Ambedkar

புத்தரையும், காரல் மார்க்சையும் ஒப்பிட்டுப் பார்ப்பது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால், இது குறித்து வியப்படைய ஏதுமில்லை. புத்தருக்கும் மார்க்சுக்கும் 2381 ஆண்டுகள் கால இடைவெளி உள்ளது. புத்தர் கி.மு. 563 இல் பிறந்தவர். காரல் மார்க்ஸ் கி.பி. 1818 இல் பிறந்தவர். மார்க்ஸ் புதிய தத்துவமான அரசியல், அரசியல் சார்ந்த பொருளாதார அணுகுமுறையை அமைத்துத் தந்தவர். மாறாக, புத்தர் ஒரு மதத்தைத் தோற்றுவித்ததைவிட அதிகம் செய்ததாகச் சொல்லப்பட்டாலும் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் துளியும் தொடர்பில்லாதவராக இருந்தார் என்று நம்பப்படுகிறது.

இந்தக் கட்டுரையின் தலைப்பு, "புத்தரா காரல் மார்க்சா'. இது, இவ்விருவரிடையே உள்ள ஒற்றுமையையும் முரண்பாடுகளையும் வெளிக்கொணர்கிறது. இவ்விருவரும் பல நூற்றாண்டு கால இடைவெளியால் பிரிக்கப்பட்டவர்கள்; மாறுபட்ட துறையைச் சார்ந்தவர்கள்; வெவ்வேறு சிந்தனையைக் கொண்டவர்கள். எனவே, இவ்விருவரையும் ஒப்பிடுவது விந்தையாகக் கூட தோன்றலாம். புத்தரையும் மார்க்சையும் ஒப்பிடுவது கண்டு மார்க்சியவாதிகள், எள்ளி நகையாடலாம். மார்க்ஸ் நவீன சிந்தனையாளர் எனவும், புத்தர் தொன்மையானவர் என்றும் கூட ஒதுக்கித் தள்ளலாம். அந்த வகையில், புத்தரை தங்களது தத்துவத்தைத் தந்த தலைவரோடு ஒப்பிடுவது, பிற்போக்கானது என்றும் புறந்தள்ளலாம்.

இதைத் தவிர, வேறு எத்தகைய ஒப்பீட்டை இவ்விருவரிடையே நம்மால் கொண்டுவர முடியும்? மார்க்சியவாதிகள் புத்தரிடம் என்ன கற்றுக்கொள்ள முடியும்? மேலும், புத்தருக்கும் காரல் மார்க்சுக்கும் இடையேயான ஒப்பீடு ஆர்வத்தை ஏற்படுத்துவதாகவும், பல புதிய பரிமாணங்களை விளக்குவதாகவும் அமையும். இரண்டு தத்துவங்களையும் படித்த மாணவன் நான். இரண்டு தத்துவங்களிலும் ஆர்வம் உள்ளவன் நான். இந்த ஆர்வம் புரிதலும், இவ்விரு தத்துவங்களையும் ஒப்பிடுமாறு என்னை வலிந்து உந்தியது.

மார்க்சியவாதிகள், திறந்த மனதோடு புத்தரையும் அவரது தத்துவங்களையும் ஆய்வுக்குட்படுத்தி புத்தர் எதற்காகப் போராடினார், எதைத் தன்னுடைய இலக்காக வகுத்துக் கொண்டார் என்பதைப் புரிந்து கொண்டால், தங்களது அணுகு முறையைக் கண்டிப்பாக மாற்றிக் கொள்வர். அதே நேரத்தில், புத்தரின் முழு தத்துவத்தையும் மார்க்சியவாதிகளால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்பது சந்தேகமே. ஆனால், புத்தரின் கொள்கை, தங்களது மார்க்சியத்தின் கொள்கையினின்று பிற்போக்கானதில்லை என்பதை மட்டுமாவது அவர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்பது உறுதி.

புத்தர் பொதுவாகவே "அகிம்சை' என்னும் தத்துவத்துடன் தொடர்புடையவராகப் போற்றப்படுகிறார். புத்தருக்கு அகிம்சை தத்துவமே முதன்மையானதும், இறுதியானதுமாக இருந்ததாக நாம் இன்று வரை நம்பிக் கொண்டிருக்கிறோம். இதற்கப்பால், புத்தர் கற்பித்தவை மிகப் பரந்த அளவிலானது. இது பலருக்குத் தெரியாது. எனவே, புத்தரின் கொள்கைகளை இங்கு விரிவாகப் பட்டியலிட வேண்டிய தேவை இருக்கிறது. நான் "திரிபீடக'த்திலிருந்து (பவுத்த மறை நூல்) கற்றுணர்ந்ததை, இங்கு வகைப்படுத்தியுள்ளேன்.

1. சமயம், ஒரு சுதந்திர சமூகத்திற்கு இன்றியமையாதது.

2. ஏதோ ஒரு மதம் என்ற ரீதியில் மனிதர்கள் ஒரு மதத்தையோ மார்க்கத்தையோ கைக்கொள்ளலாகாது.

3. மதம் என்பது வாழ்வியல் உண்மைகளைத் தேட வேண்டும் மாறாக, கற்பனையான கடவுள், ஆத்மா, சொர்க்கம், நரகம் போன்றவற்றைக் கொண்டிருக்கக் கூடாது.

4. மதத்தின் மய்யமாக, ஒரு போதும் கடவுள் இருக்கக் கூடாது.

5. ஆத்மா, சொர்க்கத்திற்குப் போவது ஆகியவை மதத்தின் இறுதி எல்லையாக இருக்கக் கூடாது

6. யாகங்களில் பலியிடுவதை அங்கீகரிப்பது மதமாகாது.

7. மதம், மக்களின் மனதில்தான் உயிர் வாழ்கிறது; சாத்திரங்களில் உயிர் வாழ்வதில்லை.

8. மனிதனும் ஒழுக்கமும்தான் மதத்தின் மய்யக் கருப்பொருளாக இருத்தல் வேண்டும். இல்லை எனில், மதம் என்பது கொடூரமான கற்பனையாகப் போய்விடும்.

9. மதத்தின் உச்சமாக ஒழுக்கம் அமைந்தால் மட்டும் போதாது, அவ்வொழுக்கம் தவிர்க்க வியலாத விதியாகப் போற்றப்பட வேண்டும்.

10. மதத்தின் தேவை, உலகை மறுகட்டமைப்புச் செய்வதாகும். உலக வாழ்க்கை மகிழ்ச்சியுடன் கூடியதாக அமைய வேண்டும். மாறாக, இல்லாத மறு உலகங்களை நோக்கித் திரிவதாக இருக்கக் கூடாது

"பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 3 பக்கம் : 441