(மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி V, எண் 4, ஏப்ரல் 4, 1946, பக்கங்கள் 3522-24)

திரு.அவைத் தலைவர்: பொதுஜன முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அவசரமான விஷயத்தைப் பற்றி விவாதிக்கும் பொருட்டு சட்டமன்றத்தின் இதர நடவடிக்கைகளை ஒத்திவைக்கக் கோரும் பின்கண்ட தீர்மானத்தை ஶ்ரீ சத்தியப்பிரியா பானர்ஜி எனக்கு அனுப்பியுள்ளார்:

“தங்களது குறைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தவறிவிட்ட காரணத்தினால் கல்கத்தாவில் இந்திய அரசுக்குச் சொந்தமான அச்சகங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.”

ambd 400 1மதிப்பிற்குரிய உறுப்பினர் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு முன்னர் இந்த விஷயம் குறித்து குறுகிய கால முன்னறிவிப்பு கொண்ட கேள்வி ஒன்றை அனுப்பியிருந்தார், இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். ஆனால் குறுகிய கால முன்னறிவிப்பு கொண்ட இந்தக் கேள்வியை மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் ஏற்க மறுத்து விட்டார். உண்மையில் அந்த நேரத்தில் வேலை நிறுத்தம் எதுவும் நடைபெற்றுக் கொண்டிருக்கவில்லை. இந்த ஒத்திவைப்புத் தீர்மானமோ வேலை நிறுத்தத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறது. ஒருக்கால் எக்கணமும் நிகழக் கூடிய ஒரு வேலை நிறுத்தத்தைப் பற்றிய விஷயமாக அது இருக்கக் கூடும். இவ்வாறு அங்கு ஏதேனும் வேலை நிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதா?

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): இந்த விஷயம் குறித்து எனக்கு எந்தத் தகவலும் இல்லை.

ஶ்ரீ சத்யப் பிரியா பானர்ஜி: (சிட்டஹாங் மற்றும் ராஜ்சாஹி பிராந்தியங்கள்: முகமதியர் அல்லாத கிராமப்பகுதி): அங்கு வேலை நிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக எனக்குத் திட்டவட்டமான தகவல் வந்திருக்கிறது; நேற்றைய ஃப்ரீ பிரஸ் ஜர்னல் பத்திரிகையிலும் இந்தச் செய்தி வெளியாகி இருந்தது.

திரு. அவைத் தலைவர்: அப்படியானால் இந்தத் தகவலுக்கு மூல ஆதாரம் ஃப்ரீ பிரஸ் ஜர்னல் பத்திரிகைதானா?

ஶ்ரீசத்யப்பிரியா பானர்ஜி: இது சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஒரு தந்தி வந்திருக்கிறது.

திரு.தலைவர்: வேலை நிறுத்தத்திற்கான காரணங்களைத் தெரிவிக்கும் நிலையில் மதிப்பிற்குரிய உறுப்பினர் இருக்கிறாரா? அச்சகத்துறை முழுவதுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறதா?

ஶ்ரீ சத்யப்பிரியா பானர்ஜி: ஆம், ஐயா, ஏறத்தாழ 1200 தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அங்குள்ள நிலைமை இதுதான். கல்கத்தா அச்சகத்தைச் சேர்ந்த அச்சுத் தொழிலாளர்கள் மார்ச் 13ஆம் தேதியன்று வேலை நிறுத்த அறிவிப்பைத் தந்தனர். இதர பல இடங்களில் இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தமாக உள்ள அச்சகங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்த அறிவிப்பைத் தந்துள்ளனர். கல்கத்தா அச்சகத் தொழிலாளர்கள் 13 கோரிக்கைகள் அடங்கிய பட்டியல் ஒன்றைச் சமர்ப்பித்தனர்; இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் அரசாங்கம் பரிசீலித்து, அச்சுத் தொழிலாளர்களுக்குப் பின்கண்ட சலுகைகளை வழங்கியுள்ளது; அச்சகம் மூடப்படும் அரசு விடுமுறை நாட்களில் வேலைக்கு வருபவர்களுக்கு ஈட்டு விடுப்பு வழங்கப்படும்; தினக்கூலி தொழிலாளர்கள் போதிய திறன் வரம்புக்கு மேம்பட்ட பிரிவுகளுக்குப் பதவி உயர்வு பெறுவது விரைவுபடுத்தப்படும்; அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி விகிதங்கள் 1945 ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பதில் 1944 ஜூலை 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டுத் தரப்படும்; ஓய்வூதியத்தை நிர்ணயிக்கும்போது அகவிலைப்படியில் பாதி சம்பளமாகக் கணக்கிடப்படும்; கீழ்மட்டத்திலுள்ள தொழிலாளர்கள் சராசரி சம்பளத்தில் பாதிவரை ஓய்வூதியமாகப் பெறுவார்கள்; முழு வேலை நிறுத்த காலமும் சராசரி ஊதியத்துடன் கூடிய விடுப்பாகக் கருதப்படும்; அதேசமயம் நிச்சயமற்ற சந்தர்ப்பங்களில் வேலை நிறுத்த காலம் விடுப்பு கணக்கிலிருந்து கழித்துக் கொள்ளப்படும்; அச்சுத் தொழிலாளர்களின் சம்பள விகிதங்களிலும் வேலை நிலைமைகளிலும் நிலவும் முறைகேடுகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஒரு தனி அதிகாரி நியமிக்கப்படுவார்; பகல் நேரப் பணிகளுக்கான வேலை நேரம் 44 மணியிலிருந்து 40 மணியாகவும், இரவு நேரப் பணிகளுக்கான வேலை நேரம் 44 மணியிலிருந்து 38 மணியாகவும் குறைக்கப்படும்; நிரந்தர ஊதியம் பெறுபவர்களைப் போன்றே கூலித் தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் 23 நாள் விடுமுறை அளிக்கப்படும்.

சம்பள விகிதங்களை மாற்றியமைத்தல் உதவித் தொகைகளை அதிகரித்தல் போன்ற இதர கோரிக்கைகளைப் பொறுத்தவரை சம்பளக் கமிஷன் அறிக்கை வரும்வரை காத்திருக்க வேண்டும் என்றும், எனவே, இந்தக் கோரிக்கைகள் குறித்து தற்போது எத்தகைய அறிவிப்பையும் வெளியிடும் நிலையில் அரசாங்கம் இல்லை என்றும் அரசுக்குச் சொந்தமான அச்சகங்களில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் அரசாங்கம் தெரிவித்து விட்டது.

டில்லி அச்சக ஊழியர்களின் வேலை நிறுத்தத்தைப் பொறுத்த வரையில் அவர்கள் இந்த சலுகைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு வேலைக்குத் திரும்பி விட்டார்கள் என்பதை அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்கத்தா அச்சகங்களில் பணிபுரியும் அச்சுத் தொழிலாளர்களும் இதே உதாரணத்தை ஏன் பின்பற்றக்கூடாது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வேலை நேரத்தை 44 மணியிலிருந்து 40 மணியாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் உடனடியாக வலியுறுத்துகிறார்கள் என்று அலுவலகத்திலிருந்து சற்று முன்னர்தான் எனக்குத் தகவல் வந்தது. எனினும் இது குறித்து உடனடியாக என்னால் எதுவும் திட்டவட்டமாகக் கூற இயலாது. ஆயினும் இந்த விஷயத்தைப் பரிசீலிக்க நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறிருக்கும்போது ஒத்திவைப்புத் தீர்மானத்தின் அடிப்படையில் இந்த விஷயத்தை விவாதிப்பதில் பயனேதும் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

ஶ்ரீ சத்யப்பிரியா பானர்ஜி: ஐயா, மாண்புமிகு உறுப்பினரது துறையைச் சேர்ந்த பிராந்திய ஆணையர் 48 மணி வேலை நேரத்தைப் பரிந்துரைத்தார் என்றும், அந்தப் பரிந்துரையை மாண்புமிகு உறுப்பினர் ஏற்றுக் கொள்ளாமல், 44 மணி நேரத்தை வலியுறுத்தினார் என்றும் கூறப்படுகிறது. மேலும், ஐயா, வங்க அரசின் அச்சுத்துறைத் தொழிலாளர்கள் வாரத்திற்கு 40 மணி நேரமே வேலை செய்கின்றனர் என்பதையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

திரு.தலைவர்: இது ஏதோ குறுக்கு விசாரணை செய்வது போல் இருக்கிறது. மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் பதில் அளித்துள்ள நிலைமையில் இது எந்த அளவுக்கு அவசரமானதும் பொதுஜன முக்கியத்துவம் வாய்ந்ததும் என்பதை அறிய விரும்புகிறேன்.

ஶ்ரீ சத்யப்பிரியா பானர்ஜி: ஐயா, எண்ணற்ற தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான தொழிலாளர்களதும் அவர்களுடைய குடும்பத்தினரதும் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது; அவர்கள் பசி பட்னியால் வாடி வதங்கி வருகின்றனர். ஐயா, இது அவசரமானதும் பொதுஜன முக்கியத்துவம் வாய்ந்ததும் அல்ல என்றால் வேறு எதைத்தான் அவசரமானதும் பொதுஜன முக்கியத்துவமுடையதாகக் கருதுவது என்று எனக்குத் தெரியவில்லை.

பேராசிரியர் என்.ஜி.ரங்கா (குண்டூர் மற்றும் நெல்லூர்: முகமதியரல்லாத கிராமப் பகுதி): ஐயா, நான் ஒன்று கூற விரும்புகிறேன். தொழிலாளர் நலத்துறையைச் சேர்ந்த ஒரு தனி அதிகாரியைத் தொழிலாளர்களிடம் அனுப்பி, தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ள சலுகைகளை அவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களைச் சமாதானப்படுத்தினால் இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்து நடப்பதைத் தடுக்க முடியும் என்று கருதுகிறேன். அரசாங்கக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் கூட 1300 தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு மொத்த அச்சகப் பணியும் தடைப்பட்டிருப்பது மிகுந்த கவலை அளிக்கக் கூடியது என்பதில் ஐயமில்லை.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தொழிலாளர்களுடன் தொடர்பு கொண்டு மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதைப் பரிசீலிக்கும்படி கல்கத்தாவிலுள்ள பிராந்திய தொழிலாளர் நல ஆணையருக்கு தொழிலாளர் நலத் துறை பணித்திருப்பதாக அறிகிறேன்.

சேத் கோவிந்த தாஸ் (மத்திய மாகாணங்கள் இந்தி பேசும் பகுதிகள், முகமதியரல்லாதவர்): வேலை நிறுத்தம் குறித்து பல்வேறு அச்சகங்களிலிருந்து அறிவிப்பு வந்திருப்பதாக மாண்புமிகு உறுப்பினர் கூறினார். கல்கத்தா தவிர வேறு எந்த இடத்திலாவது வேலை நிறுத்தமோ அல்லது வேலை நிறுத்த அபாயமோ இருந்து வருகிறதா?

திரு.தலைவர்: இப்போதைய விஷயத்துக்கு இது சம்பந்தமுடையது என்று நான் கருதவில்லை. தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் கூறியுள்ள விவரங்களின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது ஒத்திவைப்புத் தீர்மானத்தை ஏற்குமளவுக்கு இந்த விஷயம் அத்தனை முக்கியத்துவமுடையது என்று நான் நினைக்கவில்லை.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)