தீண்டப்படாதவர்கள் என்பவர்கள் யார்? தீண்டாமையின் மரபுமூலம் என்ன? இவைதாம் நமது ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பிரதான கருப்பொருள்கள். இந்த ஆய்விலிருந்து பெறப்பட்ட முடிவுகள் பின்வரும் பக்கங்களில் தரப்பட்டிருக்கின்றன. நமது விசாரணையைத் தொடங்குவதற்கு முன்னர் சில பூர்வாங்க கேள்விகளை நாம் பரிசீலிக்க வேண்டும். இவற்றில் முதல் கேள்வி வருமாறு: தீண்டாமையைக் கடைபிடிக்கும் மக்கள் உலகிலேயே இந்துக்கள் மட்டும்தானா? இரண்டாவது கேள்வி: இந்துக்கள் அல்லாதவர்களிடையேயும் தீண்டாமை நிலவுகிறது என்றால், இந்துக்கள் கைக்கொள்ளும் தீண்டாமையுடன் எப்படி ஒப்பிடுவது? துரதிருஷ்டவசமாக இத்தகைய ஒப்பீட்டு ஆய்வு இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இதன் விளைவு என்ன? இந்துக்களிடையே தீண்டாமை என்னும் சாபத்தீட்டு, சாபக்கேடு இருந்துவருவது பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருந்தாலும் அதன் தனித்தன்மை வாய்ந்த அம்சங்கள் என்ன என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். தீண்டாமையின் இந்தப் பிரத்தியேகமான, தனிப்பட்ட அம்சங்கள் பற்றிய ஒரு திட்டவட்டமான கருத்து நமக்கு இருப்பது அத்தியாவசியம். அப்போதுதான் தீண்டப்படாதவர்களின் நிலைமை பற்றிய ஓர் உண்மையான படப்பிடிப்பினை நாம் பெறமுடியும்; மேலும், அவர்களது மரபுமூலம் குறித்து ஆழமாக ஆராய வேண்டிய அவசியத்தையும் நாம் உணரமுடியும்.

     ambedkar 354நாகரிகம் முதிர்ச்சிபெறாத பூர்வீக, பண்டைக்கால சமுதாயங்களில் இது விஷயத்தில் எத்தகைய நிலைமை நிலவிற்று என்பதுடன் நமது ஆய்வைத் தொடங்குவோம். இந்த சமுதாயங்கள் தீண்டாமையை அங்கீகரித்தனவா? இந்தக் கேள்விக்கு நாம் பதில் காணுவதற்கு முன்னதாக தீண்டாமை என்றால் என்ன என்பது குறித்து ஒரு தெளிவான, துல்லியமான கண்ணோட்டம் நமக்கு இருப்பது அவசியம். இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏதும் இருக்க முடியாது. தூய்மைக்கேடு, தீட்டு, புனிதத்தன்மை கெடுதல், மாசுபடுத்தல், கறைப்படுத்தல், விழுப்பு ஆகியவை குறித்து கண்ணோட்டமும், இந்த தூய்மைக்கேட்டைத் துடைத்தெறிவதற்கான வழிமுறைகளும்தான் தீண்டாமைக்கு ஆணிவேராக, அடித்தளமாக அமைந்துள்ளன என்பதை அனைவருமே ஒப்புக்கொள்வர்.

     தீண்டாமையை மேலே கண்ட அர்த்தத்தில் பூர்வீக சமுதாயம் (இந்துக்களல்லாதவர்களிடையே தூய்மைக்கேடு குறித்த விவரங்கள்சமயம் மற்றும் அறநெறி குறித்த ஹேஸ்டிங்ஸ் கலைக்களஞ்சியத்திலிருந்துகையாளப்பட்டுள்ளன. தொகுதி X, கட்டுரை தூய்மைப்படுத்துதல், பக்கங்கள் 455-504) அங்கீகரித்ததா, இல்லையா என்பதைக் கண்டறியும் பொருட்டு அதன் சமூக வாழ்க்கையைப் பரிசீலித்துப் பார்க்கும்போது நாம் என்ன காண்கிறோம்? தூய்மைக்கேடு என்னும் கண்ணோட்டத்தில் அந்த சமுதாயம் நம்பிக்கை வைத்தது மட்டுமன்றி, அந்த நம்பிக்கை நன்கு திட்டமிட்ட பழக்கவழக்க வினைமுறைகளாகவும் சடங்குகளாகவும் மாறியதையும் பார்க்கிறோம்.

     பின்கண்ட காரணங்களால் தூய்மைக்கேடு ஏற்படுவதாக அதாவது தீட்டு நேர்வதாக பூர்வீக மனிதன் நம்பினான்:

தீவினை ஒருவரிடமிருந்து ஒருவருக்குப் பரவுகிறது என்று ஆதிமனிதன் நம்பினான். இவ்விதம் பரவும் அபாயம் இயற்கைச் சடங்குகளைச் செய்தல், உண்ணல், குடித்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மிகவும் தீவிரமடையும் என்றும் அவன் கருதினான். தூய்மைக்கேடு உண்டு பண்ணக்கூடியவை, புனிதத்தன்மைக்கு மாசு ஏற்படுத்தக்கூடியவை என்று ஆதிமனிதன் நம்பிய நிகழ்ச்சிகளில் பின்வருபவையும் அடங்கும்:

கருக்கொண்டுள்ள தாய்மார்கள் தூய்மை கேடுடையவர்களாகவும் மற்றவர்களுக்கு ஒரு தீட்டாகவும் கருதப்பட்டனர்; தாயின் தூய்மைக்கேடு குழந்தையையும் தொற்றிக்கொள்வதாக எண்ணப்பட்டது.

தீட்சை பெறுதலும் பூப்படைதலும் ஆணும் பெண்ணும் முழு பாலுறவு வாழ்க்கைக்கும், சமூக வாழ்க்கைக்கும் தகுதிபெற்று விட்டதைக் குறிக்கும் கட்டங்களாகக் கருதப்பட்டன. அவர்கள் விலக்கி வைக்கப்பட்டனர்; ஒதுக்கிவைக்கப்பட்டனர்; அவர்களுக்கு விசேட உணவு தரப்பட்டது; அடிக்கடி நீராடும்படிச் செய்யப்பட்டார்கள்; அவர்களது உடலில் ஏதோ வண்ணப்பொருள் பூசப்பட்டது; சுன்னத்து போன்ற உறுப்புச் சிதைவுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அமெரிக்கப் பழங்குடியினர் தீட்சை பெறும்போது விசேட உணவு உண்டார்கள்; குறிப்பிட்ட இடைவேளைகளில் ஏதோ வாந்தி மருந்தை சாப்பிட்டார்கள்.

திருமணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற சடங்குகள் பூர்வீக மனிதன் திருமணத்தை தூய்மைக்கேடானதாகக் கருதியதைக் காட்டுகின்றன. சில சந்தர்ப்பங்களில் மணப்பெண் ஆஸ்திரேலியாவில் தனது குலத்தைச் சேர்ந்த ஆண்களுடனும், அமெரிக்காவில் குலத்தலைவன் அல்லது மருத்துவனுடனும், கிழக்கு ஆப்பிரிக்காவில் மணமகனின் நண்பர்களுடனும் உடலுறவு கொள்ளும்படிச் செய்யப்பட்டாள். சில சமயங்களில் மணமகன் வாள்கொண்டு மணமகளை மெள்ளத்தட்டுவது உண்டு. சில சந்தர்ப்பங்களில் முண்டாக்களிடையே நடைபெறுவது போன்று, மணமகனுடன் திருமணம் நடைபெறுவதற்கு முன்னர் ஒரு மரத்திற்கு திருமணம் செய்து வைப்பது உண்டு. இந்தத் திருமண சடங்குகள் யாவும் திருமணத்தால் ஏற்படக்கூடிய தூய்மைக்கேட்டை அகற்றும் நோக்கம் கொண்டவை.

மரணம்தான் பூர்வீக மனிதனுக்கு மிக மோசமான தீட்டாக, விழுப்பாகக் கருதப்பட்டது. பிணம் மட்டுமன்றி, இறந்தவனது உடைமைப்பொருள்களை வைத்திருப்பதும் தீட்டாக எண்ணப்பட்டது. இறந்த மனிதன் உயிரோடிருந்த காலத்தில் பயன்படுத்திவந்த கருவிகள், ஆயுதங்கள் முதலியவற்றை அவனது கல்லறையில் பிணத்தோடு சேர்த்து வைக்கும் பழக்கம் நீண்டகாலமாகவே பின்பற்றப்பட்டு வந்தது. இது எதைக் குறிக்கிறது? இந்த ஆயுதங்களையும் கருவிகளையும் மற்றவர்கள் உபயோகிப்பது அபாயகரமானது, அதிர்ஷ்டம் கெட்டது, தீங்கு பயப்பது என்று கருதப்பட்டு வந்ததையே இது காட்டுகிறது.

குறிப்பிட்ட சில பொருள்களைத் தொடுவதால் தீட்டு ஏற்படுகிறது என்று அந்நாட்களில் கருதப்பட்டு வந்தது. இவ்வகையில் எந்தப் பொருள்கள் புனிதமானவை, எந்தப் பொருள்கள் மாசு ஏற்படுத்தக்கூடியவை என்பதைப் பூர்வீக மனிதன் தெரிந்திருந்தான். பூர்வீக சமுதாயத்தில் புனிதமானதை புனிதமற்றதிலிருந்து எவ்வாறு பிரித்துப் பாகுபடுத்திப் பார்க்கப்பட்டது என்பதை தோடர்களின் பழக்க வழக்கங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அவர்களது மிக விரிவான வினைமுறைகளும் சடங்குகளும், அவர்களது முழு சமூக ஒழுங்கமைப்பும் புனிதமான கால்நடைகள், புனிதமான பால்பண்ணைப் பாத்திரங்கள், பால் முதலியவற்றின் தூய்மையையும் இவை சம்பந்தப்பட்ட சடங்குகளை செய்பவரது தூய்மையையும் பாதுகாப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. பால் பண்ணையில் புனிதமான பாத்திரங்கள் எப்போதுமே ஒரு தனி அறையில் வைக்கப்படுகின்றன. மற்றொரு அறையில் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தில் அவ்வப்போது பாலை எடுத்து வந்து இந்தப் பாத்திரங்களில் ஊற்றப்படுகிறது. இங்கு பால் பண்ணைத் தலைவனே பூசாரியாகவும் இருக்கிறான்; விரிவான சடங்குகளுக்குப் பிறகு அவன் இந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்படுகிறான்; உண்மையில் இவற்றைத் தூய்மைப்படுத்தும் சடங்குகள் என்றே கூறவேண்டும். இதன் பிறகு அவன் சாமானிய மனிதர்களின் அந்தஸ்திலிருந்து புனிதப் பொறுப்பு வகிக்கக்கூடிய அந்தஸ்துக்கு உயர்த்தப்படுகிறான். இப்போது முதல் அவன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு சில விதிமுறைகள் வகுத்துத் தரப்படுகின்றன. அவன் சில குறிப்பிட்ட சமயங்களில் கிராமத்தில் படுத்துஉறங்கலாம். ஆனால் அவன் ஏதேனும் ஈமச்சடங்குகளில் கலந்துகொண்டால் அந்தக் கணம் முதலே அவன் தனது புனிதப்பணியைச் செய்யமுடியாது. ஆக இத்தகைய சடங்குகள் மேற்கொள்ளப்படுவதன் நோக்கம் தீட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்ப்பதும், துப்புரவற்றவர்கள் பயன்படுத்தக்கூடிய புனிதமான பொருள்களுக்கு ஏற்படும் தூய்மைக்கேட்டை அகற்றுவதும்தான் என்பது தெளிவு.

தூய்மை சம்பந்தப்பட்ட கருத்து பொருள்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று அர்த்தமல்ல. புனிதர்கள் எனக் கருதப்பட்ட சில மனிதர்கள் இருந்தார்கள். அவர்களை எவரேனும் தொட்டால் அவர்களது புனிதத் தன்மை கெட்டுவிடும். போலீனேசியர்களின் தலைவனை ஒரு கீழோன் தொடுவது அத்தலைவனது புனிதத்தை மாசுபடுத்திவிடும்; எனினும் இதனால் கீழோனுக்குத்தான் கேடு விளைவும். இதற்கு மாறாக, எஃபட்டேயில் ஒரு ‘தூயவர்’ நாமினை (சடங்குரீதியான தூய்மைக்கேடு) தொடும்படி நேர்ந்தால் அவரது புனிதத்தன்மை அழிந்துவிடும். உகாண்டாவில் ஒரு கோவிலைக் கட்டுவதற்கு முன்னர் அதனை நிர்மாணிப்பவர்களுக்கு நான்கு நாள் அவகாசம் தரப்படுகிறது; அந்த நான்கு நாட்களுக்குள் அவர்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். மறுபுறம், அந்த சமூகத்தின் தலைவன் பல சந்தர்ப்பங்களில் புனிதமானவனாகக் கருதப்படுகிறான்; அவ்வாறே அவனுடைய உடைமைகளும் புனிதமானவையாகப் பாவிக்கப்படுகின்றன; ஆதலால் அவை தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுக்கு அபாயகரமானவை. டோங்கா தீவில் குலத் தலைவனை தொடுபவன் தீட்டுக்கு உள்ளாகிறான்; அவனுக்கும் மேலே உள்ள குலத்தலைவனது பாதத்தைத் தொட்டால் அந்தத் தீட்டுப் போய்விடும். மலேயா தீபகற்பத்தில் குலத்தலைவனது புனிதத்தன்மை அல்லது மரபுரிமைச் சின்னத்தில் பொதிந்துள்ளது; அதனைத் தொடும் எவரும் கடுமையான நோய் வாய்ப்படுவர், அல்லது மரணத்தைச் சந்திப்பர்.

அன்னியர்களுடன் பழகுவதும் தீண்டாமைக்கு ஒரு மூல காரணமாக பூர்வீக மனிதனால் கருதப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் பதோங்கா என்னும் ஒரு குலத்தினர் இருக்கின்றனர்; இக்குலத்தைச் சேர்ந்தவர்கள் எவரேனும் அயல்நாட்டில் சுற்றுப்பயணம் செய்தால் அவர்களை பேய்பிசாசு பிடித்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை அவர்களிடையே நிலவுகிறது. அவர்களுக்கு அன்னியர்கள் தீண்டப்படாதவர்கள்; ஏனென்றால் அவர்கள் அன்னிய தெய்வங்களை வழிபட்டு, தீய விளைவுகளை ஏற்படுத்துகிறார்கள். ஆதலால் அவர்கள் ஏதேனும் ஒரு முறையில் தூய்மைப்படுத்தப்படுகிறார்கள். டியரி குலத்திலும், அண்டையிலுள்ள இதர சில குலங்களிலும் ஒரு விந்தையான நடைமுறை கைக்கொள்ளப்படுகிறது; இக்குலங்களைச் சேர்ந்த எவரேனும் எங்கேயாவது சுற்றுப்பயணம் செய்து விட்டுத் திரும்பும்போது அவர்கள் அன்னியர்களாகவே கருதப்படுகிறார்கள்; அவர்கள் தங்களிடையே வந்து அமரும்வரை அவர்களை எவரும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

ஒரு புதிய நாட்டிற்குள் பிரவேசிப்பதும் தீட்டு ஏற்படுத்தக் கூடியதாகக் கருதப்படுகிறது. உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் ஒரு குலத்தினர் இன்னொரு குலத்தினரை அணுகும்போது, அக்குலத்தைச் சேர்ந்தவர்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்த தீப்பந்தங்களை ஏந்திச் செல்லுகிறார்கள். ஸ்பார்ட்டன் மன்னர்கள் போர்ப் பிரகடனம் செய்து யுத்தக் களத்திற்கு செல்லும்போது, இவ்வாறுதான் பலி பீடத்திலிருந்து அவர்களுக்கு முன்னால் தீப்பந்தங்கள் ஏந்திச் செல்லப்பட்டதாக வரலாறு பகர்கிறது.

இதேபோன்று வெளி உலகிலிருந்து ஒருவர் ஒருவீட்டிற்குள் நுழையும்போது ஏதேனும் ஒரு சடங்கைச் செய்ய வேண்டியிருந்தது; வீட்டிற்கு வெளியே தனது மிதியடிகளைக் கழற்றி வைப்பதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்; இவ்வாறு அவர் செய்வது வீட்டிற்குள் இருப்பவர்களுக்குத் தீட்டு ஏற்பட்டுவிடாதபடி அவரைத் தூய்மைப்படுத்தும். இதேபோன்று அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஏதேனும் தீட்டுக்கு ஆளாகியிருந்தால் வாயிற்படியிலும் கதவு நிலையிலும் சிறிது இரத்தம் தடவி வைக்கப்படுகிறது. அல்லது நீர் தெளிக்கப்படுகிறது; இல்லையென்றால் வாயிலில் ஒரு குதிரை லாடம் கட்டி தொங்கவிடப்படுகிறது; இது தீங்கை விரட்டுவதாகவும், நற்பேற்றைக் கொண்டு வருவதாகவும் நம்பப்படுகிறது.

பிறப்பு, இறப்பு, திருமணம் போன்றவை சம்பந்தப்பட்ட வினைமுறைகளும் சடங்குகளும் மேற்கண்ட நிகழ்வுகள் தூய்மைக்கேட்டுக்கு ஆதாரமூலமாக இருக்கின்றன என்று திட்டவட்டமாக, தீர்மானமாக அறுதியிட்டுக் கூறவில்லை என்பது உண்மையே, எனினும் தீட்டு என்பது பல சந்தர்ப்பங்களில் ஒதுக்கிவைப்பதையும், தனிமைப்படுத்துவதையும் குறிக்கிறது என்பதில் ஐயமில்லை. பிறப்பு, தீக்கை, திருமணம், இறப்பு போன்ற சந்தர்ப்பங்களிலும், புனிதர்கள், அந்நியர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் ஒதுக்கிவைத்தலும் தனிமைப்படுத்தலும் இருந்துவரவே செய்கின்றன என்பதில் ஐயமில்லை.

பிறப்பின்போது தாய் தனிமைப்படுத்தப்படுகிறாள். பூப்பெய்தும்போதும், தீக்கையின்போதும் சிறிதுகாலம் ஒதுக்கி வைக்கும், தனிமைப்படுத்தும் செயற்பாடு மேற்கொள்ளப்படுகிறது. திருமணத்தில், மனஉறுதி செய்யப்படும் காலத்திலிருந்து திருமணம் நடைபெற்று முடியும்வரை மணமகளும் மணமகனும் சந்தித்துக் கொள்வதில்லை. மாதவிடாயின்போது பெண்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகின்றனர். மரணத்தின்போதுதான் தனிமைப்படுத்தல் மிகவும் தெளிவாக வெளிப்படையாகத் தெரிகிறது. பிணம் ஒதுக்கி வைக்கப்படுவதோடு, இறந்தவரின் உறவினர் அனைவரும் ஏனைய சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்படுகின்றனர். இறந்தவரின் உறவினர்கள் முடி மற்றும் நகம்வளர்த்தல், பழைய துணிகளை உடுத்தல் போன்றவை அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன; நாவிதர்கள், சலவையாளர்கள் போன்ற சமுதாயத்தின் பிறபகுதியினர் அவர்களது உதவிக்கு வரமாட்டார்கள் என்பதையும் இவை புலப்படுத்துகின்றன. இறப்பு விஷயத்தில், ஒதுக்கிவைக்கப்படும் காலமும் வீச்சும் வேறுபடக்கூடும்; ஆனால் இதில் ஒதுக்கிவைக்கப்படுவது உண்மை என்பது ஐயத்திற்கு அப்பாற்பட்டது. ஆசார மற்றவர்களால் புனிதமானவர்களுக்குத் தீட்டு உண்டாகும் போதும், உறவினர்கள் தீட்டுக்கு ஆளாகும்போதும், உறவினர்களல்லாதவர்களின் தொடர்பால் தூய்மைக்கேடு ஏற்படும்போதும் ஒதுக்கி வைக்கும் அம்சம் தோன்றுகிறது. புனிதநிலை கெட்டவர்கள் புனிதர்களிடமிருந்து ஒதுக்கி வைக்கப்பட வேண்டும். இவ்வாறு பூர்வீக சமுதாயத்தில் தூய்மைக்கேட்டுக்குக் காரணமானவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு வந்தார்கள்.

புனிதத்தன்மை கெடுதல் என்னும் கருத்து பூர்வீக சமுதாயத்தில் நிலவி வந்ததோடு, அந்தத் தூய்மைக்கேட்டை அகற்றுவதற்கு அந்த சமுதாயம் சில சாதனங்களைப் பயன்படுத்திவந்தது; தீட்டைக் கழித்து தூய்மைப்படுத்தும் சில குறிப்பிட்ட சடங்குமுறைகளையும் கைக்கொண்டு வந்தது.

தூய்மைக்கேட்டை அகற்றும் சாதனமாக தண்ணீரும் இரத்தமும் பயன்படுத்தப்பட்டன. தீட்டுக்குரியவன் மீது தண்ணீர் தெளித்தாலோ, சில ரத்தத் துளிகளை சிந்தினாலோபோதும் தீட்டுப் போய்விடும். தூய்மைப்படுத்தும் சடங்குகளில் ஆடைகளை மாற்றிக் கொள்ளுதல், முடியையும் நகத்தையும் வெட்டிக்கொள்ளுதல், நெருப்பு, வியர்வைக் குளியல், புகையூட்டுதல், நறுமணப்புகையூட்டுதல், மரக்கிளைகளைக் கொண்டு விசிறுதல் போன்றவையும் அடங்கும்.

இவைதான் தூய்மைக்கேட்டை ஒழித்துக்கட்டும் முறைகள், ஆனால் பூர்வீக சமுதாயத்தில் தீட்டு கழிப்பதற்கு மற்றொரு வழிமுறையும் கைக்கொள்ளப்பட்டது. தீட்டை மற்றவருக்கு மாற்றுவது தான் அது. ஏற்கெனவே தீட்டுப்பட்டவருக்கு அது மாற்றப்பட்டு வந்தது.

நியூசிலாந்தில் ஒருவன் மற்றவனது தலையைத் தொட்டு விட்டால், அவன் தீட்டுப்பட்டவனாகிறான்; ஏனென்றால் உடலிலேயே சிரசுதான் மிகப் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இவ்வாறு தீட்டுப்படுபவன் தனது கைகளை ஒருவிதக் கிழங்கில் தேய்த்துக் கொண்டால் அவனது தீட்டு போய்விடும்; பெண் வழிவந்தக் குடும்பத்தலைவன் அந்நாட்களில் தின்றுவந்த கிழங்குவகை இது. டோங்காவில், விலக்கப்பட்ட பொருளை ஒருவன் தின்றுவிட்டால், குலத்தலைவன் தனது பாதத்தை அவனது வயிற்றின்மீது வைத்தால் தீயவிளைவுகளிலிருந்து அவன் விடுபட்டு விடுவான்.

தீட்டை இன்னொருவனுக்கு மாற்றும் பழக்கம் பலியாடு விஷயத்திலும் கைக்கொள்ளப்படுகிறது. பிஜியில், தீட்டுப்பட்ட ஒருவன் தனது கைகளை பன்றியின் மீது துடைத்தால், அப்பன்றி அதனுடைய உரிமையாளனுக்குப் புனிதமானதாகி விடுகிறது. உகண்டாவில், ஒரு மன்னனது இரங்கல் காலமுடிவில், ஒரு பலியாடும், அத்துடன் ஒரு பசு, வெள்ளாடு, நாய், கோழி, மன்னனது அரண்மனையிலிருந்து மண், நெருப்பு முதலியவை புனியாரோ எல்லைக்கு கொண்டுசெல்லப்படுகின்றன. அங்கு மேற்கண்ட விலங்குகள் யாவும் கொல்லப்படுகின்றன. மன்னரிடமிருந்தும் ராணியிடமிருந்தும் எல்லாத் தீட்டுகளையும் அகற்றுவதற்கே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

பூர்வீக சமுதாயத்தில் தீட்டு சம்பந்தமாக எத்தகைய கருத்துகள் நிலவி வந்தன என்பதை இவற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14)