காங்கிரஸ் சோஷலிஸ்ட்டின் நோக்கம் சோஷலிசத்தைக் கொண்டு வருவது என்று சொல்கிறார்கள். எப்படிக் கொண்டு வர முடியும்? காங்கிரசில் உள்ள வலதுசாரிகளை மனமாற்றம் செய்வோம் என்கிறார்கள். இதனால்தான் காங்கிரசை விட்டு வெளியேறத் தேவையில்லை என்ற காரணத்தையும் சொல்கிறார்கள். மனித இனத்தையே புரிந்து கொள்ள மறுக்கும் ஒரு சோகமான கருத்துநிலை இது. சோஷலிசம்தான் நோக்கம் என்றால், பொதுமக்களிடம் பிரச்சாரம் நடத்த வேண்டும். அவர்களைத் திரட்ட வேண்டும். அதை விட்டுவிட்டு வர்க்கங்களை மனமாற்றம் செய்வது சரியான வழிமுறை அல்ல. காங்கிரஸ் வலதுசாரிகள் ஒரு சொட்டு சோஷலிசத்தைக்கூட சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்பது நாளுக்கு நாள் தெளிவாகி வருகிறது.

கடந்த ஆண்டு பண்டித நேரு, சோஷலிசத்துக்காக ஒரு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஏழை மனிதனை ஏதோ வீட்டுக்கடங்காத சிறுவன் போல் ஓர் அறையில் அடைத்து, அவனுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து சொன்ன பேச்சைக் கேட்கிறேன் என்று ஒப்புக் கொள்ள வைத்து, இனி ஒழுங்காக இருப்பேன் என்று சொன்னதும் வெளியே விடுவதைப் போன்ற நிகழ்ச்சி அது. நேரு இப்போது முற்றிலும் மாறிவிட்டார். தலைகீழாக மாறிவிட்டார்; அல்லது அவரை மாற்றி விட்டார்கள். சிவப்பு, செங்கொடி என்றாலே இப்பொழுதெல்லாம் அவருக்குப் பிடிப்பதில்லை. ஒரு காலத்தில் அதைத்தான் அவர் வீசிக் கொண்டிருந்தார்.

காங்கிரஸ் வலதுசாரிகளுக்கு செங்கொடி என்றால் எப்போதுமே வெறுப்பு. பீகார் காங்கிரசின் வலதுசாரிகள் தங்கள் உண்மை உருவத்தை காட்டி விட்டார்கள். கிசான் தலைவர் சுவாமி சகஜானந்த் காங்கிரசை விட்டு விலகி விட்டார். அவருடைய நண்பர் திரு. ஜெயப்பிரகாஷ் நாராயணன் விலகுவதாக இருக்கிறார். கடந்த அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் (பம்பாய்) காங்கிரஸ் மேடையிலிருந்து கொண்டு சோஷலிசத்தைப் பிரச்சாரம் செய்வதன் மூலம், இடதுசாரிகள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறுகிறார்கள் என்று வலதுசாரிகள் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகிறார்கள். வெறும் ஏதோ குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் முதல் முறை குற்றம் புரிந்தவர்களை எச்சரிக்கையுடன் விட்டுவிடுவது போல், காங்கிரஸ் சோஷலிஸ்டுகளை வலதுசாரிகள் கண்டித்தார்கள். ஆக, காங்கிரஸ் சோஷலிஸ்டுகளின் அரசியல் ஒரு வீண் வேலையாக முடிந்திருக்கிறது.

ஏகாதிபத்தியத்திற்குப் பதில் நடவடிக்கை என்பது போல் இந்திய அரசியல் நடத்தப்படுகிறது. ஆதிக்க சக்திகள்தான் தமது உண்மையான எதிரிகள் என்பதைத் தொழிலாளர்கள் மறந்து விடுகிறார்கள். ராயிஸ்டுகளும் காங்கிரஸ் சோஷலிஸ்டுகளும் சிந்தனைக் குழப்பத்தின் காரணமாக, இப்படிப்பட்ட தவறான புரிதலில் சிக்கி அவதிப்படுகிறார்கள். ஏகாதிபத்தியத்தைப் பொது எதிரியாக நடத்த வேண்டுமெனில், எல்லா வகுப்புகளும் தங்கள் தங்கள் நலன்கøளை மறந்து ஒரே குடையின் கீழ் திரள வேண்டும். ஒரு பொது எதிர்ப்பு முன்னணியைக் கொண்டுதான் ஏகாதிபத்தியத்தோடு போரிட முடியும். அதற்காக எல்லா அமைப்புகளையும் கலைத்துவிட வேண்டும் என்று சொல்லவில்லை, இணைத்துவிட வேண்டும் என்றும் சொல்லவில்லை. ஒரு பொது முன்னணி இருந்தால் போதும். காங்கிரஸ் வலதுசாரிகள் ஏகாதிபத்தியத்தை ஒரு பூச்சாண்டி போல் பயன்படுத்துகிறார்கள். அதன் மூலம் தனிப்பட்ட சுதந்திரமான தொழிலாளர் அமைப்பு உருவாவதைத் தடுக்கிறார்கள். அவர்கள் வலையில் நீங்கள் விழுந்துவிடக் கூடாது. வர்க்க உணர்வோடுதான் அரசியல் நடத்த வேண்டும். வர்க்க உணர்வு இல்லாத அரசியல் ஒரு போலி அரசியல்.

எனவே, நீங்கள் வர்க்க நலன்களையும் வர்க்க உணர்வையும் அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் கட்சியில் சேர வேண்டும். சுதந்திரத் தொழிலாளர் கட்சியில் நீங்கள் சேரலாம். அதனால் உங்கள் நலன்களுக்கு இடையூறு வராது. அதற்குதான் தெளிவான திட்டங்கள் இருக்கின்றன. அதுதான் தொழிலாளர் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. அரசியல் அமைப்புக்கு உட்பட்ட எல்லா வழிமுறைகளையும் தனது திட்டத்தைச் செயலாற்றுவதற்காக அது கடைப்பிடிக்கிறது. எப்போதும் அரசியல் அமைப்பை மீறிய நெறிமுறைகளில் அது நடை போடாது. வர்க்கப் போராட்டம் என்பதன் அவசியத்தை அது தவிர்த்து விடுகிறது. அதே நேரம் வர்க்க அமைப்பு என்னும் கோட்பாட்டின் மீது அது நிலையாக நிற்கிறது. சுதந்திரத் தொழிலாளர் கட்சி, அண்மையில் தோன்றிய பம்பாய் மாகாணத்தில் மட்டுமே இயங்குகிறது. அது மேலும் வளர வேண்டும்.

ஒவ்வொரு கட்சியும் தோன்றும்போது சிறிய கட்சியாகத்தான் தோன்றுகிறது. ஆகவே கட்சியின் பழமை என்பது அத்தனை முக்கியமான விஷயமல்ல. அதன் கொள்கைகள் என்ன? ஆற்றல்கள் என்ன? அது எதை வலியுறுத்துகிறது என்னும் கேள்விதான் முக்கியமானவை.

(பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்: 188)