(தொழிலாளர் இலாகாவின் 23ஆம் எண் கோரிக்கையின் மீது மத்திய சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதங்கள், தொகுதி II, 13 மார்ச், 1945, பக்கங்கள் 1456-62.)

          திரு.துணைத் தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): திரு.ஜோஷி நேற்று கொண்டுவந்த வெட்டுத் தீர்மானத்தின் மீது இப்போது விவாதம் தொடரும்.

            பேராசிரியர் என்.ஜி.ரங்கா: ஐயா, திரு.ஜோஷி கொண்டு வந்துள்ள வெட்டுத் தீர்மானத்தை நானும் என்னுடைய கட்சியினரும் முழு மனத்துடன் ஆதரிக்கிறோம்.

            மதிப்பிற்குரிய சில உறுப்பினர்கள்: இப்போது இந்த வெட்டுத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும்.

            திரு.துணைத் தலைவர் (அகில்) சந்திரகுப்தா): இந்த தீர்மானம்…           

ambedkar 452திரு.எச்..சத்தார் எச்.எஸ்ஸாக் சேட் (மேற்குக் கடற்கரை மற்றும் நீலகிரி: முகமதியர்): இதற்கு அரசாங்கத்தின் பதில் என்ன?

          திரு.துணைத் தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): அரசு தரப்பில் எவரேனும் பதிலளிப்பார்களா என்று காத்திருந்தேன். ஆனால் எவரும் முன்வரக் காணோம்.

            (இந்தக் கட்டத்தில் மாண்புமிகு டாக்டர் அம்பேத்கர் தமது இருக்கையிலிருந்து எழுந்திருக்கிறார்).

            திரு.துணைத்தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): மாண்புமிகு உறுப்பினர் பேச விரும்புகிறாரா?

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஆம்.

            திரு.துணைத்தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): அவை பொறுமை இழந்து விட்டது.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: நான் பொறுமை இழக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.

            திரு.ஜோஷி தமது வெட்டுத் தீர்மானத்தை ஆதரித்து நேற்று பேசும்போது தொழிலாளர் இலாகாவுக்கு எதிராக சில குற்றச்சாட்டுகளைக் கூறினார். அவர் தமது முடிவுரையில் தொழிலாளர்களின் நலன்களைப் பேணிக்காப்பது சம்பந்தமாக தனக்குள்ள கடமைகளைப் போதிய அளவு நிறைவேற்ற தொழிலாளர் இலாகா தவறி விட்டது என்று சாடினார். அதுமட்டுமன்றி, தொழிலாளர்களிடம் தொழிலாளர் இலாகாவுக்கு துளிகூட அனுதாபமில்லை என்று கூறுமளவுக்குச் சென்றுள்ளார்; இதை வரம்புமீறிய கூற்றாகக் கருதுகிறேன். ஐயா, முன்னிடைச் சொல், இடைச்சொல், சந்திகள், பிரிநிலை இடைச் சொல் முதலியவற்றையெல்லாம் விட்டுவிட்டு மதிப்பிற்குரிய என்னுடைய நண்பர் ஏறத்தாழ தந்தி மொழியில் பேசினார் என்றே சொல்ல வேண்டும்; அவர் தமது தீர்மானத்துக்கு ஆதரவாக எத்தகைய விரிவான வாதங்களையும் முன்வைக்கவில்லை; எனவே அவரது வெட்டுத தீர்மானத்தைக் கையாள்வது சம்பந்தமாக எனக்கு ஓரளவு சிரமம் இருப்பதை உணர்கிறேன். எனினும் அவரது குற்றச்சாட்டுகளுக்குத் தக்கபடி பதிலளிக்கத் தீர்மானித்துள்ளேன்.

            ஐயா, தொழிலாளர் இலாகாவுக்கு எதிராக அவர் கூறியுள்ள முதல் குற்றச்சாட்டு அகவிலைப்படி சம்பந்தப்பட்டது. முதலாவதாக, இந்திய அரசாங்கம் வழங்கியுள்ள அகவிலைப்படி போதுமானதல்ல என்று அவர் குற்றப்பத்திரிகை வாசிக்கிறார். இரண்டாவதாக, இந்திய அரசாங்கம் அங்கீகரித்துள்ள அகவிலைப்படித் திட்டம் ஒரே சீரானதாக இல்லை என்று அவர் குற்றம் சுமத்துகிறார். இவற்றில் முதல் குற்றச்சாட்டை எடுத்துக் கொள்வோம். “போதிய அளவு” என்று கூறும்போது இது குறித்த கண்ணோட்டங்கள் பெருமளவுக்கு மாறுபடும் என்பதை திரு.ஜோஷி ஒப்புக்கொள்வார் என்று நம்புகிறேன். போதிய அகவிலைப்படி என்பது துல்லியமாக எதைக் குறிக்கிறது என்பதில் ஒத்துப்போகக் கூடிய இருவரை காண்பது கடினம். எனவே, பிரச்சினையின் இந்த அம்சத்தைப் பற்றி இங்கு நான் எதுவும் கூறப்போவதில்லை. ஆனால் அகவிலைப்படி விஷயத்தில் இந்திய அரசாங்கம் எப்போதுமே பெருமளவுக்கு அக்கறை காட்டி வந்திருக்கிறது என்பதையும், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து, அகவிலைப்படியை உயர்த்துவதற்கு அது அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வந்துள்ளது என்பதில் ஐயமேதும் இல்லை என்பதையும் அவையின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். இது சம்பந்தமாக சில புள்ளி விவரங்கள் அவையின் முன் வைக்கிறேன்.

முதலாவது அகவிலைப்படி 1942 ஆகஸ்டில் அளிக்கப்பட்டது. இதன்பின்னர் அது 1943 ஜனவரியில் அதிகரிக்கப்பட்டது. 1943 ஜூனில் அது மேலும் உயர்த்தப்பட்டது. (மதிப்புமிக்க ஓர் உறுப்பினர்: “1942ல் அகவிலைப்படி எவ்வளவு வழங்கப்பட்டது?”). இந்த விவரங்களை எல்லாம் இப்போது கூறிக் கொண்டிருக்க உண்மையில் எனக்கு நேரமில்லை. நான் மேற்கொண்டு பேசுவதற்கு மதிப்பிற்குரிய உறுப்பினர் அனுமதிப்பார் என்று நம்புகிறேன். அகவிலைப்படி 1944 மார்ச்சில் மேற்கொண்டும் அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு அகவிலைப்படியை நாங்கள் உயர்த்தி வந்தது மட்டுமல்லாமல், அகவிலைப்படி பெறுவதற்குத் தொழிலாளர்களுக்குள்ள தகுதிவரம்பையும் அவ்வப்போது மேம்படுத்தி வந்திருக்கிறோம். அகவிலைப்படி வழங்கப்பட்ட முதல் சந்தர்ப்பத்தில் அதிகபட்ச வரம்பு 100 முதல் 120 ஆக நிர்ணயிக்கப்பட்டது. மூன்றாவது சந்தர்ப்பத்தில் அது 150 ஆக உயர்த்தப்பட்டது. நான்காவது சந்தர்ப்பத்தில் மேலும் ஒரு படி சென்று அது 250 ஆக அதிகரிக்கப்பட்டது. அகவிலைப்படியை மேலும் உயர்த்தும் விஷயத்தை இந்திய அரசாங்கம் மிகத் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்பதை அவையில் கூறிக் கொள்ள விரும்புகிறேன். இது குறித்து இந்திய அரசாங்கம் விரைவிலேயே முடிவெடுக்கும் என்றும் நம்புகிறேன்.

            அகவிலைப்படி வழங்குவதில் ஒரே சீரான போக்கு கடைப்பிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டைப் பொறுத்தவரையில் அதை நான் ஒப்புக் கொள்கிறேன்; இந்திய அரசாங்கத்தின் வெவ்வேறு வகையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு வெவ்வேறு வீதாசாரங்களில் அகவிலைப்படி வழங்கப்படுகிறது என்பதும் உண்மையே. ஆனால், ஐயா, இங்கு ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன் – ஒரே சீரான தன்மை இல்லாததற்கு யார் பொறுப்பு? அகவிலைப்படி அளிப்பதில் ஒரே சீரான போக்குக் கடைப்பிடிக்கப்படாததற்கு யாரேனும் பொறுப்பாளி இருப்பாரேயானால் அவர் திரு.ஜோஷியே தான் என்று கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

          திரு.என்.எம்.ஜோஷி: ஏன்? நான் அரசாங்கம் இல்லையே?

          மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ‘திரு.ஜோஷிதான்’ என்று நான் கூறியது அவரை தனிப்பட்ட முறையில் அல்ல, மாறாக தொழிலாளர் அமைப்பு முழுவதையுமே குறிப்பிடுவதற்கே அவ்வாறு கூறினேன். இந்த ஒரே சீரான தன்மை இல்லாததற்கு அவர்கள் தான் காரணம். அகவிலைப்படி வழங்கும் விஷயத்தில் நடந்தது இதுதான். தொழிலாளர் உலகில் பல்வேறு பிரிவினர் இருக்கின்றனர். அவர்களுக்கென தனித்தனிச் சங்கங்கள் உள்ளன. ரயில்வே தொழிலாளர் சம்மேளனம், தபால், தந்தி ஊழியர் சங்கம், பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் என எத்தனை எத்தனையோ சங்கங்கள் இருக்கின்றன. இந்த சங்கங்கள் எவற்றிலும் சேராத ஏராளமான தொழிலாளர்களும் இருக்கிறார்கள். இந்தத் தொழிற்சங்கங்களில் பெரும்பாலானவை பின்பற்றும் கொள்கை ஒரு திட்டமிட்ட கொள்ளையே தவிர வேறல்ல, இந்திய அரசாங்கத்திடமிருந்து சலுகைகள் பெறுவதில் சிலர் முந்திக் கொண்டு மற்றவர்களை நிர்க்கதியாக விட்டு விடுகிறார்கள் என்பதை திரு.ஜோஷி ஒப்புக் கொள்வார் என்று நம்புகிறேன். உதாரணமாக ரயில்வே தொழிலாளர்கள் சம்மேளனத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது என்ன செய்கிறது? அது ரயில்வே வாரியத்தைச் சந்திக்கிறது; தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, ரயில்வே தொழிலாளர்களுக்கு மிக அதிகமான அகவிலைப்படியை வழங்கும்படி நிர்பந்திக்கிறது. அடுத்து தபால், தந்தி ஊழியர் சங்கத்தினரை எடுத்துக் கொள்வோம். இந்தத்துறைக்குப் பொறுப்பாக உள்ள மதிப்பிற்குரிய என் நண்பரை அவர்கள் சந்திக்கிறார்கள். தங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்வோம் என்று அவரை அச்சுறுத்துகிறார்கள். நாட்டுக்குத் தாங்கள் மிக அத்தியாவசிய சேவை செய்பவர்கள் என்று கூறி அவரிடமிருந்து முடிந்தளவு சலுகைகளைக் கறந்து விடுகிறார்கள். மற்றவர்கள் தங்கள் நலன்களைப் பாதுகாப்பதற்கு எந்த நாதியுமின்றி அவதிப்படுகிறார்கள். அனைத்து உழைக்கும் வர்க்கங்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் ஒரே சீராக செயல்படுத்தப்படக்கூடிய ஒரு கொள்கையை உருவாக்குவதற்கு அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசோ அல்லது அகில இந்திய உழைப்பாளர் சம்மேளனமோ ஒன்றுபட்டு நடவடிக்கை எடுத்துக் கொள்ள எந்த முயற்சியும் மேற்கொள்வதாக எனக்குத் தெரியவில்லை.

            திரு.என்.எம்.ஜோஷி: ஒருங்கிணைந்த ஒரே சீரான கொள்கையை வகுப்பது இந்திய அரசாங்கத்தின் கடமை இல்லையா?

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஆம், இவ்வாறு செய்வதற்கு நாங்கள் அனுமதிக்கப்பட்டால் இது நிச்சயமாக எங்கள் கடமைதான். ஆனால் ஒவ்வொரு முறையும் தொழிலாளர் உலகின் ஒரு பிரிவினர் எங்களிடம் வந்து, “எங்களுக்கு இதைச் செய்யுங்கள் அல்லது அதைச் செய்யுங்கள். இல்லையென்றால் வேலை நிறுத்தத்தில் குதிப்போம்” என்று அச்சுறுத்துகிறார்கள். இந்நிலைமையில் அரசாங்கம் செய்வதறியாது திகைக்க வேண்டியிருக்கிறது. (ஓர் உறுப்பினர்: “நீங்கள் ஏன் சந்தித்துப் பேசி பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடாது?”) அடுத்து எதிர்பாராத சூழ்நிலைகளால் தொழிலாளர்கள் வேலையின்றி இருக்கும் பிரச்சினை பற்றி திரு.ஜோஷி குறிப்பிட்டார். மாகாணங்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் மத்திய அரசாங்கம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையை திரு.ஜோஷி இகழ்ச்சியோடு குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் உண்மையில் அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பது என்ன? நிலக்கரி பற்றாக்குறையாலோ அல்லது வேறு மூலப்பொருள்களின் பற்றாக்குறையாலோ தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலையின்றி இருக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் தொழிலதிபர்கள் தங்களது ஊழியர்களுக்கு ஓரளவு நட்டஈடு வழங்க வேண்டும் என்பது இந்திய அரசாங்கத்தின் கருத்தாகும் என்று அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. தொழிலாளர்கள் வேலையின்றி இருக்கும்போது அவர்களுக்கு ஓரளவு ஊதியம் வழங்க மத்திய அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று மாகாணங்களுக்கு நாங்கள் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். முதல் இரண்டு வாரங்களுக்கு 75 சதவீத ஊதியமும், இரண்டாவது இரண்டு வாரங்களுக்கு 50 சதவீத ஊதியமும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த உதவித் தொகை அளிக்கப்படும் காலம் ஒரு மாதமாக இருக்க வேண்டும் என்றும், காத்திருக்க வேண்டிய காலம் ஏழு மாதமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறோம். இந்த உதவித்தொகைகள் உண்மையில் தரப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்கு இந்திய அரசாங்கம் மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை என்று திரு.ஜோஷி தமது உரையின் முடிவில் குறிப்பிட்டிருந்தார். ஐயா, மாகாணங்களுக்கும் தொழில் அதிபர்களுக்கும் நாங்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையை திரு.ஜோஷி படித்திருப்பாரேயானால், எதிர்பாராத சூழ்நிலையால் வேலையின்றி இருக்கும் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உதவித் தொகைக்கு ஆகும் செலவை ஈடுசெய்வதற்கு சில திட்டவட்டமான யோசனைகளை நாங்கள் தெரிவித்திருப்பதை அவர் தெரிந்து கொண்டிருப்பார். வேலையின்றித் தவிப்பவர்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகைகளுக்கு ஆகும் செலவு வருமான வரி மற்றும் இ.பி.டி. சம்பந்தப்பட்ட விஷயங்களில் வருவாய் தரும் செலவினமாக அனுமதிக்கப்படும் என்பதையும் சுற்றறிக்கையில் கூறியிருக்கிறோம். இதனை இந்தச் சுற்றறிக்கையிலுள்ள ஒரு முக்கியமான அம்சம் என்று கூறலாம் என்பது தெள்ளத் தெளிவு. இது தவிர, இந்தியப் பாதுகாப்பு விதிகளில் 81-ஏ விதியும் இவ்வகையில் தொழிலாளர்களுக்குத் துணை நிற்கிறது; இந்தச் சந்தர்ப்ப சூழ்நிலைமைகள் காரணமாக வேலை செய்ய இயலாதிருக்கும் தொழிலாளர்கள் பிரச்சினையை மத்தியஸ்துக்கு விடும்படி மாகாண அரசாங்கங்களிடம் விண்ணப்பித்துக் கொள்ள இந்த விதி அனுமதிக்கிறது. இவ்விஷயம் இத்திசை வழியில் இப்போது கையாளப்பட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இப்பிரச்சினை குறித்து ஆமதாபாத்தில் தொழிலதிபர்களுக்கும் அங்குள்ள தொழிலாளர்களுக்கும் இடையே தற்போது மத்தியஸ்த முயற்சி நடைபெற்று வருவதை மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் அறிவார்கள்.

            திரு.ஜோஷி எழுப்பியுள்ள மூன்றாவது பிரச்சினை தொழிலாளர் நஷ்ட ஈடு சம்பந்தப்பட்டதாகும். இது விஷயத்தில் அவரது குற்றச்சாட்டின் சாரம் என்ன என்பதையும், தொழிலாளர் நஷ்டஈடு சம்பந்தமாக தற்போது என்ன குறைபாடு நிலவுகிறது என்பதையும், நான் என்ன செய்ய வேண்டுமென அவர் விரும்புகிறார் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தற்போது வழங்கப்பட்டு வரும் நஷ்ட ஈடு போதுமானது அல்ல என்று அவர் கருதுகிறார் என்று தோன்றுகிறது. ஊதியங்கள் என்பதற்கு தொழிலாளர் நஷ்டஈடு சட்டத்தில் நாம் தந்துள்ள விளக்கம் மிகவும் விரிவானது. பண ஊதியங்கள் மட்டுமன்றி, பண அடிப்படையில் மதிப்பிடப்படக் கூடிய யாவுமே இதில் அடங்கும். எனவே, தொழிலாளி நஷ்டஈடு கோர அவனுக்கு உரிமை உண்டு என்பது தெளிவு. இது சம்பந்தமான சட்டம் பிரிட்டனில் திருத்தப்பட்டிருக்கும்போது இது போன்ற எதையும் இந்த நாட்டில் நாம் செய்யவில்லை என்று திரு.ஜோஷி குறைபட்டுக் கொண்டார். யுத்தத்தின்போது இங்கிலாந்தில் தொழிலாளர் நஷ்டஈடு சட்டத்தின்படி தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகைகள் அதிகரிக்கப்பட்டன என்றும் அவர் கூறினார். இந்த விஷயத்தை நான் ஆராய்ந்து பார்த்தேன், உண்மை நிலை இதுதான். இதிலுள்ள வேறுபாடு என்ன என்பதை திரு.ஜோஷி புரிந்து கொள்ளவில்லை என்பதற்காக வருந்துகிறேன். தொழிலாளர்களின் நஷ்டஈட்டை குறிப்பிட்ட காலம் வரை வழங்க பிரிட்டிஷ் சட்டம் வகை செய்கிறது என்பதையும், ஆனால் இந்தியாவிலோ இதை நாம் பெரும்பாலும் மொத்தத் தொகையாகக் கொடுத்து விடுகிறோம் என்பதையும் மதிப்பிற்குரிய அவை உறுப்பினர்கள் அறிவார்கள். இது ஒரு முக்கியமான விளைவை ஏற்படுத்துகிறது. மொத்தமாக நஷ்டஈடு வழங்கும் முறையில் ஒரு தொழிலாளி தனக்குரிய நஷ்டஈட்டைப் பெற்றதும் அவன் களத்திலிருந்து மறைந்துவிடுகிறான்; அவன் சம்பந்தமாக தொழிலதிபருக்கோ, அரசாங்கத்துக்கோ தொடர்ச்சியான பொறுப்பு ஏதும் இருப்பதற்கில்லை. ஆனால் அதேசமயம் இழப்பீட்டுத் தொகை அளிப்பது குறிப்பிட்ட காலத்துக்கு நீடிக்கும் காரணத்தால், இவ்வாறு பணம் வழங்கும் பொறுப்பு ஒரு நீடித்த, தொடர்ச்சியான பொறுப்பாக தொழிலதிபருக்கு அமைந்துவிடுகிறது. இதனால், வேலையில் இருக்கும் ஒரு தொழிலாளிக்கு தொழிலதிபர் உடனடியாக அகவிலைப்படி வழங்க எவ்வாறு கடமைப்பட்டிருக்கிறாரோ அவ்வாறே பிரிட்டிஷ் சட்டத்தின்படியும் ஒரு தொழிலதிபர் கூடுதல் இழப்பீடு அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்; அங்கு கால அடிப்படையில் பணம் வழங்கப்படுவதால் அவ்வாறு பணம் வழங்கும் பொறுப்பும் தொடர்வதே இதற்குக் காரணம். நாம் கடைப்பிடித்துவரும் தொழிலாளர் இழப்பீட்டு முறை மாற்றப்பட வேண்டும், தொழிலாளிக்கு மொத்தத் தொகையாக அளிக்காமல் அவனது ஆயுட்காலம் வரையிலோ அல்லது அவனுடைய குழந்தைகள் வயதுக்கு வரும் வரையிலோ கால அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை அளிக்கப்பட வேண்டும் என்பது அவையின் விருப்பமாக இருந்ததால் இங்கிலாந்தில் பின்பற்றப்பட்டுவரும் நடைமுறை நம் நாட்டிலும் பின்பற்றப்படும் என்று உறுதிகூறுகிறேன்.

            திரு.துணைத் தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): நீங்கள் உங்கள் உரையைச் சுருக்கிக் கொள்ள வேண்டும் என்பது – எனது ஆணையல்ல – அவையின் விருப்பம். அடுத்தத் தீர்மானம் கொண்டு வர வாய்ப்பளிக்க வேண்டும் என்பதும் அவையின் விருப்பம். இனி நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

            சர் கவாஸ்ஜி ஜெஹாங்கீர்: இல்லை, ஐயா, இது அவையின் விருப்பம் அல்ல. அவர் மேலும் பேசுவதைக் கேட்கவே விரும்புகிறேன்.

            திரு.துணைத்தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): அமைதி, அமைதி.

            சர் கவாஸ்ஜி ஜெஹாங்கீர்: இது அவையின் விருப்பமல்ல, ஐயா, அவையின் பெயரைப் பயன்படுத்தி நீங்கள் பேசுகிறீர்கள், ஐயா. இந்த அவையின் இப்பகுதியைப் பொறுத்தவரையில் அவர் பேச வேண்டுமென்றே நாங்கள் விரும்புகிறோம்.

            டாக்டர் பி.என்.பானர்ஜி: அவர் தமது உரையை முடித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் மதிப்பிற்குரிய உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.

            சர் கவாஸ்ஜி ஜெஹாங்கீர்: இல்லை, அவர் பேசுவதை நாங்கள் கேட்கவே விரும்புகிறோம்.

            திரு.துணைத்தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): நீங்களே முழு அவையும் அல்ல.

            திரு.அப்துல் கையூம்: நீங்கள் கூறியது முற்றிலும் சரி.

            மாண்புமிகு சர் சுல்தான் அகமது: என்னவாயினும் சபையின் இந்தப் பகுதி அவர் பேசுவதைக் கேட்கவே விரும்புகிறது.

            திரு.துணைத்தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): இந்தக் குழப்பம் எதற்கு? இது அவைத் தலைவரின் கட்டளை அல்ல என்று நான் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருக்கிறேன். மாண்புமிகு உறுப்பினருக்கு அவைத் தலைவர் விடுக்கும் ஒரு வேண்டுகோள் தான் இது. இந்த வேண்டுகோளை ஏற்பதா, இல்லையா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

          மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, திரு.ஜோஷி அடுத்தப்படியாக எழுப்பிய பிரச்சினை தொழில்நுட்ப ஊழியர் அவசரச் சட்டம் பற்றியது. இந்தத் தொழில்நுட்ப ஊழியர் அவசரச் சட்டம் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையே “பாரபட்சம் காட்டும் கோட்பாட்டை தன்னுள் கொண்டுள்ளது” என்று அவர் குற்றம் சாட்டுகிறார்; அதாவது இந்த அவசரச் சட்டத்தின்படி ஒரு தொழிலாளி தன் இஷ்டம்போல் தனது வேலையிலிருந்து விலக முடியாது; அதேசமயம் இதே அவசரச் சட்டத்தின் பிரகாரம் ஒரு முதலாளி தனது தொழிலாளியை தன் இஷ்டம்போல் வேலையிலிருந்து நீக்கலாம் என்பது திரு.ஜோஷியின் வாதம். இந்த அவசரச் சட்டத்தைப் படித்துப் பார்க்கும்போது நாம் காணும் உண்மை நிலை என்ன? உண்மை நிலை இதுதான்: ஒரு தொழிலாளி வேலையிலிருந்து விலக விரும்பினால் அதற்கு தனது முதலாளியின் அனுமதியைப் பெற வேண்டியதில்லை. மாறாக, தொழிலாளி தனது வேலையை விட்டுவிட விரும்பினால் முறை மன்றத்தின் அனுமதியை நாட வேண்டும் என்று அவசரச் சட்டம் கூறுகிறது. இந்த விஷயத்தை திரு.ஜோஷி ஓரளவு தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. அடுத்து, தொழிலாளியை வேலையை விட்டு நீக்குவதற்கு முதலாளிக்குள்ள அதிகாரத்தைப் பொறுத்தவரையில் உண்மை நிலைமை இதுதான்; முறைமன்றத்தின் அனுமதியைப் பெற்றாலொழிய ஒரு தொழிலாளியை வேலையிலிருந்து நீக்குவதற்கு பொதுவாக முதலாளி அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இதற்கு ஒரு விதிவிலக்கு உண்டு; அதாவது கீழ்ப்படியாமை, தவறான நடத்தை காரணமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும்போது முறை மன்றத்தின் அனுமதி பெறாமலேயே ஒரு முதலாளி தனது தொழிலாளியை வேலையிலிருந்து நீக்கலாம். தவறாக நடந்து கொள்ளும் அல்லது கீழ்ப்படியாது நடந்து கொள்ளும் ஒரு தொழிலாளியை அவனது முதலாளி வேலை நீக்கம் செய்ய அனுமதிக்கும் இந்தக் குறிப்பிட்ட விதியை குறை கூற முடியாது என்றே கருதுகிறேன்.

            என்.எம்.ஜோஷி: இதை யார் தீர்மானிப்பது?

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: முறை மன்றம் செயல்படாத சந்தர்ப்பங்களில் பொதுவாக யார் தீர்மானிக்கிறார்கள் என்பதை திரு.ஜோஷியிடமே கேட்க விரும்புகிறேன். நமது தொழில்துறை அமைந்துள்ள நிலையைக் கொண்டு பார்க்கும்போது, ஒரு குறிப்பிட்ட தொழிலாளியின் பணியில் தனக்குத் திருப்தி இல்லை என ஒரு முதலாளி கருதும்போது அந்தத் தொழிலாளியை வேலை நீக்கம் செய்ய சரியாகவோ, தவறாகவோ அவருக்கு உரிமை இருக்கிறது. இதுதான் தற்போதுள்ள நிலைமை. இந்த உரிமை துஷ்பிரயோகம் செய்யப்படாதிருக்கும் பொருட்டு அவசர சட்டத்தில் இரண்டு முக்கியமான திருத்தங்களைச் செய்திருக்கிறோம் என்பதை அவைக்கு அதிலும் குறிப்பாக திரு.ஜோஷிக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். முதலாவதாக முறைமன்றத்துக்கு உதவி செய்ய ஆலோசனைக் குழுக்களை அமைத்திருக்கிறோம்; இத்தகைய குழுக்களை அமைக்க வேண்டும் என்பதே திரு.ஜோஷியின் விருப்பமாகும். இக்குழுக்களில் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள். இக்குழுக்கள் இவ்வாறு அமைக்கப்படுவதால், தொழிலாளிகள் பழிவாங்கப்பட்டால் இவ்விஷயத்தை முறை மன்றத்தின் கவனத்துக்கு இவற்றால் கொண்டு வர முடியும் என்பதில் எனக்கு எத்தகைய ஐயமும் இல்லை.

            இரண்டாவதாக மற்றுமொரு மிக முக்கியமான நடவடிக்கையையும் நாங்கள் எடுத்திருக்கிறோம். ஒரு தொழிலாளி தனது வேலையை இராஜிநாமா செய்வதற்கோ அல்லது வேலையைத் துறப்பதற்கோ அனுமதிக்காததற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டுமென்று முறைமன்றத் தலைவரைக் கேட்டுக்கொள்ளும் உத்தரவு ஒன்றை இப்போது பிறப்பித்திருக்கிறோம். இந்த சட்டப்பிரிவை குற்ற நடைமுறை சட்டத் தொகுப்பிலிருந்து நாங்கள் இரவல் பெற்றிருக்கிறோம். ஒரு தொழிலாளி தனது வேலையை இராஜிநாமா செய்ய முறைமன்றத் தலைவர் அனுமதிக்காததற்கு சட்டரீதியான, முறையான காரணங்கள் இருக்கின்றனவா என்பதை மத்திய அரசாங்கத்திலுள்ள நாங்கள் தெரிந்து கொள்வதை இது சாத்தியமாக்கும்.

            ஐயா, நிலக்கரிச் சுரங்கங்களில் உள்ள நிலைமைகள் மிகவும் மோசமாக, திருப்திகரமற்றவையாக இருக்கின்றன என்று திரு.ஜோஷி சுட்டிக்காட்டினார். இதை நான் மறுக்கவில்லை; அங்கு நிலைமைகள் போற்றத்தக்கவையாக உள்ளன என்றும் நான் உரிமை கொண்டாடவில்லை. ஆனால் அதே சமயம் நிலக்கரிச் சுரங்கங்களில் மேம்பட்ட நிலைமைகளைத் தோற்றுவிப்பதற்கு தொழிலாளர் நலத்துறை பல விரிவான, திட்டவட்டமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இரண்டு வகையான தொழிலாளர்களைக் கொண்டு இப்போது நிலக்கரிச் சுரங்கங்களை இயக்கி வருகிறோம் – ஒரு பிரிவினர் ஸ்தல தொழிலாளர்கள், மற்றொரு பிரிவினர் வெளியிலிருந்து அதிலும் குறிப்பாக ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த கோரக்பூர் மாவட்டத்திலிருந்து வரவழைக்கப்பட்ட தொழிலாளர்கள். தொழிலாளர்களுக்கு தரப்படும் ஊதியங்கள் சம்பந்தமான சில புள்ளி விவரங்களை அவைக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். கோரக்பூர் தொழிலாளி நாள் ஒன்றுக்கு 12 அணா அடிப்படை ஊதியமகப் பெறுகிறான்; இதுவன்றி உற்பத்திப் போனசாக 4 அணா பெறுகிறான்; மேலும் நிலத்துக்கு அடியில் வேலை செய்வதற்காக நான்கணா கூடுதல் படியாக அவனுக்குக் கிடைக்கிறது. தவிரவும், அவனுக்கு இலவசமாக உணவும் வழங்குகிறோம். இதற்கு நபருக்கு ஒரு நாளைக்கு 14 அணா ஆகிறது.

            திருமதி ரேணுகா ரே (அதிகார சார்பற்ற நியமன உறுப்பினர்): ஐயா, ஓர் ஒழுங்குப் பிரச்சினை. மாண்புமிகு உறுப்பினர் ஏற்கெனவே 25 நிமிடங்கள் எடுத்துக் கொண்டு விட்டார்.

            திரு.துணைத்தலைவர்: (திரு.அகில் சந்திர தத்தா): தொழிலாளர் நலத்துறைக்குப் பொறுப்பாக உள்ள மாண்புமிகு உறுப்பினருக்கு 20 நிமிடங்களுக்கு அதிகமாகப் பேச வாய்ப்பளிக்கலாம்.

            திரு.என்.எம்.ஜோஷி: 20 நிமிடங்கள்தான் என்பது விதிமுறை.

            திரு.துணைத் தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): இல்லையில்லை; 20 நிமிடங்களோ அவசியமானால் அதற்கும் அதிகமாகவோ பேசலாம்.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, ஏற்கெனவே நான் கூறியது போன்று கோரக்பூர் தொழிலாளிக்கு இந்த ஊதியங்கள் வழங்கப்படுவதோடு, அவனது உணவுக்காக நாள் ஒன்றுக்கு 14 அணா அளிக்கப்படுகிறது. மேலும் இலவசமாக வீட்டு வசதியும், மருத்துவ உதவியும் தரப்படுகின்றன.

            ஏனைய நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களை எடுத்துக் கொண்டால், அவர்களது ஊதியம் பின்வருமாறு அமைந்திருக்கிறது; யுத்தத்திற்கு முன்னர் மேற்பரப்பில் வேலை செய்தால் 8 அணாவும், பூமிக்கு அடியில் வேலை செய்தால் 14 அணாவும் தரப்பட்டு வந்தது; இப்போது இந்த ஊதியம் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளி ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சில பங்கீட்டுப் பொருள்கள் அளிக்கப்படுகின்றன. உள்ளூர் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளி ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தலைக்கு 4 சேர் வீதமும், தன்னைச் சார்ந்துள்ள வயது வந்த ஒவ்வொருவருக்கும் 4 சேர் வீதமும், இரண்டு வயதுக்கும் பன்னிரண்டு வயதுக்கும் உட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் 2 சேர் வீதமும் கட்டுப்படுத்தப்பட்ட விலையில் உணவு தானியங்களைப் பெறுகின்றனர். இதல்லாமல், ஆண் பெண் என்ற பாகுபாடின்றி ஒவ்வொரு தொழிலாளிக்கும் பருப்பு போன்ற அடிப்படைப் பங்கீட்டுப் பொருள்களில் நான்கில் ஒரு பங்கு சலுகை விலையில் வழங்கப்படுகிறது. இவற்றை ரூபாய்க்கு ஆறு சேர் என்ற சலுகை விலையில் அவர்கள் பெறுகின்றனர். வேலைக்கு வரும் ஒவ்வொரு தினத்துக்கும் ஒரு சேர் அரிசி இலவசமாகவும் தரப்படுகிறது. அதுமட்டுமல்ல, வேலைக்கு வரும் ஒவ்வொரு தினத்துக்கும் சார்ந்து இருப்பவர் எவரும் இல்லாத தொழிலாளி இரண்டு அணா வீதமும், சார்ந்து இருப்பவர் ஒருவரை கொண்ட தொழிலாளி மூன்று அணா வீதமும், வயதுவந்த சார்ந்திருப்பவரையும் ஒன்று அல்லது அதற்கும் அதிகமான குழந்தைகளையும் கொண்ட தொழிலாளி ஐந்து அணா வீதமும் பெறுகிறார்.

          திரு.ஶ்ரீ பிரகாசா: ஐயா, ஓர் ஒழுங்குப் பிரச்சினை. அரசாங்க உறுப்பினர் ஒருவர் 20 நிமிடங்களுக்கும் அதிகமாகப் பேசலாம் என்று நீங்கள் கூறியது சம்பந்தப்பட்ட துறைக்குப் பொறுப்பாக உள்ளவருக்குப் பொருந்துமே தவிர எந்த அரசாங்க உறுப்பினர் வேண்டுமானாலும் திடீரென்று முன்வந்து பேச முடியாது. இப்போதைய விஷயத்துடன் சம்பந்தப்பட்டவர் நிதித்துறை உறுப்பினர். அவரது தீர்மானம்தான் அவையின் முன் உள்ளது. இது தொழிலாளர் நலத்துறை உறுப்பினரின் தீர்மானம் அல்ல.

            திரு.சாமி வெங்கடாசலம் செட்டி (சென்னை, இந்திய வாணிகம்): ஐயா, தீர்மானத்தை இப்போது அவையின் முடிவுக்கு விடலாம் என்று பிரரேபிக்கிறேன்.

            மதிப்பிற்குரிய பல உறுப்பினர்கள்: அவ்வாறே அவையின் முடிவுக்கு விடலாம்.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, இம்மாதிரி எல்லாம் எனக்கு இடைஞ்சல் தரக்கூடாது.

            திரு.துணைத்தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): அமைதி, அமைதி. உரை முடிந்த பிறகுதான் தீர்மானத்தை அவையின் முடிவுக்கு விட முடியும். அடுத்த தீர்மானம் சம்பந்தமாக எதிர்க்கட்சியினருக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்துவிட்டேன். ஆனால் இப்போது எனக்கு வேறு வழியில்லை.

            திரு.அப்துல் கையூம்: ஐயா, ஓர் ஒழுங்குப் பிரச்சினை. அரசாங்க உறுப்பினர் 20 நிமிடங்களோ அல்லது அதற்கும் அதிகமாகவே பேசலாம். ஆனால் இங்கு பிரச்சினை என்னவென்றால், அரசாங்க உறுப்பினர் வரைமுறையின்றித் தம் பேச்சை தம் விருப்பம் போல் மணிக்கணக்கில் நீடித்துச் செல்ல அனுமதிக்கலாமா? அல்லது மாண்புமிகு அரசாங்க உறுப்பினர் பேசுவதற்கு போதிய நேரம் இருக்கிறதா, இல்லையா என்பதை அவைத் தலைவர் முடிவு செய்வதா? இந்த அதிகாரம் முற்றிலும் அவைத் தலைவருக்குத்தான் உண்டு, அரசாங்க உறுப்பினர் தம் இஷ்டம் போல் பேச்சை நீட்டித்துக் கொண்டு போக முடியாது என்பது என் கருத்து. அவர் போதிய நேரம் பேசிவிட்டார் என்பதே என் வாதம்.

          திரு.துணைத் தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): பேசுவதற்கு அவர் போதிய நேரம் எடுத்துக் கொண்டு விட்டாரா அல்லது வேண்டுமென்றே பேச்சை நீட்டித்துக் கொண்டு போகிறாரா என்பதை என்னால் கூற முடியவில்லை; அந்த அளவுக்கு அது மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.

            மதிப்பிற்குரிய பல உறுப்பினர்கள்: இப்போது தீர்மானத்தை அவையின் முடிவுக்கு விடலாம்.

            திரு.சாமி வெங்கடாசலம் செட்டி: ஒரு ஒழுங்கு பிரச்சினையை எழுப்ப விரும்புகிறேன். தீர்மானத்தை முடிவுக்குக் கொண்டுவரும் பிரேரணையை நான் கொண்டுவர முடியாது என்று அவைத் தலைவர் நினைப்பது போல் தோன்றுகிறது. ஆனால் மாண்புமிகு உறுப்பினர் தமது இருக்கையில் அமர்ந்து விட்டதால் இப்போது தீர்மானத்தை அவையின் முடிவுக்கு விடலாம் என்று நினைக்கிறேன்.

            திரு.துணைத் தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): ஓர் உறுப்பினர்ர உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது, தீர்மானத்தை அவையின் முடிவுக்கு விடும் பிரேரணையை கொண்டு வர முடியாது என்பது மரபு. மேலும் மாண்புமிகு உறுப்பினர் தம் உரையை முடித்து விட்டதால் இருக்கையில் அமரவில்லை, மாறாக குறுக்கீடுகள் காரணமாகத்தான் அவர் தமது இருக்கையில் அமர்ந்துவிட்டார்.

          மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அடுத்து, தொழிலாளர் நலத்துறையில் போதிய எண்ணிக்கையில் அலுவலர்கள் இல்லை என்று திரு.ஜோஷி கூறினார். இத்தகைய முடிவுக்கு அவர் எவ்வாறு வந்தார் என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. இந்த அலுவலர்களைப் பற்றிக் கூறுவதானால் அவர்கள் அண்மையில்தான் தொழிலாளர் நலத்துறையினால் வேலைக்கு அமர்த்திக் கொள்ளப்பட்டவர்கள். நிலக்கரிச் சுரங்கங்களைப் பொறுத்தவரையில், நிலக்கரிச் சுரங்க சேமநலக் குழுவுக்கு தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்திருக்கிறோம். தலைமை சேம நல அதிகாரி அவருக்கு உதவியாக இருக்கிறார். அவருக்குக் கீழ் இரண்டு ஆய்வாளர்கள் இருக்கிறார்கள் – அவர்களில் ஒருவர் பெண் சேம நல ஆய்வாளர். தேர்ச்சி பெறாத தொழிலாளர்களைத் திரட்டித் தருவதற்காக ஓர் இயக்குநர் இருக்கிறார். அவருக்குக் கீழ் மூன்று துணை இயக்குநர்களும் இரண்டு உதவி இயக்குநர்களும் உள்ளனர்.

            (இந்தக் கட்டத்தில் எதிர்க்கட்சித் தரப்பினரிடமிருந்து பலத்த கூச்சலும், தங்கள் மேசைகளைத் தட்டும் ஒலியும் வருகின்றன.)

            திரு.அப்துல் கையூம்: உங்கள் கோரிக்கை அறவே மறுக்கப்படும்.

மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: பிரதம சுரங்க ஆய்வாளரின் கீழ் 20 அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். இதல்லாமல், மத்தியில் ஒரு தலைமை தொழிலாளர் நல ஆணையரை நியமித்திருக்கிறோம். அவருக்குக் கீழ் மூன்று துணை ஆணையர்கள் பணியாற்றுகின்றனர்; எல்லா சேமநல நடவடிக்கைகளுக்கும் அவர்கள் பொறுப்பாக இருப்பார்கள்.

அடுத்தபடியாக, ஐயா, தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுப்பதில் எப்போதும் பெரிதும் காலதாமதம் செய்வதாக திரு.ஜோஷி குற்றம் சாட்டினார்; ஆமைபோல் இயங்குவதே அவர்களுக்கு வழக்கமாகிவிட்டது என்றும் கூறினார். இதுகுறித்து ஒன்று கூற விரும்புகிறேன்: தொழிலாளர் நலத்துறையின் நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் இன்றைய சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தாமதம் தவிர்க்க முடியாதது. நாங்கள் மாகாண அரசாங்கங்களைக் கலந்தாலோசிக்க வேண்டியிருக்கிறது; தொழிலாளர் நலத்துறை அமைப்பாளர்களை கலந்தாலோசிக்க வேண்டியிருக்கிறது; ஊழியர்களையும் கலந்தாலோசிக்க வேண்டியிருக்கிறது. இவற்றிற்கெல்லாம் நிச்சயம் எவ்வளவோ நேரம் செலவிட வேண்டியிருக்கும். எனவே, நாங்கள் எங்கள் செயல்பாடுகளில் தாமதம் செய்வதாக திரு.ஜோஷி கூறுவதில் அர்த்தம் இருப்பதாக நான் கருதவில்லை.

திரு.என்.எம்.ஜோஷி: திரு.துணைத் தலைவர் அவர்களே, நான் ஒரு ஒழுங்கு பிரச்சினையை எழுப்ப விரும்புகிறேன். ஓர் அரசாங்க உறுப்பினர் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கலாம் என்பது உங்கள் தீர்ப்பா? இதுசம்பந்தமாக அவைத் தலைவரிடமிருந்து ஒரு திட்டவட்டமான முடிவை எதிர்ப்பார்க்கிறேன்………

திரு.துணைத்தலைவர் (திரு அகில் சந்தர தத்தா): மாண்புமிகு உறுப்பினர் தமது உரையை முடித்து விட்டார் என்று தெரிகிறது.

திரு.என்.எம். ஜோஷி: ஐயா, அவையின் நேரத்தை மிச்சப்படுத்த விரும்புகிறேன் .எனவே, எனது வெட்டுத் தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள அவையின் அனுமதியை வேண்டுகிறேன்.

மாண்புமிகுடாக்டர்பி.ஆர்.அம்பேத்கர்: ஒரு விஷயத்தை இங்கு கூற விரும்புகிறேன். என்னுடைய நண்பர் திரு.ஜோஷி தமது வெட்டுத் தீர்மானத்தைத் திரும்ப பெற்றுக் கொள்ளப் போவதாக என்னிடம் தெரிவித்திருந்தால், இவ்வளவு நீண்ட நேரம் நான் பேசியிருக்க மாட்டேன்.

திரு.துணைத்தலைவர் (திரு.அகில் சந்திர தத்தா): நமது வெட்டுத் தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளப் போவதாக மாண்புமிகு உறுப்பினருக்கு முன்கூட்டியே தெரிவிக்க திரு. ஜோஷி எவ்வகையிலும் கட்டுப்பட்டிருக்கவில்லை.

அவையின் அனுமதியோடு வெட்டுத் தீர்மானம் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படுகிறது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)