2015 ஜனவரி 17ம் தேதி. பயணத்தின் மூன்றாவது நாள் அதிகாலை 2.30 மணி. சபரிமலையில் ஏறிக் கொண்டிருந்தோம். ஓரிடத்தில் மேஜை மீது இருமுடிகளை குவித்து வைத்து பக்கத்தில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். என்ன இது என்று விசாரித்தபோதுதான் மலையாளிகளின் புத்திசாலித்தனம் தெரிந்தது.

“ரெடிமேட் இருமுடி விற்பனை நிலையம்”. இருமுடி இருந்தால் மட்டுமே பதினெட்டு படிகளில் ஏற முடியும். 45 நாட்கள் விரதமிருந்து, இருமுடி கட்டுவது நேர விரயம் என்று கருதும் மலையாளிகள், நேரே சபரிமலைக்கு வருகின்றனர். இந்த ரெடிமேட் இருமுடிகளை வாங்குகின்றனர்; இரண்டு மணி நேரத்தில் சபரிமலையில் ஏறி அய்யப்பனுக்கு ஒரு வணக்கம் வைக்கின்றனர்; அடுத்த ஒரு மணி நேரத்தில் கீழிறங்கி, அப்படியே ஊருக்குப் போய்விடுகின்றனர். அரை நாளில் அய்யப்ப தரிசனம் முடிந்து விடுகிறது.


முந்தைய பகுதிகள்:

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 1

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 2

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 3

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 4

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 5

ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 6


விரதம் சரியாக கடைபிடிக்கவில்லை என்றால், அய்யப்பன் தண்டித்து விடுவார் என்று நம்மவர்கள்தான் பயப்படுகின்றனர். ஆனால், தங்கள் கடைக்கு டீ குடிக்க வரும் வாடிக்கையாளரைப் போலத்தான் அய்யப்பனையும் மலையாளிகள் டீல் பண்ணுகிறார்கள்.

***

saravana ayyappa devoteeபம்பையிலிருந்து சபரிமலைக்கு செல்லும் பாதையின் தொடக்கத்தில் நிறைய படிக்கட்டுகள் இருக்கின்றன. 20 மாடிக் கட்டடத்தில் படிக்கட்டுகளில் ஏறுவது போல் கொஞ்சம் சிரமமாக இருந்தது. பக்தர்கள் ஆங்காங்கு கொஞ்சம் இளைப்பாறி, மெதுவாக ஏறினார்கள். 50 படிக்கட்டுகளைத் தாண்டியதும் சரவணனுக்கு மூச்சு வாங்கியது; ஜனவரி மாதக் குளிரிலும் வியர்க்க ஆரம்பித்தது.

நான் முதுகில் இருபக்கமாகத் தொங்கவிடும் லேப்டாப் பேக்கில்தான் எனது துணிகளை எடுத்து வைத்திருந்தேன். இரண்டு செட் துணிகள்தான். அதிக பாரமில்லை. அரை ட்ரவுசர் போட்டிருந்ததால், பேக்கை தோளில் மாட்டிக் கொண்டதும், நடப்பதற்கு இலகுவாக இருந்தது. ஆனால் சரவணனுக்கு தலையில் இருமுடிக் கட்டும், தோளில் ஒரு பக்கமாகத் தொங்கவிடும் துணிப்பையும் இருந்தது. அதோடு, வேட்டியும் அணிந்திருந்ததால் அவ்வளவு வேகமாக ஏற முடியவில்லை.

நானும், இரவி மாமாவும் எங்கள் வேகத்தைக் குறைத்துக் கொண்டு, சரவணனுக்கு இணையாக மெதுவாக நடக்க ஆரம்பித்தோம்.

பம்பையிலிருந்து கிளம்பும்போது முதலில் வருவது நீலிமலை. நீலிமலை மிகவும் ஏற்றமான பகுதி. பல இடங்களில் செங்குத்தாக ஏறுவது போலத்தான் இருக்கும். மிகவும் கஷ்டப்பட்டு ஏற வேண்டிய இடம் இப்பகுதிதான். இந்த மலையின் அடிவாரத்தில் இரண்டு பாதைகள் இருக்கின்றன. ஒன்று பக்தர்கள் நடந்து செல்லும் பாதை; இன்னொன்று சபரிமலை கோயிலுக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு செல்லும் பாதை. ஆரம்ப கால கட்டங்களில் கழுதைகள் மூலம் பொருட்களைக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதனால் இப்பாதை கழுதைப் பாதை என்று அழைக்கப்படுகிறது. தற்போது கழுதைகளுக்குப் பதிலாக டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ என்று அய்யப்ப பக்தர்கள் பாடுவார்களே... அதனால் பாதை எல்லாம் கல்லும் முள்ளுமாக இருக்கும் காட்டுப் பாதை என்று நினைத்திருந்தேன். செல்லும் வழி காடுதான்.. ஆனால் பாதையில் எந்த முள்ளும் இல்லை. அவ்வளவு ஏற்றத்திலும் கோயில் வரைக்கும் சிமெண்ட் பாதை போட்டிருக்கிறார்கள். கருங்கல்லும் சிமெண்ட்டும் கலந்த பாதை. நம் வீட்டில் இருக்கும் சிமெண்ட் தரை போல் வழவழப்பாக இருக்காது. மழை அதிகம் பெய்யக்கூடிய காட்டுப்பகுதி என்பதாலும், இலட்சக்கணக்கானோர் நடந்து செல்லும் வழி என்பதாலும், ஆங்காங்கே சிமெண்ட் உதிர்ந்து கருங்கற்கள் சிதறிக் கிடக்கின்றன. புறநகர்ப் பகுதிகளில் குண்டும் குழியுமாக இருக்கும் நம்மூர் சாலைகளைப் போலத்தான் சபரிமலைப் பாதை இருக்கிறது. மலை அடிவாரத்திலிருந்து கோயில் வரை பாதையின் இருபுறமும் குழல் விளக்குகளும், ஆங்காங்கே பாதரச விளக்குகளும் பிரகாசிக்கின்றன.

என்ன ஒரு சிரமம் என்றால், செருப்பில்லாமல் அந்தப்  பாதையில் நடக்க வேண்டும். 45 நாட்கள் விரதத்தின்போது, செருப்பில்லாமல் நடக்கும் பக்தர்களுக்கு இப்பாதையில் நடப்பது சிரமமாக இருப்பதில்லை. எருமேலியிலிருந்துதான் செருப்பு அணியாமல் நடப்பதால் எனக்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது.

ஏற்றமான மலைப்பாதை என்பதால் முழுக்க படிக்கட்டுகளாக இல்லாமல், சாய்தளமாகவே பல இடங்களில் பாதை அமைத்திருக்கிறார்கள். பாதையின் இருபக்கங்களிலும் பிடிமானத்திற்கு கம்பிகளைப் பொருத்தியிருக்கிறார்கள். சில இடங்களில் முழுவதும் படிக்கட்டுகளாகவும், சில இடங்களில் நடுவில் படிக்கட்டுகள், அதன் இருபுறமும் சாய்தளம் எனவும் பாதையை அமைத்திருக்கிறார்கள். உடலில் வலு இருப்பவர்கள் எளிதாக ஏறலாம்.

சரவணன் கொஞ்சம் சிரமப்பட்டுப் போனான். இரண்டு மாதம் செருப்பில்லாமல் நடந்து பழகியிருக்கிறான். அதனால் கருங்கல்லில் நடப்பது அவனுக்குப் பிரச்சினையாக இல்லை. நீலிமலை ஏற்றம்தான் அவனைப் படுத்தியது. பருமனான உடல் கீழே இழுத்தது. 100 மீட்டர் ஏறுவதற்குள் அவனது சட்டை முழுவதும் வியர்வையில் நனைந்து விட்டது. பதினைந்து நிமிடத்திற்கு ஒரு முறை இளைப்பாற வேண்டியிருந்தது. அவனது துணிப்பையை நான் வாங்கிக் கொண்டேன். பாதையில் ஆங்காங்கே கடைகள் இருக்கின்றன. பழச்சாறு, நொறுக்குத்தீனிகள், தண்ணீர் பாட்டில்கள், சூடாக பலகாரங்கள், டீ, காபி விற்கிறார்கள். எங்களுக்கு தண்ணீர்தான் அதிகமாகத் தேவைப்பட்டது.

***

ஏற்றத்தில் ஏற முடியாத வயதானவர்களுக்காகவும், மாற்றுத்திறனாளிகளுக்காகவும் டோலி வசதி உள்ளது. பழைய காலத்துப்  பல்லக்கு வடிவம்தான். இரு நீளமான கட்டைகளுக்கு நடுவே ஒரு நாற்காலியை அமைத்து, நான்கு பேர் தூக்கிச் செல்கிறார்கள். மலையில் ஏறும்போது, முன்னே இருக்கும் இருவர் தங்களது தோளிலும், பின்னே இருக்கும் இருவர் தங்களது தலையிலும் சுமந்து செல்கிறார்கள். இறங்கும்போது முன்னே இருப்பவர்கள் தலையிலும், பின்னே இருப்பவர்கள் தோளிலும் சுமந்து செல்கிறார்கள்.

டோலிக் கட்டணம் 3600 ரூபாய். நீலிமலை அடிவாரத்திலிருந்து சபரிமலை கோயிலுக்குத் தூக்கிச் சென்று, தரிசனம் முடிந்தபிறகு திரும்பவும் அடிவாரத்தில் கொண்டு வந்து விட வேண்டும். அடுத்தவர்களுக்குப் பல்லக்கு தூக்க நம்மவர்களை மிஞ்ச யார் இருக்கிறார்கள்? சபரிமலையில் டோலிகளாக இருப்பவர்கள் அதிகளவு தமிழர்கள்தான். தேனி, குமுளி, செங்கோட்டை பகுதி தமிழர்கள்தான் இந்த வேலையை அதிகம் செய்கிறார்கள்.

மலையேற்றத்தின்போது, சுமையுடன் இருந்த அத்தொழிலாளர்களிடம் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. சில மாதங்களுக்குப் பின்னர் செங்கோட்டை குண்டாறு அணைப்பகுதிக்கு சென்றபோது, அத்தகு தொழிலாளர் ஒருவரைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. “சில நாட்களில் நான்கு முறைகூட மலை ஏறி, இறங்கிவிடுவோம். பயங்கரமாக பசிக்கும். ஆங்காங்கே நிறுத்தி, டீ சாப்பிடுவோம். நிறைய தண்ணீர் குடித்தால் ஏற முடியாது. கஷ்டமான வேலைதான், ஆனால் மூன்று மாதங்களில் செலவு போக 80000 ரூபாய் சம்பாதித்து விடுவோம்.” என்று சந்தோஷமாகச் சொன்னார். எனக்குத்தான் கேட்க வேதனையாக இருந்தது.

sabarimala dolly 601

(நிழற்படம் நன்றி: ஜாக்கி சேகர்)

அறிவியல் வளர்ச்சி அதீதமாக வளர்ந்துவிட்ட இக்காலத்திலும் மனிதனை மனிதன் சுமந்து செல்லும் கொடுமை நடக்கிறது. தமிழ்நாட்டில் கைரிக்ஷாவை ஒழித்து பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான், மேற்கு வங்கத்தில் கைரிக்‌ஷாவை ஒழித்தார்கள். கேரளாவில் இன்றும் பல்லக்கு தூக்குகிறார்கள். இரண்டும் இடதுசாரிகளின் செல்வாக்கு மிகுந்த மாநிலங்கள். கூலிக்குத் தரும் முக்கியத்துவத்தை தொழிலாளர்களின் மாண்பிற்கும், சுயமரியாதைக்கும் தர வேண்டுமல்லவா?

அடிவாரத்திலிருந்து கோயிலுக்கு செல்ல ரோப் கார் போடும் திட்டம் இருந்ததாம். யாத்திரையின் புனிதம் கெடும் என்று கோயில் நிர்வாகம் மறுத்துவிட்டதாம். அதுவாவது போகட்டும்... டிராக்டர்களும், ஜீப்புகளும் செல்கின்றனவே... டோலிக்குப் பதிலாக, வயதானவர்களையும், மாற்றுத் திறனாளிகளையும் கட்டணம் வசூலித்துக் கொண்டு ஜீப்புகளில் அனுப்பலாமே! கேட்டால் ‘தொழிலாளர்களுக்கு வருமானம் போய்விடும்’ என்பார்கள். மனித மாண்பைச் சிதைக்கிற இழிவான தொழில்களில் வருமானம் வரத்தான் செய்கிறது. அதற்காக தொழிலாளர்களை காலம் முழுக்க அத்தொழிலையே செய்ய விட்டுவிட வேண்டுமா?

***

நீலிமலை ஏற்றத்தில் அப்பாச்சிமேடு என்று ஓர் இடம் வருகிறது. இந்த இடத்தில் அடர்ந்த காடாக இருக்கும் மலைப்பாதையில் செல்லும் பக்தர்கள் வனவிலங்குகளிலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு வனதேவதைகளை வேண்டி, பள்ளத்தாக்கை நோக்கி பச்சரிசி மாவு உருண்டைகளை வீசுகிறார்கள். “அப்போ.. சங்கரன்கோவிலில் அத்தனை கடவுள்களைக் கும்பிட்டார்களே... அவர்கள் யாரும் பக்தர்களைக்  காப்பாற்ற மாட்டார்களா?” என்று கேட்காதீர்கள். அந்தக் கடவுள்களின் ஜூரிஸ்டிக்ஷன் வேறு; சபரிமலை ஜூரிஸ்டிக்ஷன் வேறு.

அப்பாச்சிமேட்டிலிருந்து இன்னும் கொஞ்சம் தூரம் மலை ஏறினால், நீலிமலை உச்சி வருகிறது. இந்த இடத்தை சபரிபீடம் என்கிறார்கள். இந்த இடத்தில்தான் இராம காதையில் வரும் சபரி அன்னை வசித்திருக்கிறாளாம். இராமன் மீது அளவுகடந்த பக்தி கொண்டிருந்த சபரி, இந்த மலையில் இராமனுக்காகக் காத்திருந்தாள். சீதையைத் தேடிவந்த இராமர், சபரிக்கு தரிசனமும், மோட்சமும் தந்ததாக புராணம் சொல்கிறது. இந்த அன்னையின் பெயரில்தான் இம்மலை சபரிமலை என்று அழைக்கப்படுகிறதாம். சபரிபீடத்தில் அய்யப்ப பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபடுகிறார்கள்.

சபரிபீடத்திற்கு அடுத்து, பாதை இரண்டாகப் பிரிகிறது. இடப்பக்கம் உள்ள பாதையை யானைப் பாதை என்கின்றனர். ஏன் அவ்வாறு அழைக்கிறார்கள் எனத் தெரியவில்லை. வலப்பக்கம் உள்ள பாதையில்தான் பக்தர்கள் செல்கின்றனர். இதற்கு சரங்குத்திப் பாதை என்று பெயர். இந்தப் பாதையின் தொடக்கத்தில் காவலர்கள் என்னைத் தடுத்தி நிறுத்தினர். சிவில் டிரஸ்ஸில் இருந்தததுதான் அவர்களது சந்தேகத்திற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். இதை எதிர்பார்த்திருந்த குரு சாமி, காவலர்களிடம் பேசி, என்னை அனுமதிக்கச் செய்தார்.

சிறிது தூரத்தில் சரங்குத்தி என்ற இடம் வருகிறது. இது கன்னிச் சாமிகளுக்கு முக்கியமான இடமாகும். எருமேலியில் பேட்டைத் துள்ளலை ஆரம்பிக்கும்போது, கன்னிச் சாமிகளுக்கு முழ நீளத்தில் ஒரு குச்சியை அதாவது சரக்கோலைத் தருகிறார்கள். சரக்கோல் என்றால் அம்பு.

sabarimala devotees 603

(அதிகாலையிலும் சுறுசுறுப்பாக இருக்கும் சபரிமலை அய்யப்பன் கோயில்)

மகிஷி என்ற அரக்கியை அய்யப்பன் வதம் செய்தபிறகு, அவளுக்கு சாபவிமோசனம் கிடைக்கிறது. அவள் அழகிய உரு அடைந்ததும் அய்யப்பனை மணக்க விரும்புகிறாள். அய்யப்பன் ஒரு நிபந்தனை விதிக்கிறார். ‘எந்த ஆண்டு என்னை வழிபட கன்னிச் சாமிகள் வரவில்லையோ, அந்த ஆண்டு உன்னை மணக்கிறேன்’ என்கிறார்.

கன்னிச் சாமிகள் வருவதற்கு அடையாளமாக சரக்கோல்களை கொண்டு வந்து சரங்குத்தியில் அவற்றைப் போட்டு வழிபட வேண்டும் என்றும் சொல்லிவிட்டார். மாளிகைப்புரத்தம்மனும் - அதாங்க மகிஷி – ஒவ்வொரு ஆண்டும் இங்கே வந்து சரக்கோல்களைப் பார்வையிட்டு ஏமாற்றத்துடன் திரும்புகிறார். சரவணனும் அவரது ஏமாற்றத்தில் மேலும் ஒரு குச்சியைக் குத்திவிட்டு வந்தான்.

அய்யப்ப பக்தர்கள் கொஞ்சம் கரிசனத்துடன் மாளிகைப்புரத்தம்மனின் துயரத்தை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர் இலட்சக்கணக்கான ஆண்டுகளாக கன்னி கழியாமல், இந்த ஆண்டாவது தனக்கு ஒரு விடிவு பிறக்காதா என்ற ஏக்கத்துடன் ஒவ்வொரு முறையும் சரங்குத்திக்கு வந்து பார்க்கிறார்; ஏமாற்றமடைகிறார். எவ்வளவு பெரிய கொடுமை. பக்தர்கள் எல்லாம் கூடிப் பேசி, ஏதாவது ஒரு ஆண்டு மட்டும் கன்னிச்சாமிகளை கூட்டி வராமல், மஞ்சமாதா கழுத்தில் ஒரு மஞ்சக்கயிறு ஏற ஏற்பாடு செய்யலாம். இரண்டு கட்டிய அய்யப்பன், மூன்றாவதாக ஒன்றை வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்? நமது காலத்தில் கடவுள் ஒருவருக்கு கல்யாணம் நடந்ததைப் பார்க்கும் வாய்ப்பும் நமக்குக் கிடைக்குமல்லவா? இதைச் சொன்னால், நம்மை நாத்திகன், எகத்தாளம் பேசுகிறான் என்பார்கள்.

சரங்குத்திப் பாதையில் நுழைந்ததும், அய்யப்பன் கோயில் தெரிகிறது. கோயிலைப்  பார்த்ததும் ‘சாமியே சரணம் அய்யப்பா’ என்று சரண கோஷம் விண்ணைப் பிளக்கும் என்று சென்னைவாசி ஒருவர் சொல்லியனுப்பி இருந்தார். ‘அதெல்லாம் அய்யப்பன் காதுலே போய் சொல்லிக்கலாம்’ என்பதுபோல் எங்கள் குழுவினர் சென்று கொண்டிருந்தனர்.

அதிகாலை நாலரை மணிக்கு கோயிலை அடைந்துவிட்டோம். தொடக்கத்தில் இருந்த நீலிமலை ஏற்றம்தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. அதைத் தாண்டிய பிறகு விறுவிறுவென்று ஏற முடிந்தது. மொத்தம் நாலரைக் கிலோமீட்டர் தூரம் என்கிறார்கள். வலுவுள்ளவர்கள் இரண்டு மணி நேரத்தில் ஏறிவிடலாம். ‘கல்லும் முள்ளுமாக இருக்கும்’, ‘ஏறுவதற்குள் முட்டி தேய்ந்துவிடும்’ என்றெல்லாம் ஊர்ப்பக்கம் அய்யப்ப பக்தர்கள் கொடுக்கும் பில்டப் எல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.

***

சபரிமலையில் இரவு 11 மணிக்கு நடை சாத்தி, காலை 4 மணிக்குத் திறக்கிறார்கள். கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் இரவு 11.45 மணிக்கு நடை சாத்தி, அதிகாலை 3.30 மணிக்கு நடை திறப்பதுமுண்டு. சாத்துவதற்கு முன்பு ஹரிவராசனம் என்ற பாடலை இசைக்கிறார்கள். இந்தப் பாடலைக் கேட்டுத்தான் அய்யப்பன் தூங்குகிறார் என்று சொல்கிறார்கள். ஸ்ரீகம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச ‎அய்யர் என்பவர் இப்பாடலை எழுதி, இசை அமைத்து இருக்கிறார். நிறைய பேர் இப்பாடலைப் பாடி கேசட் வெளியிட்டிருந்தாலும், கே.ஜே.யேசுதாஸ் பாடிய பாடலைத்தான் அய்யப்பனைத் தூங்க வைக்க ஒலிபரப்ப வேண்டும் என்று கோயில் தந்திரியும், மேல் சாந்தியும் முடிவெடுத்து அவ்வாறே செய்து வருகிறார்கள். கே.ஜே.யேசுதாஸ் கிறித்துவர் என்பதால், இதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கேரளாவில் நுழைவதற்கு முன் நடந்திருக்க வேண்டும். இப்பாடல் அய்யப்ப பக்தர்களின் தேசிய கீதம் போன்றது. இது ஒலிபரப்பப்படும்போது கோயில் வளாகத்தில் இருக்கும் அனைவரும் எழுந்து நிற்பார்களாம்.

sabarimala devotees 602

(கோயில் முன்பு சிமெண்ட் தரையில் தூங்கும் பக்தர்கள்)

தூக்கம் வராத அளவுக்கு அய்யப்பனுக்கு என்ன பிரச்சினை? ஏன் பாட்டு பாடி தூங்க வைக்க வேண்டும்? என்று ஆராய்ந்தேன்.

அதிகாலையில் அய்யப்பனுக்கு இளநீர், விபூதி, பால், தேன், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், தண்ணீர் ஆகிய எட்டு பொருட்களால் அஷ்டாபிஷேகம் நடத்தப்படுகிறது. காலை டிபனாக பழம், தேன், சர்க்கரை சேர்த்து தயாரித்த திருமதுரம் தரப்படுகிறது. சாப்பிட்டு விட்டு அய்யப்பன் என்ன செய்கிறார்? அப்படியே உட்கார்ந்திருக்கிறார்.

பின்னர் நெய்யபிஷேகம் செய்கிறார்கள். உச்சிவேளைக்கு முன்னர் 15 தீபாராதனைகள் நடக்கிறது. அப்போது பச்சரிசி சாதம் படைக்கிறார்கள். அதையும் சாப்பிட்டுவிட்டு, அய்யப்பன் அப்படியே உட்கார்ந்திருக்கிறார்.

சிறிது நேரத்தில் மதிய பூஜை நடக்கிறது. அப்போது சம்பா பச்சரிசி, கதலிப்பழம், தேங்காய்ப்பால், சர்க்கரை, சுக்கு, நெய் ஆகியவற்றைக் கொண்டு பாயசம் தயாரித்துத் தருகிறார்கள். வயிறு திகரமாக இருக்கிறது என்று சொல்லாமல், அதையும் ஏற்றுக்கொண்டு, அய்யப்பன் என்ன செய்கிறார்? மறுபடியும் அப்படியே உட்கார்ந்திருக்கிறார்.

இரவு பூஜையின்போது பச்சரிசி சாதம், அப்பம், பானகம் தருகிறார்கள். அதையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறார். பிறகும் அப்படியே உட்கார்ந்திருக்கிறார்.

இப்படி மூன்று வேளையும் முக்கிவிட்டு, சும்மாவே உட்கார்ந்திருந்தால் தூக்கம் எப்படி வரும்? அதான் யேசுதாஸைக் கூப்பிட்டு, தாலாட்டு பாடச் சொல்கிறார்கள்.

அய்யப்பன் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கும் தோற்றத்தைப் பார்த்திருப்பீர்கள். முழங்காலுக்குக் கீழே ஒரு துண்டு சுற்றியிருக்கும். அதற்கு ஒரு கதை சொல்கிறார்கள். அய்யப்பனைக் காண ஒரு முறை பந்தள மகாராஜா வந்திருக்கிறார். தந்தை வருகிறார் என்று அய்யப்பன் எழுந்திருக்க முயன்றிருக்கிறார். ‘இறைவன் நமக்காக எழுந்திருக்கக் கூடாது’ என்று நினைத்த மகாராஜா, அவரை எழுந்திருக்க விடாமல் செய்ய தனது அங்கவஸ்திரத்தை அய்யப்பனின் கால்களில் மீது போட்டிருக்கிறார். அது கால்களைச் சுற்றிக் கொள்ள, அய்யப்பன் எழுந்திருக்க முடியாமல் போய், அதுவே அவரது தோற்றமாக மாறிவிட்டதாம்.

***

மகர பூஜை நாட்களில் சபரிமலையில் ஒரு நாளைக்கு குறைந்தது 10 இலட்சம் பக்தர்களாவது கூடுகிறார்கள். அந்த நாட்களில் பதினெட்டு படிகளில் ஏறவும், அய்யப்பனைத் தரிசிக்கவும் மணிக்கணக்கில் பக்தர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். காத்திருப்பது என்றால் பெரிய அறைகளில் உட்கார்ந்து கொண்டு அல்ல. நடைபாதையில் - அதுவும் நிற்பதற்குக்கூட இடமில்லாத நெருக்கடியில் - கால் கடுக்க காத்திருக்க வேண்டும். கோயில் நடைபாதை ஏறக்குறைய 100 அடி அகலத்தில் முக்கால் கிலோமீட்டர் நீளம் இருக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த நீள, அகலத்தில் எத்தனை ஆயிரம் பேர் சவுகர்யமாக நிற்கலாம்? அதே இடத்தில் இலட்சம் பேர் நின்றால் எப்படி இருக்கும்?

sabarimala devotees 600

நாங்கள் சென்றபோது சபரிமலையில் கூட்டம் குறைவாக இருந்ததாக என்னுடன் வந்த பக்தர்கள் சொன்னார்கள். அப்படி கூட்டம் குறைவாக இருந்தபோது, எடுக்கப்பட்ட நிழற்படம் இது. அப்படியென்றால் கூட்டம் அதிகமாக இருக்கும்போது எந்தளவிற்கு நெருக்கடி இருக்கும், எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

sabarimala devotees 601

பக்தர்களின் கூட்டத்தை ஓரளவேனும் முறைப்படுத்தும் நோக்கில் கேரள போலீஸார் http://www.sabarimalaq.com/ என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்துகொண்டால், நமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் நடைபாதையில் காத்திருக்க வேண்டியிராமல், பிறிதொரு பாதையில் விரைவாக அய்யப்பனைப் பார்த்துவிடலாம். இந்த சேவை முற்றிலும் இலவசம்.

***

அந்த அதிகாலையிலும் கோயில் சுறுசுறுப்பாக இருந்தது. முன்பதிவு செய்திருந்தவர்களை அனுமதிச் சீட்டை சரிபார்த்து, தனிவழியே அனுப்பினார்கள். எங்கள் குழு அந்த வழியாக முன்னேறியது. முன்அனுமதிச் சீட்டு இருந்தும், இருமுடி இல்லாமல், சிவில் டிரஸ்ஸில் இருந்ததால் பதினெட்டுப் படி ஏற என்னை அனுமதிக்கவில்லை. இருமுடி கட்டியவர்கள் மட்டும்தான் பதினெட்டுப் படி ஏற வேண்டும். மற்றவர்கள் தரிசனம் செய்வதற்கு வேறொரு வழி இருக்கிறது. அந்த வழியே வருமாறு எனது குழுவினர் சொன்னார்கள்.

நான் தனியாக கோயில் வளாகத்தினுள் நடை போட்டேன். இக்கோயிலும் சுத்தமற்றே இருந்தது. நடைபாதையை ஒட்டி, வழிபாட்டுப் பொருட்களை விற்கும் கடைகள், கோயில் அலுவலகங்கள், காவலர் அறைகள் மற்றும் பக்தர்களுக்கான கழிப்பறைகள் இருந்தன. அந்தப் பெரிய கூடாரத்தின் கடைக்கோடியில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதற்கென ஒரு பெரிய மேடை இருந்தது. அங்கு நிகழ்ச்சி நடத்தினால், நடைபாதையில் காத்திருக்கும் பக்தர்கள் எல்லோரும் அதைப் பார்க்க முடியும்.

நடைபாதைக்கு அடுத்திருந்த சிமெண்ட் தரையில் பக்தர்கள் படுத்திருந்தார்கள். அனைத்தையும் வேடிக்கை பார்த்தபடி கோயிலின் முன்புறம் வந்தேன். அங்கே பிரம்மாண்டமாக தீ எரிந்து கொண்டிருந்தது. அதில் தேங்காய்களை வாரிப் போட்ட வண்ணம் இருந்தார்கள்.

இருமுடி இல்லாதவர்கள் தரிசனத்திற்குச் செல்லும் வழியைப் பார்த்தேன். மிகப்பெரிய கூட்டம் இருந்தது. அந்தக் கூட்டத்தில் நுழைந்தால், வெளியே வர எப்படியும் இரண்டுமணி நேரம் ஆகும் என்று தோன்றியது. வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

கோயில் முன்புறமாக இருந்த சிமெண்ட் தரையில் எண்ணற்ற பக்தர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். நானும் ஒரு இடத்தைப் பிடித்து, துண்டை விரித்துப் படுத்தேன். களைப்பு இருந்தாலும், தூக்கம் பிடிக்கவில்லை.

சிறிது நேரத்தில் தரிசனம் முடித்த எங்கள் குழு பக்தர் ஒருவர் அவ்வளவு பெரிய கூட்டத்தில் என்னைக் கண்டுபிடித்து, வந்துவிட்டார்.

“என்ன நீங்கள் அய்யப்பனை தரிசிக்கவில்லையா?” என்று கேட்டார். அதற்கு நான் சொன்ன பதிலுக்கு, பயணம் முடியும்வரை என்னை அவர் முறைத்தவாறு இருந்தார்.

(தொடரும்)

- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)