தேவையானவை:

பச்சை அரிசி/பாஸ்மதி அரிசி................2 ஆழாக்கு
இஞ்சி....................................................1 இன்ச் நீளம்
பூண்டு....................................................10 பல்
பெல்லாரி.............................................4
பச்சை மிளகாய்...................................10
புதினா.. தேவையானால்..................கொஞ்சம்
மல்லி தழை.........................................கொஞ்சம்
சீரகம்..................................................1 தேக்கரண்டி
காரட்..................................................1
பீன்ஸ்.................................................8
குடமிளகாய்.....................................1
முட்டைகோஸ்................................கொஞ்சம்
பச்சை பட்டாணி............................1 கப்
டபுள் பீன்ஸ்.......................................1 /2 கப்
உருளைக் கிழங்கு.............................1
நூல்கோல் ..........................................1
தயிர்......................................................2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு..................................1 தேக்கரண்டி
எண்ணெய்......................................... 4 தேக்கரண்டி
நெய்.....................................................4 தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை கல்நீக்கி லேசாய் வறுத்து கழுவி வைக்கவும். பாஸ்மதி என்றால் வறுக்க வேண்டாம். அரிசியை வறுத்தால் குழைவது தவிர்க்கப்படும். இஞ்சி பூண்டை நைசாக அரைக்கவும். பெல்லாரியை நைசாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். எல்லா காய்களையும் அரை இன்ச் நீளத்தில் நறுக்கவும். பீன்சை சாய்வாக சாய்சதுர வடிவில் நறுக்கவும். எந்த காயையும் சேர்க்கலாம்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் போடவும். சீரகம் சிவந்ததும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு லேசாக வதக்கவும். அதிலேயே இஞ்சி, பூண்டு விழு போட்டு, பின் காய்கள்+ உப்பு போட்டு , 5 நிமிடம் வதக்கி எடுத்து வைத்துவிடவும். அடுப்பில் குக்கரை வைத்து, அதில் 5 ஆழாக்குநீர்விட்டு கொதித்ததும், அரிசியைப் போடவும். பின் அதிலேயே, தயிர்+எலுமிச்சை சாறு விடவும்.

சாதம் கொதித்து, நீர் சுண்டி கெட்டியாகி வரும்போது,வதக்கிய காய்கள்+புதினா+நெய் விட்டு கிளறி குக்கரை மூடிவிடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். ஆவி போனதும் திறந்து மல்லி தழை தூவி பரிமாறவும்.

இந்த காய்கறி சீரக சாதம் மசாலா வாசனை இல்லாமல் சூப்பராய் இருக்கும்...! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். காய்களை எளிதாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதற்கு தயிர் பச்சடி, அப்பளம், மல்லி/புதினா துவையல், சிப்ஸ், மாங்காய் ஊறுகாய் இருந்தால், ஒரு கலக்கு கலக்கிடலாம் சாப்பாட்டில்..!

Pin It