Ambedkar

ஒழுக்க நடத்தை என்ற அருள்வளம், கொல்லாமை, திருடாமை, கூடா ஒழுக்கம் தவிர்த்தல், பொய் சொல்லாமை, கள்ளுண்ணாமை ஆகிய நடத்தையாகும். தாராளத்தன்மை என்ற அருள்வளம், இல்வாழ்வான் தன் மனதில் போராசைக்கு இடம் கொடுக்காமல், தாராளமாக, சுதந்திரமாக வாழ்வது, கொடுப்பதில் மகிழ்ச்சி காண்பது, திருப்பிக் கொடுப்பதில் நாணயமாக இருப்பது, பிறருக்கு வழங்குவதில் மனம் ஈடுபட்டவனாகவும் இருப்பதாகும்.

விவேகம் என்ற அருள்வளம் என்ன? ஒரு இல்வாழ்வான் தன் மனதில் போராசை, கெட்ட எண்ணம் கொண்டவனாகவும், சோம்பலும் துயிலும் மிகுந்தவனாகவும், தவறான செயல்களைச் செய்து கொண்டு, செய்ய வேண்டியதைச் செய்யத் தவறுபவனாகவும் இருந்தால், அவனுக்கு மகிழ்ச்சியும் பெருமையும் இல்லாமல் போகின்றன. போராசை, கெட்ட எண்ணம், சோம்பல், துக்கவசப்படுதல், மனதைச் சிதறவிடுதல், படபடப்பு, சந்தேகம் ஆகியவை மனதின் மாசுகளாகும். இத்தகைய மாசுகளிலிருந்து விடுபடும் இல்வாழ்வான், மகத்தான விவேகத்தை, உன்னதமான விவேகத்தை, தெளிவான கண்ணோட்டத்தை, நிறைவான மெய்யறிவைப் பெறுகிறான்.

இவ்வாறாக, சட்டரீதியிலும், நேர்மையான முறையிலும் மிகுந்த உழைப்பினாலும், தோளின் வலிமையாலும், நெற்றி வியர்வையாலும் செல்வம் சேர்ப்பது, பெரிய அருள்வளமாகும். இத்தகைய இல்வாழ்வான் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்தவனாகவும், தனது பெற்றோர், மனைவி, மக்கள், பணியாளர்கள், உழைப்பாளர்கள், நண்பர்கள், தோழர்கள் ஆகிய அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்பவனாகவும் இருக்கிறான். ரஷ்யர்கள், தங்களுடைய பொதுவுடைமைக்கு ஆதரவாக இருக்கும் வன்முறை விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு, அதற்கு இறுதி ஆதாரமாக புத்த மதத்தைப் பயன்படுத்துவதைப் பற்றி சிந்திக்கக்கூடத் தயாராக இல்லை. ரஷ்யர்கள் தங்களுடைய பொதுவுடைமை பற்றி பெருமைப்படுகிறார்கள். ஆனால் புத்தர், சர்வாதிகாரம் இல்லாமலேயே பிக்கு சங்கத்தில் பொதுவுடைமையை நிறுவினார் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். அந்தப் பொதுவுடைமை, தொடக்க நிலையில் இருந்திருக்கலாம். ஆனால், அது சர்வாதிகாரம் இல்லாத பொதுவுடைமை என்பது பெரிய அதிசயம். லெனின் இதைச் செய்யத் தவறிவிட்டார்.

புத்தரின் செயல் முறை வித்தியாசமானது. மனிதனின் மனதை மாற்றுவது, அவனுடைய இயல்பை மாற்றுவது, அவரது செயல் முறையாகும். இவ்வாறு மாற்றுவதன் மூலம் மனிதன் எதைச் செய்தாலும் தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரில், எந்த விதமான பலத்தையும் பயன்படுத்தாமல், கட்டாயம் இல்லாமல் செய்கிறான். மனிதனின் இயல்பை மாற்றுவதற்கு, புத்தர் பின்பற்றிய வழி அவரது தம்மம். இடைவிடாது தம்மத்தை அறிவுறுத்துவது ஆகும். மக்கள், தாங்கள் செய்ய விரும்பாத எதையும், அது அவர்களுக்கு நல்லது என்றாலும்கூட, செய்யுமாறு கட்டாயப்படுத்தாமலிருப்பதே புத்த செயல் முறை. அவர்கள் செய்ய வேண்டியதைத் தாங்களாகவே உணர்ந்து செய்யும் வகையில் அவர்களின் இயல்பை மாற்றுவதே அவரது செயல்முறை.

ரஷ்யாவில் பொதுவுடைமை சர்வாதிகாரம், மிகச் சிறப்பான சாதனைகள் புரிந்திருப்பதாகப் பெருமையாகக் கூறப்படுகிறது. இதை மறுக்க முடியாது. அதனால்தான் ரஷ்ய சர்வாதிகாரம், எல்லா பிற்படுத்தப்பட்ட நாடுகளுக்கும் நல்லது என்று கூறுகிறேன். இது, சர்வாதிகாரம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று கூறுவதாகாது. மனித இனம் விரும்புவது, பொருளாதார நன்மைகளை மட்டும் அல்ல; மனித உறவுகளையும் அது விட்டு விடாமல் வைத்துக் கொள்ள விரும்புகிறது. நிரந்தர சர்வாதிகாரம், மனித உறவுகளில் அக்கறை காட்டவில்லை. இனி அக்கறை காட்டுவதாகவும் தெரியவில்லை.

அறிஞர் கார்லைல் கூறியது தவறுதான். ஏனென்றால், மனிதனுக்குப் பொருளியல் வசதிகள் வேண்டும். ஆனால், பொதுவுடைமைத் தத்துவமும் அதே போலத் தவறானதே. ஏனென்றால், அந்தத் தத்துவத்தின் நோக்கம், மனிதர்களும் பன்றிகளைப் போன்றவர்கள்தான் என்பது போல, அவர்களைக் கொழுக்க வைப்பதாகவே இருக்கிறது. மனிதன் பொருளியல் வளர்ச்சியும் அதே சமயம் சகோதரத்துவ உணர்வையும் பெற வேண்டும். சமூகம் ஒரு புதிய அடிப்படையை அமைக்க முயன்று வந்தது. அது, பிரெஞ்சுப் புரட்சியில் மூன்று சொற்களில் சுருக்கிக் கூறப்பட்டது; சகோதரத்துவம், சுதந்திரம், சமத்துவம். இந்த முழக்கத்தினால்தான் பிரெஞ்சுப் புரட்சிக்கு வரவேற்பு கிடைத்தது. ஆனால், அது சமத்துவத்தை உருவாக்கத் தவறிவிட்டது.

நாம் ரஷ்யப் புரட்சியை வரவேற்கிறோம்; ஏனென்றால், சமத்துவத்தை ஏற்படுத்துவது அதன் நோக்கமாக உள்ளது. ஆனால், சமத்துவத்தை ஏற்படுத்தும்போது சமூகம், சகோதரத்துவத்தையும் சுதந்திரத்தையும் தியாகம் செய்துவிட முடியாது என்பதை எவ்வளவு வலியுறுத்தினாலும் தகும். புத்தரின் வழியைப் பின்பற்றினால்தான் இந்த மூன்றும் சேர்ந்து இருக்க முடியும் என்று தோன்றுகிறது. பொதுவுடைமை இவற்றுள் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் மட்டும்தான் கொடுக்க முடியும்; சகோதரத்துவத்தை கொடுக்க முடியாது.

‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 3 பக்கம்: 454