solaiyaar damசோலைக் காடுகள் நிரம்பிய நிலப்பரப்பு.

ஈரமும்... ஈரக் காற்றின் இசையும் தேகம் படும் போதெல்லாம்.... கண்களில் திரவியம் பூக்கும். காட்சிகளில் கனவுகளின் தேக்கம்.

"சேடல் டேம்" என்ற பகுதியிலிருந்து சோலையார் அணைக்குச் செல்லும் சாலையை கழுகுப் பார்வையில் பார்த்தால்... பறவை மனம் வாய்க்கும். நீர்த் தேக்கத்தை ஒட்டிய வளைந்த சாலையில்... வனத்தின் நுட்பம் மொய்க்கும்.

சாலக்குடி ஆற்றின் கிளை ஆறான சோலையாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை தான் இந்த சோலையாறு அணை. இது தான் தமிழ் நாட்டில் மிக உயரமான அணை. கிட்டத்தட்ட 100 மீட்டருக்கு மேல் உயரம். 60களில் ஆரம்பித்து 1971ல் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு சோலைக் காடுகள் அதிகம் உள்ளதாலும், அதன் மத்தியில் கட்டப்பட்டதாலும் இந்த அணைக்கு அதே பெயரை வைத்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் வால்பாறையைச் சுற்றி எங்கு மழை பெய்தாலும் இந்த அணைக்குத் தண்ணீர் வரும் வகையில் வடிவமைக்கப்பட்ட அணைக்கான... திட்டமிடுதலும்.... உருவாக்கமும் மிக அற்புதமான வேலைப்பாடுகளைக் கொண்டிருக்கிறது. மனிதன் மிக ஆழமாக சிந்திக்கும் இயற்கையின் வரம் என்பது இங்கு மீண்டும் ஒரு முறை ஊர்ஜிதமாகிறது.

கிட்டத்தட்ட சுற்றுலாத் தளம் போலத் தான் பார்க்கப் படுகிறது. எங்கிருந்தெல்லாமோ சுற்றுலாவாசிகள் வந்து இந்த அணையைப் பார்த்துப் போவது வால்பாறை மக்களுக்கான பெருமை. வால்பாறையில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இந்த அணையின் நீர்த் தேக்கம்... சேடல் டேம் தொட்டு.... உருளிக்கல் எஸ்டேட்டின் பின்புறமாக... தேயிலைக் காடுகளின் ஊடாகச் சென்று...... பெரிய கடை வரை தேங்கி நிற்கிறது.

காடுகளின் நடுவே நீர் கோடுகளால் ஆன வரைபடம் போல புகைப்படக் கண்களுக்கு வரம் தரும். நீரின் மினுங்கலில் நித்தியம் ஜொலிக்கும். அணையின் இடது பக்கம் அதாவது உருளிக்கல்லிருந்து எதிராக நீரைக் கடந்து சென்றால் "குரங்குமுடி" சென்று விடலாம் என்பது செய்தி. இந்த அணையின் மறுகரை பனிமேடு இரண்டாம் பிரிவு வரை படர்ந்து இருக்கும்.

இந்த அணை மூன்று ஷட்டர்கள் கொண்டது. இந்த ஷட்டரில் இருந்து வழியும் நீர் அணையின் ஆழத்தில் தேங்கி, அது நிறைந்து, அதன் பிறகு காவடிப் பாலத்தின் அடியே சென்று கேரளாவுக்குள் செல்லும் தன் பாதையை ஆரம்பிக்கிறது. இந்த பாலத்தைத் தாண்டி தான் மளுக்கப்பாறை வழியாக சாலக்குடி செல்ல முடியும். இந்தப் பாலத்தில் நின்று தலை நிமிர்ந்து அணையைக் காண்பது அதிரூப காட்சி அமைப்பு. இயற்கையின் சதுர செவ்வகம் சினிமாஸ்கோப் சிமிட்டலைக் கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 5000 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது இந்த அணை.

இங்கு இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. 1-ல் 75 மெகா வாட் மின் உற்பத்தியும், 2-ல் 25 மெகா வாட் மின் உற்பத்தியும் செய்யப் படுகிறது. முதல் மின் உற்பத்தி மையம் சோலையார் அணையில் இருந்து கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மானாம்பள்ளியில் இருக்கிறது. அதற்கான நீர் சோலையார் அணையில் இருந்து உருளிக்கல் வழியாக சுரங்கப் பாதையில் செல்கிறது. இரண்டாவது மின் நிலையம் சோலையார் அணையில் இருந்து கல்யாணப்பந்தல் செல்லும் சாலையில் இருக்கிறது.

நீர் அதிகமாகத் தேங்கும் காலங்களில்... "சேடல் டேம்" வழியாக பரம்பிகுளத்துக்கு நீர் திறந்து விடப்படும். அவசர காலப் பேருந்து கதவு போல தோற்றமளிக்கும் திறப்பு அணைக் கட்டுமானத்தின் நுட்பம். அந்த உபரி நீர் பரம்பிக்குளம் சென்று அங்கு தனக்கான வேலைகளை முடித்துக் கொண்டு அங்கிருந்தது ஆழியார் செல்கிறது என்பது தான் நீரின் சுழற்சியின் முக்கோணத் திட்டம்.

இதுவே ஆசியாவின் இரண்டாவது ஆழமான அணை என்று கூறப்படுகிறது.

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் வரும் ஒரு முதன்மையான நீர்த் தேக்கம் சோலையார் அணை நீர்த் தேக்கம். இதன் கொள்ளளவு கிட்டத்தட்ட 150 அடிக்கு மேல். இந்த நீர்த் தேக்கத்தில் நிரம்பி வழியும் நீர் பரம்பிக்குளம் நீர்த் தேக்கத்துக்கு செல்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் முக்கியமான பள்ளத்தாக்கு "பெரியாறு பள்ளத்தாக்கு".

இங்கு சோலைக் காடுகள் நிறைந்த அடர்ந்த வனப் பகுதியில் உருவாகும் சுனைகள், சிற்றோடைகள், நீர் ஊற்றுகள், சிற்றாறுகள் இணைந்து கட்டமலை என்ற இடத்தில் நீராறு என்ற ஆற்றை உருவாக்குகிறது. "தென்னிந்தியாவின் சிரபுஞ்சி" என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் கிடைக்கும் நீரின் அளவு அபரிமிதமானது. கட்டமலையிலிருந்து குதித்தோடி வரும் நீராறு, கல்லார் என்னும் இடத்தில் பெரியாறு நதியின் கிளை நதியான இடைமலையாற்றில் கலக்கிறது. மேற்கு நோக்கிப் பாய்ந்து இடைமலையாற்றில் கலக்கும் இந்த நீரை அங்கிருந்து தொலைவில் இருக்கும் சோலையார் அணைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் திட்டம்.

சமவெளியாக இருந்தால் பெரிய கால்வாய் வெட்டி நீரைக் கொண்டு சென்று விடலாம். இது அடர்ந்த காடும், மலையும் கொண்ட வனப் பகுதி. இதில் ஆற்றை திசை திருப்பிக் கொண்டு செல்வது அத்தனை சுலபமான விஷயம் அல்ல. மானுட சவால்.... பொறியாள மூளைக்கு வைத்த பொறி. அதுவும் அதிக பட்சமாக விநாடிக்கு 35000 கனஅடிக்கு மேல் வெள்ளம் வரும் ஆற்றின் திசையை மாற்றுவது சாதாரண வேலை இல்லை. ஆகினும், சிலபோது சில வேலைகளை காலத்தின் கை பிடித்து, செய்ய வைக்கும். தேவையே கடினங்களைத் தகர்த்தெறியும். இறங்கிச் செய்தார்கள். நம்பிக்கை கை விடவில்லை.

அதற்கு அங்கிருக்கும் மலையை 6 மீட்டர் உயரத்துக்கு குதிரை லாட வடிவில் குடைந்தார்கள். அதில் 4.266 கிலோமீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைத்தார்கள். விநாடிக்கு 2,660 கன அடி நீரை சுரங்கத்துக்குள் கொண்டு சென்றால் தான் அது சாத்தியம் என்று தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் பாய்ந்து வரும் ஆற்று நீரைத் தடுத்து நிறுத்தி, இந்த சுரங்கத்துக்குள் அனுப்ப வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஒரு சிற்றணை கட்ட வேண்டும். இதற்காக கடல் மட்டத்தில் இருந்து 3720 அடி உயரத்தில் சிற்றணை அஸ்திவாரம் அமைக்கப்பட்டு, 85 அடி உயரத்துக்கு 90 அடி அகலத்தில் 0.07 சதுர மைல் பரப்பில் 39 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கி நிற்கும் வகையில் அணை கட்டப்பட்டது. அந்த அணை தான்..... மேல் நீராறு அணை.

அதேபோல, மேல் நீராறில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் நீராற்றின் குறுக்கே ஒரு சிற்றணை கட்டப்பட்டது. அது தான் கீழ் நீராறு அணை. இந்த அணை மேல் நீராறு அணையைவிட 8.2 சதுர மைல்கள் அதிக வடிகால் பரப்பு கொண்டது. இந்த அணையின் வடிவமைப்பு இரு பருவ மழைக் காலங்களிலும் கிடைக்கும் மழைநீரை தேக்கி வைக்கக் கூடிய கொள்ளளவு கொண்டதாக இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

கீழ் நீராறு அணையிலிருந்து மழைக் காலங்களிலும், வெள்ளக் காலங்களிலும் திறந்து விடப்படும் நீர், சோலையாறு பகுதியைச் சென்றடையும் வகையில் சுரங்கத்தின் உயரம் மற்றும் கொள்ளளவு இருக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப் பட்டது. அதன் கணக்குப்படி மேல் நீராறு அணையின் கொள்ளளவை விட எட்டு மடங்கு அதிக கொள்ளளவு கொண்டதாக கீழ்நீராறு அணை கட்டப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அணையிலிருந்து பாதுகாப்பான முறையில் தண்ணீர் வெளியேற, அது தான் அணையின் பாதுகாப்பு என்றும், சோலையாறு பகுதிக்கு கீழ் நீராறு அணையிலிருந்து 8.129 கிலோமீட்டர் நீளம், 6.70 மீட்டர் உயரத்துக்கு மலையைக் குடைந்து, விநாடிக்கு 2,200 கனஅடி தண்ணீரைக் கொண்டு செல்லும் திறன் கொண்ட சுரங்கப் பாதையை அமைத்தார்கள்.

இந்தியாவில் முதல் முறையாக மலையைக் குடைந்து சுரங்கம் அமைத்து கட்டப்பட்ட இந்த அணைகள் இப்போது வரை எந்தப் பிரச்சினையுமின்றி பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை பெருமையாக நினைவு கூரலாம்.

எத்தனையோ முறை சோலையார் அணைக்குச் சென்றிருக்கிறேன். மேலிருந்து கீழ் பார்த்திருக்கிறேன். ஷட்டரின் வழியே சரிந்து கொண்டு செல்லும் நீரின் கொழுப்பைக் கண்டிருக்கிறேன். கீழ் இருந்து மேல் பார்த்திருக்கிறேன். மேலிருந்து நெளிந்து கொண்டு வரும் நீரின் வனப்பைக் கண்டிருக்கிறேன். இன்னமும் சொல்லப் போனால்... சோலையார் அணையின் அலுவகத்தில் மேல் அந்த தகர படபடப்பில் நின்று கூட குதியாட்டம் போடும் காற்றோடு அசைந்து கொண்டே நீரைக் கண்டிருக்கிறேன். வந்து முட்டி கால்களில் நீர் பட்டும் படாமல் மேலெழும் பறவைகளைக் கண்டிருக்கிறேன். ஆனாலும் அணை குறித்து ஒரு போதும் வியப்பில்லை. இந்த அணை பற்றிய ஆச்சரியம் இல்லை. இங்கே மின் உற்பத்தி என்பது கூட ஒரு காதில் நுழைந்து மறு காதில் வெளி வரும் செய்தியாகத்தான் இருந்தது.

அற்புதங்கள் அருகில் இருப்பதால் வரும் பொதுவான இயல்பு தான் இது. ஆனால்.... இனி அந்த இயல்பு கூடாது. சோலையார் அணை காலத்தின் சாட்சி. நாம் கண்டு வியக்க வேண்டிய பொக்கிஷம். கட்டடக் கலையின் அதி உன்னதம்.

இனி ஒரு முறை அங்கே சென்றால்.. ஆழமாய் நுட்பமாய்... ஆராய வேண்டும். அழகை ரசிக்கும் அதே நேரம்... அதன் ஆழத்தை வியக்க வேண்டும். அது பற்றிய விழிப்புணர்வு வேண்டும். அதன் மூலமாக சோலையார் அணையின் செயல் முறைகள் நம்மைச் சேரும். நம் அடுத்த தலைமுறைக்கு அந்த அறிவைக் கடத்த வேண்டும். சோலையார் அணையின் பக்கவாட்டில் கேட் போட்ட குகை போல சதுரப் பாதை ஒன்று இருக்கும். அந்த கேட்டில் நின்று உள்ளே கண் போகும் வரை எட்டிப் பார்த்திருக்கிறேன். இரண்டு கம்பியிட்ட செவ்வக மஞ்சள் பல்பின் வெளிச்சமும், தொடர்ந்து சொட்டிக் கொண்டே இருக்கும் நீரின் இசைவும் எதையோ திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கும்.

"ஹே...." என்று கத்தினால், அந்த சத்தம் அந்த வழியாக உள்ளே போய் விட்டு ஒரு கட்டத்தில் திரும்பி வந்து "ஹீஈய்...." என்று நம் முகத்தில் அறையும் போது திக்கென்று சிரிப்பு வரும். அங்கிருந்து கூரிய படிக்கட்டில் இறங்கி கீழே செல்வோம். அங்கு பூங்கா இருந்தது அப்போது. அங்கு அமர்ந்து மேலே பார்க்கையில்.....நன்கு செதுக்கிய சாலையை நிமிர்த்தி வைத்தது போல.... கண் கொள்ளாக் காட்சியை இதயம் படபடக்க படம் பிடிக்கும்.

ஒரு சுவாரஷ்யமான செய்தியோடு கட்டுரையை முடித்துக் கொள்ளலாம்.

"வைகாசி பொறந்தாச்சு" படத்தில் "சின்ன பொண்ணு தான் வெக்கப்படுது அம்மா அம்மாடி " பாடலின் இறுதிக் காட்சியில் சோலையார் அணை வரும்.

- கவிஜி