முதுகலைப் பட்டப் பேற்றிற்காக அளிக்கப்பட்ட ஆய்வேடு

மே 15, 1915

இந்த ஆய்வேட்டின் நகலை, வாஷிங்டன் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையைச் சார்ந்த டாக்டர் பிராங்க் எப்.கோன்லோன் அவர்கள் கொலம்பியாப் பல்கலைகழகத்திலிருந்து பெற்று, நாக்பூரிலுள்ள டாக்டர் அம்பேத்கர் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சார்ந்த திரு.வசந்த மூன் அவர்களுக்கு 1979-இல் அளித்தார்.

                இதுவரை நூல்வடிவில் வெளிவராதிருந்த இந்த ஆய்வேட்டினை வெளியிடுவதற்கு அனுமதி அளித்த அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கொலம்பியாப் பல்கலைக்கழகத்தார் பதிப்பாசிரியர்களின் நன்றிக்குரியவராகின்றனர். மகாராஷ்டிர மாநில அரசு இந்த ஆய்வேட்டினை அச்சிட்டு வெளியிடுவதற்கு உதவிய, நாக்பூர் டாக்டர் அம்பேத்கர் ஆராய்ச்சி நிறுவனத்தாருக்கும் பெருந்தன்மையுடன் உதவிய டாக்டர் கோன்லோன் அவர்களுக்கும் பாராட்டு உரித்தாகுக.

1

கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகத் துறையினுடைய வரலாற்றுரீதியான வளர்ச்சியினை ஆராயாமல் அதைப் பின்வருமாறு எளிதில் விவரிக்கலாம்.

  1. உரிமையாளர்களின் மன்றம்       

Ambedkar and Rajendra Prasad         அந்த மன்றம் “ஓரளவுக்குக் கிழக்கிந்தியக் கம்பெனியின் மூலதனத்தின் பங்குதாரர்களைக் கொண்டிருந்தது. அவர்கள் வாக்கெடுப்பின் மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரதிநிதிகளைத் (24 பேர்) தேர்ந்தெடுத்தனர். அவர்களுக்குத் திட்டமிடுதல், இந்தியா மற்றும் இங்கிலாந்தின் நலங்களுக்கு ஏற்புடைய எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் உரிமையாளர்கள் அதிகாரமளித்தனர். கொடுக்கப்பட்ட அதிகாரத்தைச் செயல்படுத்துவதிலும் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாட்டையும் கண்காணிப்பையும் மேற்கொள்ளுவதிலும் அதிகாரத்தை உரிமையாளர்கள் தங்கள் வசமே வைத்துக் கொண்டனர்.”

                இந்த மன்றத்தில் ஓர் இடத்தையும் வாக்கையும் பெறுவதற்குத் தேவையான விதிமுறைகள்:

                500 பவுண்ட் பங்குகளின் உரிமையாளர் இந்தமன்றத்தில் ஓர் இடத்தைப் பெறத் தகுதியுடையவராகிறார்.

                1000 பவுண்ட் பங்குகளின் உரிமையாளர் ஒரு வாக்குக்கான உரிமையைப் பெறுகிறார்.

                3000 பவுண்ட் பங்குகளின் உரிமையாளர் இரு வாக்குக்கான உரிமையைப் பெறுகிறார்.

                6000 பவுண்ட் பங்குகளின் உரிமையாளர் மூன்று வாக்குகளின் உரிமையைப் பெறுகிறார்.

                10,000 பவுண்ட் முதல் 1,00,000 பவுண்ட் வரையிலான, அதற்குமேலும் பங்குகளின் உரிமையாளர் நான்கு வாக்குகளுடன் உரிமையைப் பெறுகிறார்.

                இதைத் தவிர, வாக்கெடுப்பில் கலந்துகொள்ளுமுன்னர் குறைந்தபட்சம் ஒரு வருடமேனும் இப்பங்குகளை அவர் வைத்திருக்க வேண்டும். மூன்றாவது நபர் மூலமாக வாக்களிக்க முடியாது மைனர்கள் வாக்களிக்க முடியாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.

                வாக்களிப்பவர்களில் பிரபுக்கள், சமானியர்கள், பெண்கள், மதகுருமார்கள், சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகள் (மன்னர் மற்றும் கம்பெனியின் அதிகாரிகள்) ஆகியோர் அடங்குவர்.

                இந்த மன்றத்தின் கூட்டத் தொடர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் நடைபெறும். தகுதியுள்ள ஒன்பது உரிமையாளர்கள் மன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரைக் கூட்டுமாறு கோருவதற்கு முடியும். கூட்டத்தொடருக்குத் தலைமை வகிக்கும் தலைவர் பணித்துறை சார்ந்தவராக இருப்பார். மன்றத்தின் அங்கீகாரம் தேவைப்படும் எல்லா மசோதாக்களையும் மன்றத்தின் முன் வைப்பார். கம்பெனியின் கணக்கு வழக்குகளை உறுப்பினர்களின் பார்வைக்கு வைப்பார்.

                அம்மன்றத்திற்கு பின்வரும் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன:

1)            இயக்குநர்கள் மன்றம் என்று அழைக்கப்படும் அமைப்புக்குத் தகுதியுள்ள நபர்களைத் தேர்வு செய்தல்.

2)            நாடாளுமன்றத்தின் ஒரு சில வரையறைகளுக்குட்பட்டுக் கம்பெனியின் மூலதனப் பங்குகளுக்கு லாபப் பங்கீட்டை அறிவித்தல்.

3)            நாடாளுமன்றத்தின் சட்ட திட்டங்களுக்கு முரண்படாத வகையில் கிழக்கிந்தியக் கம்பெனியின் நல்லாட்சிக்குப் பாதகம் விளைவிக்கக்கூடிய துணைவிதிகள் உருவாக்கவும், திருத்தவும் அல்லது நீக்கவும் அதிகாரம் பெறுதல்.

4)            ஆண்டொன்றுக்கு 200 பவுண்டுக்கும் மேலாகச் சம்பளத்தில் அல்லது ஓய்வூதியத்தில் எந்த ஒரு அதிகரிப்பையும் அல்லது 600 பவுண்டுக்கும் அதிகமாக வழங்கப்படும் எந்த ஒரு பணிக்கொடையையும் பொதுவில் கட்டுப்படுத்துதல்.

5)            சிறந்த சேவைக்காக ரொக்க வெகுமதி வழங்குதல்.

II.இயக்குநர்களின் மன்றம்

                இதில் 24 உறுப்பினர்கள் இருப்பர். ஒரு வாக்கு அளிக்கத் தகுதியுள்ள உரிமையாளர்களினால் இந்த இயக்குநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இயக்குநர்களின் மன்றத்திற்கு ஒரு வேட்பாளராக இருக்கும் விதிகள் வருமாறு:

1)            அவர் பிரிட்டனில் இயற்கையான பிரஜையாகவோ அல்லது குடியுரிமை பெற்றவராகவோ இருக்கவேண்டும்.

2)            200 பவுண்டு மூலதனப் பங்குகளின் உரிமையாளராக இருத்தல் வேண்டும். (எவ்வளவு காலமாக அவற்றை வைத்திருக்கிறார் என்பது முக்கியமல்ல)

3)            பாங்க் ஆஃப் இங்கிலாந்து அல்லது தென்கடல் கம்பெனியின் இயக்குநராக இருத்தல் கூடாது.

4)            இந்த மன்றத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் இரண்டாண்டுகளாவது இங்கிலாந்தில் குடியிருந்திருக்க வேண்டும்.

5)            அவரது உத்தேசத் தேர்வுக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை கம்பெனியின் சேவையில் கப்பல் சார்ந்த பதவி வகித்திருக்கக் கூடாது.

6)            எந்த ஒரு முறையீடு அல்லது பொய்க் காரணம் சொல்லி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, தமக்காகவோ அல்லது வேறு நபருக்கோ ஓர் இயக்குநராவதற்கான முயற்சிகளைச் செய்யக் கூடாது.

7)            அவர் பின்வருமாறு உறுதிமொழி ஏற்க வேண்டும்.

அ) தனிப்பட்ட முறையில் வர்த்தக நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடுவதில்லை.

ஆ) தனிநபர் என்ற முறையில் தவிர, வேறு எந்த விதத்திலும் கம்பெனியுடன் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை.

இ) முடிஆட்சியின் கீழ் எந்த ஒரு பொறுப்பிலோ அல்லது ஊதியம் பெறக்கூடிய பதவியிலோ, இல்லை

பல்வேறு கடமைகளை நிறைவேற்றுவதற்காக அந்த மன்றம் பல கமிட்டிகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றுக்குப் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. அவையாவன:

  1. இரகசியக் கமிட்டி
  2. கடிதப் போக்குவரத்துக் கமிட்டி
  3. கருவூலக் கமிட்டி
  4. அரசுப் படைவீரர் மற்றும் சரக்குகள் கமிட்டி
  5. சட்ட நடவடிக்கைகள் கமிட்டி
  6. இராணுவ நடவடிக்கைகள் கமிட்டி
  7. கணக்குக் கமிட்டி
  8. கொள்முதல் கமிட்டி
  9. பண்டகசாலைக் கமிட்டி
  10. இந்தியா ஹவுஸ் கமிட்டி
  11. கப்பல் போக்குவரத்துக் கமிட்டி
  12. தனியார் வர்த்தகக் கமிட்டி
  13. சிவில் கல்லூரி
  14. இராணுவக் கல்லூரி

எமுத்தாளர்கள், பயிற்சிபெறுவோர், உதவி அறுவை சிகிச்சை நிபுணர்கள் போன்ற நியமனங்களை இயக்குநர்களே செய்தனர். சிவில் மற்றும் இராணுவத் தேவைகளுக்கான ஊழியர்கள் இரு கல்லூரிகளின் பட்டதாரிகளிடையே இருந்து தேர்வு செய்யப்பட்டனர். அந்த இரு கல்லூரிகளுமே கம்பெனியின் வருவாய்களுக்கு ஒரு சுமையாகவே இருந்தன.

III. இந்திய விவகாரங்களுக்கான கமிஷனர்களின் வாரியம் (கட்டுப்பாட்டு வாரியம்)

வாரியத்தின் அதிகாரங்கள் வருமாறு:

1) கிழக்கிந்தியக் கம்பெனியின் எல்லா பிரிட்டிஷ் பிரதேசச் சொத்துக்களையும் கண்காணித்துக் கட்டுப்படுத்துதல், அங்கு வர்த்தகம் செய்யும் வர்த்தகர்களின் ஐக்கியக் கம்பெனியின் விவகாரங்களையும் கட்டுப்படுத்துதல்.

2) பின்வரும் விதமான கிழக்கிந்தியக் கம்பெனியின் வசமுள்ள பிரிட்டிஷ் பிரதேசச் சொத்துக்களின் வருவாய்கள் அல்லது சிவில் அல்லது இராணுவ அரசாங்கத்துக்கு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் கண்காணித்து, வழிநடத்தி, எல்லா நடவடிக்கைகள், செயல்பாடுகள், நலன்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துதல்….

“மேற்குறிப்பிட்ட மன்றத்தின் எல்லா உறுப்பினர்களும் அவர்களுக்குகந்த நேரத்திலெல்லாம் மேற்படி யுனைடெட் கம்பெனியின் கணக்கு வழக்குகள், தஸ்தாவேஜூகள் ஆகியவற்றைப் பார்வையிடலாம், அவர்களுக்கு தேவைப்படும் எல்லா ஆவணங்களின் நகல்களும் வழங்கப்படும். சிவில் அல்லது இராணுவ அரசாங்கம் அல்லது வருவாய்கள் சம்பந்தப்பட்ட எல்லாப் பொது அல்லது கம்பெனியின் உரிமையாளர்களுடைய சிறப்பு மன்றங்கள், மற்றும் இயக்குநர்களின் மன்றத்தினுடைய எல்லா நடவடிக்கைக் குறிப்புகள், உத்தரவுகள், தீர்மானங்கள் மற்றும் இதர நடவடிக்கைகளின் நகல்களை இந்த வாரியத்திற்கு இயக்குநர்கள் மன்றம், அத்தகைய சம்பந்தப்பட்ட மன்றக்கூட்டங்கள் நடைபெற்ற எட்டு நாட்களுக்குள் அனுப்பவேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறது; கிழக்கிந்தியப் பகுதிகளில் உள்ள தங்களது ஊழியர்களிடமிருந்து இயக்குநர்கள் பெறும் எல்லாக் கடிதங்களின் நகல்களும் கூட, அக்கடிதங்கள் வந்து சேர்ந்த உடனேயே அனுப்பப்பட வேண்டும்; கிழக்கிந்தியப் பகுதிகளில் உள்ள கம்பெனியின் எந்த ஒரு ஊழியருக்கும் இயக்குநர் மன்றம் அனுப்ப உத்தேசித்துள்ள, சிவில் மற்றும் இராணுவ அரசாங்கம் அல்லது பிரிட்டிஷ் பிரதேச உடைமைகளின் வருவாய்கள் சம்பந்தமான எல்லாக் கடிதங்கள், உத்தரவுகள், அறிவுரைகள் போனறவற்றின் நகல்களும் அனுப்பப்படவேண்டும்; சிவில் அல்லது இராணுவ அரசாங்கம் மற்றும் கிழக்கு இந்தியப் பகுதிகளில் உள்ள பிரிட்டிஷ் பிரதேச உடைமைகளின் வருவாய்கள் சம்பந்தமாக வாரியத்திலிருந்து அவ்வப்போது பெறப்படும் உத்திரவுகளுக்கும் அறிவுரைகளுக்கும் கீழ்ப்படியவும், அவற்றின்படி நடக்கும் கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டுமென்றும் இயக்குநர்கள் மன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது…

“கோரிக்கை விடுக்கப்பட்ட பதினான்கு நாட்களுக்குள் தங்களது எந்த ஒரு விஷயம் குறித்தும் தங்களது உத்தேசக் கடிதங்களை வாரியத்திற்கு அனுப்ப இய்க்குநர்கள் மன்றம் தவறும்போதெல்லாம், வாரியம் அந்த இயக்குநர்களுக்கு (மேற்கூறப்பட்டவாறு இயக்குநர்கள் மன்றத்தினர் அனுப்ப உத்தேசிக்கப்பட்டிருந்த கடிதங்களின் நகல்கள் வந்துசேரும் வரை காத்திராமல்) கிழக்கிந்தியப் பகுதிகளில் பிரிட்டிஷ் பிரதேசங்கள் மற்றும் உடைமைகளின் சிவில் அல்லது இராணுவ அரசாங்கம் சம்பந்தமாக மேற்கூறப்பட்ட அரசாங்கங்கள் அல்லது மாகாணங்களுக்கு எல்லாவித உத்திரவுகள் அல்லது கட்டளைகளைத் தயாரித்து அனுப்புவது சட்டப்படி சரியானதாகும்; வழக்கமான வடிவத்தில் (அவர்களுக்கு அனுப்பப்படும் உத்திரவுகள் மற்றும் கட்டளைகளின் போக்கைத் தொடர்ந்து) இந்தியாவில் உள்ள சம்பந்தப்பட்ட அரசாங்கங்கள் மற்றும் மாகாணங்களுக்குக் கடிதங்களை அனுப்புமாறு இயக்குநர்கள் கோரப்படுகிறார்கள். இத்தகைய உத்தரவுகள் மற்றும் கட்டளைகள் சம்பந்தமாக இந்த வாரியத்திற்கு இயக்குநர்கள் முறையீடு செய்யாதவரை, அதில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமானால் அதற்கான கட்டளையை வாரியம் பிறப்பிக்கும். அக்கட்டளைகளின்படி இயக்குநர்கள் மன்றம் நடந்து கொள்ள வேண்டும்”.

அக்கட்டுப்பாட்டு வாரியம் அதன் நடவடிக்கைக்கேற்ப ஆறு துறைகளாகப் பிரிக்கப்பட்டது:

1.கணக்கு

2.வருவாய்

3.நீதி

4.இராணுவம்

5.ரகசியம் மற்றும் அரசியல்

6.அயல்நாடு மற்றும் பொதுத்துறை.

இந்தியாவில் உள்ளாட்சித் துறை அமைப்பு பின்வருமாறு அமைந்திருந்தது:

நாடு, வங்காளம், மதராஸ், பம்பாய் என்ற மூன்று மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அரசாங்கங்களின் தலைமைச் செயலகங்கள் முறையே வில்லியம் கோட்டை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை, பம்பாய் ஆகிய இடங்களில் அமைகின்றன.

ஆரம்பத்தில் இந்தியாவின் தலைமை, உள்நாட்டுத்துறை இந்த மூன்று அரசாங்கங்களிடையே ஒரேமாதிரியான இணைந்த அந்தஸ்து அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. மத்தியப்படுத்தும் கண்ணோட்டத்துடன் இந்தியாவின் தலைமை, உள்ளாட்சி நிர்வாகம் வங்காளத்திலுள்ள வில்லியம் கோட்டை கவர்னர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக்கப்பட்ட வங்காள கவர்னருக்கு மற்ற இரண்டு கவர்னர்களும் கீழ்ப்படிந்து நடப்பர்.

முடிமன்னர்களின் அங்கீகாரத்தைப் பொறுத்து இயக்குநர்கள் மன்றம், கவர்னர் ஜெனரலை நியமித்து. கவர்னர் ஜெனரலுக்கு உதவிபுரிய உச்சக்குழுமன்றம் என்ற நான்கு பேரடங்கிய ஒரு கவுன்சில் நியமிக்கப்பட்டது. அவர்களில் மூன்றுபேர் குறைந்தபட்சம் பத்தாண்டுகளேனும் இந்தியாவில் கம்பெனியின் ஊழியர்களாக இருத்தல் அவசியம். நான்காமவர் கம்பெனியின் சேவையில் இருப்பவராக இருத்தல் கூடாது. கவர்னர் ஜெனரலின் அலுவலகத்தில் பணித்துறை சார்ந்த உறுப்பினராக இந்தியாவிலுள்ள படைகளின் தலைமைத் தளபதி இருந்தார். ஐந்து உறுப்பினர் கொண்ட உச்சக்குழு மன்றத்தில் 1853 இல் மேலும் அறுவர் சேர்க்கப்பட்டு விஸ்தரிக்கப்பட்டது, அந்த அறுவரும் சட்டமன்ற உறுப்பினர்கள். அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவும் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை வகுப்பதில் வாக்களிக்கவும் மட்டுமே அதிகாரமளிக்கப்பட்டிருந்தது. இந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்களில் நால்வர் பம்பாய், மதராஸ், வங்காளம் மற்றும் வடமேற்கு மாகாணங்களைச் சேர்ந்த, கம்பெனியில் பத்தாண்டு அனுபவமுள்ள சிவில் ஆட்சிப்பணியாட்களாக இருந்திருக்கவேண்டும். மீதமுள்ள இரண்டு இடங்களில் ஒன்றைத் தலைமை நீதிபதியைக் கொண்டும் மற்றொன்றைக் கல்கத்தா உச்சநீதிமன்றத்தின் நீதிபதியைக் கொண்டும் நிரப்பப்பட்டன. விக்டோரியா சாப்டர் 95, கூட்டம் 1-17இன் விதி 22இன் கீழ் பதினொரு பேர் கொண்ட இக்கவுன்சில் மேலும் இருவரைச் சேர்த்துக்கொள்ள கவர்னர் ஜெனரலுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால், பயன்படுத்தப்படவில்லை.

ஆகவே, இந்தியாவின் உச்சக்குழுமன்றத்தில், அரசாங்கத்தை நிர்வகிக்கும் காரணங்களுக்காக கவர்னர் ஜெனரலையும் தலைமைத் தளபதியையும் உள்ளடக்கிய ஆறு உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். சட்டமியற்றும் காரணங்களுக்காக 12 உறுப்பினர்கள் இருந்தனர். கவுன்சில் கூட்டத்தை நடத்துவதற்கு ஏழு உறுப்பினர்கள் இருந்தாலே போதுமானதாக இருந்தது.

கவர்னர் ஜெனரலுக்கு வானளாவிய அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட அவர் ஓர் எதேச்சதிகாரியாக இருக்குமளவுக்கு அவருக்கு அதிகாரங்கள் இருந்தன. கவுன்சிலில் இயற்றப்பட்ட எல்லாச் சட்டங்களையும் ரத்து செய்வதுடன், கவுன்சிலின் முடிவை மீறிச் சுதந்திரமாக முடிவெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவரால் முடியும். சொந்த மாநிலங்களுக்கு அமைச்சர்களை நியமிப்பது உள்ளிட்ட எல்லா “அரசியல்” நியமனங்களையும் ஒழுங்கமைக்கப்படாத மாகாணங்களுக்கு கமிஷனர் நியமனங்களையும் அவரே செய்தார். வங்காளம் மற்றும் வடமேற்கு மாகாணங்களின் துணை ஆளுநரையும் கீழ்க் கோர்ட்டுகளின் நீதிபதிகளையும் அவர் நியமித்ததுடன் வங்காளத்திலும் வடமேற்கு மாகாணங்களின் இராணுவத்திற்கான மானியங்களையும் கட்டுப்படுத்தினார்.

நான்கு சார்பு அரசாங்கங்களின் எல்லைகளுக்குள் சேர்க்கப்படாத எல்லா மாவட்டங்களும் கவுன்சிலில் உள்ள கவர்னர் ஜெனரலின் நேரடி ஆளுகையின் கீழ் இருந்தன. ஒப்பந்தக் கடப்பாட்டின் மூலமாக அவருக்கிருந்த அதிகாரங்களைக் கொண்டு திணைக்குடி மாநிலங்களையும் கட்டுப்படுத்தி வந்தார். கவர்னர் ஜெனரலின் அலுவலக ஊழியர்கள் நான்கு துறைகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு துறைக்கும் ஒரு செயலாளர் பொறுப்பேற்றிருந்தார்.

அத்துறைகளாவன:

1)            அயல்துறை (பிரிட்டிஷாரின் நேரடிக் கட்டுப்பாட்டில் வராத மாகாணங்கள் சம்பந்தமான அயல்துறை)

2)            உள்துறை, நீதித்துறை மற்றும் வருவாய் கடிதப் போக்குவரத்தைக் கையாளும் துறை.

3)            நிதித்துறை

4)            இராணுவத்துறை

இவற்றைத் தவிர அரசியல் மற்றும் நிதித்துறைச் செயலாளர்கள் தங்களது சம்பந்தப்பட்ட இரகசியத் துறைகளையும் கொண்டிருந்தனர். அத்துறைகள் வசம் இரகசியப் பணிகள் ஒப்படைக்கப்பட்டன.

                மதராஸ் மற்றும் பம்பாயின் சார்பு அரசாங்கங்கள் பின்வருமாறு நிர்வகிக்கப்பட்டன. ஒவ்வொன்றும் சம்பந்தப்பட்ட கவர்னர்களையும் மூன்று உறுப்பினர்களடங்கிய கவுன்சில்களையும் (தலைமைத் தளபதி உள்ளிட்டு) கொண்டிருந்தன. கவர்னர்களையும் கவுன்சிலர்களையும் இயக்குநர்கள் மன்றமே நியமித்தது. வங்காளமும் வட மேற்கு மாகாணங்களும் லெப்டினன்ட் கவர்னர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தன. அவர்களை கவர்னர் ஜெனரல் நியமித்தார். சட்டமியற்றும் அதிகாரம் அல்லது எந்த ஒரு புதிய பதவியையும் உருவாக்கும் அதிகாரம் சார்பு அரசாங்கங்களுக்கு மறுக்கப்பட்டது. அதேபோன்று அவை “கவுன்சிலில் உள்ள இந்தியாவின் கவர்னர் ஜெனரலின் முன் அனுமதியின்றி ஊதியம், பணிக்கொடை அலவன்சுகள் வழங்க முடியாது.” இந்தக் கடுமையான கட்டுப்பாடுகள் சட்டப்படியானது தான் என்றாலும் வழக்கப்படி தேவையற்றதாகும். கவர்னர் ஜெனரலின் மீது அதிக பளுவை ஏற்றாதிருப்பதற்காகச் சிறிய விஷயங்களை கவர்னர் செயல்படுத்தினார். அது சம்பந்தமாக கவர்னர் மேலதிகாரிகளுக்குக் காலாண்டு அறிக்கைகளை அனுப்பினார். இந்த அறிக்கைகளைப் பரிசீலனை செய்த அதிகாரிகள் வழக்கமாக அவற்றுக்கு ஒப்புதல் அளித்தனர். இயக்குநர்கள் மன்றத்துடன் நேரடியாகக் கடிதத்தொடர்பு வைத்துக் கொள்ளும் சலுகையை பம்பாய் மற்றும் மதராஸ் அரசாங்கங்கள் பெற்றிருந்தன. தங்களது நடவடிக்கைக் குறிப்புகளின் சுருக்கத்தை நீதிமன்றத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் அனுப்பின. இந்திய அரசாங்கத்தின் ஒப்பந்தப் பத்திரங்களை சிவில் (உடன்படிக்கையின் படியான, உடன்படிக்கையின்படி அல்லாத) இராணுவம் கடற்படை மற்றும் திருச்சபை சேவை ஆகியவைகளின் அடிப்படையில் வழங்கின. வருவாய் வசூல் மற்றும் நீதி பரிபாலனம் ஆகியவை சிவில் சர்வீஸிடம் ஒப்படைக்கப்பட்டன.

                சிவில் மற்றும் இராணுவ ஊழியர் தேர்வுக்காகக் கிழக்கிந்தியக் கம்பெனி இங்கிலாந்தில் இரு கல்லூரிகளை நடத்திவந்தது.

1) ஹெய்லிபர்க் கல்லூரி மற்றும் 2) அடிஸ்கோம்பே கல்லூரி; ஒவ்வொரு மாணவருக்கும் அவரது பயிற்சிக்காலத்தின் போது ஆண்டொன்றுக்கு சுமார் 96 பவுண்ட் கம்பெனிக்குச் செலவாயிற்று.

                வருவாய்களனைத்தும் இந்தியாவின் தலைமை அரசாங்கத்தின் பெயரால் வசூலிக்கப்பட்டன. வசூலிக்கப்பட்ட வருவாய்கள் தலைமைக் கருவூலத்திற்கு மாற்றப்பட்டு அதனால் கட்டுப்படுத்தப்பட்டன. ஸ்தல நிதி சுயாட்சி என்பது முற்றிலுமாக இல்லாதிருந்தது; ஒரு மாகாணத்தில் ஏற்படும் பற்றாக்குறையை வேறொரு மாகாணத்தில் கிடைக்கும் உபரி வருவாயைக் கொண்டு ஈடுசெய்யப்பட்டது. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மாகாணத்தில் நடைபெற்ற போர்களுக்காக வாங்கப்பட்ட கடன்களுக்கு இந்தியா முழுவதன் வருவாய் பொறுப்பாக்கப்பட்டிருந்தது; சுருக்கத்தில் நிதியும் நிர்வாகமும் முழுவதுமாக ஏஜென்சியின் ஆட்சியின் கீழ் பிரான்சில் இருந்தது போன்று மத்தியப்படுத்தப்பட்டிருந்தது.

                நெறிமுறை நிர்வாக அமைப்பைப் பற்றி இதுவரை கூறியதே போதுமானது. அதைப்பற்றிய விமர்சனத்தை அடுத்த இயல்வரை ஒத்திப்போடுவோம்.

                இந்தியாவைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மேற்கு ஐரோப்பா ஏன் எப்படி ருத்ர தாண்டவமாடியது என்பதைக் கடந்த இயல் தெளிவுப்படுத்தியிருக்கும். பல்வேறு தேசங்களின் பல்வேறு தலைவர்களின் இராணுவங்களை நாம் பின் தொடர்ந்தோம் – ஒரு நாட்டுக்காகப் போராடிய மக்கள் இறுதியில் தங்களுக்கு விருப்பமானதைத் தேர்வு செய்துகொள்ள முடியவில்லை. ஷேக்ஸ்பியரின் மேக்பெத்தை சிந்தை கலங்கச் செய்து பயமுறுத்திய பாங்குமோவின் பிசாசுகளைப்போல காமா, ஆல்புகர்கியூக்கள், புஸ்ஸீக்கள், லால்லிகள், கிளைவ்கள், மால்சோம்கள், ஏரிகள், கரைகள் ஆகியவற்றைத்தான் நாம் கண்டோம்.

(தொடரும்)

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 11)