பிரதமருக்கு நான் ஒரு யோசனை கூற விரும்புகிறேன். அய்க்கிய நாடுகள் அவை மற்றும் பிற உறுப்பினர்கள் போர்த்துக்கீசியர்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்களேயானால், போர்த்துக்கீசியர்களுடன் நாம் ராணுவ மோதலில் ஈடுபடக் கூடாது என்று நான் நினைக்கிறேன். ஆனால், அதற்கும் குறைவாக, இரண்டு ஆலோசனைகளை நான் கூற விரும்புகிறேன்.

அமெரிக்காவில் லூசியானா மாநிலம் தொடர்பான பிரச்சினை, ஒருவேளை உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். அது, அமெரிக்கப் பிராந்தியங்களுக்கு நடுவிலான ஒரு பிரெஞ்சுப் பிராந்தியமாகும். பிரெஞ்சுக்காரர்களை வெளியேற்றிவிட்டு, லூசியானா, அமெரிக்காவுக்கு மாற்றிக் கொடுக்கப்படுவதில் அமெரிக்கர்கள் மிகவும் ஆவலாக இருந்தனர். அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை, ஒரு விலை கொடுத்து அதைப் பெறுவதாக இருந்தது. அதற்கு கொடுக்கப்பட்ட விலையானது – என்னிடம் அது தொடர்பான புள்ளி விவரங்கள் இருக்கின்றன.

ஒரு பெரிய பிரதேசத்திற்கு உண்மையில் ஒரு மிகச் சிறிய விலைதான். அதனுடன் ஒப்பிடும்போது கோவா, உண்மையில் ஒன்றுமில்லைதான். கோவா, லூசியானாவின் நகரங்களில் ஒன்றுதான். பிரதமர் அதைக் கடைப்பிடிப்பதற்கு விரும்பினால், அது தொடர்பான விவாதத்தைத் தொடங்குங்கள். மாற்று வழிகளை நான் கூறுகிறேன்.

பிரதமர் முன்பு நான் வைக்கும் ஆலோசனை, கோவாவை நாம் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளலாம். நமது நாட்டிலேயே பேரார் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதைப் பற்றி நம் அனைவருக்கும் நினைவிருக்கும். பேரார் நிஜாமின் சொத்தாக இருந்தது. அதன் மீது அவருக்கு இறையாண்மை இருந்தது. ஆனால், 1853 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன், பிரிட்டிஷ் அரசு பேராரை ஒரு நிரந்தர குத்தகைக்கு எடுத்துக் கொண்டது. அவர்கள் நிஜாமுக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. அது மிகவும் சிறிய தொகையாக இருந்திருக்கும்.

அவரைப் புரிந்து கொள்ள முடியாததற்காக வருந்துகிறேன். அவரைப் புரிந்து கொள்வது எனக்கு மிகவும் சிரமமான விஷயமாகும்.

நான் கூறுவது இதுதான். இந்த விஷயத்தில் பெயரளவில் யார் இறையாண்மை கொண்டவர்கள் என்பதில் நாம் அவ்வளவு ஆர்வம் கொள்ளவில்லை. நாம் அக்கறை கொண்டிருப்பதெல்லாம் கோவாவை நம் வசப்படுத்திக் கொள்வதும், அங்கு நம்முடைய சொந்த நிர்வாகத்தை ஏற்படுத்துவதிலும்தான். இங்கு உள்ள நிலைமை என்னவெனில், நமது சொந்த நாட்டில் மற்றொரு மன்னருக்குச் சொந்தமான ஒரு பிரதேசம் குத்தகைக்குப் பெறப்பட்டது. நிரந்தரமாக இந்தியாவின் ஒரு பகுதியாக்கப்பட்டது. அதில் ஒரு மன்னர் இருந்தார் என்பதை சுட்டிக் காட்டுவதற்காக அது அழகுபடுத்தப்பட்டது. அவரது மகன் பேராரின் இளவரசராக்கப்பட்டார் என்று நினைக்கிறேன். இது மற்றொரு வழிமுறை. இதைப் பிரதமர் முயற்சி செய்து பார்க்கலாம். இந்த இரண்டு வழிகளில் ஏதாவதொன்றைக் கடைப்பிடிக்கும்படி போர்த்துக்கீசியர்களை வற்புறுத்தி ஏற்றுக் கொள்ளச் செய்வதில், அவருக்கு வெற்றி கிடைக்காமல் போவதற்கு எந்தக் காரணமும் இல்லை.

மேலும் ஒரே ஒரு கருத்தைக் கூறிவிட்டு நான் அமர்கிறேன். சாதாம் ஹவுசில் சர்வதேச விவகாரக் கழகத்தினால் வெளியிடப்பட்ட ஒரு தொகுதியை அண்மையில் நான் படித்துக் கொண்டிருந்தேன். இரண்டாம் உலகப் போருக்கு இட்டுச் சென்ற காரணங்கள் பற்றி அதில் ஆராயப்பட்டிருந்தது. அதனுடைய ஆசிரியர் சந்தேகத்திற்கிடமின்றி மிகவும் சிறந்த, மிகவும் ஆழ்ந்த கல்வி அறிவுள்ளவர். அந்தப் போர் ஏன் ஏற்பட்டது, அது ஏன் தவிர்க்கப்படவில்லை என்பதற்கு இரு காரணங்களைக் கூறியிருந்தார். ஒரு காரணம், அப்பொழுது தொழிலாளர் கட்சி கிளர்ச்சி செய்து வந்த படைக் குறைப்புக் கொள்கையை முன்னிட்டு, சேம்பர்லேனால் அய்ரோப்பாவில் அதிகார சமநிலை என்றழைக்கப்பட்டதை அவரால் நிலை நிறுத்த முடியவில்லை. ஹிட்லரை வளர அனுமதித்தார். மிகவும் அதிகமாக அவர் வளர்ந்துவிட்டதால், அவரைக் கட்டுப்படுத்துவது சிரமமாகிவிட்டது.

அவர் கூறிய இரண்டாவது விஷயம். ஹிட்லரின் வார்த்தையில் நம்பிக்கை வைத்தது, சேம்பர்லேன் செய்த மிகப் பெரிய தவறாகும். ஹிட்லரைக் காட்டிலும் பெரிய பொய்யர் ஒருவருமில்லை. சுடேட்டன் ஜெர்மானியர்கள் செக்கோஸ்லோவாக்கியாவிலிருந்து பிரிக்கப்பட்டு, ஜெர்மனியுடன் சேர்க்கப்பட வேண்டும் என்று மட்டுமே தான் கேட்பதாக ஹிட்லர் கூறினான்; தான் வேறொன்றும் கேட்கப் போவதில்லை என்றான் அவன். அவன் கேட்டதெல்லாம் கொடுக்கப்பட்டது. அந்த ஒப்பந்தம் கையெழுத்தானதற்குப் பின்னர், மறுநாளே அவன் தனது துருப்புக்களை செக்கோஸ்லோவாக்கியாவுக்குள் அனுப்பியது, இந்த அவையில் வீற்றிருக்கும் அனைவருக்கும் நினைவிருக்கும். இந்தத் தவறுகளை நமது பிரதமர் செய்ய மாட்டார் என்று நான் நம்புகிறேன். அய்யா! நான் முடித்து விட்டேன்.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 15, பக்கம்: 885)