இந்தப் பிரிவில் நாம், வர்த்தக நிறுவனமாக இருந்து ஓர் அரசியல் முடியாட்சியாக வளர்ந்ததை விவரிக்காமல், ஓர் அரசியல் முடியாட்சி மற்றும் நிதி அமைப்பு என்ற முறையில் கிழக்கிந்தியக் கம்பெனியைப் பற்றிக் குறிப்பாகத் தெரிந்து கொள்வோம்.

Ambedkar 305நமது கடந்த விவாதத்தில் கண்டதுபோல கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவின் மீது தனது முழு ஆதிக்கத்தைச் செலுத்துவதில் வெற்றி பெற்றது என்ற உண்மையில் விந்தையேதும் இல்லை. பல்வேறு மாகாணங்களில் காலடிபதித்த அது, தனது ஆட்சி அதிகாரத்தை உபகண்டம் முழுவதிலும் விஸ்தரித்ததுடன், இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தைச் சட்டப்படி நிறுவியது. வேறுவிதமாகச் சொல்வதெனில், அது அரசை நிறுவியதுடன் அரசியல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளைக் கூட்டாக மேற்கொண்டது. இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையின் பயனாக இந்தியாவில் கம்பெனியின் நிதி நிர்வாகம் ஒரு சிக்கலான காட்சியுண்மையாக இருந்தது. வர்த்தகம் மற்றும் வருவாய்க் கணக்குகளைத் தனித்தனியாக வைக்காமல் அவை ஒன்றாக இணைக்கப்பட்டன. ஆகவே நிதி இயல்துறையின் எந்த மாணவரும் 1814 ஆம் ஆண்டுடன் முடியும் காலகட்டம் முழுவதையும் ஆய்வு செய்யவேண்டியிருக்கும். அந்த ஆண்டில்தான் பார்லிமெண்டில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின்படி கம்பெனி நிதி மற்றும் வர்த்தகம் சம்பந்தமாகத் தனித்தனிக் கணக்குகளை வைத்திருக்கும் கட்டாயத்திற்குள்ளானது.

இந்த எச்சரிக்கையுடன் வருவாய்கள் எந்தெந்த இனத்தில் கிடைத்தன என்பதைப் பார்ப்போம்.

  1. நிலவருவாய்

                இந்தியாவின் சிலபகுதிகள் ஆரம்பகாலத்திலிருந்தே தொழில் மயமானவையாக இருந்தபோதிலும், ஒட்டுமொத்தமாக இந்தியாவையே ஒரு விவசாயநாடு என்று வகைப்படுத்தலாம். முன்னர் இருந்ததைப் போலவே இன்றைக்கும் நிலம்தான் அரசின் வருவாயில் பெரும்பகுதியை ஈட்டித் தருகிறது.

                பிரிட்டிஷ் அரசாங்கம் சரியாகவோ அல்லது தவறாகவோ அரசு நிலவுடைமைக் கோட்பாட்டுக்கு எதிராகத் தனியுடைமைக் கோட்பாட்டை நிறுவியதுடன், அக்கொள்கைக்கிசைய நிலவருவாய் அமைப்பை ஒழுங்குபடுத்தியது.

                இந்தியாவில் வெவ்வேறு வகையான நிலவருவாய் முறைகள் உள்ளன. நாடாளுமன்ற நீலப் புத்தகங்களின் சொற்களில் அவற்றை விளக்குவது பொருத்தமாக இருக்கும்.

1.கார்ன்வாலிசின் ஜமீன்தார் நிலவுடைமை உரிமைத் தீர்வுமுறை

இந்த முறையில் உள்ள அனுகூலத்தின் மிகத்தெளிவான அம்சம் நிதிவசூலில் உள்ள வசதிதான். அரசாங்க அதிகாரிகள் தனித்தனி நபர்களிடம் இருந்து வசூல் செய்வதைவிட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஜமீன்தார்கள் அல்லது பங்களிப்பார்களிடமிருந்து ஒரு பெரிய மாவட்டத்தின் வருவாயைப் பெறும் மிக எளிதான முறையாகும் இது. மற்றுமொறு அனுகூலம் என்னவெனில் 1831 C. 3339இன்படி பலனின் பெருமளவிற்கு வருவாய் நிச்சயத்தன்மை இருந்தது என்பதில் ஐயமேதும் இல்லை.

இந்த நிலவுடைமை முறை இவ்வாறுதான் இருந்தது. வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா ஆகிய திவான்களின் வருவாய்களைக் கிழக்கிந்தியக் கம்பெனி தன்வசம் எடுத்துக்கொண்ட போது, முகமதியர் அரசாங்கத்தின் கீழ் அதிகாரிகளின் (சுபேதார்கள்) இடையீட்டாளர்கள் மூலமாக நிலவருவாய் வசூலிக்கப்பட்டதைக் கண்டறிந்தனர். அவர்கள் மாவட்டங்களில் சிலசமயங்களில் அதிக இடங்களையும் சிலசமயங்களில் குறைவான இடங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஜமீன்தார்கள், தாலுக்தார்கள் என்ற பட்டங்களையும் சூட்டிக்கொண்டிருந்தனர். அவர்கள் வருவாயைக் கருவூலத்தில் ஒரே தொகையாகச் செலுத்தினர். அதற்காக அவர்கள் கணிசமான அளவில் மாவட்டங்களை நிர்வகித்து வந்தனர். அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்துவது அவர்களது கடமையாக இருந்தது. அவர்களில் பெரும்பாலோர் தங்களது மாவட்டங்கள் அல்லது எஸ்டேட்டுகளைப் பரம்பரையாகப் பின்வரும் நிபந்தனையின் கீழ்ப் பராமரித்து வந்தனர் (2.சி.எஃப் 1831 சி. 3114, 3115, 3215.) வங்காளப் பிரதேசத்தைக் கிழக்கிந்தியக் கம்பெனி தன்வசம் எடுத்துக்கொண்டது. வருவாயை வசூலிப்பதற்காக நியமிக்கப்பட்ட பலதரப்பட்டவர்கள் பின்பற்றிய நடைமுறைகளினால் அதிகாரங்கள் பெருமளவில் தவறாகப் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த விஷயத்தில் நிலவிய பெருங்குழப்பங்கள் லார்டு கார்ன்வாலிசையும் அன்றைக்கு இருந்த அரசாங்கத்தையும் அச்சுறுத்தியது.

குடியானவர்கள் அல்லது சிறுவிவசாயிகளைப் பாதுகாப்பதற்கு ஒரு புதுவகையான நிலப்பிரபுக்களை உருவாக்குவதைத் தவிர வேறு சிறந்த முறை எதையும் கண்டுபிடிக்க முடியாது என்பதை உணர்ந்தனர். அத்தகைய நிலப்பிரபுக்களிடமிருந்து அவர்கள் சிறந்த பயன்கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தனர்: இதில் அவர்கள் முக்கிய ஆதாரமாகக் கொண்டிருந்த கருத்து இதுதான்; தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலப்பகுதிகளின் மீது நிரந்தர அக்கறை கொள்ளும் அந்த ஜமீன்தார்கள், இங்கிலாந்தில் உள்ள ஒரு நிலப்பிரபு தனது குடியானவர்களின் வளவாழ்வில் அக்கறை கொண்டிருப்பது போன்று, இங்கும் விவசாயிகளின் வளவாழ்வில் அக்கறை கொண்டிருப்பர் என்று கருதப்பட்டது. இந்த ஏற்பாட்டின் மூலம் இரு நல்ல விளைவுகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நாட்டில் நிலப்பிரபுக்களைக் கொண்ட உயர்குடியை உருவாக்குவது: ஜமீன்தார்களிடையே நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிற ஒருவகையான தந்தைப் பாசத்தின் மூலமாகக் குடியானவர்களுக்கும் சிறு விவசாயிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது என்பதே அவை. (1.சி.எஃப், 1831 சி.3136) ஒட்டு மொத்தமாக விவசாயப்பெருமக்களைப் பாதுகாக்கும் கண்ணோட்டத்துடனும், மிகச் சிறந்த நோக்கங்களுடனும் 1793இல் ஜமீன்தார்கள் நியமிக்கப்பட்டனர். மாவட்டங்களில் உண்மையான பொறுப்பாளர்களாக இருக்கும் குடியானவர்கள் அல்லது அதிகாரிகளாக இருந்தாலும், பரம்பரையாக அல்லது சிறப்பு நியமனத்தின் மூலமோ ஆனாலும் சரி, ஜமீன்தார்கள் நாட்டின் நிலவுடைமையாளர்களாக ஆக்கப்பட்டனர். அதன்மூலம் நிலங்கள் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன. கிட்டத்தட்ட இங்கிலாந்தில் இருப்பதைப் போன்ற முறையாகும். ஒரு சில முந்தைய ஆண்டுகளில் ஒரு ஜமீன்தார் எவ்வளவு தொகையைச் செலுத்தி வந்தார் என்பது கண்டறியப்பட்டு ஊர்ஜிதம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் வரிநிர்ணயம் நிரந்தரமாக நிர்ணயிக்கப்பட்டது. அவர் செலுத்த வேண்டிய நிலவரி எப்போதும் உயத்தப்பட மாட்டாது என்ற உடன்படிக்கையும் செய்து கொள்ளப்பட்டது. “ஜமின்தாரி அல்லது நிரந்திர செட்டில்மெண்ட்” என்ற பெயரில் அழைக்கப்பட்ட செட்டில்மெண்ட்டின் தன்மை இவ்வாறுதான் இருந்தது.” (2.சி.எஃப், 1831.சி.3115, 3116, 3136, 3215, 1832, ஆர்.சி.பக்.21.)

  1. கிராமப்புர நிலவருவாய் முறை

                கிராமப்புர சமுதாய அமைப்பை முக்கியமாக வடஇந்தியாவில் காணமுடியும். கிராமத்தில் வசிக்கும் சமுதாயம் முழுவதன் பொறுப்பில் நிலத்தின் உரிமை ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிராம நிர்வாகம் கிராம மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த முறையின் கீழ் நிலங்கள் சில சமயங்களில் அதே கிராமத்து மக்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது. சிலசமயங்கள் அண்டையிலுள்ள கிராமத்து மக்களுக்குக் குத்தகைவிடப்பட்டது. பள்ளி ஆசிரியர், சலவைத் தொழிலாளி, முடிதிருத்துபவர், தச்சர், கருமார், காவலாளி, கிராமக் கணக்கர் போன்ற கிராமத்தின் பல்வேறு கைவினைஞர்களுக்குக் குறிப்பிட்ட நிலங்களும் சில உரிமங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. கிராமத்தின் சில அங்கீகரிக்கப்பட்ட செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறும் உரிமை அவர்கள் ஒவ்வொருவருக்கும் இருந்தது. அதேபோது வெளியிலிருந்து வருபவர்களுக்கு விருந்தோம்புவதற்காகவும் ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டது. (1.சி.எஃப் 1830, எல் 398, 399, 405, 406, 529) இந்தக் கிராம சமுதாயங்கள் சிறிய குடியரசுகளைப் போன்றவை, அநேகமாக அவர்களுக்குத் தேவையானவை எல்லாம் அவர்கள் வசம் இருந்தது. எந்தவிதமான அந்நிய உறவுகளிலிருந்தும் சுதந்திரமாக இருந்தனர். வம்சங்களைத் தொடர்ந்து வம்சங்கள் உருண்டோடின; புரட்சியைத் தொடர்ந்து புரட்சிகள் வந்தன. இந்து, பத்தான், மொகல், மராத்தா, சீக்கியர்கள், ஆங்கிலேயர்கள் என்று எஜமானர்கள் ஒருவர்பின் ஒருவராக வந்தனர். ஆனால், கிராம சமுதாயங்கள் அப்படியே இருந்தன. தொல்லைகள் ஏற்பட்டபோது அவர்கள் ஆயுதமேந்தித் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்; (2 சி.எஃப், 1832 காமன்ஸ் பரிசீலனைக் கமிட்டி, பக்கம் 29)

கிராமத்தின் உற்பத்தியில் அரசாங்கத்துக்குச் செலுத்திய விகிதாசாரம் என்ன என்பதைக் கூறுவது கடினம்: நில உடைமையாளர்களுக்கு எவ்வளவு சொத்து உள்ளது என்பதைப் பற்றி அதிகாரிகள் அவ்வளவாக அறிந்துகொள்ளவில்லை; தங்களுக்கு என்னென்ன ஆஸ்திகள் உள்ளன என்பதை அரசாங்கம் ஆய்வு செய்வது கிராமத்தின் நலன்களுக்கு உகந்ததல்ல அல்லது கிராமத்தின் விருப்பமும் அல்ல. ஆகவே கிராமத்திலுள்ள ஒருவர் தனது பங்கைச் செலுத்தத்தவறினால், அப்பிரச்சினையை கிராமங்கள் ஒன்று கூடித் தீர்த்து வைத்தன, அவருக்காகக் கிராமங்கள் அத்தொகையைச் செலுத்த முன்வந்தன. ஆனால், இவையெல்லாம் கிராமங்களுக்கே உரித்தான தனிப்பட்ட ஏற்பாடுகளாக இருந்தன. இந்த மதிப்பீட்டை அமல்படுத்துவதற்கு அரசாங்கத்திடமிருந்து யாருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை; கிராமத்திலுள்ள ஒவ்வொருவரும் எவ்வளவு செலுத்தவேண்டும் என்பது கிராம மக்களே முடிவு செய்து கொள்ளவேண்டிய உள்விவகாரமாகும். அதில் அரசாங்கம் தலையிடுவது விரும்பத்தகாததாக இருந்தது. கிராமத்தின் செழிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப்பற்றிய விசாரணைக்குப் பின்னர் மொத்தமதிப்பீடும் கணிக்கப்பட்டது; இதுவரை அந்தக் கிராமம் எவ்வளவு செலுத்திவந்தது; எவ்வளவு தொகை செலுத்தவல்லது; கிராமநிலங்களின் நிலைமை என்ன, உற்பத்தியைப் பொறுத்தவரை எத்தகைய மதிப்பீட்டை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அது. (3.சி.எப்.1830, எல்.401, 402, 404, 528, 583, 584) நில அளவுப் பணிகள் மேற்கொள்ள அரசாங்கம் கணிசமான தொகையைச் செலவு செய்தது.

                ஒவ்வொரு கிராமத்திலும் நிலத்தின் தன்மையைப் பற்றிய நுணுக்கமான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது. முடிந்த அளவுக்கு எல்லாவிதமான உதவிகளையும் பெற்றுத் தங்களது பணியாளர்களிடமிருந்து மட்டுமின்றிக் கிராம சமுதாயங்களிடமிருந்தும், ஆர்வமுள்ள கிராம மக்களிடமிருந்தும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்ட அண்டையிலுள்ள கிராமங்கள் மற்றும் குடியானவர்களிடமிருந்தும் கூட உதவிகளைப் பெற்று நில அளவை அதிகாரிகளின் முன்னிலையில் வயல்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன. கிராமத்தின் எல்லைகள் துல்லியமாக வரையறுக்கப்பட்டன. கிராமத்தில் உள்ள நிலத்தின் விவரங்கள், அவற்றின் உற்பத்திப் பொருள்கள், வீடுகள், பலனளிக்கும் மரங்கள் போன்ற விவரங்களும் அளிக்கப்பட்டன. இந்த விவரங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது. (1.சிஎஃப், 1831, சி.3492)

III.இரயத்துவாரி முறை

                இரயத்துவாரி முறை என்று அழைக்கப்பட்ட நிலமதிப்பீட்டின் இந்த மூன்றாவது வகையான விநோதமான கோட்பாடு நாட்டின் எல்லா நிலங்களின் மீதும் அதிகபட்சமான வரி நிர்ணயம் செய்வதற்கான ஏற்பாடாகும். (2.சி.எஃப், 1831சி.45, 65) தன்வசமுள்ள வயல்களுக்காக ஒவ்வொரு குடியானவருக்கும் நிர்ணயிக்கப்படும் குத்தகைத் தொகை கூடுமானவரை நிரந்தரத் தன்மையுடன் வரையறுக்கப்படுகிறது. இத்தகைய குத்தகையின் மொத்தத் தொகையே மொத்த மதிப்பீட்டுத் தொகையாக அமைகிறது. சாகுபடி அதிகரிப்பதை அல்லது குறைவதைப் பொறுத்து அது ஒவ்வொரு ஆண்டும் மாறுபடுகிறது. எல்லாக் கிராமங்களிலும் இப்போது உள்ளது போன்றே விவசாயிகள் அல்லது குடியானவர்களின் உரிமைகளை அத்துமீறல்களிலிருந்து பாதுகாப்பதும் அந்த உரிமைகளை மீறும் எல்லாச் செயல்களையும் தடுப்பதும் இரயத்துவாரி முறையின் மற்றுமொரு முக்கியக் கோட்பாடாகும். (3சி.எஃப் 1831. சி.5156:) இவ்வாறு இரயத்துவாரி முறையில் சம்பந்தப்பட்ட குடியானவர்களின் நலன்கள் குறித்த விளக்கங்கள் முழுமையாகத் தெரியவந்திருக்கின்றன. ஆனால், ஜமீன்தாரி அமைப்பில் அவ்வாறு இல்லை; பிந்தைய அமைப்பு என்ன செய்ய நினைக்கிறதோ அதை முந்தைய அமைப்பு மிகத் திறமையாகச் செய்கிறது. பிந்தைய அமைப்பு செய்ய நினைத்ததை ஒருபோதும் செய்ததில்லை, செய்யவும் முடியாது.

நாட்டிலுள்ள எல்லா நிலங்களுக்கும் வரி மதிப்பீட்டை நிர்ணயம் செய்வதே அது. இரயத்துவாரி முறையின்படி வரிமதிப்பீடு நிலத்திலிருந்து ஒட்டுமொத்த வருவாய்க்குச் செல்கிறது: அது மிகப்பெரிய நிலக்கிழாரிலிருந்து மிகச்சிறிய குடியானவர்கள் வரை அனைத்து வர்க்கங்களின் சொத்துடைமையையும் மதிக்கிறது; அது ஒரு சொத்தின் ஒவ்வொரு பகுதியையும் அளவிட்டு மதிப்பீடு செய்கிறது. இவ்வாறு அது நிலஉரிமையை மாற்றித் தர வகை செய்கிறது. ஏனெனில் ஒரு நிலத்தை விற்பனை செய்ய முற்படும் போது எழும் முதல் கேள்வி, நிலத்திற்குப் பொது மக்களிடமிருந்து எந்த அளவுக்குத் தேவை ஏற்படும் என்பதுதான் (4 சி.எப், 1831 சி, 4565, 4567,4568). உரிமையாளர்கள் இருக்குமிடத்தில் விவசாயிகள் மற்றும் குடியானவர்களுடனும்: மிகப்பெரிய நிலப்பரப்பு அல்லது மிகச்சிறிய அளவிலான நிலத்திற்கும்; கோடிக்கணக்கான ஏக்கர் நிலம் அல்லது மிகக்குறைந்த அளவிலான ஏக்கர் நிலப்பரப்பிற்கும் – இரயத்துவாரி செட்டில்மென்ட் பொருந்தும்.

ஒரே ஒரு வயலுக்கு உரிமையாளராக இருந்தாலும்கூட அரசாங்கத்துடன் அவர் நேரடியாக ஒப்பந்தம் செய்து கொண்டு, சாகுபடியில் ஈடுபடலாம். ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வரி செலுத்துமாறு தன்னைக் கோரமுடியாது என்பது அவருக்குத் தெரியும்; நிலத்தின் மதிப்பு, மாறுபட்ட மண்வளம், மக்கள்தொகை, நிலவளம் மற்றும் இதர ஸ்தலப் பிரச்சனைகள் ஆகியவற்றுக்கேற்ப இந்த முறையின் கீழ் வரிநிர்ணய மதிப்பீடு மாறுபட்டபோதிலும்கூடக் குறைந்த வரி செலுத்தும், தரம் குறைந்த நிலம் மேம்பாடடைந்து அதிக வரி செலுத்த வேண்டிய அவசியமேற்பட்டபோதிலும் கூட, மிகச்சிறந்த நிலத்திற்கு அதிகபட்சவரி நிர்ணயிக்கப்படுகிறது. அதற்கு மேல் கிடைக்கும் வருவாய் நிலஉரிமையாளரையே சாரும். பாதிப்புகள் ஏற்படும்போது வரிவிலக்குகளும் உண்டு. (1. சி.எப் 1832 சி.ஆர்.பி. எண் 20.) பெயரளவில் மட்டும் உரிமையாளர்களாக ஒருசிலர் இருப்பதற்குப் பதிலாக, சுதந்திரமான உரிமையாளர்களைக் கொண்ட ஒரு பெரும் அமைப்பை உருவாக்கியதில் ஜமீன்தார் முறையைவிட இரயத்துவாரி அமைப்பிற்கு மற்றுமொரு அனுகூலம் உள்ளது: இதில் பெருமளவில் பொதுமக்களுக்கும் ஓர் அனுகூலம் உள்ளது. ஆனால், ஜமீன்தார் முறையில் ஒரு சிலருடைய நன்மைக்காக மட்டுமே இந்த அனுகூலங்கள் பயன்படுகின்றன, அதே சமயம் இரயத்துவாரி முறையில் மூலதனம், கணிசமான அளவுக்கு ஒரே இடத்தில் குவிந்துவிடும் போக்கும் உள்ளது. (2.சி.எப், 1831 சி. 4577, 4578, 4579.)

                கிழகிந்தியக் கம்பெனியின் ஆட்சியின் கீழ் இந்தியாவில் நிலவருவாய் அமைப்பு இவ்வாறுதான் இருந்தது. இந்த அமைப்பைப் பற்றிய விமர்சன ரீதியான மதிப்பீட்டைப் பின்னர் பார்ப்போம்.

                அடுத்த முக்கியமான வருவாய் இனம் அபினி வருவாய் ஆகும். நிலவருவாய்க்கு அடுத்தபடியாக அதிக வருவாயை ஈட்டிக் கொடுத்தது அபின் வருவாய் ஆகும். அபின் வரி இரு வேறான வழிகளில் விதிக்கப்பட்டது:

1)            “வங்காளத்தில் அரசாங்கமே சாகுபடியையும் விற்பனையையும் மேற்கொள்ளும் ஒரு தனிப்பட்ட முறையின் மூலம்.”

2)            “மால்வாவின் சுதேச மாநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு பம்பாயிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அபினின் மீது பம்பாயில் விதிக்கப்படும் உயர் ஏற்றுமதி வரியின் மூலம்.”

“1799 ஆம் ஆண்டின் விதி VI பிரிவு 3 இன் படி வங்காளத்தில் அபின் தரும் கசகசாச் செடிகளைப் பயிரிடுவதும் 1803-ஆம் ஆண்டின் விதி XLI பிரிவு 2 இன்படி வடமேற்கு மாகாணங்களில் அச்செடிகளை பயிரிடுவதும் தடை செய்யப்பட்டிருந்தது. முன்பணம் கொடுத்து அபின் தரும் வெள்ளைக் கசகசாச் செடிகளை ஒரு குறிப்பிட்ட நிலத்தில் பயிரிடுவதற்குச் சில தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் விவசாயிகளுடன் அரசாங்கம் வருடாந்திர உடன்படிக்கைகள் செய்துகொண்டது. விவசாயிகள் தங்களது உற்பத்திப் பண்டங்களை அபின் வடிவில் அரசாங்கத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் தரவேண்டும். 1856 இல் வங்காளத்தில் அபினி ஏகபோகத்திலிருந்து கிடைத்த நிகர வருவாய் ரூபாய் 2,767,126 ஆக இருந்தது.”

அபினியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதிலிருந்து கிடைத்த வருவாய் சம்பந்தமாக, ஒரு சிறிய வரலாறு இருக்கிறது. 1831க்கு முன்னர் பிரிட்டிஷார் அபினியைத் தங்களது அரசாங்கப் பிரதிநிதி மூலமாகச் சுதேச மாநிலங்களிலிருந்து (அப்பொருளின் மீது கண்டிப்பான ஏகபோகத்தைக் கொண்டிருப்பதற்காக) வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதை பம்பாயிலோ அல்லது கல்கத்தாவிலோ விற்பனை செய்தனர். ஆனால், போர்த்துக்கீசியர் குடியேற்றங்களுக்குள் பெருமளவில் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக ஏகபோகக் கொள்கை கைவிடப்பட்டு, பம்பாய்க்கு எடுத்துச் செல்லும் செலவினத்தை ஈடுசெய்வதற்காக ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் “நுழைவு சீட்டுகளின் “ வடிவில் போக்குவரத்து வரி வசூலிக்கப்பட்டது. ரூ.175/- போக்குவரத்து வரியாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிகழ்வுப்போக்கு வருவாய் குறைவதைக் காட்டியது. ஆகவே பெட்டி ஒன்றுக்கு ரூ.125/- வரியாக நிர்ணயிக்கப்பட்டது.

சிந்து பகுதியை வெற்றி கொண்ட பின்னர் போர்த்துக்கீசியப் பிரதேசங்களுக்குள் அபின் கடத்தப்படும் கூடுதல் வழி மூடப்பட்டது. வேறு வழியில் இந்த வர்த்தகம் சாத்தியமில்லை என்பதனால் கூடுதல் போக்குவரத்து வரி அதிக வருவாயைக் கொடுக்கும் என்று மிகச் சரியாக நம்பப்பட்டது. ஆகவே 1843 அக்டோபரில் பெட்டி ஒன்றுக்கு ரூ.200 ஆக வரி அதிகரிக்கப்பட்டது. 1847 இல் பெட்டி ஒன்றுக்கு ரூ.400 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

III. உப்பு வரி

                இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உப்பு பல்வேறு விதங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. பல்வேறு வழிகளில் வரி விதிக்கப்படுகிறது.

                வங்காளத்தில் கடல் நீரைக் கொதிக்கவைத்து உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. பம்பாயிலும் மதராசிலும் கடல் நீரைச் சூரிய ஒளியில் ஆவியாக்கியும், பஞ்சாபில் உப்புச் சுரங்கம் போன்ற இயற்கைச் செல்வாதாரங்களிலிருந்தும், ராஜபுதினத்தில் உப்பு ஏரிகளிலிருந்தும் உப்புப் பெறப்படுகிறது.

                வங்காளத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி உப்பு உற்பத்தியில் ஏகபோகத்தைக் கொண்டிருந்தது. உப்பை உற்பத்தி செய்த உள்ளூர் மக்கள் உற்பத்தி செய்யப்பட்ட உப்பு அனைத்தையும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த விலையில் அரசாங்கத்திற்குத் தர ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. பின்னர் இந்த உப்பை அரசாங்கம் ஆறு வெவ்வேறு ஏஜென்சிகளான ஹிட்கெலீ, தும்லூக், சிட்டகாங், ஹரிகான, கட்டாக், பலாசூர், கொரெடா ஆகியவற்றின் மூலம் அடக்க விலையுடன் இறக்குமதி செய்யப்பட்ட உப்பின் மீது விதிக்கப்படும் வரிக்குச் சமமான தொகையுடன் கூட்டிவரும் விலைக்கு விற்பனை செய்தது. இதன் விளைவாக “நுகர்வோருக்கான சராசரி சில்லறைவிலை” கிட்டத்தட்ட ஒரு பவுண்டுக்கு ஒரு பென்னியாக இருந்தது.

                இறக்குமதி வரிக்குச் சமமான தொகைக்கு ஈடான கலால் வரி மட்டும் செலுத்தும் ஒரு முறையின் கீழ், கல்கத்தாவில் தனியார் உப்பு உற்பத்திக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

                ஆனால் 1836இல் காமன்ஸ் சபையின் தேர்வுக்கமிட்டியின் பரிந்துரையின் பேரில் நிர்ணயிக்கப்பட்ட விலை, பகிரங்கக் கிடங்குகள் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு முன்னர் குறிப்பிட்ட கால இடைவெளியில் விற்பனை நடந்ததற்குப் பதிலாக “விற்பனை தொடர்ந்து எப்போதும் நடைபெற்று வந்தது.”

                மதராசில் அரசாங்கத்தின் சார்பாக உப்பு உற்பத்தி செய்யப்பட்டு மாநில நுகர்வுக்காக விற்பனை செய்யப்பட்டது.உப்பின் அடக்கவிலைக்கும் விற்பனை விலைக்கும் இடையிலான வித்தியாசத்திற்குச் சமமாக இறக்குமதி செய்யப்பட்ட அன்னிய உப்பின் மீதான வரி பவுண்டு ஒன்றுக்கு ரூபாய் மூன்றிலிருந்து குறைக்கப்பட்டது.

                உப்பின் மீதான இறக்குமதி வரிக்குச் சமமான கலால்வரி செலுத்தும் முறையின் கீழ், பம்பாயில் உப்பு உற்பத்தி தனியார்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. பஞ்சாபின் உப்புச் சுரங்கங்களில் அரசாங்கம் உப்பை வெட்டி எடுத்து அங்கேயே விற்பனையும் செய்து வந்தது.

                தங்களது உப்பு சப்ளைக்காக வடமேற்கு மாகாணங்கள், வங்காளத்தின் தாழ்வான பகுதிகளையும் ராஜபுதினத்தில் உள்ள சாம்பூர் உப்பு ஏரியையும், இந்தியாவின் மேற்கத்திய பகுதிகளையும் நம்பியிருந்தது. எல்லாப் பகுதிகளிலிருந்தும் உப்பு வடமேற்கு மாகாணங்களை வந்தடையும் போது ஒரே மாதிரியான விலையுடன் இருக்கும் விதத்தில் வரிகள் விதிக்கப்பட்டிருந்தன.

  1. சுங்கவரி

                நுழைவுவரி என்ற பெயரில் ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு சாலையிலும் எண்ணற்ற போக்குவரத்து அல்லது உள்நாட்டு வரிகள் விதிக்கப்பட்டன. ஆனால் அவை வங்காளத்து 1836 ஆம் ஆண்டின் சட்டம் 1இன் படியும் மதராசில் 1844 ஆம் ஆண்டின் சட்டம் 6 இன் படியும் நீக்கப்பட்டன. பிரிட்டிஷ் இந்தியா முழுவதிலும் ஒரேமாதிரியான சுங்கவரி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த உள்நாட்டைக் கடந்து செல்லும் வரிகளின் தீய பலன்களைப் பற்றிப் பின்னர் விவாதிப்போம்.

                சுங்க வரி வருவாய்க்கு இரு ஆதாரங்கள் இருந்தன. அவை:

1)            ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளின் மீது கடல்வழிச் சுங்கவரி, உப்பு மற்றும் அவரைச் செடியின் மீது ஏற்றுமதி வரி மட்டும்.

2)            பிரிட்டிஷ் பிரதேசங்களுக்கும் துணைப் பிரதேசங்களுக்கும் இடையிலான எல்லைகளைக் கடந்து செல்லும் பொருள்களின் மீது விதிக்கப்படும் தரைவழிச் சுங்கவரி.

  1. உப்பு மற்றும் அபினியின் மீதான ஏகபோகத்தைத் தவிர கிழக்கிந்தியக் கம்பெனி மற்றுமொரு வருவாய் ஆதாரமாகப் புகையிலை ஏகபோகத்தை கொண்டிருந்தது.
  2. அப்காரி அல்லது சாராயம் மற்றும் மதுபானங்களின் ஏகபோக விற்பனையின் மூலம் கிடைக்கும் வருவாய். மிக அதிகத் தொகைக்கு ஏலம் கேட்பவர்களுக்கு (லைசென்ஸ்) விற்பனை செய்யப்பட்டன. தமது சொந்த விலையில் விற்பனை செய்வதற்கு அவர் ஒப்பந்தம் செய்து கொண்டார். வியாபாரம் செய்யும் நேரம், எந்த இடத்தில் கடை அமைத்திருக்க வேண்டும் போன்ற விஷயங்களை அரசாங்கம் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

VII.         வாடகை வண்டிகள், மாட்டு வண்டிகள், ஒற்றைக் குதிரை வண்டிகள் ஆகியவற்றின் மீது சக்கரவரி விதிக்கப்பட்டது.

VIII.        வகைப்படுத்தப்படாத வரிகளுக்குச் “சேயர்வரிகள்” என்ற கூட்டுப் பெயரிடப்பட்டது. நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வரிகளை அது உள்ளடக்கியிருந்தது. உள்ளூர் வருவாய் அதிகாரிகள் செய்த ஒழுங்கற்ற வசூல்களை ஒருசமயத்தில் அது உள்ளடக்கியிருந்தது. மதராசில் அது கடந்து செல்லும் வரிகளை உள்ளடக்கியிருந்தது. வங்காளத்தில் இந்த இனத்தின் கீழ் யாத்திரிகர் வரி சேர்க்கப்பட்டது. தக்காணத்தில் “இந்த வருவாய் ஆதாரம்’ இரு முக்கிய இனங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது முதலாவது மொஹந்துர்ஃபாஎன்ற பெயரில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவற்றின் மீதான வரிகளாக இருந்தன. இரண்டாவதாக பல்லூடா (கையெழுத்துப் பிரதியில் இச்சொல் “பல்லுபே” என்று தட்டச்சு செய்யப்பட்டுள்ளது. –ஆசிரியர் ) என்ற பெயரில் அழைக்கப்பட்ட வரிகள், கிராமக் கைவினைஞர்கள் குடியானவர்களிடமிருந்து பெறும் பொருள்களின்மீதும், தங்களது இனாம் (குத்தகையற்ற) நிலங்களிலிருந்து கிடைக்கும் வருவாயின் மீதும் விதிக்கப்பட்ட வரிகளாகும். ஒரு சந்தர்ப்பத்தில் மோசமான நாணயங்கள் மீதான ஒரு வீதாசாரம் சேயர் என்ற இந்த இனத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.

  1. சட்டரீதியான கட்டணங்களைச் செலுத்துவதற்காக, வழக்குகளுக்கேற்பப் பல்வேறு தொகைகளுக்குத் தேவையான முத்திரைத் தாள்களின் வடிவில் நீதிமன்றக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன; வழக்குத் தொகைகளுக்கு ஏற்ப முத்திரைத் தாள்களின் மதிப்பு மாறுபட்டது.

வழக்குகளுக்குத் தேவையான முத்திரைத்தாள் மதிப்பு

ரூ.16வரையிலான

ரூ.1

ரூ.16லிருந்து ரூ.32வரை 

ரூ.2

ரூ.32லிருந்து ரூ.64வரை 

ரூ.4

ரூ.64லிருந்து ரூ.150வரை

ரூ.8

ரூ.150லிருந்து ரூ.300வரை

ரூ.16

ரூ.300லிருந்து ரூ.800வரை

ரூ.32

ரூ.800லிருந்து ரூ.1600வரை

ரூ.50

ரூ.1600லிருந்து ரூ.5000வரை     

ரூ.100

ரூ.5000லிருந்து ரூ.10,00வரை

ரூ.250

ரூ.10,000லிருந்து ரூ.25,000வரை

ரூ.500

ரூ.25,0000லிருந்து ரூ.50,000வரை

ரூ.750

ரூ.50,000லிருந்து ரூ.1,00,000வரை

ரூ.1,000

ரூ.1,00,000 அதற்க்கு மேலும்      

ரூ.2,000

                இதைத் தவிர, தாக்கல் செய்யப்படும் காட்சிப்பொருள்கள், சம்மன்கள், பதில்கள், மறுமுறையீடுகள், மறுபதில்கள், துணை வழக்குரைகள், வழக்குரைஞருக்கு வாதாட அங்கீகாரமளித்தல் (சன்னத்) ஆகியவற்றிற்கும் முத்திரை வரியுண்டு. நீதிமன்றத்தில் அந்தஸ்த்துக்கேற்ப முத்திரைத்தாள் மதிப்பு வேறுபடும்.

  1. 1797 இல் வங்காளத்தில் முதல்முறையாக ஏற்படுத்தப்பட்ட முத்திரைத்தாள் தீர்வைகள், ஒப்பந்தங்கள், கிரையப்பத்திரங்கள், உரிமைமாற்றுப்பத்திரங்கள், பவர் ஆப் அட்டர்னி, இன்சூரன்ஸ் பாலிசிகள், பிராமிசரி நோட்டுகள், ரசீதுகள், ஜாமீன் பத்திரங்கள் மற்றும் பொதுவில் சட்டரீதியான நடவடிக்கைகள் போன்ற எல்லா ஆவணங்களுக்கும் பொருந்தும். (ரூ.25க்கும் குறைவான பில்ஸ் ஆஃப் எக்ஸ்சேஞ்ச், ரூ.50க்கும் குறைவான ரசீதுகள் ஆகியவற்றிற்கு விலக்களிக்கப்பட்டிருந்தன).

                மதராசில் முத்திரைத்தாள் முதலில் 1808 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. முக்கியமாகச் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கே அது பயன்படுத்தப்பட்டது: 1816இல் இந்த வரி பாண்டுகள்,ஒப்பந்தங்கள், குத்தகைகள், அடமானங்கள், பில்ஸ் ஆஃப் எக்ஸ்சேஞ்ச் மற்றும் ரசீதுகளுக்கும் முத்திரைத்தாள் வரி விஸ்தரிக்கப்பட்டது.

                பம்பாயில் 1815இல் இந்தவரி முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

                இந்தியாவில் முத்திரைத்தாள் வினியோகத்தில் ஆங்கிலேய முறை பின்பற்றப்பட்டது.

                “முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் தங்களுக்குத் தேவையான சப்ளையைக் கலெக்டரிடமிருந்து பெறுகின்றனர்: முத்திரைத்தாளுக்கான பிணையத்தொகையை விற்பனையாளர்கள் செலுத்தி தேவைப்படும் நபர்களுக்கு அவர்கள் வினியோகிக்கின்றனர். அந்த விற்பனையில் ஒரு சதவிகிதத்தை அவர்கள் கமிஷனாகப் பெற்றனர்...

  1. அக்கசாலை வருவாய்:

உற்பத்திப் பொருளின் மீது இரு சதவிகிதம் மேலாண்மைப் பங்காக வசூலிக்கப்படுகிறது. தரத்திலுள்ள வேறுப்பாட்டை ஏற்றுக்கொண்டும் சுத்திகரிப்புக்கான கட்டணங்களைக் கழித்துக் கொண்டும் அத்தகைய கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

XII. கப்பல்துறை வருவாய்:

கல்கத்தா, மதராஸ், பம்பாய் ஆகிய இடங்களிலுள்ள துறைமுக நிறுவனங்களை நடத்துவதற்காகத் துறைமுகம் மற்றும் கப்பல் நங்கூரமிட்டு நிற்கும் நாட்களுக்கான கட்டணம் ஆகியவற்றின் வாயிலாக வசூலிக்கப்பட்டது.

XIII.        ஒப்பந்தக் கட்டுப்பாடுகளின் கீழ் செலுத்தப்படவேண்டிய தொகையான கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பவுண்டுகள் திணை மாநிலங்களிலிருந்து மானியத் தொகையாகக் கிடைத்தது.

                கிழக்கிந்தியக் கம்பெனியின் கீழ் வருவாய்களுக்கான பதின்மூன்று ஆதாரங்கள் இவையேயாகும். இவற்றில் பல இன்றளவுக்கும் தொடருகின்றன.

(முதுகலைப் பட்டப் பேற்றிற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு - மே 15, 1915)

தொடரும்...

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 11)