சுமார் 60 ஆண்டுகளுக்கம் மேலாக நடைபெற்றுக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் போராட்டம் பேரிழப்புகளுக்கும், கடும் பின்னடைவுகளுக்கும் ஆளாகியுள்ளது. தமிழீழ மக்களைக் காக்கும் முன்னணிப் படையாக விளங்கிய புலிகள் அமைப்பை வீழ்த்திவிட்ட மிதப்பிலும் அகங்காரத்திலும் சிங்கள அரசு தற்போது அப்பாவி மக்களைப் பழிவாங்கி வருகிறது. மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்களை முள் கம்பி வேலிகளுக்குப் பின்னே அடைத்து வைத்து, அவர்களுக்கு சொல்லொணாக் கொடுமைகளை இழைத்து வருகிறது.

அவர்களில் இளைஞர்களைத் தனிமைப்படுத்தி கொன்றொழித்தும், பெண்களைத் தனிமைப்படுத்தி, வன்பாலுறவுக்கு உட்படுத்தியும், கருச்சிதைவை ஏற்படுத்தியும் தமிழீழச் சந்ததியையே அழித்தொழிக்கும் கொடுமையைச் செய்து வருகிறது. இந்த செய்திகள் எதுவும் வெளியுலகு அறியவிடா வண்ணம், பத்திரிகையாளர்கள், பிற ஊடகவியலாளர்களையும் அருகே அனுமதிக்காமல், அற்ப சொற்ப செய்தி வெளியிட்டவர்களையும் கைது செய்தும், சிறைப்படுத்தியும் அடக்கு முறையை ஏவி வருகிறது.

சுருக்கமாக உலகில் உரிமைகளுக்காகப் போராடிய, போராடி வருகிற எந்த ஒரு தேசிய இன மக்களும், எந்த ஒரு போராளி அமைப்பும், இந்த அளவு கொடுமைகளை அனுபவித்ததில்லை. ஒடுக்கும் ஆதிக்க சக்திகளும் இந்த அளவுக்கு, சிங்கள இனவெறி அரசின் அளவுக்கு இவ்வளவு குரூரமாக ஒடுக்கியதில்லை என்கிற அளவுக்கு கோரமான நிலைமை நீடித்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, 1983 தொடங்கி கடந்த 26 ஆண்டுகளாக தமிழீழ மக்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியின் அமைப்புகள் நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், மறியல்கள், சிறை வாசங்கள் எதுவும் ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் உதவவில்லை. அவர்களது துயர் துடைக்கும் நோக்கில் எந்த விளைவையும் ஏற்படுத்த முடியவில்லை.

இந்த எல்லா கொடுமைகளுக்கும் காரணம் என்ன? காரணம் யார்? என்று யோசித்துப் பார்த்தால், நமக்குக் கிடைக்கும் ஒரே விடை, இவையனைத்திற்கும் காரணம், இந்திய அரசு. அதன் நயவஞ்சகம், சூழ்ச்சி, அதன் தமிழின விரோதப் போக்கு என்பதுதான்.

உரிமைகளுக்காகப் போராடுகிற எந்த ஒரு தேசிய இன மக்களையும், அம்மக்களைத் தன் பிடியில் வைத்திருக்கிற ஆதிக்க தேசிய இனம் ஒடுக்கும் என்பதும், அவ்வுரிமைகளை அவ்வளவு இலகுவில் விட்டுக் கொடுக்காது என்பதும், உலக உரிமைப் போராட்ட வரலாறுகளில் காணத் தெரிகிற ஒன்று தான்.

ஆனால் இதில் எந்த வகையிலும், நேரடியாக சம்பந்தமில்லாத ஒரு அண்டை நாடு, ஒடுக்கும் ஆதிக்க சக்திகளுக்கு உறுதுணையாக நின்று, அதற்கு எல்லா உதவிகளையும் செய்து கொண்டே, மறுபடியும் இது அவர்களின் உள்நாட்டுப் பிரச்சினை, இதில் நாம் தலையிட முடியாது என்று சொல்லி இரட்டை வேடம் போட்டு சொந்த நாட்டு மக்களை ஏமாற்றியது உலக வரலாறு அறியாதது.

உலக நாடுகளின் உரிமைப் போராட்டங்களையெல்லாம் ஆதரித்த இந்தியா, அதாவது இந்த எல்லாப் பிரச்சினையிலும், ஒடுக்கும் ஆதிக்க சக்திகளை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்ற இந்தியா, இலங்கைப் பிரச்சினையில் மட்டும் ஒடுக்கும் சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாக நின்றது.

1971இல் பாகிஸ்தானுக்கு எதிராக பங்களாதேசை ஆதரித்த இந்தியா, அதே 1971இல் இலங்கை அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஜெ.வி.பி. -க்கு எதிராக செயல்பட்டது. சிங்கள அரசுக்கு ஆதரவாக நின்று ஜெ.வி.பி.-யை ஒடுக்கியது. அதேபோல, தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும், போராளிகளுக்கு எதிராக நின்று சிங்கள இன வெறி அரசுக்கு எல்லா உதவிகளையும் செய்தது.

அதாவது மக்கள், தில்லி அரசே, உலக நாடுகளின் உரிமைப் போராட்டங்களை ஆதரித்தது போல், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் ஆதரி, அங்கீகரி என்றால் அது உள்நாட்டுப் பிரச்சினை என்று சொல்லி, போராளிகளுக்கோ, மக்களுக்கோ எந்த வகையிலும் உதவாமல் அக்கோரிக்கையை உதாசினம் செய்த தில்லி அரசு, இலங்கை அரசுக்கு எல்லா உதவிகளையும் செய்தது.

இந்திய அரசின் இந்த உதவிகள் மட்டும் இல்லை என்றால், சிங்கள அரசு எந்தக் காலத்திலும் போராளிகளை வென்றிருக்க முடியாது. வேறு எத்தனை நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக நின்றிருந்தாலும் இந்தியா ஒரு நாடு மட்டும் இதில் தலையிடாமல் இருந்திருந்தால் போதும். அதாவது இது போராளிகளுக்கு ஆதரவாக இருந்திருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்களுக்கு எதிராக, சிங்கள அரசுக்கு உதவி செய்யாமல் ஒதுங்கியிருந்திருந்தாலே போதும், சிங்கள அரசால் புலிகளை ஒன்றும் அசைத்திருக்க முடியாது.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் தீவிரம் பெற்ற கடந்த ஐம்பதாண்டுகளில் இலங்கை அதிபர் எவரும் வன்னிப் பகுதியில் கிளிநொச்சியில் காலடியெடுத்து வைக்கத் துணிந்ததில்லை. யாரும் வந்து சென்றதும் இல்லை எனப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு நிலையை மாற்றி புலிகளின் கோட்டைகளை வீழ்த்தி, மகிந்த ராஜபக்ஷே கிளிநொச்சி வந்து பார்வையிட்டு செல்ல துணை புரிந்தது இந்திய அரசு.

இதில் இந்தியா ஊர் அறிய உலகறிய அறிவித்து செய்த உதவிகளை விடவும், அறிவிக்காமல் மறைமுகமாகவும் சூழ்ச்சிகளாகவும் செய்த உதவிகளே அதிகம்.

இந்த உதவிகளின் தாக்கத்தை, அது போராளிகளுக்கு எதிராக ஏற்படுத்திய விளைவுகளைப் புரிந்து கொள்ள தமிழீழத் தாயகத்தின் புவியியல் இருப்பை நாம் சற்று நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

தமிழீழத் தாயகத்தின் பரப்பு ஒரு மொத்தமான, நெருக்கமான, அடர்த்தியான பரப்பாயில்லாமல் வடக்கு கிழக்காக, வாலாகப் பரவியுள்ள ஒரு நிலப்பகுதி. இந் நிலப்பரப்பின் மேற்கேயும், தெற்கேயும் சிங்கள ஆதிக்க இனம், ஆதிக்க அரசு. கிழக்கேயும், வடக்கேயும் கடல்கள்.

அதாவது, உலகில் உரிமைகளுக்காகப் போராடிய பல்வேறு நாடுகளுக்கு இருந்ததுபோல் புலிகள் அமைப்புக்கு ஏதும் பின்புலம் கிடையாது. பின்வாங்கி, அடைக்கலம் புக, தங்க, ஓய்வெடுக்க, உணவு, மருத்துவ வசதிகள் பெற தங்களைப் புனரமைத்துக் கொள்ள, உதவி புரிய எந்த நாடும் கிடையாது.

இப்படிப்பட்ட சிக்கலில் இடுக்கில் நின்று போராடி வந்த புலிகளுக்கு மேற்கிலும் தெற்கிலுமுள்ள எதிரிகளோடு போராட பின்புலமாயிருந்தது வெறும் கடல்கள் மட்டுமே. இந்தக் கடல் வழியாகவே, அனைத்து உதவிகளையும் பெற்று போராடி வந்தது புலிகள் அமைப்பு. இந்தக் கடல் பகுதியைப் பாதுகாக்கவும், தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கவும் உருவாக்கப்பட்டதே கரும்புலிகள் அமைப்பு. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தக் கடல் பகுதி வழியை ஆக்கிரமித்து, அதைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர சிங்கள அரசுக்கு உதவியது இந்திய அரசு.

சிங்கள அரசுக்கு இந்திய அரசின் இப்படிப்பட்ட மறைமுக உதவிகளை அம்பலப்படுத்தி சமீபத்தில் நமக்குத் தெரிந்து இரண்டு புத்தகங்கள் வெளி வந்துள்ளன. 1. ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியங்கள் - புஷ்பராஜா எழுதியுள்ள அடையாளம் வெளியீடு.

2. ஹர் ஆனந்த் பதிப்பகம் வெளியிட்டுள்ள நிதின் ஏ. கோகலே என்பார் எழுதியுள்ள SriLanka - From War to Peace. இதில் இந்தியா 2006 முதல் 2009 வரை இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் எப்படி உள்நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டும், அவர்களுக்கு சால்ஜாப்பு சொல்லிக் கொண்டும், இலங்கை அரசுக்கு உதவியது என்பதற்கான விலாவாரியான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தியா போராளிகளை அழிக்க பல்வேறு நவீனரகப் போர்க் கருவிகளை அளித்ததுடன், அவர்களது முகாம்களை, பதுங்கு குழிகளைக் கண்டறியும் நவீனரக கேமராக்கள் பிற கருவிகள் பொருத்தப்பட்ட மிக்.17 ரக ஹெலி காப்டர்கள் ஐந்தை இந்தியா இலங்கைக்கு இலவசமாக வழங்கியிருக்கிறது என்பதை இரண்டாவது புத்தகம் குறிப்பிடுகிறது.

இதை இலங்கை பயன்படுத்திக் கொள்ள இந்திய அரசு விதித்த ஒரே நிபந்தனை அது இந்திய ஹெலிகாப்டர் தான் என்று உலகு அறியாவண்ணம் அதற்கு இலங்கை ராணுவத்திற்கு உரிய வண்ணத்தை அடித்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான். இப்படி புலிகள் அமைப்பின் ரகசிய இடங்களைக் கண்டறிய உதவிய இந்தியா, புலிகள் அமைப்புக்கு வரும் ஆயுதம் மற்றும் உணவு, மருந்துப் பொருள்களைத் தடை செய்ய கரும் புலிகள் நடமாட்டத்தைக் கண் காணிக்க வேவு பார்க்க சசன்யாஎன்னும் கட லோரக் காவல் கப்பலையும் இலங்கை கப்பற்படைக்கு இலவசமாக அளித் துள்ளது. இத்துடன் சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்ட இந்திய கப்பற்படைக் கப்பலை ராமநாதபுரம் அருகில் நிறுத்தி தமிழீழக் கடற் பகுதியில் அவ்வப்போது ரோந்து வரச் செய்து, போராளி அமைப்பினர்க்கு வெளியிலிருந்து எதுவும் உள்ளே போகாமலும், உள்ளேயிருந்து போராளிகள் எவரும் தப்பி வெளியே செல்லாமலும் பார்த்துக் கொண்டது. இந்த நடவடிக்கையின் விளைவுதான் போராளி அமைப்பினர்க்கு வந்த ஆயுதக் கப்பல்கள் அழிப்பு, போராளிகள் அமைப்பினர் நெருக்கடியான தருணத்திலும் எவரும் தப்பிப் போக முடியாமல் மடக்கிப் போட்டு முடக்கிக் கொன்றது ஆகிய இவ்வளவும்.

இவ்வளவு உதவிகளையும் காங் கிரஸ் அரசு தான் அங்கம் வகிக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் கருத்தைக் கேட்காமல், அவர்களைக் கலந் தாலோசிக்காமலே தன்னிச்சையாகவே செய்தது. காங்கிரஸ் அரசின் நயவஞ்சகமான, சூழ்ச்சியான இந்தத் தமிழின விரோத, சிங்கள ஆதரவுப் போக்குதான், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பேரிழப் புக்கும், பின்னடைவுக்கும் எண்ணற்ற தமிழர்களின் உயிரிழப்புக்கும் காரண மாக அமைந்தது.

இந்திய அரசின் இந்த உதவிகள் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் சிங்கள அரசால் ஒருபோதும் புலிகளை வென்றிருக்க முடியாது. இந்த அளவு பேரழிவையும் ஏற்படுத்தி யிருக்க முடியாது.

இவ்வளவு உதவிகளையும் இலங் கைக்கு இந்திய அரசு ஏன் செய்தது? வெறும் தமிழின விரோதப் போக்கு தான் காரணமா என்றால் நிச்சயமாக இல்லை. இதற்கும் அடியோட்டமாக நிலவுகிற இந்தியப் பெரு முதலாளி களின் ஆதிக்க நலன்தான். அது சார்ந்த இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தான். இலங்கையுடனான அதன் அணுகுமுறைதான் காரணமாக அமைந்தது.

இலங்கை அரசு பாகிஸ்தான் பக்கமோ, சீனா பக்கமோ அதிகம் சாய்ந்து விடாமல் இருக்க, இலங் கையைத் தனக்குச் சாதகமாக தன் ஆதிக்க நலனுக்கு உகந்தவாறு வைத்துக் கொள்ளும் நோக்கிலேயே இந்தியா இலங்கைக்கு இவ்வளவு உதவி களையும் செய்தது. எவ்வளவு தமி ழர்கள் மாண்டாலும், அழிந்தொழிந் தாலும் பரவாயில்லை. இலங்கை அரசுடனான நல்லுறவும் நட்பும் நீடிக்கவேண்டும். இலங்கை தனக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்றே இதைச் செய்தது.

ஆனால் தற்போது நடப்பது என்ன? இந்தியாவிடமிருந்து எல்லா உதவிகளும் பெற்று ஈழப் போராளி களை அழித்த இலங்கை, அதை ஏதோ தன் சொந்த சாதனை போல் பயங்கர வாதிகள் அழிப்பில் தான்தான் கதா நாயகன் என்பது போல் தற்போது அது இந்தியாவுக்கு உதவத் தயாராக இருப்பது போல் பீற்றிக் கொள்கிறது. அதாவது இலங்கையில் பயங்கரவாத அமைப்பான புலிகள் அமைப்பை நாங்கள் ஒடுக்கிய அனுபவத்திலிருந்து, உலகெங்கும் பயங்கரவாதத்தை ஒடுக் குவது எப்படி என்று தேவைப்படும் நாடுகளுக்கு, இந்தியா உள்ளிட்டு எந்த நாட்டுக்கும் நாங்கள் பயிற்சியளிக்கத் தயாராக இருக்கிறோம் என்று அதன் துணை ராணுவத் தளபதி ஜகத் ஜெய சூர்யா பி.பி.சி.க்கு பேட்டி தரும் அளவுக்கு ஆணவத்தோடு இருக்கிறது.

அது மட்டுமல்ல, எந்த பாகிஸ் தானுக்கும், சீனாவுக்கும் ஆதரவாக இலங்கை போய்விடக்கூடாது என்று இந்தியா இத்தனை உதவிகளையும் இலங்கைக்குச் செய்ததோ, அதே பாகிஸ் தான், சீனாவோடு சேர்ந்து கொண்டு இன்று இலங்கை அரசு இந்தியாவுக்குப் போக்கு காட்டி வருகிறது. பயங்கர வாத அமைப்பு களுக்குப் பயிற்சி கொடுத்து, இந்தியா வில் வெடிகுண்டுத் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் பாகிஸ்தான் அரசுக்கு இலங்கை நெருக்கமாக இருப்பதுடன், கச்சத் தீவு பகுதியில், சீன ராணுவ தளம், கண்காணிப்பு கோபுரம் அமைக்கவும் உதவி செய்து வருவதாகத் தெரிய வருகிறது.

ஆக, இந்தியா தன் ஆதிக்க நல நோக்கில் தமிழீழ விடுதலைப் போராட் டத்தை ஒடுக்கி, எண்ணற்றத் தமிழர் களின் படுகொலைக்கு உதவி சிங்கள அரசுக்கு துணை போகும் அயலுறவுக் கொள்கையைக் கடைப் பிடித்து, தற்போது அதிலும் தோல்வி கண்டு நிற்கிறது. இப்போதாவது இந்தியா இதிலிருந்து பாடம் கற்று தன் அய லுறவுக் கொள்கையை மாற்றிக் கொள்ள முயலாது, இந்தத் தோல்வி யையும், தமிழ் மக்கள் மீதே சுமத்த, தமிழர் விரோதப் போக்கையேத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.

இந்த நிலையில், இந்த எல்லா அவலங்களுக்கும் காரணமான இந்திய அரசை தமிழராகப் பிறந்த ஒவ்வொரு வரும் புறக்கணிக்க வேண்டும். தற் போது இந்திய அரசை வழி நடத்தும் காங்கிரஸ் கட்சியை மீண்டும் தமி ழகத்தில் தலையெடுக்க வொட் டாமல் தடுக்க ஒவ்வொரு தமிழனும் உறுதி பூண வேண்டும். 

இத்துடன், ஆதிக்க சக்திகள் செய்வதையெல்லாம் செய்து விட்டு, தேவை எழும் போதெல்லாம் மறப் போம், மன்னிப்போம் என்கிற தாரக மந்திரத்தை நம்மை கடைப் பிடிக்கக் கோருவார்கள். இதில் நாம் விழிப் போடு இருக்க வேண்டும். சகோதரச் சண்டையானால் இதில் நாம் மறப் போம், மன்னிப்போம் என்கிற தாரக மந்திரத்தைக் கொள்ளலாம். ஆனால் இது எதிரிகளோடும், துரோகிக ளோடும் நடைபெறும் யுத்தம். ஈவு இரக்கமற்ற கொடூரத் தனத்தோடு ஒரு இன அழிப்பை நடத்தி முடித்திருக்கிற ஆதிக்கச் சக்திகளின் பசப்பல் வார்த்தை. இந்த வார்த்தைகளுக்கு நாம் மயங்க முடியாது, மயங்கக் கூடாது. ஆகவே, இந்திய அரசின் இந்த துரோகத்தை, கொடுஞ்செயலை மறக்கவும் மாட் டோம், மன்னிக்கவும் மாட்டோம். காத்திருப்போம், காலம் வரும் போது பழி தீர்ப்போம். இந்தத் தலை முறையில் இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறையிலாவது அதை நிறை வேற்றியே தீர்வோம் என நாம் சபத மேற்று நம் வருங்காலச் சந்ததிக்கும் இந்த உணர்வை ஊட்டவேண்டும்.

சரி, தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழீழத்தின் எதிர்காலம் எப்படி யிருக்கும் என்று போராளி அமைப்புக்கு நேர்ந்த நெருக்கடிகளுக்குப் பிறகு அதை வழி நடத்தும் தலைவர்களாக தங்களை அறிவித்துக் கொண்டு செயல் பட்டவர் களில், கே.பி. என அழைக்கப்படுகிற குமரன் பத்மநாபா என்கிற செல்வராசா பத்மநாபாவை இலங்கை அரசு மலேசி யாவில் வைத்து கைது செய்துள்ள தாகவும், அவரை இலங்கை ராணுவ முகாமிற்குக் கொண்டு வந்து கொடும் சித்தரவதைக்குள்ளாக்கி வருவதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன.

கே.பி.யை வைத்து போராளி அமைப்பின் வலைப் பின்னலை, அடுத்த கட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசு அறிய முயற்சிக்கும் அதே வேளை, போராளிகள் அமைப் பையும் அதன் நடவடிக்கைகளையும் முற்றாக அழித் தொழிக்கவும், புலி ஆதரவாளர்களை வேட்டையாடவும், பழி தீர்க்கவும், தனக்குத் தேவைப்படும் கூற்றுகளை கே.பி. சொல்லி அவரிட மிருந்து பெற்றதாகக் கூறி அடுத்தடுத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.

இத்துடன், புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்கள் எந்தெந்த நாடுகளி லெல்லாம் இருக்கிறார்களோ, அங் கெல்லாம் அவர்களைக் கைது செய்ய அனைத்து நாட்டுக் காவல் உதவியை நாடவும், அவர்களைத் தங்கள் நாட் டிற்குக் கொண்டு வந்து விசாரிக்க அந்நாடுகளைக் கோரவும் முயற்சித்து வருகிறது.

தவிரவும், புலிகள் தங்கள் அமைப்பின் பொருளியல் தேவைக்குத் தொடங்கிய மற்றும் முதலீடு செய்த நிறுவனங்களைக் கண்டறிந்து அதைக் கைப்பற்றவும், புலிகள் அமைப்புக்கு நன்கொடைகள், பிற வருவாய்கள் வரும் வாயில்களை அடைத்து அவர் களை நெருக்கடிக்குள்ளாக்கவும், இலங்கை அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்துடன் புலிகள் அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவாளர் களைக் கொன்றழிக்க உள்நாட்டில் திட்டமிட்டே பயிற்று விக்கப்பட்ட கூலிப் படையையும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு நாடு களில் ஊடுருவச் செய்துள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

ஆக, உள்நாட்டில் முள்கம்பி வேலிக்குள் முடக்கப்பட் டிருக்கும் தமிழீழ மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றொழித்து தமிழினம் என்கிற அடையாளத்தோடே எவரும் உலவாதிருக்கவும், உலக நாடுகளில் புலிகள் அமைப்பினர் என்றோ, ஆதர வாளர் என்றோ எவரும் இல் லாதிருக்கவும் இலங்கை அரசு முழு மூச்சோடு செயல் பட்டு வருவதாகத் தெரிகிறது.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் உடனடியாக மீண்டும் புத் துயிர் பெற்று எழும் வாய்ப்பு ஏதும் இல்லை. இப்படிச் சொல்வதால் இனி எப் போதுமே எழாது என்பதாகப் பொருள் கிடையாது. உண்மை யதார்த்த நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் சொல்லப் படும் கூற்று இது. எனவே அது மீண்டும் புத்துயிர் பெற சிறிது காலம் பிடிக்கும் என்பதை உணர்ந்து தற்போதைக்கு நம்முன்னுள்ள பணி, முள்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப் பட்டுக் கிடக்கும் மூன்று இலட்சம் தமிழர்களைக் காப்பாற்றுவதே என அதை நோக்கி நம் சிந்தையைச் செலுத்தவேண்டும். எனவே அந்த அளவில் ஈழச் சிக்கல் குறித்து ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொண்டு, அடுத்து தமிழ்நாட்டில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

தமிழகச் சூழலைப் பொறுத்த மட்டில், நாம் உணர்ச்சி வயப்படா மலும், உண்மை நிலையை உணரும் வகையிலும், ஆழ்ந்தும், நிதானமாகவும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

தமிழக அளவில் இயங்கும் மாநிலக் கட்சிகளோ, அகில இந்திய அளவில் இயங்கும் அனைத்திந்தியக் கட்சிகளோ எதுவானாலும் இவற்றை தமிழீழ விடுதலையை ஆதரிக்கிற கட்சிகள், தமிழீழ விடுதலையை ஆதரிக் காத கட்சிகள் என இருவகைப் படுத் தலாம்.

ஆனால் இவை ஈழச் சிக்கலில் ஈழம் சார்ந்து மேற்கொண்டுள்ள நிலை பாடுகளின் அடிப்படையில் நடவடிக் கைகளை மேற்கொள்ளாமல், அதற்கு முரண்பட்ட வகையிலேயே நடவடிக் கைகளை மேற்கொண்டன. காரணம் தேர்தல் கூட்டு அப்படிப்பட்ட நட வடிக்கைகளை மேற்கொள்ள நிர்ப் பந்தித்தது.

காட்டாக, தமிழீழம் என்றாலே எட்டிக் காயாய் கசக்கிற காங்கிரசோடு, ஈழம் மலர்ந்தால் மகிழ்வேன் என்னும் பசப்பல்நாயகர் கருணாநிதி கூட்டு. ஈழத்துக்காகவே சாகும் வரை பட்டினிப் போராட்டம் மேற்கொண்ட திருமாவும் இவர்களோடு கூட்டு.

அதேபோல தனி ஈழத்தைப் பற்றி எதுவுமே வாய் திறவாத, அப்படியே திறந்தாலும் எதிராகவே திறந்துவந்த ஜெ.வுடன் ஈழ விடுதலையை ஆதரிக் கிற பா.ம.க., மதிமுக கூட்டு. தேர்தல் நெருக்கத்தில் திடீர் திருப்பமாக ஜெ. தமிழீழ விடுதலையை ஆதரிப்பதாக அறிக்கை விட்டது இதற்கொரு காரண மாக அமைந்தது. ஆனால், தேர்தல் முடிவுகளோடு ஜெ. அதற்கு ஒரு முடிவு கட்டியது தனிச் செய்தி. ஆனால் அந்த ஜெ. அணியில் தமிழீழ விடுதலையை அரை குறையாய் ஆதரிக்கிற இ.க.க. வும், திட்டவட்டமாய் எதிர்க்கிற இ.க.க.(மா)வும் கூட்டு.

ஆக, ஈழச்சிக்கலில் அவரவர் சார்ந்த நிலைப்பாடுகளின் அடிப் படையில் நடவடிக்கை இல்லாமல், கட்சியின் அரசியல் ஆதாயங்கள், உறவுகள், தேர்தல் கால கூட்டணிகள் இவை சார்ந்தே ஈழச் சிக்கல் அணுகப் பட்டதேயன்றி, அச் சிக்கல் அதன் தகுதி அடிப்படையில், அதில் தமிழக மக் களது பங்களிப்பின் அவசியம் உணரப் பட்டதன் அடிப் படையில் இல்லை.

இதனால்தான் 2006 முதல் 2009 வரை இந்தியா முழு மூச்சோடு இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்து வந்த தருணத்திலும் கடைசி வரை பதவியை விடாது இறுதிவரை, தமிழின விரோத காங்கிரசுக்கு ஆதரவு தந்து, அமைச்சரவை யிலும் அங்கம் வகித்து ஒட்டிக் கொண்டு இருந்தன தமிழக அரசியல் கட்சிகள்.

ஆகவே ஈழச் சிக்கல் தீவிரம் பெற்று இலங்கை அரசு இந்திய அரசின் உதவியோடு தமிழீழ விடுதலைப் போராளி களை ஒடுக்கியும், தமிழீழ மக் களைக் கொன்று குவித்தும் வந்த போதும், அந்த சிங்கள அரசுக்கு உதவி வந்த இந்திய அரசுக்கு ஆதரவு தந்து வந்தன தமிழகத்தில் உள்ள தமிழீழ விடுதலை ஆதரவுக் கட்சிகள். அதே வேளை ஈழ விடுதலைக்கு ஆதர வாக வெளியில் போராட்டங்களையும் நடத்தி வந்தன.

இந்த அமைப்புகள் நடத்திய போராட்டங்களையோ அவற்றின் வீச்சையோ நாம் குறைத்து மதிப்பிட வில்லை. அது பற்றி குறை கூறவும் விரும்பவில்லை. ஆனால் இப் போராட்டங்கள் அது முன் வைத்த கோரிக்கைகளை நோக்கி ஒரு சிறு துளியும் முன்னேறவில்லை. தில்லி அரசை சிறிதளவும் அசைந்து கொடுக்கச் செய்யவில்லை என்பது உண்மை. இந்த உண்மையை, வரலாற்றுக் களங்கத்தை யாரும் மறுக்க முடியாது. இதை நாம் மறந்து விட முடியாது.

இந்த உண்மை அமைப்பின் தலைவர்களுக்கும் தெரியும். தெரிந் தாலும் இந்த வழமையான, சம்பிரதாய மான போராட்டங்களைத் தாண்டி தில்லி அரசை அசைய வைக்கும் எந்தப் போராட் டத்தைப் பற்றியும் இவர்கள் சிந்திக்க வில்லை. அதற்காக முயற்சிக்க வுமில்லை. திட்டங்களும் தீட்ட வில்லை.

நிலைமைகளில் சிறிதும் மாற்றம் இன்றி ஈழத்தில் போராளிகள் மீதும் பொதுமக்கள் மீதுமான தாக்குதல்கள், படுகொலைகள் தொடர்ந்து கொண்டே யிருந்தன. அப்போதுகூட போராளி களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து தமிழக மக்கள் மத்தியில் விளக்கிப் பேசி அவர்களைத் தட்டி யெழுப்ப வில்லை. அவர்களது ஆவேசத்தைத் தூண்ட வில்லை. மாறாக புலிகளை யாராலும் வெல்ல முடியாது, யாரும் அவர்களை கிட்டே நெருங்க முடியாது என வீர வசனமே பேசிக் கொண்டிருந் தோம். கொலை வாளுக்கும் துப்பாக்கி களுக்கும் கொத்து குண்டுகளுக்கும் முன்னால் வெத்து வேட்டு வார்த்தை களை அள்ளி வீசிக் கொண்டிருந்தோம். இதைத் தாண்டி நம் தமிழகத் தலை வர்கள் வேறு என்ன செய்தோம்?

சரி, போனது போகட்டும். இனி யாவது இது குறித்து நாம் விழிப்போடு இருக்கிறோமா? முள் கம்பி வேலிக்குள் முடக்கப் பட்டிருக்கும் அப்பாவித் தமிழ் மக்களைக் காக்க நாம் நட வடிக்கை மேற்கொள்கிறோமா? இல்லையே. எல்லாம் வெறும் அறிக் கை களோடும், கடிதங்களோடும் சரி.

இக்கடிதங்களோ அறிக்கை களோ வேண்டாம் என்று நாம் சொல்ல வில்லை. அது போதாது, பயன் தராது, இதெல்லாம் ஏற்கெனவே பார்த்தா யிற்று என்றுதான் சொல்கிறோம்.

ஈழச் சிக்கல் குறித்து தமிழக கட்சிகள், அரசியல் தலைவர்கள் ஏற் கெனவே எழுதாத கடிதங்களா, வைக் காத வேண்டுகோள்களா, நிறைவேற்றி அனுப்பாத தீர்மானங்களா. ஆனாலும் எதற்கும் எந்தப் பலனும் இல்லை என்பதுதானே உண்மை.

இவையெல்லாம் நன்கு தெரிந் தும் நாம் அமைதி காத்தது ஏன்? காப்பது ஏன்? காரணம் சிக்கல்களைத் தரு வித்துக் கொள்ள, எதிர்கொள்ள நாம் தயாராயில்லை. நாம் அதை விரும்ப வில்லை என்பதே.

இந்தியாவில் ஈழப் போராளி அமைப்பு தடை செய்யப் பட்டிருக் கிறது. ஆதரவாகப் பேசுவது, நட வடிக்கைகளில் ஈடுபடுவது எல்லாம் குற்றச் செயலாக ஆக்கப் பட்டுள்ளது. அவர்களுக்காக கண்ணீர் சிந்தவும், வாய்விட்டு அழவும் கூட தமிழனுக்கு உரிமை மறுக்கப் பட்டிருக்கிறது. இவற்றை மீறுவதே பெரும்பாடு. அப்படியிருக்க இதையும் மீறி எங்கே ஈழ மக்களுக்கு ஆதரவாகச் செயல் படுவது? ஆகவே இந்த மட்டும் போதும். இதுவே அதிகம் என்று நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான் என்கிற நடைமுறைக் கணக்கு.

எனவே, எல்லாமும் ஒரு வரம் போடு அந்த வரம்புக்குட்பட்டு நடத்தப் பட்டதே தவிர, எதுவும் இந்த வரம்பு தாண்டி, வரம்பு மீறி நடைபெற வில்லை. இதனால் ஆட்சியாளர்களும் இதுபற்றிக் கவலைப் படவில்லை. எனவே, முதலில் இந்த வரம்புகளை உடைப்பது பற்றி அவற்றை மீறுவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இப்படி சிந்திக்கும்போது தான் ஈழ விடுதலைப் போராட்டம் என்பது ஈழத்தோடு முடிந்து போவதல்ல. அது தமிழக மக்களின் உரிமைகளோடும் சம்பந்தப் பட்டது என்கிற உண்மை தெரிய வரும்.

அதாவது ஈழத் தமிழர்களை ஆதரிக்க அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க தமிழக மக்களுக்கு உரிமை யில்லை. ஈழத் தமிழர்களை வரவேற்க, தங்கள் இல்லத்தில் தங்க வைக்க, வேண்டிய உதவிகள், பொருளுதவிகள், மருத்துவ உதவிகள் முதலானவற்றைச் செய்ய, அவர்களது துயரத்தில் பங்கேற்க அவர்களுக்காகக் கண்ணீர் சிந்த எதற் குமே உரிமையில்லை.

காரணம் தமிழக மக்களின் இந்த எல்லா உரிமைகளும் தில்லி அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழர் களுக்கு மறுக்கப்பட்டுள்ளன. தமிழகம் தில்லிப் பேரரசுக்கு உட்பட்ட ஒரு மாநிலம் என்பதால் தில்லிப் பேரரசின் சட்டங்கள் தமிழகத்தைக் கட்டுப்படுத்து கின்றன. தமிழகத்தைத் தமிழர்களை அதன் கொத்தடிமையாக ஆக்கி வைத் திருக்கின்றன.

இந்நிலையில் இந்த அடிமைத் தனத்திலிருந்து மீண்டு நாம் ஈழத் தமிழர் களுக்கு உதவ வேண்டுமென்றால் நம்முன் இரண்டே இரண்டு வழிகள் தான் இருக்கின்றன. ஒன்று இந்த தில்லிப் பேரரசின் கீழ் இருந்து கொண்டே மேற்குறித்த எல்லா உரிமை களையும் நாம் பெறவேண்டும். அல்லது தில்லிப் பேரரசுக்கு உட்பட் டிருக்கும் வரை இந்த உரிமைகள் நமக்குக் கிடைக்காதென்றால், அதி லிருந்து விலகி நாம் நம் சுயேச்சையான, சுதந்திரமான பாதையைத் தேர்ந் தெடுத்து நமக்கான உரிமைகளை நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

இந்த இரண்டு வழிகளில் ஏதாவ தொரு வழியில் நாம் நம் உரிமைகளைப் பெற்று, தற்போதுள்ள அடிமைத் தனத் திலிருந்து மீளாமல், மீள முயற்சிக் காமல் அதற்காகப் போராடாமல், நாம் தமிழீழ மக்களுக்கு ஆதரவாகச் செயல் படமுடியாது. அவர்களுக்காகக் குரல் கொடுக்க முடியாது.

தமிழீழ மக்களுக்காக மட்டும் என்று இல்லை. தமிழக மக்களுக்காக வும் சேர்த்தே இதைச் சொல்கிறோம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு நதி நீர் உரிமை அண்டை மாநிலங் களால் மறுக்கப்படுகிறது. தட்டிக் கேட்க, தமிழக உரிமையைப் பெற்றுத் தர யாருமில்லை. நியாயம் வழங்க வேண்டிய தில்லி அரசு ஓரவஞ்சனை யாக, தமிழகத்திற்கு எதிராக நடந்து கொள்கிறது. தமிழக மீனவர்கள் வார கட்டளை போல சிங்களக் கப்பற் படையால் சுடப்படுவது தொடர்ந்து வருகிறது. காப்பாற்ற வேண்டிய தில்லி அரசு எது பற்றியும் கவலைப் படாமல், பொருட்படுத்திக் கொள்ளாமல் செய லற்று செத்த சடம் போல் கிடக்கிறது.

இப்படி நம் சொந்த நாட்டில் நம் சொந்த மக்களை, சொந்த மண்ணை, நாம் காப்பாற்றிக் கொள்ள முடிய வில்லை என்னும் போது, நாம் எப்படி அண்டை நாட்டு மக்களைக் காப்பாற்ற முடியும். அம் மக்களுக்கு உதவ முடி யும். நிச்சயம் முடியாது. ஆகவே முத லில் நம் சொந்த நாட்டு மக்களைக் காப் பாற்ற, நம் தாயகத்து உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள போராட வேண்டும். இப்படிப் போராடத் தொடங்கும் போதுதான், இப்போராட் டத்தின் வழி உரிமைகளைப் பெறும் போதுதான் நாம் அண்டை நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும்.

காட்டாக இப்படி யோசித்துப் பார்ப்போம்.

1. தமிழ் நாட்டிற்குள் யார் வரலாம், யார் வரக்கூடாது என்று தீர்மானிக்கும் உரிமை தமிழக மக் களுக்கு தமிழக அரசுக்கு இல்லை. தில்லியிடம் இருக்கிறது.

2. தமிழ்நாட்டு மக்கள் யாருக்கு உதவலாம், யாருக்கு உதவக் கூடாது என்று தீர்மானிக்கிற உரிமை தமிழக மக்களுக்கு தமிழக அரசுக்கு இல்லை. இதுவும் தில்லியிடம்தான் இருக்கிறது.

இந்த இரண்டு உரிமைகள் மட்டும் நம்மிடம் இருந்தால் நாம் எவ்வளவோ சுதந்திரத்தோடு செயல் படலாம். ஈழத் தமிழர்களுக்கு எப்படி யெல்லாமோ உதவியிருக்கலாம் இல் லையா. அதேபோல,

3. தமிழக எல்லைகளைப் பாது காக்க, மக்களைப் பாதுகாக்க தமிழகத் துக்கென்று தனியாகக் காவல் படை இல்லை. இதனால் தமிழக எல்லை களுக்கோ தமிழக மக்களுக்கோ எந்த ஆபத்து வந்தாலும் தமிழகம் தில்லிக்கு மனுப் போட்டு அதன் உதவியை கோரிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

அதாவது தமிழன் தன் வரிப் பணத்தைக் கொண்டு தன்னைப் பாது காக்கும் தமிழகக் காவல் படையைத் தான் உருவாக்கிக் கொள்ள உரிமையற்று வரிப் பணத்தை தில்லிக்குத் தந்து அது வைத்திருக்கும் ராணுவத்தை உதவிக்கு அனுப்ப கெஞ்சிக் கொண்டிருக்க வேண் டிய அவலம் இருந்து வருகிறது.

இப்படி ஒரு காவல் படை, பயிற்சிப் பெற்ற இராணுவம் நமக் கென்று, தமிழர்களுக்கென்று சொந்த மாக இருந்திருக்குமானால், தமிழக மீனவர்களை, சிங்களக் கப்பற்படை சுட விட்டிருப்போமா? இவ்வளவு மீனவர் கள் உயிர் பறிபோக விட்டு வேடிக்கை பார்த்திருப்போமா?

இப்படி ஒரு காவல்படை நம் மிடம் இருந்திருந்தால் இவ்வளவு ஈழத் தமிழர்களை முக்கிய போராளிகளைப் பலியாக விட்டிருப்போமா? ஈழத்தின் கிழக்கு வடக்குப் பகுதிகளில் தமிழின விரோதிகள் முகாமிட, போராளி களையும், போராளிகளுக்கு வரும் உதவிகளையும் நடுக் கடலில் மடக்கி அழிக்க விட்டிருப்போமா? போராளி கள் வெளியே செல்ல விடாமல் தடுத்து சிங்கள இனவெறி ராணுவத்துக்கு பலியாக விட்டிருப்போமா?

இப்படி ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு யோசித்துப் பார்த்தால் ஈழ மக்கள் ஆதரவுப் போராட்டம் என்பது வெறும் ஈழ ஆதரவு மட்டுமேயல்ல. அது தமிழக உரிமைகள் சார்ந்த போராட்டம் என்பதும், தமிழக உரிமைகள் சார்ந்த போராட்டம் என்பது தமிழகத்தோடு மட்டுமல்ல அது ஈழ ஆதரவோடும் சம்பந்தப்பட்டதே என்பது புரியவரும்.

ஆக இப்படிப்பட்ட புரிதலோடு இதற்கான போராட்டங்களை நாம் நடத்தாமல், இதற்கான உரிமைகளை பெறாமல் ஈழ ஆதரவு என்பதும் தமிழக உரிமைகள் மீட்பு என்பதும் வெறும் பழங்கதையாக, பகற்கனவாகவே முடியுமே யல்லாது, காரிய சித்தியை, கோரிக்கை வெற்றியை ஈட்டித் தராது.

சிலபேர் இதெல்லாம் சாத்தி யமா? தில்லி அரசு இதற்கெல்லாம் அனுமதிக்குமா என்று கேட்கலாம்.

நியாயம். நாம் சோதாக்களாக, சோப்ளாங்கிகளாக இருந்து கொண் டிருக்கும் வரை தில்லி அரசு எதையும் அனுமதிக்காதுதான். இப்படி நாம் சொரணையற்று இருப்பதனால் தான் தில்லி அரசும் நம் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நாம் வீறு கொண்டு எழுந்து போராடத் தொடங்கினால், இதில் நிச்சயம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம். தில்லிக்கு உட்பட்டோ உட்படாமலோ நம் உரிமைகளைப் பெறலாம்.

ஸ்காட்லாந்து என்ற ஒரு சின்னஞ்சிறிய நாடு 51 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டது. பிரிட்டனின் பேராதிக்கத்திற்கு உட்பட்டு பிரிட் டனுக்குள் அங்கம் வகிக்கும் ஒரு நாடு தான். ஆனால் அதற்கென்று தனிப் பாராளுமன்றம் உண்டு. உலக அளவில் தன் தனி அடையாளத்தை நிறுவும் உரிமையைப் பாதுகாத்துக் கொண்டு அந்த நிபந்தனையின் பேரில்தான் அது பிரிட்டனுக்குள் இருந்து வருகிறது. ஆட்சிப் பகுதி நோக்கில் அது பிரிட் டனின் ஓர் அங்கம்தான் என்றாலும், ஸ்காட்லாந்திற்கென்று தனி ராணுவம் உண்டு. தனி விளையாட்டுக் குழுக்கள், கால்பந்தாட்டக் குழு உண்டு. இப்படிப் பட்ட தனித்தன்மையோடுதான் அது பிரிட்டனுக்குள் இருந்து வருகிறது.

இந்த நோக்கில் தமிழகம் முயன் றால், தமிழகத்திற்கென்று இந்த சோதா சட்டமன்றம் போல் இல்லாமல், முழு உரிமை பெற்ற நாடாளுமன்றம், தமிழகத்திற்கென்று தனி ராணுவம், கப்பற் படை, விமானப் படை, தனி விளையாட்டு அணிகள், கிரிக்கெட் அணி, கால் பந்தாட்ட அணி, ஹாக்கி அணி ஆகிய அனைத்தையும் பெறலாம்.

முயன்றால் முடியாதது இல்லை.

சின்னஞ்சிறிய பாளைப்பட்டு களாக கிடந்த மக்கள்தாம் வெள்ளை ஆதிக்க ஆட்சியை எதிர்த்து தீரத்தோடு போராடி வீர மரணம் எய்திருக் கிறார்கள். தூக்குக் கயிற்றை முத்தமிட் டிருக்கிறார்கள். 1857 அகில இந்தியப் படை வீரர் பேரெழுச்சிக்கு 50 ஆண்டு களுக்கு முன்பாகவே 1806இல் வெள்ளை ஆட்சிக்கு எதிராக வேலூரில் முதல் படைவீரர் பேரெழுச்சியை நடத்திய மண் நம் தமிழ் மண். 1938இல், 1965இல் தமிழகத்தில் இந்தி ஆதிக் கத்தைத் தடுத்து நிறுத்தியதும் இதுவே.

இப்படியெல்லாம் போராடிய மக்கள்தான் நமது தமிழக மக்கள். ஆனால் இப்படிப்பட்ட வீரம் செறிந்த தமிழக மக்களைத்தான் திராவிட இயக்கக் கட்சிகள், தங்கள் தன்னலவாத நாற்காலி அரசியலுக்கு ஏற்ப காயடித்து பதப்படுத்தி டாஸ்மாக் போதைக்கும், பரதேசித் திட்ட இலவசங்களுக்கும் தங்களை முண்டியடித்துக் கொள்ள ஏங்க வைத்திருக்கிறது. இதையும் மீறி மக்கள் எழுச்சியோ, விழிப்போ கொண் டாலும் அதைத் தகர்க்கவும் திசை திருப்பவுமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

இதனால்தான் தமிழன் நோஞ் சானாகிப் போய் பக்கத்து வீட்டு பயில் வானின் சாகசங்களைப் பார்த்து கை தட்டி ரசித்துக் கொண்டிருந்தான். தன்னால் இயலாததை பயில்வான் செய்வதைப் பார்த்து பரவசப்பட்டு கை தட்டிக் கொண்டிருந்தான். தற்போது பயில்வானுக்கு பாதிப்பு வந்து, பயில் வானே பின்னடைவுக்கு ஆளாக நேரவே, தமிழன் செய்வதறியாது திகைத்து நிற்கிறான். இதுதான் இப் போதைய நிலை.

இது குறித்து தமிழர்கள் சிந்திக்க வேண்டும். தமிழினத்தை நோஞ்சா னாகக் காயடித்தது யார்? காவு கொடுத் தது யார், காட்டிக் கொடுத்தது யார், தமிழின விரோத கொலைகாரப் பாவி களுக்குத் துணை போனது யார் என் பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் புரிதலோடுதான் நாம் தமிழீழ, தமிழக மக்களின், தமிழர்களின் எதிர் காலம் பற்றி சிந்திக்க வேண்டும்.

தமிழீழத்தைப் பொறுத்த வரை, தமிழீழம் கோரிய மக்களை, போராளிகளை வீழ்த்தியது என்பது, தமிழீழத் திற்கான நியாயங்களை வீழ்த்தியதாக ஆகிவிடாது. மாறாக அக்கோரிக்கை முன்னைவிட பலமடங்கு வீரியத் தோடே உறுதி பெற்றிருக்கிறது. எனவே, அதற்கான போராட்டங்கள் உடனடியாக இல்லா விட்டாலும், சற்று காலம் தாழ்த்தியேனும் மீண்டும் எழும். உக்கிரம் பெறும் என்பது நிச்சயம்.

போராளிகளை முற்றாக வீழ்த்தி விட்டதாக, சிங்கள அரசு கொக்கரித் தாலும், இன்னும் 4000 முதல் 5000 எண்ணிக்கை வரையிலான போராளி கள், பின்வாங்கி வன்னிக் காடுகளில் பதுங்கி இருப்பதாகவும், இவர்கள் கூடிய விரைவிலேயே கொரில்லாத் தாக்குதலில் இறங்குவார்கள் என்றும் செய்திகள் உலவி வருகின்றன. இது தமிழீழப் போர் ஓயாது. மீண்டும் தொடரும் என்கிற நம்பிக்கையை ஊட்டுவதாக உள்ளது.

இந்நிலையில் முள்கம்பி வேலி வதை முகாம்களில் அடைக்கப்பட்டு கிடக்கும் மூன்று இலட்சம் தமிழர் களைக் காப்பது எப்படி, அதற்கு என்ன வழி என்று சிந்திப்பதும், அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதுமே தற்போதைய உடனடித் தேவை.

எனவே, தமிழக மக்களும், தமிழகத் தலைவர்களும் இதில் கவனம் செலுத்தவேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை இப்போதைக்கு இதுவே முக்கியம்.

இன்றைய சூழலைப் பொறுத்த வரை, தமிழீழத் தமிழர்களோ, தமிழகத் தமிழர்களோ, அவர்கள் யாருமற்ற அனாதைகள் என்கிற பாதுகாப்பற்ற நிலையே நீடித்து வருகிறது.

தமிழ் நாட்டில் இத்தனைக் கட்சி கள், தலைவர்கள் இருந்தும் தமிழர் களைக் காப்பதற்கென்று தமிழர்களுக் காகக் குரல் கொடுக்க என்று உறுதியான அமைப்பு இல்லை.

இதுதான் யாருக்கும் தமிழனைக் கண்டால் இளப்பமாக நோக்க வைக் கிறது. அற்பமாக பார்க்க வைக்கிறது. தமிழன் மீது கை வைக்க துணிச்சல் தருகிறது. அது அண்டை மாநிலங்களா னாலும் சரி, தில்லிப் பேரரசாக இருந் தாலும் சரி, அண்டை நாடான இலங்கை யானாலும் சரி, எல்லோருக்கும் தமிழன் என்றால் கிள்ளுக் கீரைதான், என்கிற நிலையே தொடர்ந்து வருகிறது.

முதலில் இந்த நிலையை மாற்ற நாம் என்ன செய்யலாம், செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.

வாய்ப்புக் கிடைக்கும் போதெல் லாம் நாம் வலியுறுத்தி வருவது, தமிழக தமிழின உணர்வுத் தலைவர்கள் ஒன்று சேர்ந்து முதலில் தமிழக, தமிழின உரிமைகள் பாதுகாப்புக்கென்று ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இது தமிழனுக்கு எங்கே, எந்த மூலை யில் என்ன பாதிப்பு நேர்ந்தாலும், அதைக் கண்டித்து குரல் எழுப்ப வேண்டும். தமிழக, தமிழின உரிமை களுக்குப் போராடவேண்டும்.

தமிழர்களுக்கென்று இப்படி ஓர் அமைப்பு உருவானால், தமிழர்களுக்கு ஏதாவது பாதிப்பு என்றால் இந்த அமைப்பு தலையிடும், கேட்கும் என் கிற ஒரு நிலையை உருவாக்கினால், தமிழர்களது எதிரிகளுக்கும், துரோகி களுக்கும் ஓர் அச்சம் வரும். தமிழர் பிரச்சினைக்கும் தீர்வு கிட்டும்.

இதற்கு தமிழகத் தலைவர்கள் செய்ய வேண்டுவதெல்லாம் முதலில் நாம் ஏன் கட்சி நடத்திக் கொண்டிருக் கிறோம், அதன் நோக்கம் என்ன, இலக்கு என்ன என்பதைத் தெளிவுப் படுத்திக் கொள்ளவேண்டும். கட்சி சும்மா பராக்குக்காகவா, அல்லது நாற்காலி பதவி சுகங்கள் பெறவா, அல்லது அதிகார போதை, செல்வாக்கு ருசி, இவற்றி அனுபவிப்பதற்காகவா, இல்லை உண்மையிலேயே தமிழக மக்களின் விடியலுக்காகவா என்பதை உறுதிப் பட வெளிப்படுத்த வேண்டும்.

கட்சி நடத்துவது உண்மையி லேயே தமிழக மக்கள் விடியலுக் காகத்தான் என்றால் அதற்கான செயல் திட்டங்கள் என்ன, அதை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்பதை மக்களிடம் தெளிவு படுத்தவேண்டும். அதற்கான போராட்டங்களை விடாப் பிடியாக நடத்த வேண்டும். அதன் மேல் மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்.

இதை தனியொரு அமைப்பு சாதித்து விடமுடியாது என்பதால், ஒத்த கருத்துள்ள அமைப்புகள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கவேண்டும். இது குறைந்தபட்ச செயல் திட்டம் என்ன என்று அறிவித்து அதனடிப் படையில் செயல்படவேண்டும்.

இந்தக் கூட்டமைப்பு சனநாயக முறைப்படி செயல்படவேண்டும். முக்கியமான சிலர் கூடி முடிவெடுத்து அதை அறிவிக்கும் கூட்டங்களை நடத்தி மக்களை மந்தை மனோபாவத்தோடு வழி நடத்தக்கூடாது. மாறாக மக்களின் கருத்துகளையும் உணர்வுகளையும் புரிந்து அதற்கு வடிவம் கொடுக்கும் ரீதியில் செயல்படவேண்டும்.

இப்படி உருவாக்கப் படும் கூட்டணியேதான் தேர்தல் கூட்டணியாகவும் செயல்பட வேண்டும். அதை விட்டு தமிழக உரிமை, தமிழர் உரி மைக்கு ஒரு கூட்டணி, தேர்தலுக்கு இன்னொரு கூட்டணி என்று அலை பாயக் கூடாது. இப்படி அலை பாய்ந்து மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கக் கூடாது.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழர் விரோத, நயவஞ்சக, தில்லி அரசை, தில்லி ஆட்சியாளர்களை எந்தக் காரணம் முன்னிட்டும் இக்கூட்டமைப் பிலுள்ள கட்சிகள் ஆதரிக்க கூடாது. தில்லி அரசில், ஆட்சியில் பங்கேற்கக் கூடாது. எப்படி தில்லி ஆட்சி யாளர்களுக்கு தமிழன் என்றால் எட்டிக் காயாக கசக்கிறதோ அதேபோல தமிழினத் தலைவர்களுக்கு தில்லி என்றால் எட்டிக் காயாகக் கசக்கும் உணர்வோடு வெறுப்பை உமிழ்ந்து விலகி நிற்க வேண்டும்.

- இப்படி ஏதாவது உருப்படியான வழியில் நாம் செயல்பட்டால் மட்டுமே தமிழர்களை, தமிழகத்தின் எதிர் காலத்தை நாம் காப்பாற்றலாம். இல்லா விட்டால் இன்னும் நூறு வருடம் ஆனாலும் தமிழன் கடைத் தேறமாட்டாத அனாதையாகவே அழிவான். அந்த வரலாற்று சாபக் கேட்டிற்கு நாம் ஆளாக வேண்டுமா என்பதுதான் தற்போது உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனின் கேள்வியாகவும் இருக்கவேண்டும். அதை நோக்கியே நாம் நமது சிந்தையைச் செலுத்த வேண்டும்.

Pin It