ஆகஸ்ட் 6, 1945 இரோஷிமா. ஆகஸ்ட் 9, 1945 நாகசாகி. இவ்விரு இடங்களில் அணுகுண்டை வெடிக்கச் செய்ததன் மூலம் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மனித உயிர்களை நொடிப்பொழுதில் விழுங்கியது, அமெரிக்காவின் மேலாதிக்க வெறி. உலகமே வெட்கித் தலைகுனிந்த அந்தக் கொடூர நிகழ்வுக்குப் பிறகும், வெறி அடங்காத அமெரிக்கா, அணு அரசியல் மூலம் உலகையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் துடிக்கிறது. அணுவை ஆக்கப்பூர்வமான பணிகளுக்குப் பயன்படுத்துவதற்கான ஆய்வுகளும், அணுகுண்டுகள் தயாரிப்பதற்கான ஆய்வுகளும் ஒரே மரத்தின் இரு கிளைகள் போன்றவை. ஆனால், அகிம்சையை விரும்பும் இந்தியா, அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பது, அணுவின் மடியில் உலகின் அமைதியை நிலைநாட்டுவதற்கு ஒப்பானது.

Atom model
உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான ஆய்வுக் கூடங்களில், விஞ்ஞானிகள் பல்வேறு விதமான ஆய்வுகளை செய்து பார்த்த வண்ணம் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஆய்வுகளின் தலைப்புகள், உலகமயத்தின் மூளைகளால் திட்டமிடப்பட்டு பரிந்துரைக்கப்படுகின்றன. இப்பொழுது அமெரிக்கா திரைமறைவு களிலிருந்து வெளியேறி, உலக நாடுகளை பல்வேறு தளங்களிலும் வழிநடத்துகிறோம் என்கிற பெயரில், வெளிப்படையாகவே மிரட்டத் தொடங்கி உள்ளது. உலகம் எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் பாடம் கற்காத முட்டாளாகவே உள்ளது அமெரிக்கா. இந்த முட்டாள் தனது மிருக பலத்தால், பொருளாதார பலத்தால் உலகத்தையே வென்றுவிடலாம் என நினைக்கிறது.

வியட்நாமில் மரண அடியைப் பெற்றது அமெரிக்கா. ஆப்கானிஸ்தானில் தோல்வி, ஈராக்கில் படுதோல்வி. இருப்பினும், தனது அடுத்த தாக்குதலைத் தொடுக்க அது தயாராகிக் கொண்டிருக்கிறது. அரசியல் ரீதியாக அமெரிக்காவின் திட்டங்கள் நிர்மூலமாக்கப்பட்ட போதும் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் தனது பொருளாதார நலன் பயக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மட்டும் ஓரளவு வெற்றி கண்டுள்ளது. இந்தப் போர்களை நோக்கி அமெரிக்க அரசாங்கத்தை நகர்த்துவது, அங்குள்ள யூதர்கள் மற்றும் ஆயுத வியாபாரிகளின் கூட்டமைப்புதான்.

ஆயுத வியாபாரிகள் தயாரித்து குவித்து வைத்துள்ள ஆயுதங்களைப் பரிசோதிக்கவும், அழிக்கவும் போர்கள் அவர்களுக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. இந்தப் போர்களை தேவையான நேரத்தில் நிகழ்த்தி, ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்கவும், தனது வங்கிக் கணக்கைப் பெருக்கவும் தவறியதில்லை ஜார்ஜ் புஷ். இவர் அதிபராக ஆவதற்கு முன்னால் போர் ஆயுத நிறுவனத்தை நடத்தி வந்தவர். இவரது தந்தை அதிபராக இருந்த காலத்தில்தான் வளைகுடாப் போர் நடந்து ஈராக் அழித்தொழிக்கப்பட்டது. அந்த நேரம் வளைகுடா நாடுகள் எல்லாவற்றிலும் பீதியைக் கிளப்பிவிட்டு, எல்லா நாடுகளையும் ஆயுதங்களை வாங்கி குவிக்க வைத்தவர், ஆயுத வியாபாரி ஜார்ஜ் புஷ். கடந்த 20 ஆண்டுகளாக ஜார்ஜ் புஷ் குடும்பத்தினருக்கும், சவுதியை ஆளும் மன்னர் குடும்பத்தினருக்கும் உள்ள உறவின் நெருக்கம் உலகம் அறிந்ததே. சவுதியைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தின் பொருளாதார ஆசீர்வாதத்துடன் ஒசாமா பின்லேடன் இயங்கி வருவதும் உலகம் அறிந்த செய்தியே. ஒரு காலத்தில் ஒசாமாவுடன் வெளிப்படையாக நெருக்கத்துடன் பழகிய ஜார்ஜ் புஷ், இப்பொழுதும் நிச்சயம் ரகசிய உறவு வைத்திருப்பார் என்று நம்பலாம்.

உலகம் முழுவதிலும் போர்கள் நடந்தால்தான் ஆயுத வியாபாரம் சூடு பிடிக்கும். போர்கள் நடக்க தீவிரவாதக் குழுக்கள் தேவை. ஆயுத வியாபாரத்தின் கணிசமான பகுதி, தீவிரவாதத்தை உயிர்ப்போடு வைத்திருக்கவும், வளர்க்கவும் செலவிடப்படுகிறது. உலகின் எந்தப் பகுதியாக இருந்தாலும் சரி, அது அடர்ந்த வனங்களோ, தீவுகளோ, தீவிரவாதக் குழுக்களின் இருப்பிடமோ அந்த நாட்டின் ராணுவம் நுழைய முடியாத இடத்திற்குக்கூட, அமெரிக்க ஆயுத வியாபாரிகள் ‘டோர் டெலிவரி' செய்து வருகிறார்கள். வாழ்க நுகர்வுக் கலாச்சாரம்!

உலகம் முழுவதிலும் உள்ள எரிபொருள் வளத்தைத் தன் வசப்படுத்தி, உலக எரிபொருள் வணிகத்தின் சர்வாதிகாரியாக மாற அமெரிக்க நிறுவனங்கள் துடித்து வருகின்றன. அவர்களைத் தவிர வேறு எந்த நிறுவனத்தையும் சந்தையில் விட்டு வைப்பதில்லை என்பதிலும் அவர்கள் உறுதியாக உள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு நுழைய காத்துக்கிடந்த அமெரிக்கப் படைகளுக்கு வாசல் கதவைத் திறந்து விட்டது, செப்டம்பர் 11 தாக்குதல். இந்தத் தாக்குதல்கூட, அமெரிக்கா தனக்குத்தானே திட்டமிட்டு செய்து கொண்டது என மறுக்க முடியாத வகையில் - பல ஆதாரங்களுடன் புத்தகங்கள், ஆவணப்படங்கள் வெளியாகி உள்ளன. இத்தாக்குதலுக்குப் பிறகு ஆப்கான் எண்ணெய் கிணறுகள் அமெரிக்க வசமாகின. அதற்கு லட்சக்கணக்கில் ஆப்கானியர்கள் பலி அவ்வளவுதான்.

2003 இல் தெற்கு ஈராக்குக்குள் குவைத் வழியாக அமெரிக்கப் படைகள் நுழைந்தபோது, அவர்களின் நோக்கம் வெளிப்படையானதாக இருந்தது. அந்தப் படைகள் சதாம் உசேனின் மாளிகை நோக்கிச் செல்லவில்லை. அவை ருமைலா எண்ணெய் வயல் திசை நோக்கிச் சென்றது. ஈராக்கின் மிகப் பெரிய எண்ணெய் வயல் ருமைலாவில் உள்ளது. அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகள் உள்ளன. அதேபோல் வட ஈராக்கில் உள்ள கிர்குக் எண்ணெய் வயல். அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப் படைகள், இந்த எண்ணெய் கிணறுகளைப் பாதுகாத்து வந்தன. ஈராக் மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் எண்ணெய் குழாய்களைத் தகர்த்து வந்தனர். அந்த சிறப்புப் படை, எண்ணெய் குழாய்களைப் பாதுகாக்க, சிறப்பு மோப்ப நாய்கள் மற்றும் 6,500 வீரர்களை அமெரிக்கா நியமித்தது.

எண்ணெய் அபகரிப்பு, எரிபொருள் மேலாதிக்கம், அத்துடன் உலக நாடுகளில் எல்லாம் மின்சாரம் தயாரித்துத் தருவதாக அமெரிக்க நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் செய்து வருகின்றன. ‘என்ரான்' நிறுவனம் உலகம் முழுவதிலும் பல பித்தலாட்டங்களில் ஈடுபட்டு திவாலாகி கிடக்கிறது. அதே போல் உலகம் முழுவதிலும் உள்ள அணு உலைகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் துடிக்கிறது அமெரிக்கா. அதற்காகப் பல ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, நாடுகளைப் பணிய வைக்கிறது. ‘சர்வதேச அணு ஆற்றல் கழகம்' (IAEA), ‘அணு பரவல் தடை ஒப்பந்தம்' எனப் பல வலைகளை அது விரித்து வைத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில், அமெரிக்காவிற்குக் கிடைத்த சமீபத்திய பெரிய வேட்டை இந்தியா!

அணுவை ஆக்கப்பூர்வமான பணிகளுக்குப் பயன்படுத்துவதற்கான ஆய்வுகளும், அணுகுண்டுகள் தயாரிப்பதற்கான ஆய்வுகளும் ஒரே மரத்தின் இரு கிளைகள் போன்றவை; ஏறக்குறைய அவை ஒன்றே. அணு ஆயுதத்திற்கான கச்சா பொருட்கள் இந்த உலைகளிலிருந்து பெறப்படுகின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகள் போதுமான அளவு அணு ஆயுதங்களைத் தயாரித்து விட்டு, தங்கள் நாட்டில் உள்ள அணு உலைகளை மூடி வருகின்றன. அந்தப் பழைய அணு உலைகளை மூன்றாம் உலக நாடுகளுக்கு, நல்ல விலையில் ஏற்றுமதியும் செய்து வருகின்றன.

மூன்றாம் உலக நாடுகளில் நடைபெறும் எல்லா ஆய்வுகளையும் தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்குதான் ‘சர்வதேச அணு ஆற்றல் கழகம்' உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, எல்லா அணு உலைகளையும் பாதுகாக்கும் பெயரில், தனது ஊழியர்களின் கண்காணிப்பின் கீழ் உலகில் உள்ள பல அணு உலைகளைக் கொண்டு வந்து விட்டது. தன்னுடன் நட்பு பாராட்டும் அல்லது அமெரிக்காவின் விசுவாசம் மிக்க நலவிரும்பிகள், இந்த ஆய்வுகளை மேற்கொள்ளலாம். ஆனால், அமெரிக்காவிடம் நட்புறவு கொள்ளாத நாடுகளை அது தாக்குதலுக்கு உட்படுத்திப் பணிய வைக்கும். அண்மையில் அப்படியான தொடர் அச்சுறுத்தலை ஈரானுக்கு ஏற்படுத்தி வருகிறது அமெரிக்கா. ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்து விட்டால், அது அமெரிக்காவிற்கு ஆபத்து என இஸ்ரேல் தொடர்ந்து புலம்பி வருகிறது.

இந்தியாவில்கூட நாம் நிறைய அணு குண்டுகளை, அணு ஆயுதங்களைத் தயாரித்து புதுதில்லியில் அடுக்கி வைத்து விட்டால், நம்மை உலக நாடுகள் வல்லரசாகக் கருதிவிடும் என்கிற மனோபாவம் நிலவி வருகிறது. பாரதிய ஜனதா கட்சி தொடங்கி அப்துல் கலாம் வரை, இந்த முட்டாள்தனத்தை இந்திய மனங்களில் விதைத்து வருகிறார்கள். இருப்பினும், எல்லா நாடுகளுக்கும் இந்த ஆய்வுகளை செய்ய உரிமையிருக்கிறது. ஈரான் ஆக்கப்பூர்வமான பணிகளுக்காகவே ஆய்வு செய்வதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக உள்ளதாகவும் தொடர்ந்து தெரிவித்து வருகிறார் ஈரான் அதிபர் மகமூத் அகமதி நசாத்.

ஈராக்கியர்கள் சிறைச்சாலைகளில் கொடூரமாகத் துன்புறுத்தப்படுவதை அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகையாளர் செய்மர் ஹேர்ஷ், அண்மையில் எழுதியுள்ள கட்டுரையில் அமெரிக்கா ஈரானைத் தாக்குவதற்கான திட்டங்களைத் தயார் செய்து விட்டதாகவும், அணு ஆயுதங்களைப் பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கிறார். அமெரிக்க இங்கிலாந்து படைகள் இதற்கான ஒத்திகையில் ஈடுபட்டதையும் சில பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. அமெரிக்க நாடாளுமன்றத்தையோ, அய்.நா.வையோ கலந்தாலோசிக்காமல் ஆபத்து ஆபத்து எனப் போரிடுவதில் குறியாக இருக்கிறார் ஜார்ஜ் புஷ்.

தொடர்ந்து தடுக்கப்பட வேண்டிய இந்தப் போரை, இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படும் அமெரிக்க வாழ் கூட்டமைப்புதான் தூண்டி வருகிறது. ஆப்கானிஸ்தான், ஈராக்கிற்கு அடுத்ததாக ஈரானை நிர்மூலமாக்கி, வளைகுடா பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இஸ்ரேல் துடிக்கிறது. அமெரிக்க - இஸ்ரேல் பொது நலக்குழு, பலம் வாய்ந்த யூதர்களால் நடத்தப்படுகிறது. அந்தக் குழு ‘அணு ஆயுதங்களுடனான ஈரான் - அமெரிக்காவிற்கு ஆபத்து' என முழுப்பக்க விளம்பரங்களை அமெரிக்க நாளேடுகளில் இடையறாது வெளியிட்டு வருகிறது. ‘சர்வதேச அணு ஆற்றல் கழகம்' ஈரானில் ஆய்வு மய்யங்களை சோதனையிட்டு, அங்கு ராணுவம் தொடர்புடைய ஆய்வுகள் நிகழவில்லை எனத் தெரிவித்துள்ளது. இருப்பினும், இஸ்ரேல் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் அமெரிக்கா போர் திட்டங்களை வகுத்து வருகிறது.

ஈரானில் உள்ள அணு ஆய்வு மய்யங்களைத் தகர்ப்பதுதான் இந்தத் தாக்குதல்களின் மய்யமாக உள்ளது. அனேகமாக அவர்களைப் பணிய வைக்கும் விதமாக முதல் சுற்றில் இந்த ஆய்வு மய்யங்கள் தாக்கப்படலாம். ஆனால், இந்த ஆய்வு மய்யங்களைத் தகர்ப்பது அத்தகைய எளிதான செயல் அல்ல. இந்த ஆய்வு மய்யங்கள் கடுமையான பாதுகாப்பு வளையங்களுக்குள் அமைந்துள்ளன. விமானங்களைத் தகர்க்கும் ஏவுகணைகள், எல்லா திசைகளிலும் வானத்தை துளைத்து நிற்கின்றன. அய்ரோப்பிய நாடுகள், ரஷ்யா, சீனா என அனைவரும் ஒற்றைக் குரலில் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் என வலியுறுத்தி வருகிறார்கள். அமெரிக்காவின் செவிப்பறைகளில் இது விழுமா என்று தெரியவில்லை. இதுபோல் அமெரிக்காவிடம் தாக்குதல் தொடுக்கப்பட வேண்டிய நாடுகளின் நீளமான பட்டியல் உள்ளது.

அமெரிக்காவின் விலங்காண்டித் தனத்திலிருந்து உலக நாடுகளைக் காப்பாற்றியாக வேண்டும். இனி அடுத்தடுத்த பல நாடுகளை அவர்களின் சுயநல பசிக்குப் பலியிட இயலாது. உலகத்து மக்களுக்கு அமெரிக்காவிடமிருந்து விடுதலை வேண்டும். கொன்தன் பே சிறைச்சாலையை மனநலக் காப்பகமாக மாற்றி - அங்கே ஜார்ஜ் புஷ், கண்டலிசா ரைஸ் முதல் ஏரியல் ஷெரோன் வரை அடைத்தால்தான் நாம் விடுதலை பெற முமுடியும்.

உலை வைக்கும் அணு உலை

Bushஅணு உலைகளின் பாதுகாப்பு தொடர்புடைய சர்ச்சைகள், உலகம் முழுவதிலும் நடந்து வரும் நேரமிது. நம் நாட்டிலுள்ள அணு உலைகள் பாதுகாப்புடன்தான் இயங்குகிறதா என்பது கேள்விக்குரியதே! தொடர்ந்து நாளிதழ்களில் வரும் பல செய்திகள், கட்டுரைகள் கவலையளிப்பதாகவே உள்ளன. சுனாமி வந்தபொழுது கல்பாக்கத்தில் நிகழ்ந்த விபத்துகள் அனைத்தையும் மூடி மறைத்து விட்டார்கள். ‘தெகல்கா'வில் மட்டும் ‘அணுக்கதிர்வீச்சு சுனாமி' என்ற உதயகுமாரின் கட்டுரை நமக்கு வெளிச்சத்தைக் காட்டியது.

கல்பாக்கத்தில் தற்சமயம் 500MW (FBR) துரித ஈனுலை கட்டப்பட்டு வருகிறது. அந்த உலைக் கட்டுமானப் பணிகளை ‘கேமன் இந்தியா லிமிடெட்' செய்து வருகிறது. பெரிய அணைகள் கட்டுவது, சாலைகள் போடுவது, பாலங்கள் கட்டுவது எனப் பல துறைகளில் கட்டுமானப் பணிகளை அந்த நிறுவனம் நாடு முழுவதிலும் செய்து வருகிறது. பிரபல நடிகர் அமிதாப்பச்சனின் நிழல் நிறுவனமிது. மொத்த அணு உலையின் மதிப்பு 6,000 கோடி. இதில் 900 கோடி ரூபாய் மதிப்புடைய வேலைகள் ‘கேமன் இந்தியா' வசமுள்ளன.

‘கேமன் இந்தியா'வின் கீழ் 20 ஒப்பந்தக்காரர்கள் மொத்தம் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலையில் அமர்த்தியுள்ளார்கள். தினக்கூலிகளான இவர்கள் பெரும் பகுதி ஒரிசா, பீகாரை சார்ந்தவர்கள். 4,000 ரூபாய் மாதச் சம்பளம் என வாக்குறுதியளிக்கப்பட்டு, இவர்களை இங்கு அழைத்து வருகிறார்கள். ஆனால், கல்பாக்கம் வந்த பிறகு இங்குள்ள அதிகாரிகள், சம்பளம் பற்றிய பேச்சை எடுப்பதில்லை. சில்லரை செலவுகளுக்கு மட்டும் ஏதாவது கிடைக்கும். ஊருக்குச் செல்பவர்களுக்கு மட்டும் அவர்களுக்கு சேர வேண்டிய தொகையில் 50 சதவிகிதம் கிடைக்கும்.

இந்தத் தொழிலாளர்கள் அனைவரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது அங்குள்ள பாதுகாப்பு விதி. 700 தொழிலாளர்களுக்கும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவச் சான்றிதழ் தேவை. கல்பாக்கத்திலுள்ள மருத்துவர்களில் சிலர் ‘கேமன் இந்தியா'வுடன் மிகுந்த ஒத்துழைப்புடன் உள்ளார்கள். எந்தத் தொழிலாளரையும் பார்க்காமல்கூட, எல்லா படிவங்களிலும் முத்திரையுடன் கையெழுத்திடுகின்றனர். நாம் விசாரித்த அளவில் கல்பாக்கத்தில் உள்ள மருத்துவர்களில் புகழேந்தி மட்டுமே தொழிலாளர்களை நேரடியாக சோதித்து சான்றுகள் வழங்குகிறார்.

பிறகு கல்பாக்கத்தில் உள்ள ‘கேமன் பாதுகாப்பு' அலுவலகத்தில், இரண்டாம் கட்ட சோதனை நிகழ்த்தப்பட வேண்டும். ஆனால், அங்கு மருத்துவரே கிடையாது. கம்பவுண்டர் தான் ரத்த அழுத்தத்தை சோதித்து படிவங்களை பூர்த்தி செய்வார். அடுத்த கட்ட சோதனை, பாவனி பாதுகாவல் மய்யத்தில் நிடைபெறும். படிகளில் ஏறுவது, ஏணியில் ஏறுவது, சாரங்களில் ஏறுவது, உயரத்தில் நடப்பது, நடந்து கொண்டே பேசுவது, கயிற்றில் தொங்குவது என்று பல நேரடி சோதனைகள் அங்கு கட்டாயம் உண்டு. இந்த சோதனைகளைக் கடந்தால்தான் நீங்கள் மேலே செல்ல அனுமதி அளிக்கப்பட்டு, உயரமான தளங்களில் பணிக்குச் செல்லலாம். பாதுகாப்பு கவசங்கள், உடை, இன்சூரன்ஸ் என எதுவும் இவர்களுக்கு இல்லை.

அடித்தளத்திலிருந்து 30 மீட்டர் உயரம் வரை தரை அனுமதி பெற்று நீங்கள் பணி புரியலாம். உயர அனுமதி இருந்தால்தான் இதற்கு மேலான தளங்களுக்கு செல்ல நீங்கள் அனுமதிக்கப்படுவீர்கள். ஆனால், கேமன் இந்தியாவின் அதிகாரிகள் அனைவரையும் உயரமான தளங்களில் பணிபுரிய அனுமதிக்கிறார்கள். பலர் மயங்கி விழுவதும், இறந்து போவதும் வாடிக்கையாகிவிட்டது.

இவர்கள் கடலோரத்தில் தகரக் கொட்டகைகளில் தங்க வைக்கப்படுகிறார்கள். மாசுபட்ட தண்ணீர், எந்த சுகாதார வசதிகளுமற்று மனிதர்கள் வசிக்க முடியாத அவலநிலை. இத்தனை கோடி செலவு செய்யப்படும் இடங்களில், இந்தப் பெரும் தொகைக்குள் எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளுமே அடக்கம். இருப்பினும் அவலமும் அலட்சியமும் தொடர்கிறது. கல்பாக்கத்திலுள்ள அணுஉலை, ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளதாம்; இந்த உலை சர்வதேச அணு ஆற்றல் கழக கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் வராது. இந்திய ராணுவம் தொடர்புடைய உலையாகக் கருதப்படும் கல்பாக்கத்தின் கதியே இப்படி என்றால், இனி சிவிலியன் உலைகளின் (Civilian Reaction) கதி என்னவாக இருக்குமோ?

இந்தியாவிலுள்ள அணு உலைகள் எல்லாம் யுரேனியம் 238அய் எரிபொருளாகக் கொண்டவை. யுரேனியம் 238க்கு நாம் வெளிநாடுகளை நம்பித்தான் இருக்கிறோம். அண்மையில் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றபொழுதுகூட, யுரேனியம் தடையற்று பெறுவதற்கான பல தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார். இப்படி தொடர்ந்து கையேந்தும் நிலை உள்ளதால், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மய்யம் உருவாக்கப்பட்டு, அங்கு பல தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு யுரேனியத்திற்கு மாற்றான எரிபொருள் கண்டுபிடிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. துரித ஈனுலையில் எரிபொருளாக புளுடோனியம் டை ஆக்சைடு மற்றும் யுரேனியம் டை ஆக்சைடு பயன்படுத்துவது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதில் வெற்றி கண்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக அங்கு சோதனை உலையாக இயங்கி வருகிறது. அது 24MW மின்சாரம் தயாரிக்கும் சிறிய சோதனை உலை.

பொதுவாக உலைகளின் குளிர்ச்சிக்கு நீரைப் பயன்படுத்தும்போது, இதில் சோடியம் சேர்க்கிறார்கள். பிரான்ஸ், ஜப்பானுக்கு அடுத்த படியாக இது போன்ற உலை இந்தியாவில் மட்டுமே நிர்மாணிக்கப்பட உள்ளது. இது முற்றிலும் நம் சொந்த தயாரிப்பு. இதை இயக்குவதற்கு நமக்கு யாருடைய தயவும் தேவையில்லை. கூடங்குளம் உலை அப்படி அல்ல. அது தொழில்நுட்பம் முதல் எரிபொருள் வரை ரஷ்யாவின் உதவியின்றி எந்தக் காலத்திலும் அங்கு அணுகூட அசையாது. எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். அணு உலைக்கும், அணு குண்டுக்கும் விபத்து ஏற்பட்டால் ஏதாவது வித்தியாசம் இருக்குமா?

-அ.முத்துக்கிருஷ்ணன்
Pin It