(மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி IV, எண். 7, மார்ச் 26, 1946, பக்.2926-31)

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): இந்திய நிதி மசோதாவின் மீது நடைபெறும் விவாதத்தின்போது இடையில், எனக்கு விளக்கமளிக்க அனுமதி வழங்கிய அவைத் தலைவருக்கு, முதலில் என் நன்றியினை உரித்தாக்கிக் கொள்ளுகிறேன். நான் எடுத்துரைக்கும் கருத்துக்கள், தொழிலாளர் நலத்துறையினைச் சார்ந்தவைகள் அல்ல எனினும், ஒரு சில முக்கியமான விஷயங்களை உங்கள் முன் எடுத்து வைக்க விழைகிறேன்.

இதுவரையில், நான் சார்ந்த தொழிலாளர் நலத்துறைக்கு எதிராக எந்தவித விமர்சனமும் எழவில்லை என்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நிதிநிலை மசோதாவின் மீது, நேற்று நடை பெற்ற விவாதத்தின்போது, என் அருமை நண்பர் மதிப்பிற்குரிய பண்டித கோவிந்த மாளவியா தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்களுக்காக நிறுவப்பட இருக்கும், ஒரு கல்லூரியின் செயல்திட்ட வடிவினைப் பற்றிய குறிப்புகள் சிலவற்றை, இந்த அவையின் முன்வைத்ததால் அவைகளுக்கு விளக்கம் அளிக்கும் நிர்ப்பந்தம் காரணமாக, நான் குறுக்கிட நேர்ந்திருக்கிறது.

ambedkar 381இந்த திட்டமானது, கல்வித் துறையின் சார்பாளர்களுடன் ஆலோசிக்கப்பட்டு, நிதித்துறையின் ஒப்புதலையும் பெற்று இருப்பதால், சாதாரணமாக, இந்த விஷயத்தினை தற்காத்துக் கொள்ளும் பொறுப்பைக் கல்வித் துறையின் சார்பாளரிடமே விட்டு இருக்க முடியும். எனினும், இப்படி ஒரு திட்டத்தினை செயல்முறைப்படுத்த நான் முன்மொழிந்தமையாலும், என் அருமை நண்பர், இதற்கு அரசியல் வண்ணம் பூச முற்பட்டிருப்பதாலும், நான் குறுக்கிட்டு விளக்கம் அளிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

அவர், எடுத்து வைத்த கருத்துகளை, உன்னிப்பாக கவனித்ததில் இருந்து, இந்த செயல்திட்ட முன் வடிவு, அவருக்கு மிகுந்த வியப்பளித்ததாகவம் இந்தியக் கல்வித் துறையில் இனப்பற்று பிரிவினை மனப்பாங்கைப் புகுத்த முயற்சிப்பது போன்று இருப்பதாகவும் கூறியிருக்கிறார். கண்ணாடி மாளிகையில் குடியிருப்போர், கல் எறிய முயற்சிக்கக் கூடாது என்ற எல்லோரும் நன்றாக அறிந்த முதுமொழி என் நினைவுக்கு வருகிறது. இந்த முதுமொழியின் உட்கருத்தினை, என் நண்பர் பண்டித மாளவியா ஒப்புக் கொள்வாரா எனும் சந்தேகம் வந்திருக்கிறது.

மாறாக, எனக்கும், இந்த அவையின் மற்ற உறுப்பினர்களுக்கும், திரு.மாளவியா நாட்டுப் பற்றைப் பற்றிக் கற்பிக்க முன்வந்து இருக்கிறார் என்பது, எனக்கு மிகுந்த வியப்பினை அளிக்கிறது. அவருடைய தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் நமக்கொன்றும் புதியதல்ல. சாதாரண இந்து சமுதாயத்தைச் சார்ந்தவரிடம் மட்டுமல்ல, மற்ற பிரிவுகளைச் சார்ந்த பிராமணரின் இல்லத்தில் கூட இவர் தண்ணீர் பெற்று அருந்த மாட்டார்.

திரு.எம்.அனந்தசயனம் அய்யங்கார் (ஒதுக்கீட்டு மதராஸ் மாவட்டங்கள் மற்றும் சித்தூர், முகமதியரல்லாதவர், கிராமப்புறம்): அவர் பாரபட்சமற்று நிதி நெறியோடு செயல்படுகிறார்!

திரு.ஶ்ரீபிரகாசா: பிராமணர்களில் கூட புத்தி பேதமையுள்ளவர்கள் இருக்கலாம்.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அவருடைய உயர்ந்த கொள்கைகள் என்பவை தன்னுடைய தனித்தன்மையை, தூய்மையைப் பாதுகாப்பதாக எண்ணி, மனிதர்களோடு எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளாமல், தனி வலையில் வசிக்க விரும்பும் எலியின் கொள்கையைப் போன்றதுதான். இப்படிப்பட்ட வித்தியாசமான சித்தாந்தங்களைக் கடைபிடிக்கும் ஒருநபர், மக்கள் முன் சென்று, நாட்டுப் பற்று பற்றியும், இனப்பற்று பிரிவினை மனப்பாங்கு கூடாது என்றும் பேசுமுன், நன்கு சிந்தித்துப் பேச வேண்டும். அது மட்டுமல்லாமல் இவர், காசி இந்து பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்பதையும் நாம் நன்கு உணர வேண்டும். காசி இந்துப் பல்கலைக் கழகம் குறுகிய இனப்பற்றை அடிப்படையாகக் கொண்ட பல்கலைக் கழகம் இல்லை என்றால் குறுகிய இனப்பற்று கொண்ட நிறுவனம் என்பதுதான் என்ன என்ற அறிய விரும்புகிறேன். முதலில், இதை இந்துக்களின் பல்கலைக் கழகம் என்பதையே நான் ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கலாசார நலன்களைப் பாதுகாக்கும் குறுகிய நோக்கோடு செயல்படும் பல்கலைக்கழகம் என்பது மட்டுமே உண்மை. காசி இந்து பல்கலைக்கழகத்தில், மேலிருந்து அடிமட்ட நிலை வரையில், பிராமணர் அல்லாதோர் யாருமே இல்லை என்பது உண்மையா இல்லையா என்ற வினாவினை என் அருமை நண்பர் முன் வைக்க விரும்புகிறேன்.

ஓர் உறுப்பினர்: இருக்கிறார்கள்.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: பிராமணர் அல்லாத ஒரு இந்து சமூகத்தை சார்ந்தவர் இந்து தர்மத்தில் (சட்டத்தில்) எவ்வளவு சிறப்பான கல்வித் தகுதியினைப் பெற்றிருந்தாலும் இந்து மதத்துறையின் பேராசிரியராகப் பணியாற்ற அவர் தகுதியற்றவராவர் என்று 1916 ஆம் ஆண்டு, இந்து பல்கலைக் கழக நிர்வாக சபையில், நிரந்தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறதா இல்லையா என்ற வினாவினைக் கேட்க ஆசைப்படுகிறேன். சில மாதங்களுக்கு முன்பாக இந்துமத “காயஸ்தா” வகுப்பினை சார்ந்த ஒரு பெண்மணி, காசி இந்து பல்கலைக் கழகத்தில், இறை இயல் ஆய்வுத் துறையில் பயில சேர்த்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதால், உண்ணாவிரதம் மேற்கொண்ட நிகழ்ச்சியும் என் நண்பருக்கு மறந்துவிட்டதா என்பதையும் வினவ ஆசைப்படுகிறேன். இப்படிப்பட்ட நிகழ்வுகள் குறுகிய இனப்பற்று இல்லையெனில் அது வேறு என்ன என்ற வினாவினையும் முன்வைக்க விரும்புகிறேன். நேற்று நடைபெற்ற விவாதங்களைப் படிக்கும்போது, தாழ்த்தப்பட்டோருக்கான தனிக்கல்லூரி பற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்டபோது என் நண்பர் திரு.அய்யங்கார் மிகுந்த ஆச்சரியப்பட்டார் என்று பதிவாகியுள்ள குறிப்பினை கவனிக்க முடிந்தது. சிறிது காலத்திற்கு முன், சேலம் நகரத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி அவர் அறிந்திருக்கவில்லையோ என வியப்பாக இருக்கிறது. ஒருவேளை அவர் மறந்து போயிருக்கலாம்...

திரு.எம்.அனந்தசயனம் அய்யங்கார்: எனக்கு நினைவில்லை.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: .........அல்லது, அவரது ஏராளமான அரசியல் பணிகள் காரணமாக, தான் சார்ந்திருக்கும் சமூகத்தின் அங்கத்தினர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று அறியவில்லையோ என்னவோ. எனினும் இந்த மாதம் 12 ஆம் தேதியிட்ட “இந்து” பத்திரிகையின் சென்னைப் பதிப்பில் வெளிவந்திருக்கும் செய்தியினை அவர் கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

அந்த செய்தியின்படி, பிராமணர்களின் நல்வாழ்க்கை மட்டும் மேம்படுத்தும் எண்ணத்துடன், பிராமணர்களுக்கென்று ஒரு சங்கம் அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளைச் செய்வதென சேலம் பிராமணர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. பிராமணர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பது, பிராமணர்களுக்கு மட்டுமான ஒரு சங்கத்தினை ஏற்படுத்துவது, பிராமண சமுதாயத்தவர் மாத்திரம் கல்வி கற்க ஒரு தனிக் கல்லூரி நிறுவுவது மற்றும் பிராமண சமூகத்தவர்கள் மட்டும் பங்கேற்கும், பணியாற்றும் விதமான தொழிற்சாலைகள் அமைப்பது போன்ற முடிவுகள் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு நடைபெற்ற கூட்டத்துக்கு தலைவர் யார் தெரியுமா? வேறு யாரும் அல்ல, மாமேதை என்று போற்றப்படும் சச்சிவோத்ம சர் சி.பி.இராமசாமி ஐயர்தான் அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

திரு.எம்.அனந்தசயனம் அய்யங்கார்: உங்களுடைய முன்னாள் உத்தியோக சகாதானே.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: எனக்குத் தெரியாது. இந்த நாட்டில் பலர் நாட்டுப்பற்று பற்றிப் பேசிக் கொண்டே, நடைமுறையில் குறுகிய இனப்பற்றுப் போக்கைக் கடைபிடிக்கிறார்கள்.

திரு.எம்.அனந்தசயனம் அய்யங்கார்: இரண்டு விஷயங்களுக்காகவும் நான் வருந்துகிறேன்.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: சமூகத்தின் அடித்தளத்தில், அதலபாதளத்தில் தள்ளப்பட்டு, போராடிக் கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் போன்ற ஒரு சமூகத்தினர் தங்கள் வாழ்வில் முதல் முறையாக தங்களது இயலாமைகளை, இக்கட்டுகளை, இடர்ப்பாடுகளை உணர்ந்து, தாங்கள் மேற்படிப்புப் படிப்பதற்குத் துணைப்புரியும் கல்லூரிகளை அமைக்க முயன்று வருகின்றனர். இத்தகைய மக்களுக்காக குரல் கொடுக்க இங்கு வந்திருப்பதாகக் கூறிக்கொள்ளும் உறுப்பினர்கள் இந்த மக்கள் குறுகிய இனப்பற்றுடன் நடந்து கொள்கிறார்கள் என்று குற்றம் சாட்டுவது விவேகமின்மையே தவிர, பேதைமையே தவிர வேறல்ல என்பது என் கருத்து. இந்தக் கல்லூரி தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்கான தனிக் கல்லூரி என்று கூறுவது முற்றிலும் தவறான கூற்றாகும் என்று இந்த அவைக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த கல்லூரி, வழக்கமான மற்ற கல்லூரிகளைப் போலவே, எல்லா சமூகத்தை சார்ந்தவர்களும் சேர்ந்து பயன்பெற அமைக்கப்படுவதுதான். அதில், எவ்வித பாரபட்சத்திற்கும் இடமில்லை. யார் பயன் பெறுவதற்கும் தடையில்லை.

பண்டித கோவிந்த மாளவியா (அலகாபாத் மற்றும் ஜான்சி மண்டலங்கள் முகமதியர் அல்லாதோர் கிராமப்புறம்): நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன?

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இப்பொழுது, இப்படி உங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கும் முன்பாக, உங்கள் முன்னிலையில் ஒருமாத காலமாக இருக்கும் நிதிநிலை அறிக்கையினை முழுவதுமாக ஆய்ந்து பார்த்து, இதற்கு விளக்கம் பெறும் விதமாக, குறுகிய கால அவகாசத்தில் கேள்வியினை எழுப்பி, முழு விவரங்களையும் பெற்று இருக்கலாம். நான் முன்பே கூறியதுபோல், இது எல்லோருக்கும் பொதுவான கல்லூரிதான். அதுமட்டுமன்றி, கல்லூரியில் பணியாற்ற சாதி, மத, இன, மொழி பேதங்கள் இல்லாமல் சமூகத்தின் பல பிரிவினரும், ஒருமுகமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில், இந்துக்கள், பிராமணர்கள், பிராமணர் அல்லாதோர், மற்றும் பார்சி, கிருத்தவர், முகமதியர் என அனைத்து வகுப்புகளைச் சார்ந்தவர்களும் இடம் பெற்று இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், பம்பாய் பல்கலைக்கழகத்தோடு இக்கல்லூரியினை இணைப்பதற்காக, விண்ணப்பித்தபோது, எந்தவிதத் தயக்கமும் இன்றி, பல்கலைக்கழகத்தினரால் இணைப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்வளவு நேர்த்தியாக சிந்திக்கப்பட்ட ஒரு திட்டத்துடன் இணைப்புச் சான்று பெற இன்றுவரை பம்பாய் பல்கலைக்கழகத்திடம் யாருமே அணுகவில்லை என்ற பாராட்டினையும் பெற்று இருக்கிறது. முதன்முதலாக கல்லூரி ஒன்றினைத் தொடங்கும்போதே, தேவையான எல்லா கூறுகளையும் ஒருங்கே கொண்டும், செயல்முறைக்குக் கொண்டு வரப்பட்டும், மனநிறைவோடு அங்கீகாரம் அளிக்கப்பட்டது என்பது, பம்பாய்ப் பல்கலைக்கழக வரலாற்றில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி, கல்லூரியின் நிர்வாகமும், அதன் அங்கத்தினர்களும், பணியாற்றுபவர்களும், அவர்களின் செயல்முறை முன் ஏற்பாடுகளும் மிகுந்த பாராட்டுகளுக்கு உரித்தானவையாக இருந்தன. எனவே, அறிவுப்பூர்வமாக எவ்வித கோணத்தில் பார்க்கினும், இக்கல்லூரி “தாழ்த்தப்பட்ட இனத்தினருக்கு மட்டுமான கல்லூரி என்பதை யாராலும் ஏற்க முடியாது.

தாழ்த்தப்பட்ட வகுப்பினரைப் பொறுத்த வரையில் இக்கல்லூரி செய்யவிருக்கும் ஒரே காரியம் கல்லூரியில் அனுமதிப்பதிலும், உபகாரச் சம்பளங்கள் வழங்குவதிலும், தங்கும் விடுதியில் இட ஒதுக்கீடு செய்வதிலும் அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதேயாகும்.

இப்படிப்பட்ட ஒரு கல்லூரியினை ஏன் நிறுவ வேண்டியிருந்தது என்பதற்கான காரணத்தினை அவையின் முன்பு தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். பம்பாய் மாகாணத்தில், மாணவர் சமுதாயத்தின் பெருக்கம் என்பது அளவுக்கு மிஞ்சிய நிலையில் இருக்கிறது என்பது உறுப்பினர்கள் அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த ஆண்டு 19 புதிய கல்லூரிகளைத் திறக்க பம்பாய் பல்கலைக்கழகம் அனுமதியளித்ததை எனக்கு எதிரில் அமர்ந்திருக்கும் மரியாதைக்குரிய என் நண்பர் திரு.காட்கில் அறிவார். இதிலிருந்து மாணவர்கள் கல்லூரிகளில் இடம்பெறுவதற்கு படும் சிரமங்களை நன்கு உணரமுடியும். அது மட்டுமல்லாமல், மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி என்னவெனில், இந்த இட நெருக்கடியில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்கள் பள்ளிக் கல்வி முடிந்து கல்லூரியில் சேரும் நிலையினைப் பெறும்போது, இடம் கிடைக்காமல் மற்றவர்களைவிட மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

நான், இப்படிப்பட்ட நெருக்கடியான நிலையினை நன்கு உணர்ந்ததால் தாழ்த்தப்பட்ட சமூக மேம்பாட்டிற்கு மட்டும், முன்னுரிமை வழங்கும் விதமாக செயல்படும் ஒரு கல்லூரி செயல் வடிவினை இந்திய அரசாங்கத்திடம் முன் மொழிந்தேன். இதைத் தவிர இன வேறுபாடு அல்லது பிரிவினைக்கு வழிவகுப்பது போன்ற எந்த ஒரு கூறும், இந்த திட்ட முன்மொழிதலில் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அவைத்தலைவர் அவர்களே, என் மரியாதைக்குரிய நண்பர் இந்த அவையில் எழுப்பிய மற்றொரு விஷயத்துக்கு வருகிறேன். இப்படிப்பட்ட ஒரு விஷயத்தை ஏன் இங்கு புகுத்துகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இங்க அரசியலைப் புகுத்தி தேர்தல்கள் என்ற நிலைப்பாட்டில் நான் முற்றிலும் துடைத்தெறியப்பட்டவன் என்ற கருத்தினைக் கூறியிருக்கிறார். இதன் மூலம், யாருக்கு என்ன செய்தியினைக் கூற விரும்புகிறார் என்று தெரியவில்லை. அதாவது, நான் இந்திய அரசாங்கப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கக் கூடாது அல்லது அதைப் போன்ற வேறு ஏதாவது நிலைக்கு தேர்வு செய்திருக்கக் கூடாது என்பது போன்ற குறிப்பினை வழங்க அவர் எண்ணுகிறாரா என்பது தெரியவில்லை.

பண்டித கோவிந்த மாளவியா: நீங்கள் அரசியல் வாழ்வில் முற்றிலும் தோற்றுப் போனவர் இல்லையா?

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தேர்தல்களின் அடிப்படையில் கூறும்போது, நான் வாடிப்போன செடியின் நிலையில் இருக்கிறேன் என்று சொல்லலாம். எனினும், நான் வேரோடு சாய்ந்து போன நிலையில் இல்லையென்பதைத் திட்டவட்டமாக, என் எதிரில் இருக்கும் நண்பர்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்ளுகிறேன். மதிப்பிற்குரிய என்னுடைய நண்பர் தேர்தல் முடிவுகளைப் பற்றிக் கூறி, அதில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடங்களைக் காங்கிரஸ் கட்சியினர் எந்தெந்த வழிகளில் இந்த வெற்றிகளைப் பெற்றார்கள் என்பதை ஆராய அவர் தயாராக இருக்கிறாரா என்பதை அறிய விரும்புகிறேன்.

பேராசிரியர் என்.ஜி.ரங்கா: நாங்கள் தயாராக இருக்கிறோம்.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: காங்கிரஸ் கட்சியினர், எந்தெந்த வழி வகைகளில் வெற்றி பெற்றார்கள் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

திரு. எம். அனந்தசயனம் அய்யங்கார்: அதே வழக்கமான குற்றச்சாட்டுகள்தான்!

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அதே வழக்கமான குற்றச்சாட்டுகள் அல்ல. இவைகளை, அதிகாரப்பூர்வமாக ஆய்வுக்கும் எடுத்துக் கொள்ளும் வகையில், உண்மையான ஆதாரங்களை சபையின் முன் வைக்கிறேன்.

பேராசிரியர் என்.ஜி.ரங்கா: ஆழம் தெரியாமல் காலை வைக்காதீர்கள்.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தீண்டத்தகாத இன வாக்காளர்கள் யாருமே வாக்குகளைப் பதிவு செய்ய, வாக்குச் சாவடிகளில் அனுமதிக்கப்படவில்லை என்பதை மதிப்பிற்குரிய உறுப்பினர் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். சத்தாரா மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வு ஒன்றினைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு இணையாக ஓர் அரசாங்கமே நடந்து வந்தது.

361 கிராமங்களில் இருந்து, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த வாக்காளர்கள் அனைவரும், உயர்சாதி இந்துக்களால், கிராம சாவடிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்களா என்று கேட்கப்பட்டது. அவர்கள் மறுத்தபோது அனைவரும் கிராம சாவடியில் பாதுகாவலில் வைக்கப்பட்டு எங்கும் நகர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இன்னும் இதைப் போன்ற நிறைய நிகழ்வுகளை நான் ஆதாரமாகக் கொடுக்க முடியும்.

பண்டித கோவிந்த மாளவியா: அப்படியானால், தயவு செய்து கொடுங்கள்.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: காங்கிரஸ் கட்சியினரை எதிர்த்து போட்டியிட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த வேட்பாளர்கள் கூடத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். மிக அண்மைக் காலத்தில் ஆக்ரா நகரில் நடைபெற்ற சம்பவத்தினை எடுத்துக் கொள்ளுங்கள். வாக்குப்பதிவு தினத்தன்று தாழ்த்தப்பட்ட இனத்தவரின் 50 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. வாக்குச்சாவடிக்குச் சென்றிருந்த அந்த இனத்தவரின் வீடுகள் சூறையாடப்பட்டன. கான்பூர் நகரில் ஏழு நபர்கள் கொலை செய்யப்பட்டனர்.

திரு.திவான் சமன்லால்: (மேற்கு பஞ்சாப்: முகமதியர் அல்லாதோர்): சூறையாடியவர்கள் யார்?

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இந்துக்கள் இப்படிப்பட்ட வழிமுறைகளில்தான் இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடினார்கள். (இடைமறிக்கப்படுகிறது). என் மரியாதைக்குரிய நண்பருக்கு, நான் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம், இறுதித் தேர்தலை வைத்து, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதா அல்லது, நான் சார்ந்திருக்கும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனம் வெற்றி பெற்றதா என்று நிர்ணயிப்பது அறிவுடைய செயலாகாது. ஏனெனில் இறுதித் தேர்தல்களில் 95 சதவீத பெரும்பான்மையினராக உள்ள உயர்சாதி இந்துக்களோடு ஒப்பிடும் போது தீண்டப்படாதவர்கள் பூதக் கண்ணாடியில் பார்க்கும் அளவுக்கு 5 சதவீத மிகச் சிறிய பங்கினையே பெறுகிறார்கள். இப்படிப்பட்ட இறுதிநிலை தேர்வுகளின் அடிப்படையில் யாருக்குப் பலம் இருக்கிறது, யாருக்கு யார் பிரதிநிதிகளாக இருப்பது என்பதைத் தேர்வு செய்வது அறிவீனமான செயலாகவே இருக்கும். உண்மையான பலப்பரீட்சையை முதற்கட்ட தேர்தல்களை வைத்தே பரிசோதிக்க முடியும். முதற்கட்ட தேர்தல் என்பது அனைத்து தாழ்த்தப்பட்ட இனத்தவர்களும், பங்கேற்கும் தனி வாக்காளர் பட்டியல் மூலம் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல்களில் என்ன நடந்தது, அதன் முடிவுகள் எப்படி இருந்தது என்பதைப் பற்றிய சில கருத்துக்களை உங்கள் முன் வைக்க ஆசைப்படுகிறேன். பஞ்சாப்பிலும், பம்பாயிலும் தலா மூன்று தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல்கள் நடைபெற்றன.

திரு. மோகன்லால் சக்சேனா: மொத்தம் எத்தனை இடங்களில் 3 இடங்கள்?...

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: நான் சொல்லி முடித்துவிடுகிறேன்.

அவைத்தலைவர்: அவர் தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டும்.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: மத்திய மாகாணங்களில் 3 இடங்களுக்கும், சென்னை மாகாணத்தில் 10 இடங்களுக்கும், ஐக்கிய மாகாணங்களில் 2 இடங்களுக்கும் முதற்கட்ட தேர்தல்கள் நடைபெற்றன. (குறுக்கீடுகள்). என் மரியாதைக்குரிய நண்பர் உண்மையை அறிந்து கொள்ள வேண்டுமெனில், முதற்கட்ட தேர்தல் என்பதே கட்டாயமாக நடைபெற்றாக வேண்டுமென்பதல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 5 நபர்கள் போட்டியிட்டாலொழிய, பூர்வாங்கத் தேர்தலை நடத்த முடியாது எனும் நிலையில், தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சார்ந்த மக்கள், இம்மாதிரியான பூர்வாங்கத் தேர்தலில் போட்டியிடுவதைக் கூட விரும்புவதில்லை. காரணம், இந்த தேர்தல்களுக்குக் கூட அதிகப்படியான தொகை செலவாகும் என்பதாகும். எங்களிடம் செலவு செய்ய கணக்கில் வராத கருப்பு - கள்ளச் சந்தைப் பணம் இல்லையென்பதுமேயாகும். (அதிகமான குறுக்கீடுகள்). இந்த 3 மாகாணங்களிலும், மொத்தம் 22 இடங்களுக்குப் பூர்வாங்கத் தேர்தல் நடைபெற்றது. அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. போட்டியிட்ட மொத்த இடங்களில் 19 இடங்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனம் வெற்றி வாகை சூடியிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திவான் சமன்லால்: பஞ்சாப் மாகாணத்தில் எத்தனை இடங்களில்?

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஒரு நிமிடம் பொறுங்கள். பம்பாய் மாகாணத்தில்.... எனக்கு நேரம் குறைவாக இருப்பதால் முழு விவரங்களை கொடுக்க இயலவில்லை.

பண்டித கோவிந்த் மாளவியா: அது உங்களுக்கு எதிராகவே போகும்!

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: பம்பாய் நகரின் இரண்டு தொகுதிகளில் பூர்வாங்க தேர்தல் நடைபெற்றதில், பைகுலா தொகுதியும் ஒன்று. இங்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளன வேட்பாளர் 11,334 வாக்குகளையும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 2,096 வாக்குகளையும் பெற்றனர். பம்பாய் நகரத்தின், புறநகர் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளன வேட்பாளர் 12,899 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் 2,088 வாக்குகளையும் பெற்றனர். மற்றும் உதாரணத்திற்கு மத்திய மாகாணங்களின் இரு தொகுதிகளை எடுத்துக் கொள்கிறேன்...

திரு. எம். அனந்த சயனம் அய்யங்கார்: அங்கு கள்ளச்சந்தை நடைமுறையில் இல்லை.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: நாக்பூர் தொகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளன வேட்பாளர் 1933 வாக்குகளையும் காங்கிரஸ் வேட்பாளர் 270 வாக்குகளும் பெற்றனர். பந்த்ரா மாவட்டத்தில் சம்மேளன வேட்பாளர் 3,187 வாக்குகளும் சுயேச்சை வேட்பாளர் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் உட்பட அனைவரும் சேர்ந்து 976 வாக்குகள் மட்டுமே பெற்றனர். ஐக்கிய மாகாணங்களின் ஆக்ரா தொகுதியில் சம்மேளன வேட்பாளர் 2,248 வாக்குகளையும், காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற அனைவரும் சேர்ந்து 840 வாக்குகள் மட்டுமே பெற்றனர். பஞ்சாப் மாகாணத்தில் லூதியானா: ஃபெரோஸ்பூர் தொகுதியை மற்றுமோர் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுமாயின், அங்கு சம்மேளனம் 1,900 வாக்குகளையும் காங்கிரஸ் 500 வாக்குகளையும் பெற்றது.

திவான் சமன்லால்: பஞ்சாப் மாகாணத்தில், ஷெட்யூல்டு வகுப்பு வேட்பாளர் யாரும் இல்லை.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தொடர்ந்து விவரங்களை சொல்ல என் நண்பர் அனுமதிப்பாரா? இந்த விஷயமாக, அவருக்குத் தெரிந்திருப்பவைகளைவிட, எனக்கு அதிகம் தெரியும் என்று எண்ணுகிறேன்.

திவான் சமன்லால்: மாண்புமிகு நண்பருக்கு, தாழ்த்தப்பட்ட வகுப்பு சம்மேளன வேட்பாளர் ஒருவர் கூட இல்லை என்பது தெரியும்.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தாழ்த்தப்பட்ட வகுப்பு சம்மேளனத்தின்.....

திவான் சமன்லால்: இது முழு பொய்.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: என்னுடைய மாண்புமிகு நண்பர் அவர் கூறிய வார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டும். அதற்காக, அவைத் தலைவரின் பாதுகாவலை வேண்டுகிறேன்.

திவான் சமன்லால்: பஞ்சாப் மாகாணத்தில், ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பு சம்மேளன வேட்பாளர் கூட இல்லை எனும் என்கூற்றை மறுதலிக்குமாறு அறைகூவல் விடுக்கிறேன்.

அவைத் தலைவர்: ஒழுங்கு, ஒழுங்கு. மாண்புமிகு உறுப்பினர், விவாதத்தில் பல்வேறு புள்ளிவிபரங்கள் எடுத்து வைக்கும் போது, காரசாரமான நிலை உருவாவதைத் தவிர்க்க வேண்டும். கேட்கப்பட்ட குறிப்பிட்ட வினாவுக்குத் தக்க பதில் கோரப்பட்டு இருக்கும்போது, அவர் என்ன சொல்ல வந்தாலும், அதனைக் கண்ணியத்தோடு, அமைதியாகக் கேட்க வேண்டும். கேட்கப்பட்ட கேள்விக்கு உறுப்பினர் கூறிய பதிலானது, உண்மையான தகவல்கள் தானா இல்லையா என்பதைப் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. எனினும், இந்த அவையின் மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் யார் ஒருவருக்கும் மற்ற மாண்புமிகு உறுப்பினரைப் பார்த்து, அவர் கூறுவது முழு பொய் என்று கருத்துக் கூறும் நிலையோ, உரிமையோ இல்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

திவான் சமன்லால்: ஐயா... நான் கூறிய வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். எனினும், நான் கூறிய வார்த்தைகளுக்குப் பதிலாக “அவர் கூறுவது உண்மையல்ல” என்று கூற விழைகிறேன்.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: சென்னை மாகாணத்திலிருந்து ஒரு எடுத்துக்காட்டு அதாவது, அமலாபுரம் தொகுதியில் சம்மேளனத்தின் வேட்பாளர் 10,540 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் 2,683 வாக்குகளையும் பெற்றனர். இவைகள்தான் பூர்வாங்கத் தேர்தல்களின் முடிவுகள், ஆகவே நேர்மையான முறையில் ஒவ்வொருவரின் பலம் அறிய வேண்டுமெனில், பூர்வாங்கத் தேர்தல்கள் நடைபெற்றே ஆகவேண்டும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். என் எதிரே அமர்ந்திருக்கும், மதிப்பிற்குரிய நண்பர்களுக்கு சொல்லிக் கொள்வதெல்லாம், கடந்த தேர்தலில் வெற்றிபெறக் கையாளப்பட்ட வழிமுறைகளுக்கு உண்மையாகவே மதிப்பு இருக்கிறது எனில்... என் மனதுக்குட்பட்டதைச் சொல்ல விரும்புகிறேன். இத்தகைய “தேர்தல் முறை” என்பதே,. பொது மக்களை, வஞ்சித்து, ஏமாற்றம் போலித்தனமானது என்பதை தக்க ஆதாரங்களோடு, சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்க முடியும். எனவே, ஷெட்யூல்டு வகுப்பினரின் சார்பாளர்களைத் தேர்ந்தெடுக்க, அவர்களுக்கென்று, தனி வாக்காளர் தொகுதிகள் இருக்க வேண்டும்.

என் மரியாதைக்குரிய நண்பர், பண்டித மாளவியா இன்னொரு கருத்தினைக் கூற முயற்சித்தார். தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக, இந்து சமுதாயத்தினர் நீண்ட காலமாக பாடுபடுவதாகவும் அவர்கள் சுயமரியாதை மற்றும் - பொருளாதார முன்னேற்றம் பெறுவதற்காக, அதிக அளவு நன்கொடை பெற்றுத் தர முடியும் என்றும் கூறினார்.

பண்டித கோவிந்த மாளவியா: அவைத் தலைவர் அவர்களே! ஓர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்ப விரும்புகிறேன். இந்த அவையில், முன்னதாகவே, தன் கருத்துக்களை எடுத்துரைத்து, மீண்டும் விளக்கம் அளிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில் இருக்கும் ஒரு மதிப்பிற்குரிய உறுப்பினரைச் சுட்டிக்காட்டி மற்றொரு மாண்புமிகு உறுப்பினர், மிகத் தவறாக மேற்கோள் கட்டி, அவரால் கூறப்பட்டதாக, உண்மைக்குப் புறம்பான பல கருத்துக்களை அறிவிக்கும்பட்சத்தில், அந்த உறுப்பினர் தன்னைத் தற்காத்துக் கொள்ள இருக்கும் வழிதான் என்ன?

அவைத்தலைவர்: அனுமானத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல, நான் அதிக சிரமம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அதிகாரபூர்வமான தகவல்களைத் தருவது என்பது ஒரு விஷயம். ஒரு நிகழ்ச்சியினை, தான் புரிந்து கொண்ட விதத்தில் ஒரு கருத்தினைக் கூறுவது என்பது வேறொரு விஷயம். ஆகவே மதிப்பிற்குரிய உறுப்பினர் இவை இரண்டையும் சேர்த்துக் குழப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: என்னுடைய மதிப்பிற்குரிய நண்பர், தன் உரையினிடையில் கூறிய, அதாவது: “தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் சமூக நலம், மற்றும் பொருளாதார நிலையின் மேம்பாட்டிற்காக இந்து சமுதாயத்தைச் சார்ந்தவர்கள், தன்னலம் பாராது மிகுந்த அக்கறையோடு, தொடர்ந்து தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள்” என்ற கருத்தினைப் பற்றி விவாதித்துக் கொண்டு இருந்தேன். இந்த அவையின் நான்கு சுவர்களுக்கு மத்தியில் நடந்து கொண்டு இருப்பதை வைத்து, ஒருவர் முடிவுக்கு வரவேண்டிய நிலையிருப்பின் என்னுடைய மதிப்பிற்குரிய நண்பர் கூறியது போன்ற “வாக்குமூலங்களை” நேர்மையான மனிதர்கள் யாராலும் ஒப்புக்கொள்ள முடியாது.

நான் இந்த சபையில் மிகக் குறைந்த காலமாகத்தான் உறுப்பினராக இருக்கிறேன் என்ற போதிலும் முன்பே, இங்கு நடந்த விவாதங்கள், மற்றும் எல்லாவித செய்திகளையும், அதிகாரப்பூர்வ சபைக் குறிப்பேடுகளில் தொடர்ந்து படித்து வருகிறேன். அப்படி எந்த ஒரு செய்தியினையும் ஒதுக்கித் தள்ளாமல், எல்லா விஷயங்களையும் முழுமையாக படித்தறிந்திருக்கிறேன். எனவே, அவைத்தலைவர் அவர்களே! கடந்த காலச் செயல்பாடுகளின் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு என்ற போதிலும், நான் அறிந்துகொண்ட செய்திகளின் அடிப்படையில், இதற்கு முன்பு எப்போதும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்த எவரும், தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு, அன்றாடம் இழைக்கப்படும் கொடுமைகள், கொடூரமான செயல்கள், மற்றும் அவர்கள் அநியாயமாக ஒடுக்கப்படுவது போன்ற பிரச்சினைகளைப் பற்றி அரசுத் தரப்பிடம் அபூர்வமாகக் கூட எந்த ஒரு கேள்வியையும் கேட்டதில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது தொடர்பான எந்தவிதமான குறிப்போ, தீர்மானங்களோ எங்கும் காணப்படவில்லை.

திரு.எம். அனந்தசயனம் அய்யங்கார்: நீங்கள், இதை மாகாண வரம்புகளுக்குட்பட்ட விஷயங்கள் என்று சொல்லலாம்.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ...ஒரு சில முக்கியமான செயல்கள், அந்த சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக செய்யப்பட்டிருக்கலாம். ஒரே ஒருமுறை மட்டும், அதாவது 1932 அல்லது 1934 ஆம் ஆண்டிலோ, எதிர் வரிசையில் இருந்த மதிப்பிற்குரிய உறுப்பினர்கள், தீண்டாமையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று தீவிரமாக முயற்சித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். என் நினைவில், சரியாக எந்த....

மதிப்பிற்குரிய ஓர் உறுப்பினர்: 1933 ஆம் ஆண்டு.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ....ஆலயப் பிரவேச மசோதா கொண்டு வரப்பட்டு வைசிராய் அதற்கு அனுமதி வழங்க மறுத்தபோது, எப்படிப்பட்ட ஆர்ப்பாட்டம் நடத்திருக்கிறது! இந்த மசோதாவினைக் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டதால், மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் பலர் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டதோடல்லாமல், தற்கொலை செய்து கொள்வோம் என்றும் மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். ஆனால் அனுமதி வழங்கப்பட்டபின் நடந்தது என்ன? அந்த மசோதாவைக் கொண்டுவர ஆதரவு தந்த பெரிய மனிதர்களே, அதைத் தூக்கி எறிந்ததோடல்லாமல், அதை ஏற்க மறுத்துப் புறக்கணித்தார்கள். அந்த மசோதாவைக் கொண்டு வந்த திரு.ரங்க ஐயர் தனித்து விடப்பட்டார். அவர் தமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவர்களை வெகுவாக சாடியிருக்கிறார். இரண்டு சந்தர்ப்பங்களில் தான் அந்தப் பிரச்சினை...

மதிப்பிற்குரிய ஓர் உறுப்பினர்: நீங்கள் நடந்த விவாதங்களை முழுமையாக படிக்கவில்லை.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: எல்லா விவாதங்களையும் முழுமையாக படித்திருக்கிறேன். இரண்டே இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டும் தாழ்த்தப்பட்ட இன மக்களின் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்திருக்கிறார்கள். தற்போது, இன்னொரு சபையின் தலைவராக பணியாற்றும் திரு.மனக்ஜி தாதாபாய், 1916 ஆம் ஆண்டு, தாழ்த்தப்பட்ட இன மக்களின் பிரச்சினைகளைப் பற்றி ஆராய ஒரு குழு அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தினை முன்மொழிந்தார்.

இந்த விவாதத்தினைத் தொடங்கிவைத்த மதிப்பிற்குரிய என்னுடைய நண்பர், அந்த தீர்மானத்தின் விவாதங்களை நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தாரானால், அந்தத் தீர்மானத்தினை மிகக் கடுமையாக எதிர்த்தவர் வேறு யாருமல்ல, அவருடைய தகப்பனார்தான் என்பது புரியும். இரண்டாவதாக, 1927 ஆம் ஆண்டு பிர்க்கென் ஹெட் பிரபு ஷெட்யூல்டு வகுப்பினரை, சிறுப்பான்மையினர் என்று கூறி, அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியான பிரச்சினைகளைப் பற்றி பேசும்போது மட்டும்தான், நான் இருப்பதே, எதிர்கட்சி நண்பர்களுக்குத் தெரிகிறது. அதாவது: தனி வாக்காளர்கள் தொகுதிகள் வேண்டும், பணியிடங்களில் இட ஒதுக்கீடு வேண்டும், கல்வித் துறையில் மானியம் அளிக்கப்பட வேண்டும் என்பவை போன்ற விஷயங்களைப் பற்றி பிரச்சினை எழுப்பும் போது மட்டுமே நான் இருப்பது இவர்களுக்கு தெரிகிறது. இல்லையென்றால், அவர்களைப் பொறுத்தவரை, நான் இறந்து போனவள்...

மதிப்பிற்குரிய ஓர் உறுப்பினர்: அப்படி ஒன்றும் இல்லை.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ....ஆக, எனக்கு சமூக மற்றும் அரசியல் உரிமைகள் மறுக்கப்படுகிறது. அதற்குக் காரணம், நான் ஓர் “இந்து” என்று அவர்கள் சொல்கிறார்கள். சமுதாயம் இந்த கண்ணோட்டத்தில் பார்க்குமானால், அவர்கள் சொல்வதுபோல், நான் அவர்களின் உடன்பிறந்த சகோதரனாக இருக்க முடியாது... அவர்களின் ஒன்றுவிட்டச் சகோதரனாகத்தான் இருக்க முடியும்.

அடுத்து, இவர்களுக்கு உறுதியாக ஒன்றைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். இவர்களது ஈகையால் நான் வாழ வேண்டிய அவசியம் இல்லை என்று திட்டவட்டமாக, எதிர் வரிசை நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்த நாட்டின் குடிமகன். மற்ற எந்த ஒரு சமுதாயத்தினரும் தங்களின் முன்னேற்றத்திற்காகக் கோரிப் பெறும் உரிமை எனக்கும் உண்டு. யாருடைய தயவும் எனக்குத் தேவையில்லை. ஈகை என்று கூறும் சொல்லின் நோக்கமே, என்னையும், நான் சார்ந்திருக்கும் சமுதாயத்தினரையும் அடிமைப்படுத்த நினைப்பதும், நிலைகுலையச் செய்வதும் தான். தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் அவர்களின் உரிமைகளைப் பெற விரும்புகிறார்கள். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு இந்த அவைக்கு நான் திட்டவட்டமாக தெரிவிக்க விரும்புவதெல்லாம் அவர்கள் கோரும் உரிமைகள் எதிர்க்கப்படுமானால் அவைகளைப் பெற அவர்கள் இரத்தம் சிந்தவும் தயங்க மாட்டார்கள் என்பதுதான்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)