(இந்திய தகவல் ஏடு, டிசம்பர் 15, 1945 ..684-88)

ஏழாவது தொழிலாளர் மாநாடு (இது இனி இந்திய தொழிலாளர் மாநாடு என அழைக்கப்படும்) நவம்பர் 26ல் புதுடில்லியில் நடைபெற்றது. மாநாட்டுக்குத் தலைமை வகித்த இந்திய அரசின் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தொழிலாளர்களுக்கு அரசின் கடமைகள் குறித்த பட்டியல் ஒன்றை சமர்ப்பித்து, இந்தியத் தொழிலாளர் தரத்தினைப் பன்னாட்டுத் தரத்திற்கு உயர்த்தும் வகையில் சட்டம் இயற்ற வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.

தொழிலாளர் நலம் குறித்த இராயல் கமிஷனின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதிலும், சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் அமைப்பு நெறிகளுக்கு ஒப்பிசைவு அளித்தலிலும் இந்திய அரசின் செயல்பாடு பற்றிய மதிப்பீட்டை நிகழ்த்திய அம்பேத்கர் இராயல் கமிஷனின் பரிந்துரைகளில் அதுவரை நிறைவேற்றப்படாதிருப்பவை பத்து மட்டுமே என்பதையுரைத்ததுடன், நடைமுறைநெறிகள் 63இல் 19 நெறிகளுக்கு மட்டுமே இந்திய அரசு ஒப்பிசைவு தந்துள்ளது என்பதையும் சுட்டினார். அதேசமயத்தில், இந்திய அரசு ஒப்பிசைவு அளிக்காததற்குக் காரணம், அமைப்பு நெறிகள் எவ்வித மாற்றமுமின்றி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்ற கட்டுத்திட்டமேயன்றித் தொழிலாளர் நலத்தில் அரசுக்கு அக்கறையில்லையென்பதே காரணமென்று கருதலாகாதென உரைத்தார்.

அவையில் கலந்து கொண்டவர்களை வரவேற்று டாக்டர் அம்பேத்கர் பேசியதாவது:

Ambedkar with MR Jayakar Tej Bahadur Sapru at Yerwada jail“தற்போது சமாதானம் நிலவுதல் குறித்து நாம் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம் என உறுதியாகக் கருதுகிறேன். இந்த வெற்றியை எய்துதற்கு நாம் கடந்த ஆறாண்டு காலத்தில் கணக்கிடவியலா அளவில் உயிர், உடைமைகளை இழந்து போராடியுள்ளோம் என்பதுடன் சொல்லவெண்ணாத் துன்பங்களையும், துயரங்களையும் ஏற்றுள்ளோம். போரும், போர்காலச் சிக்கல்களும் முடிவுக்கு வந்துவிட்டன எனும் நிம்மதியைப் பெற்றுள்ளோம். பல தளவாடங்களைத் தயாரித்தாக வேண்டும்; அதுவும் உடனடியாகத் தயாரித்தாக வேண்டும் என்ற இறுக்க நிலையும் இப்போது இல்லை. நமது கவலைகளெல்லாம் கடுகி மறைந்தனவென்று இறைவனுக்கு நன்றி கூறுகிறோம். போர்க்காலச் சிக்கல்கள் மறைந்து விட்டன என்றாலும் மக்களின் சமுதாய, பொருளாதார வாழ்வைச் சீரமைத்து மீட்கும்பொறுப்பு நம்மை எதிர்நோக்கியுள்ளது. உலகின் பிற நாடுகளைப் போன்றே இந்தியாவுக்கும் இப்பொறுப்பு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.

அரசின் கடப்பாடுகள்

“அரசின் சமூக, பொருளாதாரக் கடப்பாடுகளில் முக்கியமானவையாகிய தொழிலாளர் நலம், முதலாளி-தொழிலாளி உறவு இவை குறித்த சிக்கல்களே இம்மாநாட்டின் முக்கியப் பொருள் எனலாம். இம்மாநாடு ஆற்ற வேண்டிய பணி என்னவெனக் குறிப்பாக நோக்கிடில், இத்துறையில் நாம் இதுவரை ஆற்றியுள்ள பணிகள் யாவை? இனி ஆற்றப்பட வேண்டிய பணிகள் யாவை என மதிப்பீடு செய்ய முனையின் அம்மதிப்பீடே மாநாட்டின் பணிகளை வரையறுக்கும் எனத் திட்டவட்டமாய்க் கூறலாம்.

இம்மதிப்பீட்டினைச் செய்யுமுகமாக, முதலில் நமது கடப்பாடுகள் குறித்து ஒரு இருப்புக்கணக்கில் தொடங்கக் கருதுகிறேன். நமது கடப்பாடுகள் இருவேறு ஊற்றுகளிலிருந்து எழுகின்றன. முதலாவதாக ,1930 ஆம் ஆண்டில் தொழிலாளர் நலம் பற்றிய இராயல் கமிஷனின் அறிக்கையையும், அடுத்து சர்வதேசத் தொழிலாளர் நிறுவனத்தின் (ஐ.எல்.ஓ) அமைப்பு நெறிகளையும் சுட்டலாம். சர்வதேசத் தொழிலாளர் நிறுவனத்தின் தொடக்க காலத்திலிருந்தே இந்தியா அதில் உறுப்பு நாடாய்ச் சேர்ந்துள்ளது என்பதையும் நினைவுகூர வேண்டும்.

“தொழிலாளர் நலம் குறித்த இராயல் கமிஷன் 357 பரிந்துரைகளைத் தந்துள்ளது; 1929 ஆம் ஆண்டில் மற்ற நாடுகளோடு ஒப்பிட, தொழிலாளர் நலச் சட்டமியற்றலில் இந்தியா எவ்வளவுக்குப் பின் தங்கியிருந்தது என்பதை இது காட்டுகிறது. பரிந்துரைகளில் 133 (மொத்தம் 357), முழுமையாகவோ பகுதியாகவோ, சட்டமியற்றல் தொடர்பானவை. இவற்றுள் 126 பரிந்துரைகளை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. 106 பரிந்துரைகளுக்குச் செயல்வடிவமும் தரப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள 20 பரிந்துரைகளில் தொழிற்பட்டறைகள் பற்றிச் சட்டமியற்றல் தொடர்பான 10 பரிந்துரைகள் குறித்துச் சட்டமியற்றும் அதிகாரம் தொழிற்சாலைச் சட்டத்தின் 5வது பிரிவின் கீழ் மாகாண அரசுகளுக்குத் தரப்பட்டுள்ளது. எனவே, மொத்தத்தில் 10 பரிந்துரைகளே எஞ்சி நிற்பதால் இத்துறையில் அரசின் கடப்பாடு மிகச் சிறிதே எனலாம்.

.எல்.. நடைமுறை நெறிகள்

            “அடுத்து நமது கடப்பாடுகளின் இரண்டாவது ஊற்றினை நோக்குவோம். 1919 ஆம் ஆண்டிலிருந்து 1943 வரையான ஆண்டுகளில் ஐ.எல்ஒ. தொழிலாளர் நலம் குறித்து மொத்தத்தில் 63 நடைமுறை நெறிகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றுள் இந்தியா இதுவரை 14 நெறிகளுக்கு மட்டுமே ஒப்பிசைவு தந்துள்ளது; எஞ்சிய 49 நெறிகள் நிலுவையாகவே உள்ளன.

            “எனவே, இப்போதைய நிலவரம் தெளிவாக உங்கள் முன்னர் வைக்கப்பட்டுள்ளது. ஐ.எல்.ஓ பரிந்துரைகளை விட இராயல் கமிஷனின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறோம். இதற்குக் குறிப்பான காரணம், இராயல் கமிஷனின் பரிந்துரைகள் இந்திய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டவை என்பதே, ஆனால் உலகத் தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) நடைமுறை நெறிகள் பொதுத்தன்மையில் உருவாக்கப்பட்டவை.

            “சுருங்கக் கூறினால் ஆணையத்தின் பரிந்துரைகளைப் பெரும்பாலும் செயல்படுத்தி விட்டோம்; ஐ.எல்.ஓ. நடைமுறை நெறிமுறைகளைச் செயல்படுத்துவதில் மிகவும் பின்தங்கியுள்ளோம். நாம் ஒப்பிசைவு தராத நடைமுறை நெறிகளில் சில முக்கியமானவை; எனவே நமது நாட்டு நிலைமைகளையும் ஒட்டி, நமது தொழிலாளர் நிலையைப் பன்னாட்டுத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், கூர்மையான கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.

            “இந்தக் குறுகிய ஆய்வே, தொழிலாளர் நலச்சட்டமியற்றலில் நமது தேக்கநிலையினைச் சுட்டி, விரைவில் நமது கடமையைச் செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்தும். இக்கடமையை அரசு தவிர்க்க முயலவில்லை என்று நான் கூறுவதை அவை நம்ப வேண்டும்; அரசு இக்கடமையை நிறைவேற்றத் தவறாது; தவறுவதை உலக நாடுகளின் பொதுக்கருத்து ஏற்றுக் கொள்ளாது.

            “அரசு தனது கடமையைச் செய்யத் தவறாது என்று இங்கு நான் வலியுறுத்திக் கூறுவதற்குக் காரணம், தொழிலாளர் நலச் சட்டங்களை உடனடியாக விரைந்து நிறைவேற்றுதலின் தேவை குறித்து நாட்டில் பல்வேறு வகையான தவறான கருத்துக்கள் நிலவி வருதலேயாகும். பிரிட்டனின் எடுத்துக்காட்டை நாம் உடனடியாகப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுவோர் உண்டு; ஆனால் இப்போதைய தொழிலாளர் நலச் சட்டங்களை இயற்றுதற்குப் பிரிட்டானிய மக்கள் ஒரு நூற்றாண்டு காலம் காத்திருக்க வேண்டியிருந்ததெனச் சுட்டுவோரும் உண்டு; தொழிலாளர் நலச் சட்டங்களை இயற்றுவதன் மூலம் குழந்தை நிலையில் வளர்ந்துவரும் இந்தியத் தொழிற்சாலைகளின் செலவுச் சுமையைக் கூட்டுவது நீதியில்லை என்பாரும் உண்டு; தொழிற்சாலைகள் விரைந்து வளர வேண்டும் என்பதற்காகத் தாழ்வான வாழ்க்கைத் தரநிலை தொழிலாளர்கள் மீது சுமத்தப்படும் ருசிய நாட்டை எடுத்துக்காட்டி இவர்கள் வாதிடுகின்றனர். இயற்றப்படும் தொழிலாளர் நலச்சட்டங்களை ஒழுங்காக நடைமுறைப்படுத்தத் தேவையான சரியான நிருவாக அமைப்பு இங்கே இல்லாமையால், சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அவை ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்குமேயன்றிப் பயனேதுமிராது எனக் கூறுவோரும் பலருண்டு. ஏழை நாடான இந்தியாவுக்குத் தொழிலாளர் வாழ்க்கைத் தரத்தில் உயர்வு என்பது வேண்டாத ஆடம்பரம் என்றும் பரவலாகப் பேசுவோருண்டு.

தொழிலாளர் நலச் சட்டமியற்றல்

            “ஆனால் இத்தகைய வாதங்கள் எவற்றையும் உலகம் ஏற்றுக் கொள்ளாது. நெடுநாட்களாக நமது நாட்டில் ஒத்திப்போடப்பட்டு வரும் தொழிலாளர் நலத்திட்டங்களை மேலும் முடக்கி வைப்பதற்கான சாக்குபோக்குகளாகவே இவற்றை உலகம் கருதும் என்பது திண்ணம்.

            “சரியான தொழிலாளர் நலச் சட்டங்களை இயற்ற பிரிட்டிஷார் 100 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்கள் என்பதற்காக, இன்னும் நூறாண்டுகள் நாங்கள் காத்திருக்கப் போவதில்லையென்று இந்தியத் தொழிலாளர்களே கூறுவர். நாம் வரலாற்றைப் படிப்பதன் நோக்கம் பிற நாடுகள் செய்த தவறுகளை அப்படியே திருப்பிச் செய்வதற்காகவன்று; மாறாக அவர்கள் செய்த பிழைகளையறிந்து தவிர்ப்பதன் பொருட்டாகவேயாகும். வரலாறு பெரும்பாலும் எடுத்துக்காட்டுகளைத் தருவதில்லை; மாறாக எச்சரிக்கைகளையே விடுக்கின்றது.

            “தனியார் நலன்களின் நோக்கில் தனியாரால் தொழிற்சாலைகள் நடத்தப்பெறும் இந்திய நாட்டின் தொழிலாளர் வாழ்க்கைத் தரம் பற்றி முடிவு செய்ய ருசியா ஓர் சரியான எடுத்துக்காட்டல்ல என இந்தியத் தொழிலாளர்கள் வாதிடுதல் தவறன்று. ருசியாவில் தொழிற்சாலைகள் யாவும் அரசின் உடைமையாகவே விளங்குதலால், அதில் கிடைக்கும் இலாபங்கள் தனியார் சொத்துக்களைக் கொழுக்க வைப்பதற்காகப் பயன்படுவதில்லை; அரசுக் கருவூலங்கள் வழிப் பொதுமக்களின் சொத்தாகவே சேருகின்றன. தொழிற்சாலைகளின் இலாபங்கள் நாட்டுக்கே உடைமையாகுமெனில், தொழிற்சாலைகள் காலூன்றி நிற்கத் தேவையான குறுகிய இடைக்காலத்தில் ஊதியத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் குறைவான நிலையையேற்றுக் கொள்ள அந்நாட்டு மக்களைக் கோருதல் பிழையன்று; தமது தியாகங்களால் தொழிற்சாலைகள் காலூன்றி வளர்ந்து பின்னர் ஈட்டும் பெருஇலாபங்கள் தங்களையே வந்தடையும் என்பதையுணரும் தொழிலாளர் எவரும் இதற்கு மறுப்புத் தெரிவிக்க மாட்டார்கள். ஆனால் முதலாளிகளின் சொத்துக்களைக் கொழுக்க வைப்பதே தியாகங்களின் விளைவாகுமெனில் ஊதியக்குறைவுக்கும் தாழ்வான வாழ்க்கைத் தரத்திற்கும் எந்தத் தொழிலாளர்தான் ஒப்புவர்? எனவே, இந்தப் பான்மையிலான வாதங்கள் வலிவானவையென்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள்.

தொழிலாளர் நல நிதிகள்

            “தொழிலாளர் நலச் சட்டங்களை நடைமுறைப்படுத்துதற்குத் தேவையான நிருவாக அமைப்பு நம்மிடம் இல்லையென்பது ஒரு வலுவான வாதமன்று. இதைத் தொழிலாளர்கள் பல்வேறு கோணங்களில் தாக்கி வாத்தின் ஓட்டைகளைத் தோலுரித்துக் காட்டுவர். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக் காவல் படையை அரசினால் அமைக்க முடிகிறது; வரிகளைத் திரட்ட வருவாய்த் துறை அலுவலர்களை நியமிக்க முடிகிறது; அவ்வாறே, தொழிலாளர் நலச் சட்டங்களை நடைமுறைப்படுத்த அரசினால் ஏன் இயலாது? வரிகளைத் திரட்டுவதும், சட்டம் ஒழுங்கு மீறுவோரைத் தண்டித்தல் மட்டுமே அரசின் கடமையா? நாகரிக வாழ்வின் அடிப்படைகளில் ஒன்றான தொழிலாளர் பணிநிலைகளையும் ஒப்பந்தங்களையும் நிலைநிறுத்தல் அரசின் கடமையன்றோ? அஃது அரசின் கடமையெனில், அக்கடமையை நிறைவேற்றுதற்குத் தேவையான நிருவாக அமைப்பை உருவாக்குதல் அரசின் முதன்மையான பணியன்றோ? நிருவாக அமைப்பு இல்லையென்பது மிகவும் சொத்தையான வாதமாகும்.

            “தொழிலாளர் நலச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதால் செலவுச் சுமை கூடும் என்கிற வாதம் தொழிலாளர்களின் கவனத்திற்குரியதொன்றாம். இக்கேள்வி எழுப்பப்படுவதன் அடிப்படையையே நாம் கூர்ந்து நோக்க வேண்டும். இஃதொரு நியாயமான வாதம்தானே? அல்லது கடமையிலிருந்து விலகி ஒளிந்து கொள்வதற்கானதொரு போர்வையா? போருக்காகச் செலவிடப்பட்ட தொகையோடு ஒப்பிட்டால் தொழிலாளர் நலத் திட்டங்களுக்குத் தேவைப்படும் அற்பத் தொகையைச் சுமையெனில் வலிவான வாதமல்ல எனத் தொழிலாளர் கூறுவர். போர்க்காலத்தில் எவ்வளவு பெருமளவு நிதி திரட்டப்பட்டதென்பதையும் இதன் பொருட்டு செல்வந்தர்கள் எவ்வளவு பெரிய வரிச்சுமையை ஏற்றுக் கொண்டார்கள் என்பதையும் நாமனைவரும் நன்கறிவோம்.

            “போருக்காக செலவிடப்பட்ட அளவிறந்த நிதிகளைப் பொது மக்கள் நலப்பணிகளில் செலவிட்டிருந்தால், வீடற்ற எளிய மக்கள் எத்தனை பேருக்கு வீட்டு வசதியளித்திருக்க முடியும்! தக்க ஆடையின்றித் திரியும் எத்தனை பேருக்கு நல்லாடைகள் அளித்திருக்க முடியும்! பட்டினியால் தவிக்கும் மக்கள் எத்தனை பேருக்கு வயிறார உணவளித்திருக்க முடியும்! நோயால் அவதியுறுவோர் எத்தனை பேருக்கு நல்ல சிகிச்சையளித்து நலமுறச் செய்திருக்க முடியும்! என்றெல்லாம் தொழிலாளர்கள் கேட்பது நியாயம் தானே? போர்ச் செலவுகளுக்காகக் கடுமையான வரிகளைத் தயங்காது செலுத்த முன்வரும் செல்வந்தர்கள், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டங்களுக்காக நிதி திரட்டுவதை ஏன் எதிர்க்க வேண்டுமெனத் தொழிலாளர்கள் கேட்பதில் தவறில்லையன்றோ? இவை விடையளிக்க எளிதான வினாக்கள் அல்லவென்றே நான் கருதுகிறேன்.

            “தொழிலாளர் நலச் சட்டங்கள் இயற்றுவதில் நாம் எவ்வளவு பின்தங்கியுள்ளோம் என்பதையும், இப்பணியை இனியும் நம்மால் தவிர்க்க இயலா நிலைமையையும் நான் உங்கள் முன்னர் எடுத்துரைத்தேன். எனவே, உங்கள் முன்னர் வைக்கப்பட்டுள்ள நீண்ட பணிப்பட்டியலின் உடனடித் தேவையை நான் மேலும் வலியுறுத்த வேண்டியதில்லை. பட்டியலில் எட்டு முக்கியப் பணிகள் காணப்படுகின்றன. அவற்றுள்ளும் வேலைநேரக் குறைப்பு குறித்த நிரல் II, குறைப்பட்சம் ஊதியச் சட்டம் குறித்த நிரல் III, தொழிற்சங்கங்களின் அங்கீகாரம் குறித்த நிரல் VIII ஆகியவை மிக முக்கியமானவை.

சரிவுக்கெதிரான நடவடிக்கைகள்

         “நான் இந்த நிரல்களை மட்டும் ஏன் குறிப்பாக வலியுறுத்துகிறேன் என்பதை நீங்கள் நன்கு உணர்வீர்கள். நாம் மகிழ்ச்சியோடு வரவேற்கின்ற சமாதானம் கூடவே பல சிக்கல்களையும் கொண்டு வருகிறதென்பதையும் அறிவோம். இவற்றுள் மிகக் கடுமையான சிக்கல் வேலையில்லாத் திண்டாட்டமே. இத்துன்பத்தை விரைந்து துடைப்பதிலும், இதனால் தொழிலாளர் வாழ்க்கைத் தரம் மேலும் தாழ்ந்து போகாமல் காப்பதிலும் நாம் உடனடியான சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நிலைமையின் கடுமையைக் குறைக்க மூன்று முக்கிய நடவடிக்கைகள் தேவையென நம்புகிறேன். முதலாவதாகத் தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைப்பதன் மூலம், கூடுதலான வேலை வாய்ப்புகளை உருவாக்க இயலும். இரண்டாவதாகக் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயிப்புக்கான வழிவகைகள். இதனை நாம் செம்மையாக நிறைவேற்றாவிட்டால் வேலையில்லாத் திண்டாட்டத்தின் விளைவாய்த் தொழிலாளர் வாழ்க்கைத் தரம் வெகுவாகக் குறைந்துவிடும்; இதனை நாம் எப்பாடுபட்டும் தடுத்தாக வேண்டும். மூன்றாவதாகத் தொழிலாளர்களும் முதலாளியரும் பொதுவான சிக்கல்களின் தீர்வுக்குக் கூட்டு பேரமுறை, சேர்ந்து உழைக்கும் பாங்கு ஆகியவற்றில் பயிற்சி பெறல் அவசியம். இதைச் சிறப்பாகச் செய்தற்குப் பொறுப்பும் வலியும் கொண்ட தொழிற்சங்கங்களே சிறந்த வழி என்பதே எனது மதிப்பீடு.

            “தொழிலாளர் நலத்துறை சரியாகச் செயல்படவில்லையென்று நான் வலியுறுத்த முனையவில்லை. நமது குறிக்கோளை நோக்கி முன்னேறுவதில் ஒரு பெரும் தடை எதிர்ப்படுகின்றது. ஐ.எல்.ஓ. நடைமுறை நெறிகள் பலவற்றுக்கு நாம் இதுவரை ஒப்பிசைவு தராமலிருப்பதன் விளைவாகவே இத்தடை எழுகிறது. நெறிகளைச் செயல்படுத்துவதற்கு அரசுக்கு விருப்பமின்மை காரணமல்ல; நடைமுறை நெறிகளை மாற்றம் சிறிதுமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதாலேயே அவற்றுக்கு ஒப்பிசைவு அளிப்பதில் இடர்ப்பாடு தோன்றுகிறது. ஐ.எல்.ஓ. நடைமுறை நெறிகளை ஒன்று முழுமையாக ஏற்க வேண்டும்; அன்றேல் விட்டுவிட வேண்டும் என்ற நிலை, பல்வேறு கட்டங்களில் படிப்படியாக முன்னேறத் திட்டமிடும் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு உதவிகரமாக இல்லையென்பதை இங்கு குறிப்பிடத்தான் வேண்டும்.

படிப்படியான முன்னேற்றம்

         “வளர்ச்சிப் பாதையில் மாறுபட்ட நீண்ட பயணங்கள் தேவைப்படும் ஆசிய நாடுகளின் நிலைமைக்கேற்றவாறு, ஐ.எல்.ஓ. விதிமுறைகளில் உரிய மாற்றங்கள் தேவையென வலியுறுத்தக் கருதியுள்ளேன். இப்போதைய விதிமுறைகளில் மாற்றம் செய்தல் அறவே இயலாதெனக் கூறுவதற்கில்லை. படிநிலை வளர்ச்சிக்கான அமைப்பு நெறியொன்றை உருவாக்குதல் ஐ.எல்.ஓ.க்கு இயலக் கூடியதே. அமைப்பு நெறிகளைப் படிப்படியாகச் செயல்படுத்தி, குறிப்பிட்ட காலவரையறைக்குள் முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென்று ஐ.எல்.ஓ. விதிமுறை வகுக்கலாம். ஒரு பன்னாட்டு நெறிமுறை ஏட்டுச்சுரைக்காயாக முடங்கிக் கிடப்பதைவிடப் படிப்படியாகச் செயலாக்கம் பெறுதலே மேல் என்பதை நீங்கள் அனைவரும் ஏற்பீர்களென்பது உறுதி.

            “நீங்கள் தவறான கருத்து கொள்ளாதிருக்கும் பொருட்டு, மற்றொரு தகவலையும் நான் கூறியாக வேண்டும். இம்மாநாட்டின் அமைப்பை மாற்றுவதற்கான முன்மொழிவுகள் சிலவற்றை ஆராயக் கடந்த ஆண்டு மாநாடு ஒரு குழுவை நியமித்தது உங்களுக்கு நினைவிருக்கும். குழுவின் அறிக்கை குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அறிய உங்களுக்கு ஆவல் இருக்கும்.

            “குழு பரிந்துரைத்துள்ளவாறு, மாநாட்டில் மாற்றம் ஏதும் செய்ய வேண்டியதில்லையென்று அரசு முடிவு செய்துள்ளது. குழு பரிந்துரைத்துள்ளபடி அமைப்பின் பெயரை மாற்றுவதற்கு மேல் வேறேதும் செய்ய அரசுக்கு இப்போது உத்தேசமில்லை. அமைச்சர்கள் மாநாடு, முத்தரப்பு மாநாடு, விரிவடைந்த மாநாடு என்ற பெயர்களில் இதுவரை நடந்து வந்த இம்மாநாடு இனி, தொழிலாளர் நல மாநாடு என்றே அழைக்கப்படும் எனக் குழு செய்துள்ள பரிந்துரையை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். பெயரில் என்ன இருக்கிறது என்ற ஷேக்ஸ்பியரின் கூற்றை நானும் அறிவேன்; எனினும் முத்தரப்பு, விரிவடைந்த என்ற சொற்களை விடத் தொழிலாளர் என்ற சொல்லில் கவர்ச்சி அதிகமில்லையென்றாலும், இந்தியத் தொழிலாளர் மாநாடு என்று மாற்றியமைப்பதன் மூலம் இக்குறையைப் போக்கிவிட முடியும். இதை நீங்களும் ஏற்றுக்கொள்வீர்களெனக் கருதுகிறேன்.

            “குழு பரிந்துரைக்காத மற்றொரு நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளவுள்ளது; அஃதாவது, மாநாட்டின் செயல்பாடுகளை விரிவாக்க அரசு முடிவு செய்துள்ளது.

            “கடைசியாகப் பாரிசில் நடைபெற்ற ஐ.எல்.ஓ. மாநாட்டில், ஐ.எல்.ஓ. இதுவரை உருவாக்கிய நடைமுறை நெறிகள் அனைத்தையும் முழுமையாக இம்மாநாட்டில் முன்வைப்பதாக இந்திய அரசுச் சார்பாளர் உறுதி கூறியுள்ளார். அந்த உறுதியைக் காப்பாற்றுவதென்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது. உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இப்புதிய அதிகாரங்களையும், செயல்பாடுகளையும் வரவேற்பீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. ஐ.எல்.ஓ. அமர்வுகளில் நடைபெற்றவை யாதென மாகாண, சமஸ்தான அரசுகள் அறிந்து கொள்ள இது உதவும்; மேலும் இதுகுறித்து தொழிலாளர்கள், முதலாளிகள் கருத்துக்களை அறிதலும் பயனுள்ளதாய் அமையும்.”

மாநாட்டின் செயல்முறைகள்

         நவம்பர் 27இல் நடைபெற்ற, இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் மத்திய அரசு, மாகாண அரசுகளின் சார்பாளர்கள், சமஸ்தான அரசுகள் ஆகியவற்றின் தொழிலாளர் மற்றும் முதலாளிகளின் சார்பாளர் இடம்பெற்றிருந்தனர். இந்தியத் தொழிற்சாலைகளில் வேலை நேரம் வாரத்திற்கு 48 மணி நேரம் எனும் கொள்கையை அனைவரும் முழுமனதாய் ஏற்றுக்கொண்டனர். தொழிற்சாலைகளில் உணவகங்கள் நிறுவுதலைச் சட்டப்பூர்வ கடமையாக்குதற்கும், 1934 ஆம் ஆண்டின் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்வதற்குமான மத்திய அரசின் முன்மொழிவுகளும் மிகப் பெரும்பான்மையான சார்பாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

            தொழிலாளர்கள் தங்கள் குடிமைப் பண்புகளை வளப்படுத்திக் கொள்ளுதற்கும், தங்கள் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ளவும், தொழிற்சாலைக்கு வெளியே அதிக நேரம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டுமென்பதற்காக, வேலைநேரம் குறைக்கப்படலாம் எனும் தொழிலாளர் நலத்துறையின் அறிக்கை சுட்டிக் காட்டியது. போர்க்காலப் பணிகளில் கடுமையாக உழைத்துத் திரும்பியுள்ள தொழிற்சாலை பணியாளர்களுக்கு பணியின் கடுமை குறைக்கப்பட வேண்டியதன் தேவையை அனைவரும் உணர்ந்துள்ள இத்தருணமே வேலை நேரக் குறைப்புத் திட்டத்தைக் கொண்டு வர உகந்தது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வேலை நேரத்தைக் குறைப்பதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கவும் வழி தோன்றுகிறது. வேலை நேரக் குறைவு காரணமாக அடிப்படை ஊதியத்தைக் குறைக்கக் கூடாதென்றும், விலைகளின் வீழ்ச்சி இருந்தாலன்றி பஞ்சப்படியையும் குறைக்கக் கூடாதென்றும் அறிக்கை வலியுறுத்தியுள்ளது. அளவுசார் கூலி பெறும் தொழிலாளர்கள் பெறும் ஊதியம் நேரம்சார் பணியாளர்களின் ஊதியத்திற்கு குறைவாக இருக்கக் கூடாதெனும் அடிப்படையில், அளவுசார் பணியாளர்களின் ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த போர்ப் பணியாளர்களுக்கும் படை வீரர்களுக்கும் மறுகுடியமர்வு, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உதவுவதற்காக தொழிலாளர் நலத்துறை நிறுவிய வேலை வாய்ப்பு அலுவலர்களின் அமைப்பு, செயல்பாடுகள் ஆகியவை குறித்தும் மாநாடு விவாதித்தது.

            இது குறித்துத் தொழிலாளர் நலத்துறையின் அறிக்கையில், வேலை வாய்ப்புகள் பற்றிய விரிவான விவரங்கள் கிடைத்தால் தான் வேலைவாய்ப்பு அலுவலர்கள் பயனுள்ள வகையில் பணிபுரிய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. வேலைவாய்ப்பு அலுவலகங்கள் தொடர்ந்து திறமையுடன் செயல்பட்டால் வேலை தேடுவோர், வேலை அளிப்போர் இருசாரார்க்குமே நன்மை பயப்பதோடு உற்பத்தித் துறைகள் அனைத்திலும் போதிய பணியாளர்கள் விரவி அமைவதை உறுதி செய்ய இயலும். மேலும், தொழிலாளர்கள் தமது பணிகளையும் பணி இடங்களையும் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ள உதவுவதுடன் பல்வேறு தொழில்களுக்கும் பணியாளர்கள் கிடைப்பதை உறுதி செய்யலாம்.

            வேலை நிறுத்தம், கதவடைப்பு போன்ற காலங்களிலும் பிற காரணங்களால் வேலை இல்லாமை நிகழும் சமயங்களிலும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு தருதல் குறித்து, வேலைவாய்ப்பு அலுவலகங்களின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் அன்றைய அமர்வில் முடிவு செய்யப்பட்டது. முதலாவது பொருள் குறித்த விவாதம் மறுநாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இரண்டாவது பொருள் குறித்து எந்தவித முடிவுக்கும் வர இயலவில்லை.

குறைந்தபட்ச ஊதியம்

         ஏழாவது அமர்வை நிறைவு செய்வதற்காக மாநாடு நவம்பர் 28 ஆம் தேதி கூடியபோது மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் குறைந்தபட்ச ஊதியம் குறித்த சட்டம் பற்றி அரசுக்கு ஆலோசனை கூறுவதற்காக, 1926 ஆம் ஆண்டின் இந்திய தொழிற்சங்க சட்டத்தை திருத்துவதற்குப் பரிந்துரைக்க தொழிலாளர் சார்பாக இருவரும், முதலாளிகள் சார்பாக இருவரும் கொண்ட குழுவை அரசு நியமித்திருப்பதாகத் தெரிவித்தார்.

            இவ்விரண்டு நடவடிக்கைகளும் கொள்கையளவில் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், மாநாட்டு விவாதங்களின் போது மாறுபட்ட கருத்துகள் பல தெரிவிக்கப்பட்டன. இவ்விரு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டுமென்று பலர் தெரிவித்ததை ஒட்டியே குழு நியமிக்கப்பட்டது.

            வேலைவாய்ப்பு அலுவலகங்கள், வேலை நிறுத்தம், கதவடைப்பு காலங்களில் நடந்து கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்த சட்டதிட்டங்களை வகுப்பது குறித்து மாநாட்டில் ஒருமித்த கருத்து தெரிவிக்கப்பட்டது. அதாவது, வேலைநிறுத்தம், கதவடைப்பு காலங்களில், வேலைவாய்ப்பு அலுவலகங்கள் காலியிடங்கள் பற்றிய தகவல்களை ஏற்றுக் கொண்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, தொழில் தகராறு பற்றிய விவரங்களுடன் தகவல் தர வேண்டுமென்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. அவர்கள் தொழிலாளர்களைப் பதிவு செய்துகொண்டு, தொழில் தகராறுகளால் வேலை இழந்தவர்கள் என்ற குறிப்புடன் வேறு நிறுவனங்களுக்கு பணிக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)