்தரமாக நீட்டிக்கின்றன. விழிப்புணர்வுடன் கூடிய சிந்தனை முறையை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகின்றன. இல்லையென்றால், இந்த சிந்தனைப் போக்கே சாதிய மனநிலையை ஒழித்துக்கட்டி இருக்கும்.

சாதியையும் தீண்டாமையையும் ஒழித்துக்கட்டும் பெரும்பணியில் எத்தனையோ பேர் இறங்கி இருக்கிறார்கள். ராமானுஜர், கபீர் போன்றவர்கள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுடைய செயல்பாடுகளை எல்லாம் ஏற்கவும், அவற்றைப் பின்பற்றி நடக்குமாறு இந்துக்களைத் தூண்டவும் உங்களால் முடியுமா? ஸ்ருதியும் ஸ்மிருதியும் மட்டுமல்ல, சதாச்சாரமும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டளைகளாகும் என்று மநு வலியுறுத்தி உள்ளார். இங்கு சாஸ்திரங்களை விட, சதாச்சாரத்துக்கே உயர்ந்த மதிப்பு தரப்பட்டு உள்ளது.

யத்யதாச்சர்யதே யேந் தர்மய வாடதர்மமேவ் வா : 1
தேஸ்ஸ்யாசரண் நித்யம் சரித்ரம் தத்திகீர்திதம் : II

இதன்படி சதாச்சாரம் என்பது, தர்மமாயினும் அதர்மமாயினும், சாஸ்திரங்களோடு ஒத்துப்போனாலும் மாறுபட்டாலும் அதையே பின்பற்றி நடக்க வேண்டும். அப்படியானால், சதாச்சாரம் என்றால்தான் என்ன? சதாச்சாரம் என்பது சரியான செயல்கள் அல்லது நல்ல செயல்கள் - அதாவது நல்ல, நியாய உள்ளம் படைத்த மனிதர்களின் செயல்கள் என்று எவரேனும் நினைத்தால், அது முற்றிலும் தவறு.

சதாச்சாரத்தின் பொருள் அதுவல்ல; பழமையான பழக்க வழக்கங்கள் - அவை நல்லதாயினும் கெட்டதாயினும் - அதையே சதாச்சாரம் என்பர் :

யஸ்மின் தேசே ய ஆச்சார் : பாரம்பாயக்ரமாகத : I
வர்ணாநாம் கில் ஸர்வேஷõம் ஸ ஸதாச்சார் உச்யதே : II

கடவுள் சொல்லாததை செய்ய தடைவிதிக்கும் சாஸ்திரங்கள்

சதாச்சாரம் என்றால் நல்ல செயல்கள் அதாவது, நல்ல மனிதர்களின் செயல்கள் என்று புரிந்து கொண்டு அந்த நல்ல வழியிலே மக்கள் நடந்து விட்டால் என்ன செய்வது என்று பயந்து, வேறுவிதமாகப் புரிந்து கொள்வதற்கு இடமே வைக்காமல் சில கட்டளைகளை ஸ்மிருதிகள் பிறப்பித்து உள்ளன. அதாவது, ஸ்மிருதிகள், சுருதிகள், சதாச்சாரங்கள் ஆகியவற்றுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில், கடவுள்களின் நல்ல செயல்களே ஆனாலும், அவற்றை கூடப் பின்பற்றி நடக்கக்கூடாது என்று அந்தக் கட்டளைகள் இந்துக்களுக்கு விதித்துள்ளன. இது மிகவும் அசாதாரண மானதாக, மிகவும் வக்கிரமானதாகத் தோன்றலாம். ஆனால், தேவர்கள் சொல்வதை மனிதர்கள் செய்யக் கூடாது என்று இந்துக்களுக்கு சாஸ்திரங்கள் தடைவிதித்து உள்ளன என்பதே உண்மை.

ந வேதசரிதம் சரேத்

சீர்திருத்தவாதியிடம் உள்ள இரண்டு ஆற்றல் வாய்ந்த ஆயுதங்களான பகுத்தறிவையும் ஒழுக்கத்தையும் அவன் பெறமுடியாமல் செய்வது என்பது, அவனை செயலற்றவனாக்குவதே ஆகும். பகுத்தறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் சாதிக்கும் உள்ள தொடர்பை எண்ணிப் பார்ப்பதற்கான சுதந்திரமற்ற நிலையில் மக்கள் இருக்கும்போது, நீங்கள் சாதியை எப்படி ஒழிக்கப் போகிறீர்கள்? சாதியமைப்பு என்கிற கோட்டையில் பகுத்தறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் இடமே இல்லை. அந்தக் கோட்டைக்குள்ளே இருப்பது பார்ப்பனப் படை. அது, அறிவாளி வர்க்கமாகவும் இந்துக்களின் பிறவித் தலைவனாகவும் உள்ள படை. அது வெறும் கூலிப்பட்டாளம் அல்ல. தன் தாயகத்துக்காக ஜீவமரணப் போராட்டம் நடத்தும் வீரப்பட்டாளம்.

இந்துக்களிடையே உள்ள சாதி அமைப்பைத் தகர்த்தெறிவது - ஏறக்குறைய அசாத்தியம் என்று நான் நினைப்பது ஏன் என்பது இப்போது உங்களுக்குப் புரியும். எப்படியானாலும், சாதி அமைப்பு என்னும் கோட்டையில் பிளவு ஒன்றை ஏற்படுத்துவதற்கே யுகங்களாகும். சாதிய அமைப்பைப் பிளவு படுத்த நீண்டகாலம் ஆகும் என்றாலும் சரி அல்லது அந்தப் பெரும்பணியை வெகுவிரைவில் முடித்துவிடலாம் என்றாலும் சரி, நீங்கள் ஓர் உண்மையை மறக்கக்கூடாது.

சாதிக்கோட்டையில் பிளவு ஏற்படுத்த வேண்டுமென்றால், பகுத்தறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் ஒரு சிறிதும் இடம் கொடுக்காத வேதங்களுக்கும் சாஸ்திரங்களுக்கும் வெடி வைத்தே தீர வேண்டும். ஸ்ருதிகள் மற்றும் ஸ்மிருதிகளாலான மதத்தை அழித்தொழிக்க வேண்டும். வேறு எந்த செயலும் பயன் தராது. இதுவே என் முடிவான கருத்தாகும்.
Pin It