பூமி உருண்டை என்பதை முதன்முதலாகப் பார்த்த மனிதன் ரஷ்யாவின் யூரிகாகரின்தான். இவர்தான் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர். விண்வெளியில் இருந்து பூமியையும் அதன் உருண்டை வடிவத்தையும் முதன்முதலாகப் பார்த்த பெருமை இவரையே சாரும்.

20 நிமிடத்தில் நான்கு செய்தித்தாள்

 அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜான் எப்.கென்னடி தினமும் 20 நிமிடங்கள் மட்டுமே செய்தித்தாள்கள் படிக்க ஒதுக்கி வந்தார். இந்த குறுகிய நேரத்திற்குள் அவர் நான்கு செய்தித்தாள்களை படித்துவிடுவார் என்பது ஆச்சரியமான செய்தி.

தோல் தொழிற்சாலை தலைமை செயலகமாக மாறிய விந்தை

 விஜயநகர நாயக்க மன்னர்களின் கடைசி மன்னரான சந்திரகிரி மன்னரிடம், ஆங்கிலேயர் ஆட்டுத்தோலை பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு இடம் கேட்டு வாங்கினார். அந்த இடத்தில் பின்னாளில் புனித ஜார்ஜ்கோட்டையான தற்போதைய தலைமைச் செயலகம் அமைந்துள்ளது.

மன்னர்களின் அடையாளப்பூ

 பண்டைய தமிழ் மன்ன‌ர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு அடையாளமாக சின்னங்களும், பூக்களும் வைத்திருந்தனர். சேர மன்னன் வில் அம்பு சின்னத்தையும், பனம் பூவையும், சோழ மன்னன் புலிச் சின்னத்தையும், அத்திப்பூவையும், பாண்டி மன்னன் மீன் சின்னத்தையும், வேப்பம்பூவையும் அடையாளமாக வைத்திருந்தனர்.

- வைகை அனிஷ்