என்ன இந்தியாவுக்கு நரம்பு மண்டலமா?

மனித உடலுக்கு உள்ளே இருக்கின்ற, நரம்புகளின் வழியாக, குருதி பாய்ந்துகொண்டே இருக்கின்றது. அதுதான், நம் உயிரின் ஆதாரமாக விளங்குகின்றது; நம்மை இயக்குகின்றது. அந்தக் குருதி ஓட்டம் நின்று போகுமானால், உயிர் பறந்து விடும். அதுபோல, இந்திய நாட்டை ஒரு உடலாக உருவகப்படுத்திப் பார்த்தால், அதன் நரம்பு மண்டலமாகத் திகழ்வது, தண்டவாளங்கள்தாம். இன்றைக்கு, இந்தியாவில் தொடர்வண்டிகள், இரண்டு நாள்கள் இயங்காமல் நின்றுபோனால், ஒட்டுமொத்த இந்தியாவின் இயக்கமும் நின்றுபோய்விடும். அந்த அளவுக்கு, இந்தியாவின் உயிர்க்கோடாகத் திகழ்வது, இந்திய ரயில்வே எனப்படும் இந்தியத் தொடர்வண்டித்துறை ஆகும்.

இந்தியா முழுமைக்கும் இப்போது, 1,15,000 கிலோமீட்டர்கள் தொலைவுக்கு இருப்பு வழித்தடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பெரியதும், சிறியதுமாக, 7500 தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன. இந்தியாவில், குறுக்கும் நெடுக்குமாக ஒரு நாளைக்கு, இரண்டு கோடி மக்கள் தொடர்வண்டிகளில் பயணிக்கின்றார்கள். 2.8 மில்லியன் டன் எடையுள்ள பொருள்களைச் சுமந்து செல்கிறது. ஆண்டு வருமானம் 1 லட்சத்து 4 ஆயிரம் கோடிகள். இந்தியாவிலேயே தொடர்வண்டித்துறைக்கு மட்டும்தான், தனி வரவு செலவுத் திட்டம், இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று, இந்தியத் தொடர்வண்டித் துறையில், 14 இலட்சம் ஊழியர்கள் பணி ஆற்றுகின்றார்கள். ஒவ்வொரு நாளும் பத்து ஆயிரம் வண்டிகள் ஓடுகின்றன. 2012 மார்ச் வரையிலும், 22,224 கிலோமீட்டர் தொலைவு, மின்மயமாக ஆக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில், முதன்முதலாக இருப்புவழித் தடங்கள் எப்போது அமைக்கப்பட்டன என்று கேட்டால், பம்பாயில் இருந்து தானேவுக்கு என்று பள்ளிப்பாடத்தில் படித்ததைப் பட்டெனச் சொல்லி விடுவார்கள். ஆனால், இரண்டாவது தடம் எங்கே அமைக்கப்பட்டது தெரியுமா?

நமது சென்னையில்தான். ஆம்; சென்னை இராயபுரம் தொடர்வண்டி நிலையம்தான், தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதலாவது தொடர்வண்டி நிலையம் ஆகும். அங்கிருந்து, அரக்கோணம் வரையிலும் இந்த வழித்தடம் அமைக்கப்பட்டது.

1867 ஆம் ஆண்டு ஜூன் மாதம், அலஹாபாத்-ஜபல்பூர் வழித்தடத்தில் தொடர்வண்டிகள் ஓடத் துவங்கின.

இராபர்ட் மெய்ட்லேண்ட பிரரெடன் (Robert Maitland Brereton) என்ற பொறியாளர்தான்,சுமார் 6400 கிலோமீட்டர்கள் தொலைவுக்கு தொடர்வண்டித் தடங்களை அமைத்தார்.

1870 மார்ச் முதல் நாளில் இருந்து, மும்பை-கொல்கத்தாவுக்கு இடையே தொடர்வண்டிகள் ஓடத் துவங்கின. இந்த வழித்தடம் அமைக்கப்பட்ட செய்தியை அறிந்து, 80 நாள்களில் உலகத்தைச் சுற்றி வரத் திட்டமிட்ட ஜூல்ஸ் வெர்ன் தாம் எழுதிய நூலில் (Around the world in 80 days), இந்தியாவைக் கடக்கையில் இந்த வழித்தடத்தில், தொடர்வண்டித் தடத்தில் பயணிப்பது என்று அவர் திட்டமிடுகிறார்.

தொடர்வண்டி பயணச்சீட்டு முன்பதிவில் கவனமாக இருக்க வேண்டும். அதிகாலை 2 மணி என்பது தெரியாமல் அடுத்த நாள் போய் நிற்பவர்கள் உண்டு. ஒருமுறை திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு வந்த வட இந்திய பயணக்குழுவினர் அப்படி ஒரு நாள் தாமதமாக வந்து, சென்னை தொடர்வண்டி நிலையத்தில் சிக்கிக் கொண்டது பரிதாபமாக இருந்தது.

1880 ஆம் ஆண்டு, 14,500 கிலோமீட்டர் தொலைவு;

மார்ச் 2012 நிலவரப்படி, 2,29,381 சரக்குப் பெட்டிகள்; 59,713 பயணிகள் பெட்டிகள்; 9,213 என்ஜின்கள், இந்தியத் தொடர்வண்டித் துறையிடம் உள்ளன. தொடக்கத்தில், இருப்புவழி தண்டவாளங்கள், பெட்டிகள், என்ஜின் எல்லாமே, இங்கிலாந்து நாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டன. 1895 ஆம் ஆண்டு முதல் என்ஜின்கள் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டன. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பல வணிக நிறுவனங்கள், இந்தியத் தொடர்வண்டித்துறையில் முதலீடு செய்தன. தொடக்கத்தில், Great Indian Peninsular Railway என ஒரு நிறுவனம் ஆனது. 1900 ஆம் ஆண்டு முதல், அந்த நிறுவனத்தை அரசே கையப்படுத்திக் கொண்டது.

1896 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் இருந்து பொறியாளர்களும், என்ஜின்களும், உகாண்டா நாட்டில் தொடர்வண்டித் தடம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

1905 ஆம் ஆண்டு தொடர்வண்டித்துறை வாரியம் தொடங்கப்பட்டது.

1920 ஆம் ஆண்டிலேயே, 61,220 கிலோமீட்டர்கள் தொலைவுக்கு இந்தியாவில் தொடர்வண்டித் தடங்கள் அமைக்கப்பட்டு விட்டன.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவில் நிலவிய பெரும்பஞ்சம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் விளைவாக, இந்தியத் தொடர்வண்டித்துறையும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்தியாவில் இருந்து 40 விழுக்காடு, மத்திய கிழக்கு நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. தொடர்வண்டித்துறைக்காக இயங்கிவந்த பல தொழிற்கூடங்களை ஆயுதங்கள் வடிக்கின்ற கூடங்களாக அரசு மாற்றியது.

1946 ஆம் ஆண்டு, இந்தியத் தொடர்வண்டித் துறையை, முழுமையாக இந்திய அரசு கையப்படுத்திக் கொண்டது.

தற்போது, 68 கோட்டங்கள் (divisions) 17 zones உள்ளன. ஐசிஎஃப், சென்னை, கபூர்தலா, ரே பரேலி (சோனியா காந்தி தொகுதி) ஆகிய இடங்களில், பெட்டிகள் கட்டப்படுகின்றன. பொன்மலையில், பெங்களூரில், சப்ரா (லல்லு பிரசாத் தொகுதி) ஹாஜிபூர் (ராம்விலாஸ் பஸ்வான் தொகுதி) ஆகிய இடங்களில் தொடர்வண்டிகளுக்கான சக்கரங்கள் வடிக்கப்படுகின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த ஓ.வி.அழகேசன், நேரு அமைச்சரவையில் தொடர்வண்டித்துறையின் இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். அப்போது தமிழகதில் அரியலூரில் தொடர்வண்டி பாலம் உடைந்து, ஆற்றில் விழுந்த விபத்தில், 26 பேர் இறந்தனர். அதற்குப் பொறுப்பு ஏற்று, அப்போதைய தொடர்வண்டித் துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகினார்.

டெல்லியில் உள்ள தொடர்வண்டி அருங்காட்சியகத்தில் ரயில் மியூசியம்

1951 ஆம் ஆண்டில், 2,05,596 சரக்குப் பெட்டிகள்; 1980 ஆம் ஆண்டு மார்ச் மாதம், 4,05,000 சரக்குப் பெட்டிகள் இருந்தன.

வழிகள்:

அகன்ற வழி (broadcage) இரு தண்டவாளங்களுக்கு நடுவில் உள்ள இடைவெளி 5 அடி 6 அங்குலம். (1676 மில்லிமீட்டர்கள்);
மீட்டர் (பொதுமை) வழி - 1000 மிமீ
குறுகிய வழி -762 மிமீ

இப்போது இந்தியாவில் உள்ள தண்டவாளங்களில் 75 முதல் ஆகக் கூடுதலாக 160 கிலோமீட்டர்கள் வேகத்தில் தொடர்வண்டிகளை இயக்க முடியும்.

இந்தியாவில் முதன்முதலாக, 1984 அக்டோபர் 24 ஆம் நாள் முதல், கொல்கத்தாவில்தான் தரைக்கு அடியில் எஸ்பிளனேடு முதல் பொவானிபூர் வரையிலும், தொடர்வண்டிகள் ஓடத் துவங்கின. ஒருவழித்தடம்தான். விரிவாக்கப் பணிகள் மிகவும் மந்தமாகவே நடைபெற்று வந்தன. படிப்படியாக, இருவழித்தடமாகி, 2010 முதல், வடக்கே டம்டம் நிலையத்தில் இருந்து தொடங்கி, தெற்கில் உள்ள கவி சுபாஷ் (நியூ கேரியா) நிலையத்துக்கு இடையில், 25 கிலோமீட்டர்கள் தொலைவுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கொல்கத்தாவில், ஐந்து வழித்தடங்களில், தரைக்கு அடியில் தொடர்வண்டித் தடங்கள் அமைப்பதற்காக, எழுபதுகளிலேயே திட்டம் வகுக்கப்பட்டது. முப்பது ஆண்டுகள் ஆகியும், ஒருவழித்தடத்தில் மட்டுமே பணிகள் நிறைவு பெற்று உள்ளன. இப்போது, மேலும் மூன்று வழித்தடங்களில் மட்டுமே பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியத் தலைநகர் தில்லிக்கு அருகில் உள்ள, ஹரியானா மாநிலத்தின் குர்காவ்ன், உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா, காசியாபாத் ஆகிய நகரங்களுக்கு இடையில், தில்லி மெட்ரோ தொடர்வண்டித் தடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மொத்தத் தொலைவு 183.69 கிலோமீட்டர்கள். 142 நிலையங்கள். தரைக்கு அடியில் 35; தரையில் 5; மற்றவை, மேம்பாலங்களின் மீது அமைந்து உள்ளன. நாள்தோறும், காலை 6.00 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், சுமார் 2700 முறை, சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை, கருநீலம் என ஐந்து வழித்தடங்களிலும், விமான நிலையத்தை இணைக்கின்ற தனி வழி ஒன்று என ஆறு வழித்தடங்களில், வண்டிகள் ஓடுகின்றன.

மும்பை, பெங்களூருவில் தரையடி வண்டிகள் கிடையாது. முழுமையும் பாலங்களின் மீதே ஓடுகின்றன. மும்பை மெட்ரோ பணிகள் 2008 ஆம் ஆண்டில்தான் தொடங்கி உள்ளன. 2021 ஆம் ஆண்டில்தான் பணிகள் முழுமையும் நிறைவுபெறுகின்றன. சென்னையில் 45 கிலோமீட்டர் தொலைவுக்கும், பெங்களூருவில் சுமார் 150 கிலோமீட்டர் தொலைவுக்கும் தரையடித் தடங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

- அருணகிரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)