இதுவரை கூறியவற்றிலிருந்து தெளிவாகியிருக்கும் இரண்டு விஷயங்களை மனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, தீண்டத்தக்கவர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையில் உள்ள ஆழ்ந்த பிளவு; இன்னொன்று இவ்விரு பிரிவினருக்கும் இடையில் உள்ள ஆழ்ந்த பகைமை.

ambedkar 250 copyஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு பகுதிகள் உள்ளன தீண்டத்தக்கவர்கள் வசிக்கும் பகுதி, தீண்டப்படாதவர்கள் வசிக்கும் பகுதி. இந்தப் பகுதிகள் அமைந்துள்ள நிலப்பகுதிகள் தனித்தனியாக உள்ளன. இரண்டுக்கும் இடையே கணிசமான தூரம் இருக்கும். எப்படியானாலும் இரண்டு பகுதிகளும் ஒன்றையொன்று அடுத்து அல்லது அருகருகே இருப்பதில்லை. தீண்டப்படாதவர்கள் வசிக்கும் பகுதிக்குத் தனியாக ஒரு பெயர் – மாஹர்வாடா, மாங்க்வாடா, சம்ரோத்தி, காட்கானா என்பது போல இருக்கிறது. சட்டப்படி வருவாய்த்துறை நிர்வாகம், அஞ்சல் தொடர்பு ஆகியவற்றுக்குத் தீண்டப்படாதவர்கள் வசிக்கும் பகுதி கிராமத்தில் அடங்கியதாகவே உள்ளது. ஆனால், உண்மை நடைமுறையில், அது கிராமத்திலிருந்து தனிப்பட்டதாகும். ஒரு கிராமத்தில் வசிக்கும் இந்து, தன் கிராமம் என்று பேசும்போது அதனுடைய சாதி இந்துக்களையும் அவர்கள் வசிக்கும் பகுதியையும் மட்டுமே அவர் குறிப்பிடுகிறார். இதேபோல தீண்டப்படாதவர் ஒருவர், கிராமம் என்று கூறும்போது தீண்டப்படாதவர்களையும் அவர்கள் வசிக்கும் பகுதியையும் விலக்கியே குறிப்பிடுகிறார். இவ்வாறாக ஒவ்வொரு கிராமத்திலும் தீண்டத்தக்கவர்களும் தீண்டப்படாதவர்களும் இரண்டு தனித்தனிக் குழுக்களாகவே உள்ளனர். அவர்களிடையே பொதுவாக ஒன்றும் இல்லை1. இவர்கள் ஒரே மக்கள் தொகுதியாக இல்லை. இது தான் முதலாவதாகக் கருத்தில் கொள்ள வேண்டியது.

 கிராமம் இரண்டு குழுக்களாகப் பிரிந்து அமைந்துள்ளதில் கவனிக்க வேண்டிய இரண்டாவது விஷயம், இந்தக் குழுக்கள் உண்மையிலேயே குழும அமைப்புகளாகவும் இவற்றில் உள்ளவர்கள் இவற்றை விட்டு வெளியே செல்ல முடியாதவர்களாகவும் இருப்பதாகும். ஒரு அமெரிக்கர் அல்லது ஐரோப்பியர் பல்வேறு வகையான குழுக்களைச் சேர்ந்தவராக உள்ளார் என்றும், ஆனால் இவற்றில் பெரும்பாலானவற்றில் அவர் தாமே சென்று “சேருகிறார்” என்றும் பொருத்தமாகக் கூறப்பட்டுள்ளது. அவர் ஒரு குடும்பத்தில் பிறக்கிறார் என்பது உண்மை என்றாலும், அவர் தாமே விரும்பினலான்றி ஆயுட்காலம் முழுவதும் அந்தக் குடும்பத்திலேயே இருந்துவிடுவதில்லை. அவர் தமது விருப்பப்படி தம்முடைய தொழில், வசிக்குமிடம், மனைவி, அரசியல் கட்சி ஆகியவற்றைத் தெரிந்தெடுத்துக் கொள்ளலாம்.

பொதுவாகச் சொன்னால், அவர் தம்முடைய செயல்களைத் தவிர வேறு யாருடைய செயல்களுக்கும் பொறுப்பாளியல்ல. அவர் ஒரு “தனி நபர்” என்று கூறுவதில் அதிகப் பொருள் உள்ளது; ஏனென்றால் அவருடைய எல்லா உறவுகளையும் அவர் தாமே, தமக்காகவே முடிவு செய்கிறார் தீண்டப்படாதவரோ, தீண்டத்தக்கவரோ எந்த வகையிலும் தனி நபர்கள் அல்ல. ஏனென்றால் அவருடைய எல்லா உறவுகளும் அல்லது அநேகமாக எல்லா உறவுகளும், அவர் ஒரு குறிப்பிட்ட குழுவில் பிறந்தவுடனேயே தீர்மானிக்கப்பட்டு விடுகின்றன. அவருடைய தொழில், வசிக்குமிடம், கடவுள்கள், அரசியல் ஆகிய எல்லாமே அவருக்காக அவரது குழுவால் தீர்மானிக்கப்படுகின்றன. தீண்டத்தக்கவர்களும் தீண்டப்படாதவர்களும் சந்திக்கும்போது, அவர்கள் மனிதருடன் மனிதர் அல்லது தனி நபருடன் தனி நபர் என்ற முறையில் சந்திப்பதில்லை. குழுக்களின் உறுப்பிர்களாக அல்லது இரண்டு தனி நாடுகளின் குடிமக்கள் போலத்தான் சந்திக்கிறார்கள்.

ஒரு கிராமத்தின் தீண்டத்தக்கவர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையிலான உறவில் இந்த உண்மை முக்கியமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆரம்பகாலச் சமுதாயத்தில் பல்வேறு குலக் குழுக்களுக்கிடையே இருந்த உறவைப் போல இந்த உறவு காணப்படுகிறது. ஆரம்பகாலச் சமுதாயத்தில் குலக்குழுவின் உறுப்பினருக்கு அதில் ஓர் உரிமை உண்டு, ஆனால் வெளியாருக்கு அதில் எந்தவிதமான இடமும் கிடையாது. அவர் அன்பாக, விருந்தினராக நடத்தப்படலாம்; ஆனால் தம்முடைய சொந்த குலக்குழுவைத் தவிர வேறு எதிலும் அவர் “நீதி”யை உரிமையாகக் கோரமுடியாது.

ஒரு குலக்குழுவுக்கும் மற்றொரு குலக்குழுவுக்கும் இடையிலான உறவு நிலை, போர் அல்லது பேச்சுவார்த்தை மூலமே முடிவாகிறது; சட்ட அடிப்படையிலான உறவு நிலை என்பது கிடையாது. குலக்குழு இல்லாதவன் நடைமுறையிலும் பெயரிலும் சட்டத்துக்குப் புறம்பானவன். எனவே அன்னியர்களுக்கெதிரான சட்டவிரோதச் செயல்கள் சட்டபூர்வமாகின்றன. தீண்டப்படாதவர், தீண்டத்தக்கவர்கள் குழுவைச் சேர்ந்தவர் அல்ல என்பதால் அவர் ஓர் அன்னியர். அவர் ஒட்டுறவு உள்ளவர் அல்ல. அவர் சட்டத்துக்குப் புறம்பானவர். அவர் நீதி கேட்க முடியாது. தீண்டத்தக்கவர் மதிக்கக் கடமைப்பட்ட உரிமைகள் எதையும் அவர் கோரமுடியாது.

மூன்றாவதாகக் கவனிக்க வேண்டிய விஷயம், தீண்டத்தக்கவர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையிலான உறவு இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்து வைக்கப்பட்டுள்ளது. அது அந்தஸ்தைக் குறிக்கும் விஷயமாக உள்ளது. இந்த அந்தஸ்தின்படி, தீண்டப்படாதவர்களுக்குத் தீண்டத்தக்கவர்களை விடத் தாழ்வான நிலை சந்தேகத்துக்கிடமில்லாமல் தரப்பட்டுள்ளது. இந்தத் தாழ்வான அந்தஸ்தை வலியுறுத்துவதாகவே சமூக நடத்தை நெறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நெறிமுறைப்படிதான் தீண்டப்படாதவர்கள் நடந்து கொள்ளவேண்டும். இது எப்படிப்பட்ட நெறிமுறை என்பது ஏற்கெனவே விவரிக்கப்பட்டுள்ளது. தீண்டப்படாதவர் இந்த நெறிமுறைப்படி நடக்க விரும்பவில்லை. சீசருக்கு உரியதை சீசருக்குக் கொடுக்க அவர் தயாராயில்லை.

தீண்டத்தக்கவருடன் தம்முடைய உறவுகள் ஒப்பந்த அடிப்படையில் இருக்கவேண்டும் என்ற தீண்டப்படாதவர் விரும்புகிறார். ஆனால் தீண்டப்படாதவர்கள் இந்த அந்தஸ்து விதிகளின்படியே நடக்கவேண்டும் என்றும், அதைவிட மேல்நிலைக்குச் செல்லக்கூடாது என்றும் தீண்டத்தக்கவர் விரும்புகிறார். இவ்வாறாக, என்றென்றைக்குமாகத் தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்று தீண்டத்தக்கவர் கருதுகின்ற ஒரு விஷயத்தை, மீண்டும் தீர்மானிப்பதில், கிராமத்தின் இரண்டு பகுதிகளான தீண்டத்தக்கவர்களும் தீண்டப்படாதவர்களும் இப்போது போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தின் மையமான கேள்வி இதுதான் – இந்த உறவு எந்த அடிப்படையில் இருக்கவேண்டும்? ஒப்பந்த அடிப்படையிலா அல்லது அந்தஸ்து அடிப்படையிலா?

இதிலிருந்து சில சுவாரஸ்யமான கேள்விகள் எழுகின்றன. தீண்டப்படாதவர்களுக்கு இவ்வாறு மிகத் தாழ்ந்த அந்தஸ்து எப்படி வந்தது? தீண்டப்படாதவர்களிடம் இத்தகைய பகைமையும் இழிப்பும் இந்துவிடம் எவ்வாறு ஏற்பட்டன? தீண்டப்படாதவர்களை ஒடுக்குவதற்குச் சட்டவிரோதச் செயல்களே சட்டபூர்வமானது என்பது போல சட்டவிரோதச் செயல்களில் அவர் ஏன் ஈடுபடுகிறார்?

இந்தக் கேள்விக்குச் சரியான விடை அளிப்பதற்கு இந்துக்களின் சட்டத்தைப் பார்க்கவேண்டும். இந்துச் சட்டத்தின் விதிகள் பற்றிய அறிவு இல்லாமல் இந்தக் கேள்விக்குத் திருப்தியான விடை கூறமுடியாது. நமது நோக்கத்திற்கு இந்துச் சட்டத்தின் எல்லாப் பிரிவுகளையும் பார்கக வேண்டியதில்லை. இந்துச் சட்டத்தில் நபர்களின் சட்டம் என்று கூறக்கூடியதான பிரிவை மட்டும் தெரிந்துகொண்டால் போதும். இந்தப் பிரிவை எளிமையான சொற்களில் கூறினால், அந்தஸ்து வேறுபாடு காரணமாக மனிதர்களிடையே உரிமை, கடமை, இயங்குதல் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளைக் கூறும் சட்டம் என்று கூறலாம்.

எனவே, நபர்கள் பற்றிய இந்துச் சட்டத்தின் விதிகளின் பட்டியல் ஒன்று தரப்படும். இந்த விதிகள், மனு, யாக்ஞவல்கியர், நாரதர், விஷ்ணு, காத்யாயனர் முதலானவர்களின் சட்டப் புத்தகங்களிலிருந்து தொகுத்துத் தரப்படுகின்றன. சட்டம் விதிப்பதற்கு அதிகாரம் உள்ளவர்கள் என்று இந்துக்களால் ஏற்கப்படும் சட்ட நூல் ஆசிரியர்களில் முக்கியமானவர்களில் இவர்கள் சிலராவார்கள். இந்த விதிகளை அப்படியே எடுத்துக் கொடுத்தால், நபர்கள் பற்றிய இந்துச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைப் படிப்பவர் தெரிந்து கொள்ள உதவியாயிராது. அதற்கு இவற்றை ஏதேனும் வகையில் வரிசைப்படுத்தித் தரவேண்டும். எனவே, இந்த விதிகளைப் பல பிரிவுகளின் கீழ், ஒவ்வொரு பிரிவும் ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றியதாக இருக்குமாறு தொகுத்துத் தருகிறேன்.

 வெவ்வேறு வகுப்புகள்: அவற்றின் தோற்றமும் கடமைகளும்

பதினைந்து விதமான அடிமைகள் (ஐந்தாம் வகை)

 சட்டத்தின் முன் சமத்துவம்

 ஒவ்வொரு வகுப்பின் அந்தஸ்து, கௌரவம், இடம்

 வகுப்புகளின் இடையிலான உறவு

I

 II

கடமைகள் – சிறப்பு உரிமைகள் – விலக்கு உரிமைகள் இயலாமைகள்

I

II

IV

வாழ்க்கை முறை

 (டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - தொகுதி 9, இயல் 7)