(இந்திய தகவல் ஏடு, அக்டோபர் 1, 1945, பக்கங்கள் 345-49)

                     (“தாமோதர் ஆற்றுநீரைப் பயன்படுத்த வகுக்கப்பட்டுள்ள) இத்திட்டத்தினை இந்திய அரசு வரவேற்கிறது. ஆற்றையும், ஆற்றுவெள்ளத்தையும் கட்டுப்படுத்துவதுடன், நிலையான பாசனப் பரப்பை உருவாக்கி பஞ்சத்துக்கெதிரான காப்பீடு அமைத்து, அவசியத் தேவையான மண்ணாற்றல் உற்பத்திக்கு வழிவகுத்தும் அருமையானதோர் திட்டமாகக் காட்சியளிக்கிறது இத்திட்டம். தமது மாகாண மக்களுக்குக் கிடைக்கப் பெறும் நலன்களை நன்கு உணர்ந்தால், வங்காள, பீகார் அரசுகள் இத்திட்டத்தை உவகையுடன் வரவேற்கும் என்பது உறுதி.”

                     (1945) ஆகஸ்டு 23 ஆம் நாள் கல்கத்தாவில் நடைபெற்ற வங்காள, பீகார் அரசுகளின் சார்பாளர்களது மாநாட்டில் உரையாற்றிய, இந்திய அரசின் தொழிலாளர் நலத்துரை உறுப்பினர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இவ்வாறு குறிப்பிட்டார். தாமோதர் பள்ளத்தாக்குப் பன்னோக்குத் திட்டம் குறித்த தொடக்கக் கருத்துருவை விவாதிப்பதற்காக நடைபெற்ற இரண்டு நாள் மாநாடு தொழிலாளர் நலத்துறை உறுப்பினரின் தலைமையில் நடைபெற்றது.                    

டாக்டர் அம்பேத்கர் நிகழ்த்திய முழுமையான உரை வருமாறு

ambedkar at marriage“தாமோதர் ஆற்று நீரைப் பயன்படுத்திக் கொள்வதற்கானத் திட்டத்தைப் பற்றி விவாதிப்பதற்காக நாம் இரண்டாவது முறையாக இங்கே கூடியுள்ளோம். இது குறித்த முதல் கூட்டம், 1945 ஆம் ஆண்டு ஜனவரி மூன்றாம் நாள் நடைபெற்றது என்பது உங்களுக்கு நினைவிருக்கும். 1944 ஆம் ஆண்டில் வங்காள அரசு நியமித்த தாமோதர் ஆற்று வெள்ள விசாரணை குழுவின் அறிக்கை குறித்து அப்போது ஆராய்ந்தோம்.

  இத்திட்டத்தை ஆற்றில் அணைகட்டி வெள்ளச் சேதத்தை தடுக்கும் திட்டமாக உருவாக்குவதா அல்லது பாசனம், மின் உற்பத்தி ஆகிய நோக்கங்களையும் உள்ளடக்கிய, பல்நோக்கு திட்டமாக விரிவாக்குவதா என்பதே, அன்று நம்முன் எழுந்த வினாவாகும். அம்மாநட்டில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து பன்நோக்கு திட்டமே. அதற்கேற்றவாறு தேவையான தகவல்களைத் திரட்டி பன்நோக்கு திட்டத்தை வரைவதற்கு ஏற்பாடு செய்ய மாநாடு தீர்மானித்தது. இப்பணிக்குத் தேவையான தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியை முழுமையாகத் தருவதென்று இந்திய அரசின் சார்பில் கூறியிருக்கிறேன்.

வங்காளப் பொறியாளர்களின் ஒத்துழைப்புடன் வல்லுநர்களும் சேர்ந்து உருவாக்கிய திட்டம் “தாமோதர் ஆற்றுப் பள்ளத்தாக்கின் ஒருங்கிணைந்த வளர்ச்சி குறித்த தொடக்க அறிக்கை” யாகக் கிடைத்துள்ளது. இவ்வறிக்கையின் படிகள் ஏற்கெனவே வங்காள, பீகார் அரசுகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

                                        முதலாவதாக, இவ்வறிக்கையைத் தயாரித்த திரு.ஊர்துயினுக்கும் அவரோடு முழுமையாக ஒத்துழைத்த வங்காள அரசின் பொறியாளர்களுக்கும் நாம் மிகவும் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை என் சார்பிலும் உங்கள் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய மின்விசை தொழில்நுட்ப வாரியத்தின் தலைவர் திரு.மாத்யூசின் ஆலோசனையும் இத்திட்டத்தை வகுப்பதில் மிகவும் உதவியுள்ளது. வரும் காலகட்டத்தில் நீர்வழிப் போக்குவரத்து வாரியத்தலைவர் திரு.கோஸ்லாவின் உதவியையும் நாம் வேண்டிப் பெறுவோம் என்பதில் ஐயமில்லை.

 தற்போது தெளிவானதும் முழுமையானதுமான அறிக்கை விவரமும், தாமோதர் ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டத்தின் பல்வேறு மாற்று வடிவங்களும், நாம் அடுத்த செயல் திட்டத்தை வகுப்பதற்குத் தேவையான முழு விவரங்களும் நம் முன்னே வைக்கப்பட்டுள்ளன.

 இவ்வறிக்கையின் பல்வேறு கூறுகளையும் குறித்து ஆலோசனை நடத்தவே நாம் இங்கு கூடியுள்ளோம். இக்கூறுகள் யாவும் நிகழ்ச்சி நிரலில் தெளிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும் நிகழ்ச்சி நிரலில் உடனடிக் கவனம் செலுத்த வேண்டிய கூறுகளும் வலியுறுத்திச் சொல்லப்பட்டுள்ளன. வங்காள, பீகார் அரசுகளுக்கு இவை ஏற்கெனவே சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளமையால் நான் அவற்றை மீண்டும் இங்கே விவரித்தல் தேவையில்லை. எனவே, நான் இங்கே இரண்டு கருத்துகளைப் பற்றி மட்டும் கருத்துக் கூறி அமர்வேன். அவை கொள்கை விளக்கம் குறித்த கருத்தொன்றும், செயல்முறை நடைமுறை குறித்த கருத்தொன்றும் ஆகும்.

  வெள்ளக் கட்டுப்பாடு என்பது அடிப்படைக் கொள்கை நிலையாகும். தாமோதர் ஆற்று வடிநிலத்தில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு எவ்வளவு கடுமையான வெள்ள காலத்திலும் போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதைப் பொதுவாக அனைவரும் ஏற்றுக் கொள்வர் என்று உறுதியாக நம்புவோம். தொடக்க அறிக்கை தரும் திட்டத்தில் முழுமையான பாதுகாப்புக்கு வழிசெய்யப்பட்டுள்ளது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

              கொள்கையின் இரண்டாவது கூறு இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தோள் கொடுத்தல் இங்கு கூடியுள்ள மூன்று அரசுகளின் கூட்டுப் பொறுப்பு என்பதாகும். தாமோதர் ஆற்றுப் பள்ளத்தாக்கின் வளர்ச்சி குறித்து மூன்று அரசுகளும் எந்த அளவில் பங்கு கொண்டு ஊக்கத்துடன் செயல்பட வேண்டுமென்பதை தொடக்க அறிக்கை விளக்கி இருக்கும் தன்மை அனைவருக்கும் ஏற்புடையதாயிருக்கும் என நம்புகிறேன்.

              இத்திட்டத்தினால் அப்பகுதி மக்கள் பெறும் பயன்களைத் தொகுத்துரைப்பின், (1) 4,700,000 ஏக்கர் அடி கொள்ளளவு கொண்ட கட்டுப்பாடுள்ள நீர்த்தேக்கம் (2) 7,60,000 ஏக்கர் நிலத்திற்குத் தொடர்ந்த பாசன வசதி அளிப்பதற்கும், நீர்வழிப் போக்குவரத்திற்கும் உதவத் தேவையான அளவு நீர் (3) 3,00,000 கிலோவாட் மின்திறன், (4) 50 லட்சம் மக்களுக்கு நேரடியாகவும் மேலும் பல லட்சம் மக்களுக்கு மறைமுகமாகவும் கிடைக்கக் கூடிய நல மேம்பாடு.

              இப்போது நடைமுறை, செயல்திட்டங்கள் குறித்து கருதுவோமெனில், முன்னுரிமை அடிப்படையில் கீழ்வரும் கருத்துக்களை வரிசைப்படுத்தி உங்கள் முன் வைக்கிறேன்:

  1. அணை அமைவிடங்களைத் தேர்ந்தெடுத்தல்;
  2. தேர்ந்தெடுக்கப்பட்ட அமைவிடங்களில், கட்டுமானம் தொடங்குவதற்கு முந்தைய விரிவான கள ஆய்வுகள்;
  3. இத்தகைய தொடக்க ஆய்வுகளைத் தொடர்ந்து நடத்தும் அமைப்பு;
  4. அணைகளை வடிவமைப்பதற்கும் கட்டுவதற்குமான அமைப்பு;
  5. தேவையான பணிகளை ஒருங்கிணைத்தும், உந்தியும் தொழில்நுட்ப நிர்வாகக் கண்காணிப்பு நடத்தவும் தேவையான உயர் நிலை நிர்வாக அமைப்பை உருவாக்குதல்;
  6. கிடைக்கும் நீரையும் மின்திறனையும் தகுந்த முறையில் பயன்படுத்தி மேம்பாடுமாறும் பகுதிகளுக்கு தேவையான, விரிவான கள ஆய்வுகள்.

              செயல்முறை, நடைமுறை விவரங்கள் குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டிய தேவையை வலியுறுத்த விரும்புகிறேன். திட்டத்தின் முதன்மையான நோக்கங்கள் வெள்ளப் பாதுகாப்பும், பல்நோக்கு வளப்பெருக்கமும் என்பதில் ஐயமில்லை. அதேசமயத்தில் போர்ப் பிற்கால வேலைவாய்ப்புத் திட்டத்தையும் இதில் உள்ளடக்கலாம் என்பதை மறந்துவிட முடியாது. இப்போது எல்லா முனைகளிலும் போர் முடிந்துவிட்டது; எனவே சமாதானத்தினால் எழும் சிக்கல்களில் முக்கியமானதான வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்நோக்குகிறோம். போர்க்காலப் பணிகள் தற்போது நின்று விட்டமையாலும், செலவு மிக குறைக்கப்பட வேண்டியமையாலும் தோன்றும் மாபெரும் உள்நாட்டுப் பொருளாதார சிக்கலின் விளைவே இது.

மத்திய அரசின் பங்கு

              இந்த நோக்கில் தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் மிக மிக அவசரமானதொன்றாகும். இதில் ஒவ்வொரு அரசும் தரும் பங்கு என்ன என்பதை விரைவில் முடிவு செய்தால்தான் மேற்கொண்டு செயலாற்ற இயலும் என்பதால் விரைந்து முடிவெடுக்கத் தவறுதல் மதியீனமிக்க குற்றமெனலாம். எனவே, உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடு நாம் உறுதியானதும், முழுமையானதுமான தீர்மானங்களை எய்தலாம் என்று உறுதியாக நம்புகிறேன்.

              எனது உரையை முடிக்குமுன் இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் தனது முழுப் பங்கையும் அக்கறையோடு ஆற்றுவதற்கு இந்திய அரசு ஆர்வத்தோடு தயாராக இருக்கிறது என்பதைக் கூற விரும்புகிறேன்.

  1. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு, ஒப்புக்கொள்ளப்பட்ட நெறியில், இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த தேவையான தனது பங்கு அனைத்தையும் தவறாது நிறைவேற்றும் பொறுப்பு தனக்கு உண்டு என்பதை இந்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிர்வாக அமைப்பு முறை எவ்வாறு இருக்க வேண்டுமென்பது இதுவரை வரையறுக்கப்படவில்லை. எனினும், அமைப்பு முறையொன்று தேவை என்னும் முந்தைய கருத்தில் இந்திய அரசு உறுதியாக நிற்கிறது.
  2. இத்திட்டத்திற்கு தொடர்ந்து தேவைப்படும் கள ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் பணியாளர்களையும் அமர்த்தித் தரும் பொறுப்பை இந்திய அரசு முழுமையாக ஏற்றுக் கொள்வதுடன் இரண்டு மாநிலங்களிலும், போர் பிற்கால வளர்ச்சிப் பணிகளுக்கு பாதகமில்லாத வகையில் கிடைக்கும் பணி உதவியை மட்டும் ஏற்றுக் கொண்டு, விரைந்த கட்டுமானத்திற்கும் தேவையான பணியாளர்களை அமர்த்தும் பொறுப்பையும் இந்திய அரசு ஏற்றுக்கொள்ளும். வங்காளத்தில் போதுமான பொறியாளர்கள் இல்லை என்பதை இந்திய அரசு உணர்ந்துள்ளது. எனவே, கள ஆய்விற்கு மத்திய அரசு பணிகளிலிருந்தும், தேவைப்பட்டால் போர்ப்படை பணிகளிலிருந்தும் பொறியாளர்களை அமர்த்த வேண்டிய தேவையை மைய அரசு உணர்ந்துள்ளது. இதனால், மாநில அரசின் பொறியியல் பணிகளுக்குப் பெருமளவில் ஊறு ஏதும் விளைவிக்காது தவிர்க்க உதவுவதுடன் தேவையான கருவிகளில் பெரும் பகுதியையும் மத்திய அரசே வழங்கிவிடும்.
  3. திட்டத்தின் தொடக்க கள ஆய்வுகளுக்குத் தேவையான முழுச்செலவுகளையும் மத்திய அரசே ஏற்று முன் பணமாக தரத் தயாராக உள்ளது. திட்டம் உருப்பெற்று நிறைவேற்றப்படும் கட்டத்தில் அந்தந்த மாகாண அரசுகளின் பங்குகளைச் சரிபாதியாகப் பகிர்ந்து கொள்ள இசைகிறது.

            மாகாண அரசுகளின் பங்காக இந்திய அரசு எதிர்பார்ப்பது ஒன்று மட்டுமே. திட்டத்தின் பயன்கள் தேவையான அடித்தள மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டே அனைத்துக்கட்ட செயல்பாடுகளும் அமைய வேண்டும் என்பதே அது. அதாவது பள்ளத்தாக்கு பகுதியிலும் அதன் அண்மை பகுதிகளிலும் வாழும் மக்களுக்கே இத்திட்டத்தினால் கிடைக்கப்பெறும் மேம்பாடுகளின் பலன்கள் கிடைக்க வேண்டும். இதுவே மிக முக்கியமான கூறு என்பது எனது கருத்து. ஆகவே, முறையான திட்டமிடுவதற்கு தேவையான அமைப்பு உடனடியாக நிறுவப்பட வேண்டும் என்று கருதுகிறேன். இதன் மூலமே திட்டத்தின் இறுதி நோக்கத்தைச் செம்மையாக எய்த முடியும்.”

 

மாநாட்டு விவாதங்கள்

            தாமோதர் பள்ளத்தாக்கு மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பல்நோக்கு திட்டத்திற்கான கள ஆய்வுகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மாநாடு தீர்மானித்தது.

            எத்தகைய வெள்ளத்திலிருந்தும் முழுமையான பாதுகாப்பு அளிக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட வேண்டுமென்று அனைவரும் ஒப்புக்கொண்டனர். அணை கட்டுதற்கு முன் மாற்று அமைவிடங்களைக் கள ஆய்வு செய்து முடிவெடுப்பதற்காக மைத்தோன், ஐயார், சோனாபூர் ஆகிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. மூன்று அமைவிடங்களின் தொழில்நுட்ப கூறுகளை ஆய்வு செய்தபின் முன்னுரிமை வரிசையில் மைத்தோன் முதலாவதாகவும் எடுத்துக் கொள்ளப்படலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இம்மூன்று அமைவிடங்களுக்கும் மத்திய தொழில்நுட்ப மின்திறன் வாரியம் திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. சோனாபூரைப் பொறுத்தவரை நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்படுமா என்பது பற்றியும் ஆய்வறிக்கை தயாரிக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது.

தேவையான பணியாளர்கள்

            விரிவான கள ஆய்வுகளை நடத்தி திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணியாளர்களை தேடி அமர்த்தும் பணியை மத்திய அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

            கள ஆய்வு பணிகள் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டுடன் நடைபெறுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக, இப்பணியில் ஈடுபடும் ஆய்வாளர்கள் அனைவரும் மத்திய தொழில்நுட்ப மின்வாரியத்தின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் படியே செயல்பட வேண்டுமென்று மாநாடு ஒப்புக்கொண்டது. ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் முன்மொழியப்படும் முதல் இரண்டு அணைகளையும் வடிவமைக்கவும், கட்டவும் ஆலோசனை கூற அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்து நான்கு பொறியாளர்களை அழைப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. இப்பொறியாளர்கள் தொழில்நுட்பக் குழுமமாக அமைவர். இவர்கள் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவிற்கு வரவேண்டும் என்றும், அவர்கள் வந்து சேர்வதற்குள் திட்டத்திற்கு தேவையான விவரங்கள் அனைத்தும் திரட்டி முடிக்கப்படும் என்றும் மாநாடு நம்பிக்கை தெரிவித்தது.

            திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் தாமோதர் பள்ளத்தாக்கு ஆணையம் நிறுவப்பட வேண்டுமென்பதே உத்தேசம் என்றாலும் அதுவரையிலான இடைக்கால நடவடிக்கையாக மத்திய அரசு உயர் நிலை நிர்வாக அலுவலர் ஒருவரை நியமித்து திட்டத்திற்கு தேவையான கள ஆய்வுகளை ஒருங்கிணைக்கவும் விரைவுபடுத்தவும் வழி செய்யலாம் என்று மாநாடு முடிவு செய்தது.

            இத்திட்டத்தோடு தொடர்பு கொண்ட பல்வேறு பிற சிக்கல்கள் குறித்தும் ஒருங்கே ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்மென்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வங்காள, பீகார் அரசுகளின் நீர்ப்பாசனத் துறைகள் மத்திய அரசின் பாசன, நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்துடன் கலந்தாலோசித்து, திட்டத்தின் வாயிலாய் கிடைக்கும் பாசன நீரை பயன்படுத்தற்குறிய மிகச் சிறந்த முறைகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.

ஆய்வு செய்யப்பட வேண்டிய பிற கூறுகளாவன: மின்திறன் தேவையின் வளர்ச்சி, தோட்டக்கலை நிலையங்கள் நிறுவல், மண்அரிப்பு தடுப்புப் பணிகள், படகுப் போக்குவரத்து, நிலவியல் கூறுகள், குடிநீர் வழங்கல், மின்னாற்றல் வழித்தட அமைப்பு ஆகியனவாகும்.

மாநாட்டில் அரசு சார்பாளர்களாக பங்கு பெற்றவர்களின் பட்டியல் வருமாறு:

இந்திய அரசு சார்பாளர்கள்

திரு.எச்.சி.பிரியோர், தொழிலாளர் நலத்துறைச் செயலர்;

திரு.டி.எஸ்.மஜூம்தார், தொழிலாளர் நலத்துறைச் துணைச் செயலர்;

திரு.எம்.இக்கரமுல்லா, வழங்கல் துறை இணைச் செயலர்;

திரு.எச்.எம்.மாத்யூஸ், மத்திய தொழில்நுட்ப மின்வாரிய தலைவர்;

திரு.டபிள்யூ.எல்.ஊர்தின், மத்திய தொழில்நுட்ப மின்வாரியத்தின் நீர்மின் திட்ட உறுப்பினர்;

திரு.சி.கோட்ஸ், வழங்கல் துறை துணைச் செயலர்;

திரு.ஆர்.ஹாரிசன், துணை நிலக்கரி ஆணையர்.

வங்காள அரசின் சார்பாளர்கள்

திரு.ஓ.எம்.மார்டின், ஆளுநரின் தொலைத்தொடர்பு, பொதுப்பணித்துறை ஆலோசகர்;

திரு.ஆர்.எல்.வாக்கர், ஆளுநரின் நிதி, வணிகம், தொழிலாளர் நலம், தொழில்துறை ஆலோசகர்;

திரு.பி.பி.சர்க்கார், தகவல்தொடர்பு, பொதுப்பணித்துறைச் செயலர்;

ராய்பகதூர் எஸ்.கே.குப்தா, மேற்கு வங்க பாசனத்துறை தலைமைப் பொறியாளர்;

திரு.மான்சிங், தாமோதர் திட்ட சிறப்புப்பணி மேற்பார்வை பொறியாளர்;

மேஜர் எம்.ஜாபர், பொதுநலத்துறை இயக்குநர்;

திரு.அசீஸ்அகமது, போர் பிற்கால மறு கட்டுமானத் துறை இணைச்செயலர்;

பீகார் அரசுச் சார்பாளர்கள்

திரு.எஸ்.எம்.தார், வளர்ச்சித்துறை ஆணையாளர்;

திரு.டபிள்யூ.ஜி. கெய்னே, தலைமை பொறியாளர், பாசனம் மற்றும் மின்னாற்றல்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)