சுற்றி வைத்த நெருப்பின் சுவடு பற்றி எரியும் குடிசையிலிருந்து, கருகும் உயிர்களுக்கு இடையில் கசிந்துருகும் தாய்மையால் தனது கைக்குழந்தையின் உயிரைக் காப்பாற்ற கிடைத்த இடுக்கின் வழியே தூக்கி எரிந்த தாயின் மீது மீண்டும் அந்த குழந்தை வந்து விழுந்த கொடூரம் நடந்த, அரைப்படி நெல்மணிகளை கூலியாய் கேட்டதற்காக 44 உயிர்கள் பொசுக்கப்பட்ட வெண்மணி தினமான அதே டிசம்பர் 25.

விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ? புகழ் மைந்தன் தோன்றினானே! கல்வாரி மலையிலே கல் ஒன்று பூப்பூக்க கருணைமகன் தோன்றினானே! நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாக தோன்றின்னே! முட்காடு எங்குமே பூக்காடு தோன்றவே புவிராஜன் தோன்றினானே (நன்றி: கவிஞர் வைரமுத்து) என கிருத்துவர்கள் வருத்தப்பட்டு பாரம் சுமந்த சிசுபாலன் பிறந்த நாளை கொண்டாடும் அதே டிசம்பர் 25.

இந்த தேசத்தை நேசித்த, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த, இந்திய வரலாற்றில் கோடிக்கணக்கான மக்கள் தொகை கொண்ட ஒரு சமூகத்தையே எழுந்து நிற்கவைத்த, மாமேதை டாக்டர் அம்பேத்கரின் சிலையைப் பாதுகாக்க அதே டிசம்பர் 25 நடந்த சம்பவத்தின் கதை இது.

2009 டிசம்பர் 25 இல் துவங்கி..

கி.பி 2009 ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி முழுமையாக இருள் விலகாத காலைப்பொழுது. பல நூற்றண்டாக சந்திக்காத காட்சியை அந்த முந்திரிக்காடு கண்டது. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கையில் தடி அதன் மேல்கட்டப்பட்ட கொடியுடன் தங்களது இளம் பாதங்களைப் பதித்து முந்திரிக்காட்டின் இடையில் கிடைத்த ஒற்றையடி தடத்தைப் பற்றி முன்னேறினர். வெள்ளை நிறம் கொண்ட அந்த கொடியினுள் சிகப்பு நட்சத்திரம் பதிக்கப்பட்டிருந்தது. இடதுபுறம் மேலிருந்து கீழாக டி.ஒய்.எப்.ஐ என்ற எழுத்து மின்னியது. என்ன ஆனாலும் சரி இலக்கை அடைந்தே தீருவது என்ற வைராக்கியம் அவர்கள் முகங்களில் தெரிந்தது.

பழையப் பட்டினத்தில் அம்பேத்கர் சிலை சரளைக் கட்களும், நெருஞ்சி முட்களும் காலில் குத்தியபோதும் அந்தக் கால்கள் பயணத்தை நிறுத்தவில்லை. அவர்கள் செல்லும் இடத்திற்கு மிக எளிதாக செல்ல சாலைவசதி இருக்கிறது. அந்த வழியை அவர்கள் தேர்ந்தெடுக்காததற்குக் காரணம் இருந்தது. இந்த இளைஞர்களின் வருகையை எதிர்பார்த்து கண்களில் கோபத்தையும், நெஞ்சில் வன்மத்தையும், கையில் தடிகளையும், துப்பாக்கிகளையும் தாங்கி காவல் துறையினர் 400க்கும் மேற்பட்டோர் தயாராக இருந்தனர். உளவுத்துறையினர் தனியாக அலைந்துகொண்டு இருந்தனர். ஆனால் நான்கு கிலோமீட்டர் சுற்றி நடந்து வரும் இந்த ஒற்றையடிப் பாதைவழியாக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வருவதை காவல்துறையினர் கற்பனைகூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அந்த பழைய பட்டிணம் கிராமத்தின் மக்கள் இவர்கள் மீது நம்பிக்கையுடன் “அவர்கள் வருவார்கள்” என எதிர்பார்த்து நின்றனர். அவர்களின் வருகை அந்த கிராமத்து மக்களின் தன்மானத்தை மீட்டெடுக்கும் வருகை.

“அசோகன் தோழர்.. கிராமத்தின் அருகில் வந்துவிட்டோம்” வழிகாட்டிய சிலம்பரசனும், ராமரும் சேர்ந்து சொன்னார்கள். சத்தியராஜ் முந்திரிக்காட்டின் இறுதியிலிருந்து ஊரின் தூரத்தை கண்களால் அளந்து பின்பு சொன்னார் “ தோழர் இன்னும் 500 அடியில் ஊர் வந்துவிடும்." அசோகன் ராஜேஷ்கண்ணாவைப் பார்க்க இருவரும் தலையை அசைத்து அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் திட்டமிட்டனர். எல்லோரும் ராஜேஷ்கண்ணா (வாலிபர் சங்க மாவட்ட செயலாளர்) மற்றும் அசோகன் (வாலிபர்சங்க மாவட்ட தலைவர்) என்ற அந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய இரண்டு இளைஞர்களின் வாயிலிருந்து வரும் அடுத்த வார்த்தைக்காக காத்திருந்தனர்.

இன்குலாப்! ஜிந்தாபாத்! என்ற முழக்கத்துடன் முன்னோக்கி கையை சுட்டி, இருவரும் ஓடத்துவங்க அனைத்து இளைஞர்களும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். ஊருக்குள் புகுந்து இலக்கை நோக்கி அவர்கள் ஓடத்துவங்க, இவர்களின் வருகையை எதிர்பார்க்காத காவல்துறையினர் திடீரென முழித்து, பின் விழித்து, சுதாரித்து கையில் ஓங்கிய தடியுடன் இந்த இளைஞர்களை இலக்கை எட்டும் முன்பு தடுத்து நிறுத்தினர். 200 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விருதாச்சலத்தில் சிறைவைக்கப்பட்டனர். அவர்கள் இலக்கு பழையபட்டிணம் கிராமத்தில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதுதான். இது என்ன சமூக விரோத செயலா என தாங்கள் கேட்பது புரிகிறது. கொஞ்சம் பின்னோக்கி பயணிக்காமல் இது புரியாது.

என்ன நடந்தது?

அமபேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஊழியர்கள் கைது செய்யப்பட்ட 2009 டிசம்பர் 25இலிருந்து வருவோம். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்படும்போது அறிவித்தது இதுதான். “நாங்கள் மீண்டும் இந்திய குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி மாலையிட வருவோம். இன்னும் நூற்றுக்கணக்கான இளைஞர்களுடன்.”

கடலூர் மாவட்டம் விருதாசலம் அருகில் உள்ள பழையப்பட்டினம் என்ற கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள், 35 இஸ்லாமிய குடும்பங்கள், 40 கோனார் சமூக குடும்பங்கள், 20 ரெட்டியார் சமூக குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 2008 ஆகஸ்ட் 15 அன்று நடந்த கிராமப் பஞ்சாயத்தில் சிறப்பு கிராமசபா கூட்டம் தலைவர் சி.தர்மலிங்கம் தலைமையில் நடந்தது. இதில் பஞ்சாயத்து நூலகம் எதிரில் அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலை அமைக்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போதெல்லாம் பிரச்சனை இல்லை. அதன் முன்பு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் அப்துல் ஹை ஒன்றிய கவுன்சில் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைகிறார். தனது தோல்விக்கு தலித் மக்கள்தான் காரணம் என்ற கோபத்தில் இருந்தவர் இந்த சிலை ஊருக்கு மத்தியில் வந்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல் பிரச்சனையை உருவாக்குகிறார்.

இஸ்லாமியர்கள் உருவவழிபாட்டை மேற்கொள்ளாத காரணத்தால் இஸ்லாமியர்கள் வீட்டுக்கு முன் அந்த சிலை இருக்கக்கூடாது என பிரச்சனையாகிறது. சிலை இருக்கும் இடத்திற்கும் அவர்களது வீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருப்பினும் சிலைக்கு மாலையோ, மரியாதையோ செய்ய தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது; தலித் மக்கள் தவித்துள்ளனர். தலித் தலைவர்களை சந்தித்து முறையிடுகின்றனர். ஆனால் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் ஏன் தேவையற்ற பிரச்சனை என்று கூறி, அந்த சிலையை அங்கிருந்து அகற்றி தலித் மக்கள் பகுதியிலே வைத்துக்கொள்ள வலியுறுத்துகிறார். அதுமட்டுமல்ல அந்த சிலையை அப்புறப்படுத்துவதாக அவ்வூர் மக்கள் சம்பந்தம் இல்லாமல் சிலையை "அகற்றிக்கொள்கிறோம்" என்று இஸ்லாமிய ஜமாத்துக்கு தன் கைப்பட கடிதமும் கொடுக்கிறார். இந்தப் பின்னணியில் வாலிபர் சங்கம் போராட்டத்தைக் கையில் எடுத்தது. அம்பேத்கர் சிலைக்கு டிசம்பர் 25ம் தேதி மாலை அணிவிக்கும் போராட்டத்தை அறிவித்தது. போலீஸ் துணையுடன் போராட்டம் தடுக்கப்பட்டது. களப்போராட்டம் மட்டுமல்லாமல், நீதிமன்றத்தின் கதவையும் வாலிபர் சங்கம் தட்டியது.

ஜனவரி 26 ஆம் தேதியும் பிரச்சனை உருவாகும் சூழல் இருந்ததால் வழக்கறிஞர் திருமூர்த்தியிடம் தொலைபேசியில் தகவல்களைச் சொல்லி இப்பிரச்சனை குறித்த ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது. வழக்கறிஞர் திருமூர்த்தி, வழக்கறிஞர் தியாகு ஆகியோர் இந்த பிரச்சனையின் தீவிர தன்மையைச் சுட்டிக்காட்டி 19.01.10 அன்று பொதுநலவழக்கு தொடுக்கின்றனர். அன்றே உடனடியாக வழக்கை விசாரணைக்கு எடுக்க வலியுறுத்துகின்றனர். நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

20.01.10 வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒரு தேசத் தலைவரின் சிலைக்கு நடந்த அவமரியாதையை தொடர அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில் அன்று காலை 11.30 மணிக்கு உறுத்து கட்டளை (இன்ஜக்ஷன்) பிறப்பித்து கீழ்வருமாறு கூறினர் “மீண்டும் இந்த வழக்கில் மறு உத்திரவு பிறப்பிக்கும் வரை அண்ணல் அம்பேத்கர் சிலையை இருக்கும் இடத்திலிருந்து அகற்றக்கூடாது எனவும், மேலும் எந்த நபராலும் எந்த விதமான சேதமும் சிலைக்கு விளைவிக்கப்பட கூடாது எனவும், மீண்டும் இந்த வழக்கு 08.01.10 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்”.

பழைய பட்டிணம் கிராமத்தில்...

ஆனால் அன்று இரவு (20.01.10) பழைய பட்டிணம் கிராமத்தில், 11.30மணிக்கு 200 போலிசுக்கும் மேல் குவித்து, தலித் மக்களை மிரட்டி அவர்களது அனைத்து வீடுகளையும் பூட்டினர். ஒவ்வொரு வீட்டிற்கும் முன் ஒரு போலிஸ் காவல். காவல் வண்டிகள் குவிக்கப்பட்டது. ஜே.சி.பி எந்திரம், லோடு லாரி என அம்பேத்கர் சிலையை ஊரின் பொதுவிலிருந்து பெயர்த்தெடுக்கத் தயாரானார்கள். பொதுமக்கள் யாரும் சிலைக்கு அருகில் அனுமதிக்கப்படவில்லை. அக்கிராமத்தின் வார்டு உறுப்பினர் ரேனு தகராறு செய்கிறார் அதனால் தாக்கப்படுகிறார், அம்பேத்கர் சிலையை எடுக்கக்கூடாது என்றும், கோர்ட்டில் இன்ஜக்ஷன் பெறப்பட்டுள்ளது என்றும் கூறிய வாலிபர் சங்கக் கிளைச் செயலாளரும், இந்த வழக்கின் மனுதாரருமான அமிர்தலிங்கம் காவல்துறையுடன் விவாதத்தில் ஈடுபட்டதால் தாக்கப்பட்டு வீட்டினுள் அடைக்கப்படுகிறார். எதிர்ப்பு தெரிவித்த இன்னும் சில இளைஞர்களும், பொதுமக்களும் தாக்கப்பட்டனர். விடியகாலை 3.30 மணிக்கு அதாவது 4 மணிநேரம் போராடி அந்த பிரம்மாண்டமான சிலை ஊரின் பொதுவிலிருந்து அகற்றப்பட்டது. அந்த மகாமனிதனின் சிலை தலித் மக்கள் பகுதியில் அவர்கள் தண்ணீர் வசதிக்காக பல ஆண்டுகளாக பயன்படுத்திய குளத்தை அடைத்து, மண்கொட்டி அந்த இடத்தின் மேல் நிறுவப்பட்டது. என்னதான் மாமேதை அம்பேத்கர் தேசத் தலைவராய் இருப்பினும் அவருக்குரிய இடம் எது என்பதில் அரசு எந்திரம் தெளிவாக இருந்தது. ஆளும் வர்க்க வன்மத்தின் வெளிப்பாடாய் இந்த நிகழ்வு இருந்தது. விருதாசலம் டி.எஸ்.பி ராஜசேகர், ஆய்வாளர் திருமால் தலைமையில் சிலையை அகற்றி எடுக்க ஏற்பாடு நடந்தது.

இதற்கிடையில் அன்று இரவே சென்னையில் தகவல் அறிந்த வழக்கறிஞர் திருமூர்த்தி கடலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயல்கிறார். டிஎஸ்பி, ஆய்வாளர் ஆகியோர் போன் எடுக்கவிலை. பின் மாவட்ட எஸ்.பி அஸ்வின் கோட்டீஸிடம் “ இன்று காலை சிலையை அகற்ற கூடாது என நீதிமன்ற தீர்ப்பு உள்ளது” என்கிறார்.

அதற்கு “உங்களது வார்த்தை தீர்ப்பல்ல ஏனெனில் எனக்கு உத்தரவு நகல் இல்லை” என்கிறார் எஸ்.பி. “அப்படி எனில் நீங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டியிருக்கும்”என்று திருமூர்த்தி சொல்லுகிறார். பின் வழக்கறிஞர் திருமூர்த்தி அதிகாலை இரண்டு மணிக்கு சென்னை அண்ணா சாலை தந்தி அலுவலகத்திலிருந்து தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் உள்துறை செயலாளர் மாலதி, கடலூர் மாவட்ட ஆட்சியர் சீதாரமன், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு “காவல்துறையினர் உயர்நீதிமன்ற உததரவை மீறுகிறார்கள். (தீர்ப்பாணை எண் ட்பில்யூ.பி 1012/2010)” என்று தந்தி கொடுக்கிறார்.

மீண்டும் சென்னையில்..

மறுநாள் 21 ஆம் தேதி காலை நீதிமன்றத்தில் நீதிமன்ற உத்தரவை மீறியது குறிப்பிடப்படுகிறது. நீதிமன்றத்தில் இது குறித்துக்கொள்ளப்படுகிறது. மீண்டும் 22 ஆம் தேதி மதியம் வழக்கு விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. (ஆனால் இந்த வழக்கு 08.02.10 அன்றுதான் விசாரணைக்கு வந்திருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறி பல பணிகள் நடந்ததால் வழக்கு உடனே எடுத்துக்கொள்ளப்பட்டது)

22ம் தேதி வழக்கு வந்தபோது அரசு வழக்கறிஞர் ராஜாகலிபுல்லா “20 ஆம் தேதி காலையிலேயே பஞ்சாயத்து தலைவர் தர்மலிங்கம் தலைமையில் தலித் மக்களே விருப்பப்பட்டு சிலையை எடுத்து தலித் பகுதியில் வைத்துக்கொண்டதாக” கூறுகிறார். முற்றிலும் உண்மைக்குப் புறம்பான கூற்று இது. அப்போது அப்பகுதி தலித் மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 5 போலிஸ் மட்டுமே பாதுகாப்புக்கு இருந்ததாக கூறினார். அதற்கு நீதிபதிகள் “ 20ம் தேதி காலையிலேயே சிலை அகற்றப்பட்டது என்றால் நாங்கள் இன்ஜக்ஷன் பிறப்பிக்கும்போது ஏன் இதைக் குறிப்பிடவில்லை, அப்போது நீங்களும் இருந்தீர்களே ஏன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை” என்றனர். அதற்கு அவர் ஏதோ கூறி சமாளித்தார். நமது வழக்கறிஞர்கள் அங்கு நடந்ததைக் கூறினர். ஆதலால்...

ஏற்கனவே நாம் எதிர்வாதிகளாகக் குறிப்பிட்ட தமிழக உள்துறைச் செயலர், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, தாசில்தார், ஆர்டிஓ, ஆய்வாளர் ஆகியோருடன் தற்போது சம்பவ இடத்தில் இருந்ததாகக் கூறப்படும் டி.எஸ்.பி, பஞ்சாயத்து தலைவர் தர்மலிங்கம், வார்டு உறுப்பினர் ரேனு, கிராம நிர்வாக அதிகாரி அசோகன் ஆகியோரையும் நீதிமன்றம் எதிர்வாதிகளாக இணைத்து உடனடியாக சிறப்புத் தூதுவர் மூலம் சம்மன் அனுப்ப வேண்டும் என்றும், 25 ஆம் தேதி அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதற்கிடையில் ஊர் மக்கள் ஆதரவுடன்தான் சிலை எடுக்கப்பட்டது என்ற அப்பட்டமான பொய்யை நீதிமன்றத்தில் அரசு தரப்பினர் கூறியதால் அதை அம்பலப்படுத்த முடிவு செய்து, தனித்தனியாக 247 ஊர் பொதுமக்களிடம் பிரமாணபத்திரம் விருதாசலத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர் சந்திரசேகரன் உறுதிச்சான்றுடன் தயாரிக்கப்பட்டது. 25ம் தேதி தாக்கல் செய்வதற்காக 24 ஆம் தேதி இரவு சென்னைக்கு தனி பேருந்து மூலம் கிளம்பிய மக்கள் கூட்டத்தை விருதாசலம் நகரத்தை அடையும்முன்பே காவல் தூறையினர் தடுத்து நிறுத்தினர். சென்னைக்கு அபிடவுட் தாக்கல் செய்யச் சென்றால் உங்கள்மீது வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவோம் என்று மிரட்டினர். அந்த மிரட்டல்களை வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகிகளும் வழக்கறிஞர் சந்திரசேகரனும் முறியடித்து அம்மக்களை சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.

25ம் தேதி வழக்கு வருகிறது. 247 பேர் அபிடவுட்டை தாக்கல் செய்த மக்கள் உள்ளூர் மக்கள் இல்லை என அவர்கள் எதிரிலேயே அரசு தரப்பு வழக்கறிஞர் மீண்டும் பொய்யான குற்றத்தை சுமத்தினார். நீதிபதிகள் அந்த சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏற்கனவே நீதிமன்றம் ஆஜராகச் சொன்ன அனைத்து அதிகாரிகளும் அன்று இருந்தனர். தலித் மக்கள் ஆதரவுடன் சிலை அகற்றபட்டது என்பது பொய் என அன்றைய விசாரனையில் தெரிந்தது. காவல் துறையினர் செய்த அத்துமீறல்கள் நிரூபணமானது. அரசின் நிலையை தெரிவிக்க அரசு உள்துறைச் செயலர் சார்பில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனார்.

மீண்டும் 28 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. ஆனால் அதற்குள் ஒரு நகைச்சுவை சம்பவம் நடந்தது. அதாவது ஊரில் பஞ்சாயத்துக் கூட்டம் நடந்து, தீர்மானம் இயற்றித்தான் சிலை அகற்றப்பட்டதாக பொய்யான சான்று தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால் நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல அந்த பஞ்சாயத்து தீர்மான நோட்டுகளை நீதிமன்றம் கைப்பற்றி வைத்துக்கொண்டது. கடலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் ரோந்து குறிப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த கிராமத்தின் உண்மை நிலையைக் கண்டறிய நீதிமன்ற நிர்வாக பதிவாளர் விஜயன், வழக்கறிஞர்கள் செங்குட்டுவேல், காசிகுமார், திருமூர்த்தி (நமது வழக்கறிஞர்) ஆகியோர் கொண்ட குழு நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டது. பிப்ரவரி 1 ஆம் தேதி விசாரணைக் குழுவின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிட்டனர். விசாரணைக் குழு விசாரணையை மேற்கொண்டபோது முன்னுக்கு பின் முரணான தகவல்களை சிலை எதிர்ப்பாளர்கள் கூறினர்.

ஆனால் அரசு தரப்பிலும், சிலை எதிர்ப்பாளர்கள் தரப்பிலும் கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களது வாதம் பொய் என அம்பலப்பட துவங்கியதும் வேறு வழி இல்லாமல் அரசு இறங்கி வந்தது. பிப்ரவரி ஒன்றாம் தேதி விசாரணைக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அன்று அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் அரசுத் தரப்பில் ஆஜரானார். அவர் “தேசத்தின் சிறந்த தலைவர் சிலையை அவமதித்தது தவறு, நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் அதை மீறி சிலையை அகற்றியதற்காக தமிழக அரசின் சார்பில் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறோம்” என்றார். நீதிமன்றம் உத்தரவு இட்டால் மீண்டும் சிலையை ஊரின் மத்தியில் அதே இடத்தில் வைக்கிறோம் என்றார். ஆனால் இஸ்லாமியத் தரப்பு சார்பில் பழைய இடத்தில் வைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றனர். ஆனால் நீதிமன்றம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. மகாராஸ்டிர மாநிலத்தில் மாமேதை அம்பேத்கர் பிறந்த மற்றும் மறைந்த நாள் விழாக்களில் லட்சக்கணக்கில் மக்கள் கூடும்போதே பிரச்சனைகள் வருவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.

மீண்டும் பிப்ரவரி 8 ஆம் தேதி வழக்கு வந்தது. அன்று மேலும் ஒரு வழக்கறிஞர் மூலம் இஸ்லாமியத் தரப்பின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதையும் நீதிமன்றம் நிராகரித்தது. மீண்டும் மீண்டும் இஸ்லாமிய தரப்பில் அவர்கள் தடுக்கக் காரணம் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி சிலையை ஊரின் பொது பகுதியிலிருந்து தலித் பகுதிக்கே மாற்றிக்கொள்ள தனது கையொப்பமிட்ட கடிதத்தை கொடுத்ததுதான். ஆனால் இதை தலித் மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அம்மக்கள் நடத்திய போரட்டங்களும், நீதிமன்றத்திற்கே வந்து சாட்சி சொன்னதும் நிரூபித்ததால் கடிததத்தை நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை. இறுதியாக பிப்ரவரி 11ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றனர்.

2010 பிப்ரவரி 11 ஆம் தேதி முடிந்த போது...

ஆடர்... ஆடர்.. ஆடர்.. நீதிபதிகளின் பாரம்பரியமான வார்த்தைகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிரொலித்தபோது தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி கே.கே சசிதரன் ஆகியோர் தங்களது அமர்வின் தீர்ப்பை வாசிக்கத் துவங்கினர். “இனி தமிழ்நாட்டில் தலைவர்கள் சிலைகள், நினைவு சின்னங்கள் போன்றவற்றை நிறுவ வேண்டும் என்று சொன்னால் அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும். ஏற்கனவே இருக்கும் சிலைகளை அகற்ற வேண்டும் என்று சொன்னாலும் அப்படியே. சிலைகளை யார் வைக்கிறார்களோ அவர்களே பொறுப்பாகுவார்கள். இந்த வழக்கின் மனுதாரர் அமிர்தலிங்கத்திற்கு (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளை செயலாளர்) வழக்கு இழப்பீட்டு தொகை ரூபாய் 20,000ஐ அரசு கொடுக்க வேண்டும். அப்பணத்தை டி.எஸ்.பி. தாசில்தார், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட, அதிகாரிகள் தரப்பில் தவறு செய்தவர்களின் சம்பளத்திலிருந்து அரசு பிடித்தம் செய்து கொள்ளலாம். கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 2010 பிப்ரவரி 28க்குள் எங்கிருந்து அம்பேத்கர் சிலை எடுக்கப்பட்டதோ அங்கேயே நிறுவப்பட வேண்டும்”என இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

ஒருவகையில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புதான். கடுமையான அடக்குமுறைகளை, மிரட்டல்களை, சட்ட நுணுக்கங்களை, ஏமாற்றுகளை, துரோகங்களை மீறி எளிய கிராமத்து மனிதர்களின் வெற்றியை முறசரைந்த தீர்ப்புதான். இது மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராடி பெற்ற தீர்ப்பு இது.

எனவே...

இந்த தேசத்தின் மகத்தான தலைவரின் சிலைக்கு மாலை அணிவிக்கக்கூட தடை இருந்த ஊரில் அந்த தடை உடைக்கப்பட்டிருக்கிறது. தலித் தலைவர்களாக தங்களை அறிவித்து கொள்பவர்கள் கூட அவரின் இடம் ஒடுக்கப்பட்ட மக்களின் இருப்பிடமே என சொல்லும் சோகமும் நடக்கிறது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 2009 டிசம்பர் 25 ஆம் தேதி வர்க்கப் போராட்டத்தின் ரத்தசாட்சிகளான வெண்மணி தியாகிகள் தினத்தில் தமிழகம் முழுவதும் தீண்டாமைக்கு எதிரான நேரடி நடவடிக்கைப் போராட்டத்தை நடத்தியது. கிட்டத்தட்ட 20 மாவட்டங்களில் இந்தப் போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. இன்னும் பல்லாயிரம் கிராமங்களில் தீண்டாமைக் கொடுமைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது, அதை எதிர்த்து நடக்கும் போராட்டங்களைப் போல.

thirumavalavan_letter

(திருமாவளவன் எழுதிய கடிதம்)

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It