(சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட பதிப்பு,  பகுதி-11)

•              ராஜபக்சே - ராணுவத்தைப் போலவே ராஜீவ் அனுப்பி வைத்த ‘அமைதிப் படையும்’ விடுதலைப் புலிகள் தலைவர், உலகத் தமிழினத்தின் தலைவர் பிரபாகரனுக்குத் தான் குறி வைத்தது. விடுதலைப் புலிகளின் படைப் பிரிவான 14 ஆம் தளத்தில் ராஜீவ் காந்தியின் படை பிரபாகரனை சுற்றி வளைத்தபோது அவர் தனது மெய்க்காப்பாளர்களால் காப்பாற்றப்பட்டுவிட்டார் என்று ராஜிவ் சர்மா எழுதுகிறார். ராஜீவ் காந்தியும் பிரபாகரன் தலைக்குக் குறி வைத்தார். பிரபாகரன் தலையைக் கொண்டு வராதவரை, தான் அனுப்பி வைத்த படையின் தாக்குதல் நிற்காது என்று சபதம் போட்டார். தன்னுடைய இந்த ‘கொலை வெறி’யை வெளிப்படையாகக் கூறவும், ராஜீவ் காந்தி தயங்கிடவில்லை. தி.மு.க.வின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் முரசொலி மாறனிடம் ராஜீவ் காந்தி, இதை நேரில் தெரிவித்தார். இந்த செய்தியை பல ஏடுகள் பதிவு செய்துள்ளன. ஜார்ஜ் பெர்னான்டஸ் வெளியிட்ட ‘தி அதர்ஸைடு’ ஆங்கில மாத இதழ் இது பற்றி வெளியிட்ட செய்தி: 

               “And that Prime Joker who is the Prime Minister had temerity to tell the D.M.K. Member of Parliament, Murasoli Maran, that the Srilankan operation will go on till he has the head of the LTTE Chief Prabakaran.” 

                “Maran was shocked at the way the Prime Minister gesticulated and pointed to the floor at his feet where he wanted to see the severed head of Prabakaran.” 

                “தலைமை ‘காமடியனான’ நமது தலைமை அமைச்சர் (ராஜீவ் காந்தி) தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினரான முரசொலி மாறனிடம், என்னிடம், பிரபாகரன் தலை கொண்டுவரப்படும் வரை ராணுவத்தின் இலங்கை தாக்குதல் தொடரும் என்று திமிருடன் கூறினார்.” 

                “ராஜீவ் காந்தி இதை வெளிப்படுத்திய முறை முரசொலி மாறனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தரையை நோக்கி தனது காலைக் காட்டி, இதில், பிரபாகரன் தலையைக் கொண்டு வருவதே எனது விருப்பம் என்று ராஜீவ் கூறினார்.” (“The Other Side” மாத ஏடு, ஏப்.1988) 

•              இனப்படுகொலை - போர்க் குற்றங்களை நடத்திய ராஜபக்சே, போரை நிறுத்த வேண்டும் என்று எத்தனையோ கோரிக்கைகள் வந்தும் கேட்கவில்லை. போரைத் தொடர்ந்தார். போரை நிறுத்த வேண்டாம் என்று சோனியாவின் ஆலோசனைக் குழு அறிவுறுத்தி போரை நடத்தவே உதவியது. இது எல்லோருக்கும் தெரியும். இதுவும்கூட ராஜீவ் காந்தியின் ‘அமைதிப் படை’ கற்றுத் தந்த பாடம் தான். 

                விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்களைப் பறிப்பதாகக் கூறி, பொது மக்கள் மீது ஷெல்களை விமானங்கள் மூலம் குண்டுகளை ராஜீவ் காந்தியின் அமைதிப்படை வீசியபோது, “வேண்டாம்; போரை நிறுத்துங்கள்; பொது மக்களைக் கொல்லாதீர்கள்” என்று பல வேண்டுகோள்கள் முன் வைக்கப்பட்டன. அத்தனை வேண்டுகோள்களையும் ராஜீவ்காந்தி புறந்தள்ளினார். 

•              யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளின் தலைவர் பிரபாகரன், பிரதமர் ராஜீவுக்கு - போரை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்து 1987 அக். 14 ஆம் தேதி ஒரு கடிதம் எழுதினார். “இந்திய ராணுவத்தின் கண்மூடித்தனமான ஷெல் வீச்சு, விமானக் குண்டு வீச்சு காரணமாக, யாழ்ப்பாணத்தில் இதுவரை 150 அப்பாவி மக்கள் பலியாகி விட்டனர். 500 பேர் படுகாயமடைந்துள்ளனர். சர்வதேச ஊடகவியலாளர்கள், மனித உரிமை அமைப்புகளை யாழ்ப்பாணத்துக்கு அனுப்புங்கள், நிலைமை மிக மோசமாகி வருகிறது; ‘ஜனநாயக நாடு’ என்று கூறிக் கொள்ளும் இந்தியா, தனது முடிவுகளை எங்கள் மீது துப்பாக்கி முனையில் திணிப்பது நியாயமல்ல. இந்த ஒப்பந்தத்தில் எங்களுக்கு முழுமையான உடன்பாடு இல்லை என்றாலும்கூட ஏற்றுக் கொண்டோம். நாங்கள், பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருக்கிறோம். உடனடியாக ராணுவத் தாக்குதலை நிறுத்துங்கள்” என்று, உருக்கமான வேண்டுகோளை பிரபாகரன் விடுத்திருந்தார்; ராஜீவ் புறக்கணித்தார். 

•              தமிழ்நாட்டில் போர் நிறுத்தம் கோரி அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டங்கள், கடை அடைப்புகள் நடந்தன. ராஜீவ் கவலைப்படவில்லை. 

•              பொது நிலையில் இருந்த கிறிஸ்தவ பாதிரியார்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் போரை நிறுத்த ராஜீவ் காந்திக்கு வேண்டுகோள் விடுத்தார்கள்; ராஜீவ் காந்தி நிராகரித்தார். 

•              பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது, உலகம் முழுதும் ஆக்கிரமிப்பு, ராணுவத்தினர் செயல்பாடுகளாகவே உள்ளன. இலங்கை ராணுவமும் அதை செய்தது; ராஜீவ் காந்தியின் ‘அமைதிப் படை’யும் அதை செய்தது. 

•              1988 ஜூலை வரை ராஜீவ் காந்தி ராணுவத்தால் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்கள் - 5700. 

•              பாலியல் வன்கொடுமைக்கு உள்ளடாக்கப்பட்ட பெண்கள் - 780. (ஆதாரம்: தமிழ் வாய்ஸ் இன்டர்நேஷனல், ஜூலை 1988) 

•              ராஜபக்சே ராணுவம், ரசாயனக் குண்டுகளை வீசி, மக்களைக் கொலை செய்தது அல்லவா? இதற்கு வழிகாட்டியதும் ராஜீவ் காந்தியின் ‘அமைதிப் படை’ தான்! முல்லைத் தீவு மாவட்டத்தில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளான அலப்பில், நாயாறு, செம்மலை, குமுலமுனை பகுதிகளில் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட 250 கிலோ ‘நாபாம்’ குண்டுகளை இந்திய அமைதிப் படை வீசியது. (ஆதாரம்: தமிழ் வாய்ஸ் இன்டர்நேஷனல், ஜூலை 1988) 

-               சாட்சிகளற்ற போர்

-               சர்வதேச தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள் வெளியேற்றம்.

-               மருத்துவமனைகள் மீது குண்டு வீச்சு

-               நேபாம் - குண்டு வீச்சு

-               ஊடகங்கள் மீது தாக்குதல்

-               போர் நிறுத்தப் பகுதிகளில் குண்டு வீச்சு

-               அப்பாவி மக்கள் மீது குண்டு வீச்சு

-               பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குதல்

-               உலகத் தமிழினத் தலைவர் பிரபாகரனை தீர்த்துக் கட்டும் முயற்சி

என்ற அத்தனை போர்க் குற்றங்கள் இனப் படுகொலைக்கு வழி காட்டியதே ராஜீவ் காந்தியின் அமைதிப் படைதான். இத்தகைய கொலைப் படை தோல்வி அடைந்து விட்டது; அவமானத்துக்குள்ளாகிவிட்டது என்று ராஜீவ் சர்மா கூறுவதும், தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரனை ‘இரக்கமற்றவர்’, ‘சுயநலவாதி’ என்று குற்றம்சாட்டுவதும், நேர்மையான விமர்சனமாக இருக்க முடியுமா? 

நேர்மையும், கட்டுப்பாடும், கொள்கை உறுதியும் கொண்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதும், உலகத்தின் கவனத்தையே ஈர்த்த மாவீரர் பிரபாகரன் பற்றி, தனிப்பட்ட முறையில் பல்வேறு அவதூறுகளை, ராஜீவ் சர்மாவின் நூல் அள்ளி வீசுகிறது. அவற்றுக்கெல்லாம் நாம் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை. 

பிரபாகரனை சந்திக்க விரும்புவோர் கண்களைக் கட்டியே தான் அழைத்துச் செல்வார்கள் என்றும்; பிரபாகரன் தனது துணைவியாரை கட்டாயப்படுத்தி கடத்தி திருமணம் செய்து கொண்டார் என்றும்; விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உலகத் தமிழர்களிடம் கட்டாயப்படுத்தி, மிரட்டி, நிதி திரட்டப்படுகிறது என்றும்; பாம்பின் விஷத்தை உடலில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றப்பட்டு, விஷம் பொருந்திய பாம்புகளையே கொல்லக்கூடிய ‘விஷப் பெண்களை’ப் போன்றவர்களே பெண் கரும்புலிகள் என்றும்; ராஜிவ் சர்மா கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார். 

ராஜீவ் காந்தியை கொலை செய்தது விடுதலைப் புலிகள்தான் என்று ராஜிவ் சர்மா உறுதியான முடிவுக்கு வந்து விடுகிறார். ஆனால, ‘சர்வதேச சக்திகளின்’ ‘கூலிப்படையாக’ செயல்பட்டார்கள் எனறு இழித்துரைக்கிறார். இராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையே நேர்மையாக இல்லாதபோது அந்த விசாரணையின் தீர்ப்பை எப்படி ஏற்க முடியும் என்ற கேள்விக்கு ராஜீவ் சர்மாவிடம் பதில் இல்லை. 

ராஜீவ் கொலை தொடர்பாக டில்லியில் பல ரகசிய கோப்புகள் காணாமல் போயின. அந்தக் கோப்புகள் ஏன் மறைந்தன? என்ற கேள்விக்கு விடை இல்லை. பிரதமர் நரசிம்மராவ் ஆட்சியில் பல முக்கிய அரசாங்க கோப்புகள் காணாமல் போய்விட்டன; அந்தக் கோப்புகள் விவரம்: 

1.             கோப்பு எண். 8-1-wr/UJ/90/Vol.III நவம்பர் 89-லிருந்து - ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அதிகாரிகள் எழுதிய குறிப்புகளைக் கொண்ட கோப்பு: பிரதமர் அலுவலகத்திலிருந்து 1991 ஆம் ஆண்டில் இது காணாமல் போய்விட்டது. பிறகு இந்தக் கோப்பை சரிப்படுத்தி ஒட்டு வெட்டு வேலைகளைச் செய்து ஜெயின் கமிஷன் முன் நரசிம்மராவ் ஆட்சி சமர்ப்பித்தது. (இப்படி கோப்புகளைத் திருத்தி அமைப்பது சட்ட விரோதமான நடவடிக்கையாகும்) 

2.             கோப்பு எண். 1/12014/5/911 - a.s./D111 நீதிபதி வர்மா மற்றும் நீதிபதி ஜெயின் கமிஷன்களின் விசாரணை வரம்புகள் பற்றிய இந்தக் கோப்பு, 1995 முதல் காணவில்லை. 

3.             சந்திராசாமி மற்றும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி ஆகியோருடன் வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் தொடர்பு கொண்டு பேசியபோது இடைமறித்துக் கேட்கப்பட்ட தகவல்களைக் கொண்ட இந்தக் கோப்பை, பிரதமர் அலுவலக மூத்த அதிகாரிகளே அழித்து விட்டனர். 

4.             1987 இல் ராஜீவ் காந்தியைக் கவிழ்க்க - அன்றைய குடியரசுத் தலைவர் ஜெயில்சிங் - சந்திராசாமி ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி இந்திய உளவு நிறுவனம் (அய்.பி) கண்டறிந்த உண்மைகளும், பரிந்துரைகளும் அடங்கிய இந்த கோப்பு காணவில்லை. 

5.             ராஜீவ் கொலை பற்றி உளவு நிறுவனங்கள் உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவானிடம் தெரிவித்த கருத்துக்கள், இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் அடங்கிய கோப்பு காணப்படவில்லை. 

6.             ராஜீவை சென்னையில் கொலை செய்யலாமா? அல்லது டில்லியில் கொலை செய்யலாமா? என்ற கேள்விகளோடு, 1991 ஏப்ரல் 20 ஆம் தேதி பரிமாறிக் கொள்ளப்பட்ட ஒரு ஒயர்லெஸ் தகவலை உளவுத் துறை இடைமறித்துப் பதிவு செய்தது. இந்த விவரங்கள் அடங்கிய கோப்பு காணவில்லை. 

7.             நரசிம்மராவ் அரசாங்கமே - ஜெயின் கமிஷன் விசாரணையை நிறுத்தி விடுவதற்கான முயற்சிகளில் இறங்கியது. இது பற்றிய விவரங்களடங்கிய கோப்பும் காணவில்லை. 

இந்தக் கோப்புகள் அனைத்தும் மிக முக்கிய தகவல்களைக் கொண்டவைகளாக இருந்தாலும், ஜெயின் கமிஷன் முன் - நரசிம்மராவ் அரசு, இவைகளை சமர்ப்பிக்கவில்லை. அதோடு இந்தக் கோப்புகள் - சர்வதேச அரசியல் தரகராகத் திகழும் சந்திராசாமிக்கு, ராஜீவ் கொலையில் இருந்த தொடர்புகளை அம்பலப்படுத்தும் கோப்புகளாகும். 

ராஜீவ் கொலை தொடர்பாக நடந்த பல்வேறு சதி முயற்சிகள் வெளியே தெரிய வேண்டாம்

என்ற நோக்கத்தோடுதான், இந்தக் கோப்பில் அடங்கியிருந்த முக்கிய சாட்சியங்கள் மறைக்கப்பட்டன என்ற, உளவுத் துறை அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பேசும்போது ஒப்புக் கொண்டார்கள் என்ற தகவல்களை ‘அவுட் லுக்’ ஆங்கில இதழ் (24.11.97) வெளியிட்டது.

(தொடரும்)

Pin It